30 Nov 2023

தி. ஜானகிராமனின் ‘செம்பருத்தி’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

தி. ஜானகிராமனின் ‘செம்பருத்தி’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

தி. ஜானகிராமனின் ஏழாவது நாவல் செம்பருத்தி. 1968 இல் நூல் வடிவில் வெளியான நாவல் இது.

தி.ஜா.வின் நாவல்களில் மிகவும் எதார்த்தமான நாவல் என்று இதைக் குறிப்பிட முடியும். அவரது ஒவ்வொரு நாவல்களிலும் பெண்கள் வசீகரிப்பவர்களாகவும் வாஞ்சையான தேவதைகளைப் போலவும் காட்சியளிப்பார்கள். இந்த நாவலில்தான் தி.ஜா. பெண்களை அத்தனை எதார்த்தங்களுடனும் படைத்துள்ளார். இந்த நாவலிலும் பெண்கள் வசீகரிக்கிறார்கள், தேவதைகளைப் போல இருக்கிறார்கள், சாதாரண மனுஷிகளாவும் இருக்கிறார்கள், சண்டை போடவும் செய்கிறார்கள், மன விகாரங்களை வெளிப்படுத்திக் கலங்கடிக்கவும் செய்கிறார்கள்.

ஒரு சம்சாரியின் மொத்த வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இந்த நாவல். நாவலை மூன்று அத்தியாயங்களாகப் பகுத்து சட்டநாதன் என்ற சம்சாரியின் வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டு போகிறார் தி.ஜா.

சட்டநாதன் எனும் சம்சாரி குடும்பத்தை நிலைநிறுத்துவது முதல் அத்தியாயம். அவர் அடுத்த தலைமுறை வாரிசுகளுக்குத் தன் கடமைகளைச் செய்து முடிப்பது இரண்டாவது அத்தியாயம். முதுமையை எதிர்கொள்வது மூன்றாவது அத்தியாயம். இப்படி இந்த நாவலின் அத்தியாயங்களை ஒரு வசதிக்காகப் பகுத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் தி.ஜா. காட்டும் குடும்பச் சிடுக்குகளும், பொருளாதாரச் சிக்கல்களும், அவைப் பாத்திரங்களுக்குள் ஏற்படுத்தும் தாக்கங்களும் நுட்பமானவை. மூன்று அத்தியாயங்களிலும் சட்டநாதன் எதிர்கொள்ளும் மூன்று பெண்களும் முக்கியமானவர்கள். அதுதான் நாவல் என்றும் சொல்லலாம். மூன்று பெண்களையும் மூன்று ஆண்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்றும் சொல்லலாம் என்றாலும் நாவலின் பெரும்போக்கு சட்டநாதனை மையமாகக் கொண்டு சுழல்வதால் மூன்று அத்தியாயங்களிலும் சட்டநாதன் எதிர்கொள்ளும் மூன்று பெண்கள் என்று சொல்வதும் பொருத்தமாகும்.

முதல் அத்தியாயத்தில் சட்டநாதனின் மூத்த அண்ணி ஆற்றாமையால் மன விகாரத்தை வெளிப்படுத்துபவளாக இருக்கிறாள். இரண்டாவது அத்தியாயத்தில் அந்த விகாரத்தை வெளிப்படுத்தும் பணியை இரண்டாவது அண்ணி குஞ்சம்மாள் ஏற்றுக் கொள்கிறாள். இந்த இரண்டு அத்தியாயங்களிலும் சட்டநாதனுக்குப் பெண்களின் மன விகாரங்களை எதிர்கொள்ள ஆறுதலாகவும் தேறுதலாகவும் நிற்கும் மனைவியான புவனா மூன்றாவது அத்தியாயத்தில் அவளே மன விகாரத்தை வெளிப்படுத்துபவளாகவும் மாறி விடுகிறாள்.

ஒரு சம்சாