26 Feb 2019

சிட்டிசன் ஆப் இந்தியா



செய்யு - 8
            விகடு, சின்னுவும் இடமும் வலமாய் பரமு நடுநாயகமாய் மஞ்சள் பையைத் தூக்க மூவரும் வேகநடையில் போய்க் கொண்டு இருந்தனர். பையின் காது கையை இறுக்குவது போலிருந்ததது பரமுவுக்கு. பையைக் கை மாற்றி விடலாமா என்று யோசித்தான். மனசு வரவில்லை. பரமு லஸ்கர் வீடு வந்ததும் சின்னுவை அனுப்பி எருமை கொய்யாக்கா வாங்கி வரச் சொன்னான். இப்படி அவர்கள் மஞ்சப் பையைத் தூக்கிக் கொண்டு வரும் போது லஸ்கர் வீட்டில எருமைக் கொய்யாக்காய் வாங்கிக் கொள்ள வேண்டும். வாத்தியார் வாங்கி வரச் சொன்னார் என்றால் தாராளமாகக் கொடுப்பார்கள் லஸ்கர் வீட்டில்.
            இரண்டு கைகளிலும் ஏழு கொய்யாக்காய்களோடு வந்தான் சின்னு. விகடு இரண்டு கொய்யாக்காய்களை வாங்கிப் பக்கத்துக்கு ஒன்றாக கால்சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டான். கொய்யாக்காய் பெரிசாக இருந்தது. திணித்த பின் கால்சட்டை தொடையை இறுக்குவது போலிருந்து. பரமுவும் கால்சட்டைப் பையின் இரண்டு பக்கமும் திணித்துக் கொண்டான். சின்னுவும் அவ்வாறு திணித்துக் கொண்ட பிறகு அவன் கால்சட்டையின் பின்பக்கம் இருந்த கிழிசல் அகற்றிக் கொண்டு நன்றாகத் தெரிந்தது. எஞ்சியிருந்த ஒரு கொய்யாக்காவை சின்னுவே கையில் வைத்துக் கொண்டான்.
            மூவரும் ஓட ஆரம்பித்தார்கள். கால்சட்டைப் பையில் புடைத்துக் கொண்டிந்த கொய்யாக்காய் ஓட ஓட உறுத்துவது போலிருந்தது. "கொய்யாக்கா கிச்சுகிச்சு மூட்டுற மாதிரி இருக்குடா!" என்றான் சின்னு. அவர்கள் ஓடியதில் பரமுவின் கையில் இருந்த பையில் ஏற்பட்ட குலுங்கலில் சலக்கு சலக்கு என்ற சத்தம் கேட்க ஆரம்பித்தது. உள்ளே தூக்கு வாளியிலும், கூஜாவிலும் இருந்த கள்ளு பையை நனைக்க ஆரம்பித்தது.
            பரமு அதில் விரலைத் தொட்டு வாயில் வைத்துப் பார்த்தான். "இன்னிக்கு கொஞ்சம் இனிக்குது. அப்படியே கொஞ்சம் புளிக்குது!" என்றான்.
            தொடப் போன சின்னுவின் கையைத் தட்டி விட்டு அவனே தன் விரலைத் தொட்டு சின்னுவின் நாக்கில் வைத்தான். "போடா! நல்லா இனிக்குது!" என்றான் சின்னு.
            அப்புறம் விகடுவின் வாயில் வைத்து விட்டு, "உனக்கு எப்படிடா இருக்கு?" என்றான்.
            "எனக்கு ஒண்ணும் தெர்யல! ஆனா நல்லால்ல!" என்றான் விகடு.
            "டுர்... டுர்... டுர்..." என்று இழுவைச் சத்தத்தோடு வண்டி மேலேற முடியாத பாவனையில் அவர்கள் சத்தமிட்டுக் கொண்டே பாலத்தின் மீது ஏறினார்கள்.
            "ர்ர்ர்ர்ர்ர்..." என்ற சத்தத்தோடு லாவகமாக வண்டி இறங்குவது போன்ற பாவனைச் சத்தத்தோடு பாலத்திலிருந்து இறங்கி ஓடினார்கள்.
            லாலு வாத்தியார் பக்கா பில்டிங்கின் வராண்டாவில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தார். அங்கே ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த ஒரு சில பிள்ளைகளையும் ஓட்டு பில்டிங் வராண்டாவிற்கு அடித்து விரட்டியிருப்பார் போல. வந்திருந்த பிள்ளைகள் ஓட்டு பில்டிங் வராண்டாவில் அங்கும் இங்குமா ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவர்களைப் பார்த்ததும் கையை ஆட்டிவிட்டு பக்கா பில்டிங்கின் கீழண்டைப் பக்கம் சாய்ப்பாகப் போடப்பட்டிருந்த சமையல்கட்டின் பின்பக்கம் போனார். மூவரும் அவரைத் தொடர்ந்து பின்பக்கம் போனார்கள்.
            "வழியில எங்கேயும் நிக்கலல்ல?" என்றார் வாத்தியார்.
            "லஸ்கர் வீட்டுல மட்டும் எரும கொய்யாக்கா வாங்க நின்னோம்!" என்றான் விகடு.
            "கொய்யாக்கா இருந்துச்சா?" என்றார்.
            மூவரும் தங்கள் கால்சட்டைப் பையைக் காட்டினார்கள். சின்னு அவன் கையில் இருந்த கொய்யாக்காவை நீட்டினான். "கையிலேயே வெச்சுக்க!" என்று சொல்லிவிட்டு பரமுவின் கையில் இருந்த மஞ்சள் பையை வாங்கி வாழை நாரை அவிழ்த்தார்.
            கூஜாவையும் தூக்கு வாளியையும் எடுத்தவர் ஒரு நொடி மூன்று பேரையும் பார்த்தார்.
            "சுடுகாட்டுப் பக்கம் ஒதுங்கலல்ல?" என்றார் உதட்டை முன்னே கொண்டு வந்து விழிகளைப் பிதுக்கியவாறே.
            ஒருமுறை மூவரும் இதுபோல கள்ளு வாங்கப் போய் சுடுகாட்டுப் பக்கம் ஒதுங்கி ஆளுக்கு நான்கு மடக்கு கள்ளு குடித்ததைப் பார்த்த, அங்கே இயற்கை உபாதைக்காக ஒதுங்கியிருந்த இடும்பன், வாத்தியாரின் காதில் போட்டு விட்டு விட்டார். லாலு வாத்தியார் மூன்று பேரையும் குப்புறப்படுக்கச் சொல்லி காலை மேலே மடக்கி நீட்டச் சொல்லி லாடம் கட்டினார். அதற்குப் பிறகுதான் மஞ்சள் பை ஏற்பாடும், மஞ்சள் பையின் மேல் வாழை நாரைக் கட்டும் ஏற்பாடும் வாத்தியாரால் கண்டுபிடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது.
            கூஜாவைத் தூக்கி மடக் மடக் என்று குடிக்க ஆரம்பித்தார் வாத்தியார். தொண்டையில் இருந்த கெண்டை முன்னும் பின்னுமாக சென்று வந்து கொண்டிருந்தது. கள்ளு வாயிலிருந்து வழிந்து அவர் கழுத்து வழியாக வழிந்து கொண்டிருந்தது. உடனே அதைக் கையால் துடைத்துக் கொண்டார்.
            காலி கூஜாவை நங்கென்று கீழே வைத்தார். கால்சட்டைப் பைக்குள் கையை விட்டார். வெள்ளை நிறத்தில் இருந்த லக்ஷ்மி சீவல் பாக்கெட்டை எடுத்தார். அதற்குள் சீவல் இல்லை. நிறைய நாரத்தங்காய் ஊறுகாயைப் போட்டு வைத்திருந்தார். அதிலிருந்து ஒன்றை எடுத்து கடித்துக் கொண்டார்.
            தூக்குவாளியைத் திறந்து அதிலிருந்து இரண்டு டம்பளர் அளவுக்கு எடுத்து கூஜாவில் ஊற்றினார். அதை மூன்று பேரிடம் நீட்டி, "சிந்தாம வழியாம குடிக்கணும். தூக்கிக் குடிக்கணும்." என்றவர் என்ன நினைத்தாரோ மூன்று பேரையும் ஒவ்வொருவராக வாயை அகலமாக திறக்கச் சொன்னார். அவரே வாயில் ஊற்றினார். ஒவ்வொரு வாய்க்கும் மூன்று மடக்கு ஊற்றினார். ஊற்றி விட்டு கூஜாவில் எஞ்சியிருந்ததை அவரே குடித்தார். மூன்று பேரின் வாயிலும் நாரத்தங்காய் துண்டைப் பிய்த்துப் போட்டார்.
            குடித்து முடித்ததும் மூன்று பேரின் வாயிலிருந்தும் புளித்த ஏப்பமாய் வந்தது. "காலம்பர சாப்பிட்டீங்களா இல்லியா? வெறும் வவுத்துல குடிச்சா அப்புறம் தோப்புல குத்தவெச்சிகிட்டுக் கிடக்கணும்டா!" என்று சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டே தூக்குவாளியைத் தூக்கி ஒரே கல்ப்பில் அடித்து முடித்தார். அவருக்கும் புளித்த ஏப்பம் வந்தது. வாத்தியாரின் வயிறு புளிப்பானையைப் போல உப்பியிருந்தது. சின்னு அதை ஓரக் கண்ணால் காட்டி விட்டு எங்களுக்கு மட்டும் தெரியும்படி நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.
            "சீக்கிரம் எல்லாரும் கொய்யாக்காயைத் தின்னுங்க!" என்று சொல்லி விட்டு அவர் சின்னுவின் கையிலிருந்த கொய்யாவை வாங்கித் தின்ன ஆரம்பித்தார். அவசர அவரமாக கொய்யாக்காவைத் தின்று முடித்ததும் வாயை ஊதச் சொன்னார். "பரவால்ல கொய்யாக்கா வாசந்தான் வர்ருது! போங்க போய் கிளாஸ்க்குள்ள உக்காந்து நல்ல பிள்ளையா படிங்க!" என்று சொல்லி விட்டு மஞ்சப்பைக்குள் காலி கூஜாவையும், தூக்குவாளியையும் போட்டு விடுவிடுவென வகுப்பறைக்குள் வந்து தேக்கு மரப் பெட்டியைத் திறந்து அதற்குள் வைத்துக் கொண்டார். வழுவழுவென்று இருந்த அந்த தேக்கு மரப்பெட்டிதான் வாத்தியாருக்கு நாற்காலி. அதன் பக்கத்தில் மரமேசை ஒன்று இருக்கும். அதன் மேல் நோட்டுகள் அடுக்கியிருக்கும். வாத்தியாரின் பையும் அதன் மேல்தான் இருக்கும். அத்துடன் நான்கைந்து கம்புகளும் இருக்கும்.
            "நேத்தி எழுதிப் போட்ட இன்டியா இஸ் மை கன்ட்ரி. வி ஆர் ஆல் சிட்டிசன்ஸ் ஆப் இன்டியா. படிச்சிட்டீங்களாடா?" என்றார்.
            "ம்! படிச்சிட்டோம்!" என்று அவர்கள் தலையாட்டிக் கொண்டிருந்த போது ஒவ்வொரு பிள்ளையாய் வர ஆரம்பித்தார்கள். ரெண்டாம் பெல் விட்டு விட்டு அடிக்க ஆரம்பித்திருந்தார்கள்.
*****

நட்சத்திரக் கவிதை


விசால மனசுக்காரர்கள்
நிறைய விண்மீன்கள் இருப்பதைச் சுட்டி
வேண்டியதை எடுத்துக் கொள்ளக் கூறினாய்
வானம் எங்கே இருக்கிறது
நான் எங்கே இருக்கிறேன்
ஒற்றை நிலவை வைத்து
கரைத்தும் நிறைத்தும் காட்டும்
மாயக்காரர் நீ என்பது எனக்குத் தெரியும்
உம் பூந்தோட்டத்தின் ஒற்றைப் பூவைப் பறிக்க
அனுமதிக்காத நீயா
நட்சத்திரங்கள் கொள்ள அனுமதிப்பாய்
மனசு விசாலப்பட்டு என்ன
கைகள் குறுகியிருக்கிறது
பேச்சு பேச்சாகவே இருக்கிறது
அந்தக் கோட்டைத் தாண்டி
நீயும் வர மாட்டாய்
நானும் வர அனுமதிக்க மாட்டாய்
*****

25 Feb 2019

கள்ளுக்குடிகாரர்



செய்யு - 7
            பெரியவர்கள் பேசிக் கொள்ளும் போது லாலு வாத்தியாரை கள்ளுக்குடி வாத்தியார் என்று பேசிக் கொள்வார்கள். வேலையில் சேர்ந்த நாட்களில் லாலு வாத்தியார் கண்டிப்புக்குப் பேர் போனவர். என்றாலும் அவர் கத்திரிக்காய் திருட்டு வழக்கில் பலமுறை பிடிபட்டு இருக்கிறார். அவர் வாத்தியார் என்பதால் அவரை விட்டு விட்டு அவரின் அண்ணன்மார்கள் இருவரையும் பிடித்துக் கொள்வார்கள்.
            வாத்தியாரின் மூத்த அண்ணன் முருகு. வெடுவெடுவென இருப்பார். அழுக்கு வேட்டியும், கசங்கிய சட்டையும் போட்டிருப்பார். நிமிஷ நேரம் சும்மாயிருக்க மாட்டார். கை பரபரவென்று இருக்கும்.
            ரெண்டாம் அண்ணன் பஞ்சு. கனத்த உருவம். வேட்டி கருத்துப் போய் அழுக்கும் கரியுமாய் இருக்கும். எங்கே போய் இப்படிக் கரியை அப்பிக் கொள்கிறார் என்று எல்லாரும் பேசிக் கொள்வார்கள். அவரை நேரில் பார்த்தால், அதுசரி அவர் எங்கே போய் அவ்வளவு அழுக்கையும் கரியையும் அப்பிக் கொள்கிறார்? என்று இதையெல்லாம் வாசிக்கும் நீங்களே மேற்கொண்டு என்னை எழுத விடாமல் கேள்வி கேட்பீர்கள். மேலே சட்டை போட மாட்டார். திறந்த மேனிக்குத் திரிவார். கழுத்தில் கிழிந்து போன அழுக்குத் துண்டை சுத்தி விட்டுக் கொள்வார்.
            அவ்வபோது கத்திரிக்காய் திருட்டுக்குப் பஞ்சாயத்து நடக்கும். அபராதம் போடுவார்கள். அதை லாலு வாத்தியார்தான் கட்டுவார். லாலு சகோதரர்கள் மூன்று பேரும் கூட்டுக் களவாணிகள் என்று பேசிக் கொள்வார்கள்.
            வேலைக்குப் போன பின்பு வாத்தியாருக்குப் பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது. வாத்தியார் ஒரு வாத்திச்சியைத்தான் கட்டிக் கொள்வேன் என்று முழு மூச்சில் நின்றாராம். ரெண்டு மூணு வருசங்கள் அவருக்காக ஊர் ஊராய்ச் சல்லடை போட்டு பெண் பார்த்திருக்கிறார்கள். அவர் எதிர்பார்த்த மாதிரி வாத்திச்சியைத் தேடுவது அவ்வளவு எளிதாக இல்லை. கடைசியில் கும்பகோணத்துக்குப் பக்கத்தில் பெருமாள்பாளையத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் கட்டி வைத்திருக்கிறார்கள்.
            கட்டும் போது பிடித்திருந்த பெண் போகப் போக வாத்தியாருக்குப் பிடிக்காமல் போய் விட்டது. அந்தப் பெண்மணி விகடுவுக்கு ஆத்தா முறை வரும். விகடுவின் அம்மா அத்தை என்று கூப்பிடுவதால் விகடுவும் அத்தை என்றுதான் கூப்பிடுவான். கிருஷ்ணவேணி என்ற பெயருடைய அந்த அத்தைதான் வேணி அத்தை. வேணி அத்தை ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்கு வந்தவர். பார்ப்பதற்கு அழகாகவும் திடகாத்திரமாகவும் இருப்பாராம். சடை போட்டால் கெண்டைக்கால் அளவுக்கு தலைமுடி வருமாம். எல்லாம் ஒரு சில ஆண்டுகளுக்குத்தான். அப்புறம் அவர் குண்டாகி விட்டார். குண்டு என்றால் அப்படி ஒரு குண்டு. வயிறு முன்னுக்குத் தள்ளி, பிட்டம் பின்னுக்குத் தள்ளி பார்ப்பதற்கு ஒரு மாதரியாக இருப்பார். தலைமுடியும் தலைக்குக் கீழே ஒரு சாண் அளவுக்குத் தொங்கிக் கொண்டிருக்கும் அளவுக்குக் குறைந்து விட்டது.
            வாத்தியாரோடு சண்டை ஆரம்பித்த நாட்களில் எந்த வேலையும் செய்யாமல் ஆட்டுக்கல்லில் குத்துக்கல் போல வேணி அத்தை அப்படியே உட்கார்ந்திருப்பாராம். அப்படி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் முருகு மாமாவும், பஞ்சு மாமாவும் வேணி அத்தையை அடி பின்னிப் பெடலெடுத்து விடுவார்களாம். முருகு மாமாவின் பெண்டாட்டி நீலு அத்தையும், பஞ்சு மாமாவின் பெண்டாட்டி ராணி அத்தையும் முடியைப் பிய்த்து இழுப்பார்களாம். அவ்வளவு அடிகளையும் பிக்கல் பிடுங்கல்களையும் வாங்கிக் கொண்டு கல்லுளிமங்கன் கணக்காய் அப்படியே உட்கார்ந்திருக்குமாம் வேணி அத்தை. ஒரு கட்டத்துக்கு மேல் அடிக்க முடியாது என்ற நிலை வந்த பிறகு அப்படியே விட்டு விட்டார்களாம். அதற்கு அப்புறம் வேணி அத்தை எந்நேரமும் சாப்பிட ஆரம்பித்து விட்டதாம். சாப்பிட ஆரம்பித்தது என்றால் எப்போ பார்த்தாலும் சாப்பாடுதான். நடுராத்திரியில் எழுந்து உட்கார்ந்து கொண்டு சோற்றுப் பானையை எடுத்து தண்ணீர் ஊற்றி வைத்த சாதத்தையும் பிழிந்து வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்குமாம். ஒரு கட்டத்துக்கு மேல் நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் முருகு மாமாவும், பஞ்சு மாமாவும் ரெண்டு பேரையும் வேற்குடியில் தனிக்குடித்தனம் வைத்தார்களாம். அதற்கு அப்புறம்தான் வாத்தியார் மாமா கள்ளு குடியில் இறங்கியதாம். இதெல்லாம் அம்மா சொன்னவைகள்.
            "ஏன்ம்மா வேணி அத்தையை அடிச்சாங்க? ஏன்ம்மா வேணி அத்தை எப்ப பாத்தாலும் சாப்பிட்டுகிட்டே இருக்கு?" என்று விகடு கேட்பான். "அதெல்லாம் உனக்குப் புரியாது போடா!" என்று அம்மா விரட்டி விடுவார்.
            லாலு வாத்தியாரின் கள்ளுக்குடி என்பது உங்க வீட்டு குடி, எங்க வீட்டு குடி கிடையாது. ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்க மாட்டார். திடீரென்று கிளம்பி ஈச்சமண்டை வீட்டுக்குப் போய் விடுவார். அங்கேயே குடித்து விட்டு பெரிய செம்பில் வாங்கிக் கொண்டு வந்து வகுப்பறைக்கும் வந்து விடுவார். கள்ளு அப்படியே  நுரை பொங்கி வகுப்பறையில் வழிந்து கொண்டிருக்கும். அந்த நுரையைத் தொட்டு நாக்கில் வைத்துக் கொள்வதில் பிள்ளைகளுக்கு இடையே போட்டியே நடக்கும். அதிக முறை தொட்டு நாக்கில் வைத்துக் கொள்ளும் பிள்ளைகள் அதைச் சண்டையில் ஜெயித்ததைப் போல பேசிக் கொண்டிருப்பார்கள். "நான் நாப்பத்தியெட்டு முறை!" என்று பத்து பனிரெண்டு முறை வாயில் வைத்துக் கொண்ட பிள்ளைகள் கூட அந்தப் போட்டியில் ஜெயிக்கப் பார்ப்பார்கள்.
            பிள்ளைகள் சும்மா இருப்பார்களா? பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போனவுடன் நாக்கில் தொட்டு வைத்துக் கொள்ளும் வீரதீர பிரஸ்தாபங்களை சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதைக் கேட்கும் பெற்றவர்கள் சும்மா இருப்பார்களா? பள்ளிக்கூடத்திற்கு வந்து விடுவார்கள். பள்ளிக்கூடத்தில் அதற்கு ஒரு பஞ்சாயத்து நடக்கும்.
            "சத்தியமாக இனிமே குடிக்க மாட்டேன்!" என்று வாத்தியார் ஒவ்வொருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார். அப்புறம் யாருக்கும் பேசத் தோன்றாது. "இனிமே பள்ளியோடத்துல குடிக்கக் கூடாதுன்னு சொல்லச் சொல்லுங்க!' என்பார்கள் பஞ்சாயத்துக்கு வந்திருப்பவர்கள். தலையில் நங்கு நங்கு என்று பலமுறை அடித்துக் கொண்டு, "ச்சத்தியம் ச்சத்தியம் இது ச்சத்தியம்" என்பார் வாத்தியார். "ன்னா மனுசன்! எதுக்கெடுத்தாலும் இப்படிக் காலுல விழுந்துகிட்டு!" என்று பேசிக் கொண்டு செல்வார்கள் பிள்ளைகளைப் பெற்ற மவராசர்கள். சமயங்களில் பிள்ளைகளைப் பெற்ற மவராசிகளும் வருவதுண்டு. அவர்கள் காலில் விழவும் வாத்தியார் தயங்கியதில்லை.
            என்னதான் லாலு வாத்தியார் கள்ளு குடித்தாலும் பாடம் நடத்துவதில் கெட்டிக்காரர். அறிவியல் சோதனைகள் எல்லாம் செய்து காட்டுவார். நீராவிப் போக்கைக் காட்டுவதற்காக செடியின் இலைகளைப் பாலிதீன் பையால் கட்டி விட்டு கொஞ்ச நேரம் கழித்து அழைத்துப் போய்க் காட்டுவார். பையின் உட்புறம் வேர்த்து இருக்கும். "ந்நல்லா பார்த்துக்குங்கடா! இதான்டா நீராவிப்போக்கு!" என்பார்.
            சிவப்பு மையை தண்ணீரில் ஊற்றிக் கலக்கி அதில் வேரோடு பிடுங்கிய குப்பை மேனிச் செடியை வைப்பார். சிறிது நேரத்தில் அந்தச் செடி நீரை உறிஞ்சியிருப்பதை அதன் தண்டுகளில் தெரியும் சிவப்பு நிறத்தைச் சுட்டிக் காட்டி விளக்குவார்.
            மீனின் படம், தவளையின் படம், பூவின் பாகங்கள் படம் என்று படம் வரைந்து பாகம் குறித்துக் காட்டுவார். அவர் வழக்கமாய் பாடம் நடத்துவதை விட கள்ளைக் குடித்து விட்டு பாடம் நடத்துவது விஷேசமாய் இருக்கும். ஒரு குழந்தையைப் போலவே அப்போதெல்லாம் நடந்து கொள்வார். சமயங்களில் பாடுவார். ஆடுவார். அவர் பாடுவது நாட்டுப்புற பாடல் வடிவில் இருக்கும். ஆட்டம் பாஞ்சாலம்மான் கோயிலில் நடக்கும் நாடகத்தில் ஆட்டம் எப்படி இருக்குமோ அதைப் போல இருக்கும். எந்தப் பாடம் நடத்துகிறாரோ அந்தப் பாடத்துக்குத் தகுந்தாற் போல பாடலை இட்டுக்கட்டிப் பாடுவார்.
            "நீராவிப் போக்கு நடக்குது பாத்துக்கோ! பாத்து நல்லா மனசுக்குள்ள ஏத்திக்கோ!" என்ற அவர் பாடினால் அன்று முழுவதும் அந்தப் பாடலையே பாடிக்கொண்டிருப்பர் பிள்ளைகள். பள்ளி விட்டு வீட்டுக்குப் போகும் போது கோரஸாக அந்தப் பாட்டைப் பாடிக் கொண்டே பிள்ளைகள் போவார்கள். ரோட்டில் போய்க் கொண்டிருப்பவர்கள் வித்தியாசமாய்ப் பார்ப்பார்கள். அதைப்பற்றி பிள்ளைகளுக்கு என்ன? அவர்கள் பாடிக் கொண்டே போவார்கள்.
            ஆங்கில வார்த்தைகளை எழுதி அதற்குக் கீழே அதற்கு ஏத்தமாதிரி தமிழ் எழுத்துகளை எழுதி எழுத்துக் கூட்டிக் காட்டுவார். விகடுவுக்கு அது ரொம்பவே பிடிக்கும். அதை கப்பென்று பிடித்துக் கொள்வான். விகடு நன்றாகப் படிக்க ஆரம்பித்ததே லாலு மாமாவால்தான். பிற்காலத்தில் விகடு நன்றாகப் படித்ததற்கு அவர் போட்ட அடித்தளம் எவ்வளவோ உதவியிருக்கிறது.
            விகடுவின் வாழ்க்கையில் லாலு மாமாவுக்கு நல்ல பங்கு இருக்கிறது. ஆனால் செய்யுவின் வாழ்க்கையில் மோசமான பங்கு இருக்கிறது. செய்யுவின் வாழ்க்கையில் அவர் விதியைப் போல விளையாடியவர்.
*****

ஒரு கோப்பைக் கவிதை



கழுவிக் கழுவி ஊற்றுதல்
தேநீர்க் கடையில்
தேநீரும் கொஞ்சம் சோகங்களும்
பரிமாறிக் கொள்ளப் படுகிறது
முடிவில் இரண்டும் காலியாகிறது
காலி கண்ணாடிக் குவளையை வாங்கி
கடைக்காரர் கழுவி ஊற்றி
தேநீரை நிரப்புவதற்குள்
இன்னொருவரின் சோகம் தளும்பி விடுகிறது
பருகுதலின் முடிவில்
வழக்கம் போல் காலியாகிறது
கழுவிக் கழுவி ஊற்றப்படும் சோகங்களுக்காக
கொதித்துத் கொதித்துத் தயாராகும்
தேநீரைப் பார்க்கும் போதெல்லாம்
அந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் சோகங்களையும்
கொஞ்சம் கழுவி ஊற்ற முடிந்திருந்தால்
எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்
*****

24 Feb 2019

மஞ்சப்பையும் ஒரு தூக்கு வாளியும் ஒரு கூஜாவும்



செய்யு - 6
            ஒரு நரம்புப் பைக்குள்தான் தன் புத்தகங்கள் அனைத்தையும் வைத்திருந்தான் விகடு. பையைத் தூக்கிக் கொண்டு ரெண்டு வீடுகள் தள்ளி இருக்கும் சின்னுவின் வீட்டிற்கு ஓடினான். சின்னுவின் வீடும் கூரை வீடுதான். இரட்டைஇலை வீடு என்று சொன்னால் எல்லாருக்கும் தெரியும். தேர்தலுக்கு வரையப்பட்ட இரட்டைஇலை அப்படியே இருக்கும். இடையில் தேர்தல் வந்தாலும் அதன் மேலே அப்படியே வரைந்து விட்டுப் போவார்கள்.
            சின்னு கிளம்பித் தயாராக இருந்தான். விகடுவைப் பார்த்ததில் அவனுக்கு ஆச்சரியம். "உங்க அப்பா கூட போகலியா?" என்றான் சின்னு.
            "இல்ல. லாலு வாத்தியார் வரச் சொன்னார்! சீக்கிரமா வரச் சொன்னார். பரமுவை அழைச்சுகிட்டுப் போவோமா?" என்றான்.
            சின்னு குஷியாகி விட்டான். சின்னு ஜவுளிக்கடை மஞ்சள் பையில் புத்தகங்களை வைத்திருந்தான். சின்னு பையைத் தூக்கிக் கொண்டதும் ஓட்டமும் நடையுமாக ரெண்டு பேரும் ஓடினார்கள்.
            சின்னுவின் வீட்டிலிருந்து இடப்பக்கத் தெரு வழியாகச் சென்றால் பத்து வீடுகள் தள்ளி பண்ணைத்திடல். பண்ணைத்திடலில் ஓர் ஒற்றையடிப் பாதை. ஒற்றையடிப் பாதையில் ஒரு பர்லாங் தூரம் நடந்தால் மாரியம்மன் கோயில் வரும். கோயிலைச் சுற்றிலும் ஒரு பெருந்திடல்.
            மாரியம்மன் கோயிலுக்கு வந்ததும் மூச்சிரைப்பது போல இருந்தது. இருவரும் நின்றார்கள். மெயின்ரோட்டைக் கடந்தால் வெண்ணாற்றுப்பாலம். மெயின்ரோட்டிலிருந்து மூன்றடி உயரத்தில் இருக்கும். அதில் ஏறி அதே போல இறங்கும் போதும் மூன்றடி உயரத்திலிருந்து இறங்க வேண்டும். சிமெண்ட் பாலம்தான் என்றாலும் குறுகியப் பாலம். வண்டி வகையறாக்கள் செல்ல முடியாது சைக்கிளைத் தவிர. ஓரளவு அகலமான நடைபாலம். அந்த உயரத்திற்கு சைக்கிளில் மிதித்தபடியே ஏற முடியாது. சைக்கிளில் வருபவர்கள் சைக்கிளை நிறுத்திதான் தள்ளிக் கொண்டு ஏறுவார்கள்.
            விகடுவும் சின்னுவும் பாலத்தில் ஏறாமல் வலப்பக்கமாய்த் திரும்பிப் பரமுவின் வீட்டை நோக்கி மெயின்ரோட்டில் நடந்தார்கள். பரமுவின் வீட்டுக்கு முன்னே காம்பெளண்ட் சுவரும் கேட்டும் இருக்கும். காம்பெளண்ட் சுவர் முழுவதும் உதயசூரியன் படங்களாக இருக்கும். சின்னுவுக்கும் பரமுவுக்கும் இந்தப் படங்களை ஒட்டி எப்போதும் சண்டை நடக்கும்.
            சின்னு இரட்டைஇலைதான் பெரிசு என்பான். பரமு உதயசூரியன்தான் பெரிசு என்பான். "கலைஞர் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா?" என்பான் பரமு. "அவர்தான் தோத்துப் போயிட்டார்ல. ‍ஜெயலலிதாதான் ‍பெரிய ஆள்!" என்பான் சின்னு. அவர்களின் சண்டைக்கு ஒரு முடிவு இருக்காது. சில நாட்கள் முன் நடந்த இந்தச் சண்டையில் இருவரும் கட்டிப் பிடித்துப் புரண்டு பேசாமலே இருந்தார்கள். இப்போது சின்னுவே வீட்டுக்கு வந்ததைப் பார்த்ததும் பரமுவுக்குச் சந்தோசமாக இருந்தது. பரமு தலைசீவிக் கொண்டிருந்தான்.
            சின்னு பரமுவைப் பார்த்ததும் ஒரு கண்ணைத் திருப்பிக் கண்ணடித்தான். பரமுவும் அதைப் போலவே செய்தான். "கலைஞரு, ஜெயலலிதா ரெண்டு பேருமே பெரிய ஆள்தான்டா!" என்றான் பரமு. "ஆமாண்டா!" என்றான் சின்னு.
            "லாலு வாத்தியார் வரச் சொல்லியிருக்கார்! சாப்பிட்டுட்டியா?" என்றான் விகடு.
            "ம்! உங்க வூட்டு பாப்பா எப்படிடா இருக்கு?" என்றவன் நரம்புப் பையைத் தூக்கிக் கொண்டு இவர்களுக்கு முன் ஓட ஆரம்பித்தான்.
            "அது எப்பப் பார்த்தாலும் அழுதுகிட்டே இருக்குடா! ராத்திரியும் அழுவுதாம். அதனால் ராத்திரியெல்லாம் தூங்க முடியலியாம். நான் நல்லா தூங்கிடுவேன்!" என்றான் விகடுவும் ஓடிக் கொண்டே.
            ஒண்ணாம் பெல் அடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. சரியாக எட்டரை மணி வாக்கில் ஒண்ணாம் பெல் விட்டு விட்டு அடிப்பார்கள். ஒன்பது மணி வாக்கில் ரெண்டாம் பெல் விட்டு விட்டு அடிப்பார்கள். ஒன்பதரைக்கு பிரேயர் பெல் கடகடவென்று அடிப்பார்கள்.
            மூவரும் ஓட்டமாக பாலத்தின் மேல் ஏறி இறங்கினார்கள். பாலத்திலிருந்து இறங்கி பத்தடி வைத்தால் பள்ளிக்கூட மைதானம்.
            ஐந்தாம் வகுப்பு வரை இருந்த திட்டைப் பள்ளிக் கூடத்தில் மூன்று கட்டிடங்கள் இருந்தன. பாலத்திலிருந்து இருநூறு அடி தள்ளி ஓர் ஓட்டுக் கட்டிடம் வடக்குத் தெற்காக இருந்தது. அதை ஓட்டு பில்டிங் என்பார்கள் ஆசிரியர்களும் பிள்ளைகளும். அதில் வடவண்டைப் பக்கம் மூன்றாம் வகுப்பும், தென்னண்டைப் பக்கம் ஐந்தாம் வகுப்பும் இருந்தது. ஐந்தாம் வகுப்புதான் தலைமையாசிரியர் அறையும் கூட. இரண்டு வகுப்புக்கும் இடையில் தட்டி மறைப்பு இருக்கும்.
            ஓட்டு பில்டிங்கின் இடப்பக்கமாக ஐம்பது அடி தள்ளி மாடிக் கட்டிடம். அதை பக்கா பில்டிங் என்பார்கள். அதில் கீழண்டைப் பக்கம் இரண்டாம் வகுப்பும், மேலண்டைப் பக்கம் விகடு, பரமு, சின்னு, மன்னு ஆகியோர் படிக்கும் நான்காம் வகுப்பும் இருந்தது. பக்கா பில்டிங்கின் கிழக்குச் சுவரை ஒட்டி ஒரு சாய்ப்பு இருக்கும். அதில் ஓடு வேய்ந்திருந்தார்கள். அதுதான் சத்துணவுக்கான சமையலறை. பெரும்பாலான நேரங்களில் பிள்ளைகள் அங்குதான் நிற்பார்கள். சமைக்கும் ஆயா  ஒரு பிடி அரிசியை அள்ளிக் கொடுத்தால் அதை வாயில் போட்டுக் கொண்டு ஓடுவார்கள்.
            ஓட்டு பில்டிங்கின் வலப்பக்கமாக இருபதடி தூரத்தில் கிழக்கு மேற்காக அஸ்பெஸ்டாஸ் கட்டிடம் இருந்தது. அதை அஸ்பெஸ்டெஸ் கொட்டாய் என்பார்கள். அதன் மேலண்டைப் பக்கம் ஒண்ணாம் வகுப்பும், ஒரு மறைப்பு வைத்து கீழண்டைப் பக்கத்தில் பால்வாடியும் இருந்தது.
            மைதானத்திலிருந்து பார்த்தால் இந்த மூன்று பில்டிங்குகளும் 'ப' வடிவில் இருக்கும். பக்கா பில்டிங்கும், அஸ்பெஸ்டாய் கொட்டாயும் எதிரெதிராக இருக்கும். ஓட்டு பில்டிங் பாலத்தைப் பார்த்தாற் போல இருக்கும்.
            ஓட்டுப் பில்டிங்கிற்கும், பக்கா பில்டிங்கிற்கும் வராண்டா இருந்தது. அஸ்பெஸ்டாய் கொட்டாய்க்கு வரண்டா கிடையாது. காலையில் பள்ளிக்கு சீக்கிரமாய் வரும் பிள்ளைகள் வராண்டாவில் ஓடியாடி விளையாடிபடியே இருப்பார்கள். ஒண்ணாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு வராண்டா இல்லாவிட்டாலும் அந்தப் பிள்ளைகள் ஓட்டுப் பில்டிங் வராண்டாவிலோ, பக்கா பில்டிங் வராண்டாவிலோ வந்து ஓடிக் கொண்டிருப்பார்கள்.
            விகடு, பரமு, சின்னு மூன்று பேரும் நான்காம் வகுப்பை நோக்கி ஓடினார்கள். அங்கே அதற்கு முன்னே வந்து லாலு வாத்தியார் உட்கார்ந்திருந்தார். இவர்களைப் பார்த்ததும் எழுந்து வராண்டாவுக்கு வந்தவர், "பையைக் கொண்டு போய் உள்ள வெச்சுகிட்டு வாங்கடா!" என்றார்.
            லாலு வாத்தியார் சட்டைப் பைக்குள் கையை விட்டு காசை எடுத்து எண்ணிப் பார்த்துக் கொண்டே ஒரு தாளில் வைத்து பொட்டலமாய்க் கட்டினார். சைக்கிள் ஹேண்டில்பாரில் மாட்டியிருந்த மஞ்சள் பையை எடுத்துக் கொடுத்து பொட்டலத்தை நீட்டினார். பரமு பையை வாங்கிக் கொண்டான். விகடு காசு பொட்டலத்தை வாங்கிக் கொண்டான். "ஈச்சமண்டை வீட்டுக்குப் போயிட்டு சீக்கிரமா வாங்க! வழியுல எங்கயும் நிக்கக் கூடாது!" என்றார் வாத்தியார்.
            மூவரும் பாலத்தைக் கடந்துப் போய் மஞ்சள் பையைப் பிரித்து பார்த்தார்கள். குறுகலான ஒரு தூக்கு வாளியும் ஒரு கூஜாவும் இருந்தது.
            "ரொம்ப நாளைக்கு அப்புறமா எதுக்குடா வாத்தியார் ஈச்சமண்டை வூட்டுக்கு அனுப்புறார்?" என்றான் பரமு.
            "விகடு வூட்டுல பாப்பா போறந்திருக்குல்ல. அதுக்காகத்தான் இருக்கும்!" என்றான் சின்னு.
            "பொட்டலத்தைப் பிரிச்சுப் பார்ப்போமோ?" என்றான் விகடு.
            "வாத்தியார் கண்டுபிடிச்சார்னா அடிப்பார்டா! அதுவும் ஒத்தக் கையைப் பிடிச்சு மேலே தூக்கிப் போட்டுல அடிப்பாரு!" என்றான் சின்னு.
            "எப்படிக் கண்டுபிடிப்பாரு?" என்றான் பரமு.
            "இந்தோ பாரு பிள்ளைங்க போயிகிட்டு இருக்கு. இந்தப் புள்ளைங்க பள்ளியோடத்துக்குப் போனதுமே லாலு வாத்தியார் நம்ம மூணு பேரையும் பத்திதான் முதல்ல விசாரிப்பாரு பாத்துக்கோ. அவரு ரொம்ப சூதானமாக இருப்பாருடா!" என்றான் சின்னு.
            மெயின்ரோட்டிலேயே ஐந்து நிமிடம் ஓடினால் ஈச்சமண்டை வீடு வந்து விடும். அவர்கள் ஓடி வந்த ஓட்டத்தில் ஈச்சமண்டையின் வீடு வந்து விட்டிருந்தது. மூவரும் தட்டிப் படலைத் திறந்து வீட்டின் முன் நின்றார்கள். ஈச்சமண்டையின் வீடு ஒரு சிறிய குடிசை வீடு. அந்த சிறிய வீட்டுக்குள் ஈச்சமண்டை ஒரு பழந்துணியைப் போட்டு படுத்துக் கிடந்தார். ஈச்சமண்டை குட்டையாகத்தான் இருப்பார். உடம்பு கரணை கரணையாக இருக்கும். எங்களைப் பார்த்ததும் "பிள்ளைங்க வந்திருக்குப் பாரு!" என்று ஈச்சமண்டை சத்தம் கொடுத்தார். ஏதோ அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த ஈச்சமண்டையின் பெண்டாட்டி எழுந்து வெளியே வந்தார்.
            "வாத்தியாரு அனுப்பிச்சாரு!" என்று மஞ்சப்பையை நீட்டினான் பரமு. காசு போட்டலத்தை நீட்டினான் விகடு. அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் போனார்.
            "இன்னைக்கு என்னா காலையிலயே பசங்கள அனுப்பி வுட்டுருக்காரு?" என்றார் ஈச்சமண்டையின் பொண்டாட்டி.
            "சீக்கிரம் கொடுத்து வுடு! புள்ளைங்க நிக்குது பாரு!" என்றார் ஈச்சமண்டை.
            "ஊத்திதானே கொடுக்கணும்! இப்படி அவுசரப்படுத்துனா எப்படி?"
            "ம்! ம்! சீக்கிரமா ஊத்திக் கொடு!"
            "ஊத்திகிட்டுதான் இருக்கேன்!"
            ஈச்சமண்டையின் பொண்டாட்டி மஞ்சப்பையை வெளியே கொண்டு வந்து கொடுத்தார். பரமு அதை பவ்வியமாய் வாங்கிக் கொண்டான். மேலே வாழை நார் சுற்றி பை கட்டப்பட்டிருந்தது. பையின் மேல் முனைகள் நனைந்திருந்தன.
            "கிளம்புங்கடா புள்ளைகளா! சீக்கிரம்!" என்று உள்ளேயிருந்து சத்தம் போட்டார் ஈச்சமண்டை.
            படலைத் திறந்து கொண்டு மூன்று பேரும் வெளியே வந்தார்கள்.
            "சுடுகாட்டைத் தாண்டுனதுக்கு அப்புறம் நாந்தான் தூக்கியாருவேன்!" என்றான் சின்னு.
            "அதுக்கு அப்புறம் பள்ளியோடம் வரைக்கும் நாந்தான்!" என்றான் விகடு.
            "வாத்தியாரு எங்கிட்டதான் பையைக் கொடுத்தாரு. அதனால நாந்தான் கடைசி வரைக்குந் தூக்கியாருவேன்!" என்றான் பரமு.
*****

பா.வெ.வின் பரபரப்பாய் பக்குவமாய் - நூல் விமர்சனம்



ஓர் இளைஞரின் குளோபல் வில்லேஜ் கனவுகள்
            வாழ்வியல் தொடர்பான நூல்கள் நிறைய வெளிவரும் காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
            எப்படி நட்பு கொள்வது? எப்படி காதல் செய்வது? பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்வது எப்படி? என்பது குறித்து எல்லாம் நூல்கள் இருக்கின்றன. பரபரப்பான வாழ்வில் பல விசயங்கள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. மறைந்து வரும் அந்த விசயங்களை வாழ்வியல் நூல்கள் மீட்டுருவாக்கம் செய்ய விழைகின்றன.
            எழுத்தாளர் பா.வெ. அவர்களின் 'பரபரப்பாய்... பக்குவமாய்...' எனும் நூல் பரபரப்பான வாழ்விலிருந்து பக்குவமான வாழ்வை நோக்கி நகர்வது எப்படி என்பதைப் பற்றி பேசும் ஒரு நூல் ஆகும்.
            பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பார் பவணந்தி. பழைய பக்குவம் கழிந்து புதிய பரபரப்பு வாழ்வில் புகுந்திருக்கிறது.
            ஒவ்வொரு காலகட்டத்துக்கும் அப்போதைய நிலை பரபரப்பே. இன்னும் பத்து ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் இப்போது வாழ்ந்த வாழ்வு பக்குவம் என்பது போலும் அப்போது வாழும் வாழ்வு பரபரப்பாய்த் தோன்றும்.
            பரபரப்பைத் தவிர்க்க முடியாது. பரபரப்பு குறித்து பார்வையை மாற்றிக் கொள்ள முடியும். பக்குவமான நிலையை நோக்கி நகர முடியும் என்பதுதான் பா.வெ.வின் சிந்தனையாக்கம்.
            பா.வெ. இந்த நூலில் பரபரப்பு என்று குறிப்பிடுவதை ஐந்து வகைமைக்குள் அடக்கலாம்.
            1. அலுவலகம் சார்ந்த பரபரப்பு,
            2. வேகமான பயணங்கள் மற்றும் போக்குவரத்து உருவாக்கிய பரபரப்பு,
            3. நகர்மயமாதலால் உண்டான பரபரப்பு,
            4. நுகர்வு கலாச்சாரத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட பரபரப்பு,
            5. கல்வி மோகம் வளர்த்தெடுத்த பரபரப்பு.
            இதற்கானத் தீர்வுகளை அவர் தன் பால்யத்திலிருந்தும், தன் அனுபவத்திலிருந்தும் முன்வைக்கிறார். அப்படி அவர் முன்வைக்கும் தீர்வுகளை ஐந்து வகைமைக்குள் அடங்கலாம்.
            1. கிராம வாழ்வை நோக்கிய மீட்டுருவாக்கம்,
            2. கூட்டுக்குடும்ப வாழ்வை மீண்டும் கட்டமைத்தல்,
            3. அளவளாவுதலுக்கு அக்கறையோடு நேரம் ஒதுக்குதல்,
            4. அளவான எதிர்பார்ப்போடு கூடிய முறையான திட்டமிடல்,
            5. மனதை அவ்வபோது பகுப்பாய்வு செய்தல்.
            நூலில் தன்னுடைய பால்யத்தையும், கிராமத்தையும் சொற்களைச் சுழற்றி சித்திரமாய்ப் படைத்து கிராம வாழ்வை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணுகிறார் பா.வெ. விவசாயத்தை வாழ்வியல் முறையாகக் கொள்ளும் வாழ்க்கை முறைக்கு அழைப்பு விடுகிறார். இந்த விவசாய தேசத்தில் விவசாயத்தை நோக்கி வாருங்கள் என்று அழைப்பு விடுப்பது என்ன ஓர் ஆச்சரிய முரண்! அந்த முரணுக்கு பழக்கப்பட்டுப் போய் விட்டதே இந்த வாழ்க்கை.
            நாட்டு மாடு, குளம், கிணறு, முடக்கத்தான் தோசை, நீர் உருண்டை என்று நூலில் காட்சிப்படும் கிராமம் மனதுக்குள் எச்சில் ஊற வைக்கிறது. பஞ்சாரத்தில் அடைக்கப்பட்ட கோழிக்குஞ்சுகளாய்க் கீச்சிடுகிறது.
            தொலைக்காட்சிகளும், செல்பேசிகளும் அளவளாவுதலுக்கான நேரத்தை அபகரித்து விட்டதாக, ஒட்டு மொத்த வாழ்வையும் பொழுதுபோக்கு அம்சங்கள் போதையாக்கி விட்டதாக   நீட்டோலை நீட்டும் நூலாசிரியர், பழக்கத்தை மாற்றிக் கொள்ள நான் ஏன் பழகக் கூடாது என்று அதற்குக் குறிப்போலையையும் நீட்டுகிறார்.
            நூலின் கட்டுரைகள் அன்றும் இன்றும் என்று ப்ளாஷ்பேக்குக்கும் நிகழ்காலத்துக்கும் மாறி மாறி பயணித்துக் கொண்டே பரபரப்பிலிருந்து பக்குவமான ஒரு பாதையை நோக்கி நகர்த்துகின்றன.
            பா.வெ. முன் வைக்கும் பரபரப்பின் பட்டியல்கள் அதிகம். அப்பட்டியல்களில் உள்ள ஒவ்வொன்றும் புரிந்து கொள்ளாமையால் நேர்பவைகள் என்பதையும் அவரே சுட்டுகிறார்.
            புரிந்து கொள்ளாமல் கத்துவது கோபம்,
            புரிந்து கொள்ளாமல் மனதுக்குள் கதறுவது கவலை,
            புரிந்து கொள்ளாமல் வெளியில் பதறுவது டென்ஷன் என்று அவர் தரும் விளக்கம் அவர் சுட்டிக் காட்டும் பட்டியல் பிரச்சனைகளுக்கு ஒட்டுமொத்தத் தீர்வைத் தருகிறது.
            நகரம் பரபரப்பாய்த் தோற்றம் தருகிறது. கிராமம் பக்குவமாய்த் தோற்றம் தருகிறது. நகரத்து உடலுக்குள் ஒரு கிராமத்து மனதை ஏன் பொருத்தி வைக்கக் கூடாது? கிராமங்கள் நகர்மயமாகி ஒரு பரபரப்பைச் சந்திப்பதை மாற்றி நகர்மயம் கிராம மயமாகி ஏன் ஒரு பக்குவத்தை அடையக் கூடாது என்பதே இந்நூல் முன்வைக்கும் வாதம்.
            அப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த நூலை கலந்தாலோசிக்கலாம். இந்நூலில் உள்ள கருத்தாக்கங்களை முயன்று பார்க்கலாம்.
            இன்று இளைஞர்கள் அதிகம் இல்லாத கிராமங்களில்... ஓர் இளைஞராய் கிராமத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற பா.வெ. அவர்களின் துடிப்பு ஒவ்வோர் இளைஞருக்கும் ஏற்படும் போது பக்குவமான ஒரு மாற்றம் ஏற்படும். உலகமே ஒரு குளோபல் வில்லேஜ் எனும் போது அந்த வில்லேஜ்தானே இனிவரும் உலகைக் கட்டமைக்க முடியும்.
            பா.‍வெ.வின் இக்கனவைத் தொடர விரும்புபவர்களுக்கும், 'பரபரப்பாய் பக்குமாய்' என்ற இந்த நூலை வாசிக்க விரும்புபவர்களுக்கான நூல் தொடர்புக்கான முகவரி -
            அகரம்,
            மனை எண் 1, நிர்மலா நகர்,
            தஞ்சாவூர் - 613 007
            தொடர்பு எண்கள் - 04362 239289, 75983 06030
            மின்னஞ்சல் - annamakaram@gmail.com
            வலைதளம் - www.annamakaram.com
*****

23 Feb 2019

லாலு மாமாவின் காயிதங்கள்



செய்யு - 5
            செய்யு பிறந்து இரண்டு நாட்கள் கழித்து லாலு மாமா வந்திருந்தார். அவரைக் கொண்டாட்ட மனதுக்குச் சொந்தக்காரர் என்பார்கள். கொண்டாட வேண்டும் என்று நினைத்து விட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டாராம். இடம், பொருள், ஏவலும் பார்க்க மாட்டாராம். அப்படித்தான் லாலு மாமாவைப் பற்றி ஊரில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவருக்கும் எதிர்வீட்டு சந்திரமதிக்கும் ஏதோ இருப்பதாக அரசல்புரசலாகவுகம், சமயங்களில் வெளிப்படையாகவும் பேசிக் கொள்வார்கள். இப்படி நான்காம் வகுப்புப் படிக்கும் விகடுவுக்கே தெரியும் அளவுக்கு அவர் பல விசயங்களில் நடந்து கொண்டிருந்தார்.
            சைக்கிளில் வீட்டுக்கு வந்து பார்த்தவர், "என்னடா விகடு தங்கச்சிப் பொறந்துடுச்சா?" என்றார்.
            "ஆமா மாமா!" என்றவன் அவர் வீட்டுக்குள்ளே சென்றதும் அவர் சைக்கிசை் சத்தம் எழாமல் ஸ்டாண்டை எடுத்து விட்டு சற்று தள்ளிக் கொண்டு சென்றான். குரங்கு பெடல் போட்டு மிதிக்கத் துவங்கினான்.
            லாலு மாமாவின் சைக்கிளில் கேரியரோடு ஒரு பெட்டி இருக்கும். மைக்கா ஒட்டிய மரப்பெட்டி. அப்படி ஒரு பெட்டி அநேகமாக இந்த ஏரியாவில் லாலு மாமாவின் சைக்கிளில் மட்டும்தான் இருந்தது. பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கும். அதற்கு ஒரு சிறிய பேட்லாக் போட்டு பூட்டு போட்டிருந்தார் லாலு மாமா. அதை யாரும் திறக்க முடியாது என்பது அவரின் கணிப்பு. விகடு அதை கம்பி போட்டு நெம்பி திறந்து விடுவான். திறந்தது போலவே மறுநெம்பு நெம்பி பூட்டியும் விடுவான். இதற்காகவே அவனுடைய எல்லா கால்சட்டைகளிலும் ஒரு கம்பி சுற்றிய நிலையில் இருக்கும். அந்தப் பெட்டிக்குள் கத்தைக் கத்தையாக காகிதம் இருக்கும். ரெண்டு கோடு நோட்டு, நாலு கோடு நோட்டு சில கிடக்கும். எல்லாம் பசங்களின் நோட்டுகள். அதில் கணக்கு எழுதி வைத்திருப்பார். விதை விதைத்தது, நடவாள் கூலி, நாற்றாங்கால் செலவு, களை எடுத்தச் செலவு இப்படி எதையாவது எழுதி வைத்திருப்பார். இன்னொரு நோட்டில் வட்டிக்கு விட்ட கணக்கு எழுதி வைத்திருப்பார்.
            குரங்குபெடலில் போய்க் கொண்டிருந்த விகடு. வடக்குத் தெரு வரை போய் ரெண்டு ரவுண்டு அடிக்கலாம் என்று நினைத்தான். அதற்குள் வீட்டிலிருந்து திரும்பி தெருவுக்கு வந்து சைக்கிளைக் காணா விட்டால் சத்தம் போடுவார். லேட்டாகத்தான் பள்ளிக்கூடம் வருவார். என்றாலும் லேட்டாயிடும் என்று சத்தம் போடுவார். தவிரவும் கேரியர் பெட்டி குறித்த அதீத கவனம் அவரிடம் உண்டு. மிக அரிதாக பள்ளிக்கூடம் சீக்கிரமாகவும் வருவார். அப்படி வந்தால் செம ஜாலியாக இருப்பார்.
            வடக்குத் தெரு முனையிலேயே ஒரு யூ டேர்ன் போட்டு திரும்பினான் விகடு. வேகவேமாக பெடல் போட்டு வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான். குறிப்பாக சத்தம் வராத வகையில் ஸ்டாண்ட் போட்டு சைக்கிளை நிறுத்தினான். லாலு மாமா இன்னும் திரும்பியிருக்கவில்லை. வீட்டுக்குள் ஓடினான்.
            லாலு மாமாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
            "சரி! நான் கிளம்புறேன்!" என்றவர் விகடுவைப் பார்த்ததும், "சைக்கிளை எடுக்கலைல!" என்றார்.
            "ம்ஹூம்!" என்றான்.
            "பள்ளிக்கூடத்துக்கு சீக்கிரம் வந்துடு!"
            "வந்திடறேன் மாமா!" என்ற விகடு கொல்லைப்பக்கம் ஓடினான். யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை என்று தெரிந்ததும் கால்சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த அந்தத் தாளை எடுத்துப் பார்த்தான். லாலு மாமாவின் சைக்கிள் பெட்டியிலிருந்து எடுத்துப் பார்த்த நாலுகோடு நோட்டிலிருந்து  கிழித்து வைத்திருந்த தாள். இப்படி எப்போதெல்லாம் விகடு அந்தப் பெட்டியைத் திறக்கிறானோ அப்போதெல்லாம் எதாவது ஒரு தாளைக் கிழித்து எடுத்து விடுவான்.
            லாலு மாமாவின் கையெழுத்து வித்தியாசமாக இருக்கும். இடது பக்கமும் வலது பக்கமுமாக நீட்டி நீட்டி அதாவது இழுத்து இழுத்து எழுதியிருப்பார். எழுத்துகள் ஒவ்வொன்றும் மண்டைக் கணக்கில் மண்டை மண்டையாக இருக்கும். அந்தத் தாளில் சந்திரமதிக்குக் கொடுத்தது என்று தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்தது. தேதி போட்டு எழுதியிருந்த தொகையைத் தட்டு தடுமாறிக் கூட்டினான். இருநூற்று இருபது ரூபாய் வந்தது. அதைக் கால்சட்டைப் பைக்குள் மீண்டும் பத்திரப்படுத்திக் கொண்டான்.
            "சீக்கிரமா பள்ளியோடம் கிளம்புடா! அப்பா கிளம்பிடுவாங்க!" அம்மாவின் சத்தம் வீட்டுக்குள்ளிலிருந்து வந்தது.
            விகடு கால்சட்டை, சட்டையைக் கழற்றி விட்டு துண்டைக் கட்டிக் கொண்டு குளிக்க ஆயத்தமானான்.
            சட்டியிலிருந்த சாம்பலை அள்ளி பல்லை வேக வேகமாக விலக்கியவன், அடிபம்பிலிருந்து அன்னக்கூடையில் தண்ணியை அடித்து கால் கூடை இருக்கும் போதே அப்படியே தலைக்கு மேல் தூக்கி ஊத்திக் கொண்டான். அம்மா பக்கத்தில் இருந்தால் வாய்க்குள் விரலை விட்டு "நல்ல வெலக்கித் தொலைடா!" என்று ரெண்டு இழு இழுத்து விடுவார். சோப்பை தலைக்கும், மூஞ்சுக்கும் போட்டு கண்ணெரிச்சலை உண்டு பண்ணி விடுவார்.
            அம்மா இல்லாதது விகடுவுக்கு வசதியாய்ப் போனது. தண்ணியை அடிபம்பிலிருந்து அடித்து அடித்து ஊத்திக் கொண்டிருந்தான். குளிக்கும் போதே அப்படியே கொஞ்சம் தண்ணியை வாயில் ஊத்திக் கொண்டு கொப்புளித்துக் கொண்டிருந்தான். அம்மா இருந்தால் அப்படியெல்லாம் முடியாது. பல்லை விலக்கிக் கொப்புளித்து விட்டுதான் குளிக்க வேண்டும். குளித்து முடித்ததும் அதே கால்சட்டையை மாட்டிக் கொண்டு உள்ளே வந்தான் விகடு. உடம்பு, தலை எதையும் அவன் சரியாகத் துவட்டியிருக்கவில்லை. சட்டையைப் போட்டுக் கொண்டு தலையை ஒரு மாதிரியாகச் சீவி முடித்தான்.
            செய்யு பிறந்திருந்ததால் அம்மாவையும், பாப்பாவையும் கவனித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிராம்பட்டினத்து ஆத்தா வந்திருந்தார். அவர் வைத்தி தாத்தா வழி உறவு. அந்த உறவுமுறையைச் சொன்னால் விகடுவுக்கு தலைச்சுற்றல் வந்து விடும். சொந்தக்காரர்களில் யாருக்கு குழந்தை பிறந்தாலும் அந்த ஆத்தா வந்து விடுவார். இரண்டு மூன்று மாதங்கள் தங்கி செய்ய வேண்டிய பணிவிடைகளையெல்லாம் செய்து விட்டுப் போய் விடுவார். அவரை எந்த வித விசேசங்களிலோ, தேவைகளிலோ பார்க்க முடியாது. யாருக்கேனும் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் இருப்பார். மற்றபடி அவர் வெளிசோலி வைத்துக் கொள்ள மட்டார் என்று அவரைப் பற்றி எல்லாரும் பேசுவார்கள்.
            அதிராம்பட்டினத்து ஆத்தா சூடாக இட்டிலி சுட்டு வைத்திருந்தார். இடியாப்பமும் பாலும் கூட இருந்தது.
            இட்டிலியை எடுத்து தட்டில் வைத்தவர், "ராத்திரி வெச்ச கருவாட்டுக் குழம்பு இருக்கு! ஊத்திக்கிறியாடா?" என்றார்.
            "சீனி மட்டுந்தான். வேற எதையும் வெக்கக் கூடாது. வெச்சின்னா சாப்பிட மாட்டேன்!" என்றான் விகடு.
            நான்கு இட்டிலிகளைத் தின்று முடித்தவன் பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் கிளம்பினான். படுத்திருந்த அம்மா அவன் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தார். இரவெல்லாம் அழுது யாரையும் தூங்க விடாமல் செய்த செய்யு தூங்கிக் கொண்டிருந்தாள். அம்மா எதுவும் சொல்லவில்லை. இதுவே வேறொரு நாளாக இருந்திருந்தால் அவன் சரியாக துவட்டாததற்கு முதுகில் படார் படாரென்று அடி விழுந்து இருக்கும்.
            "டேய் விகடு! என்னடா சீக்கிரமா கிளம்பிட்டே. அப்பா வந்திடட்டும். அப்பா கூட போ!" என்றார் அம்மா.
            "லாலு மாமா சீக்கிரமே பள்ளிக்கூடம் வரச் சொன்னாங்க!" என்றான் விகடு.
            "ம்ஹூம்! உருப்பட்டாப்பலதான்!" அம்மாவின் முகத்தில் எரிச்சல் தோன்றி மறைந்தது.
*****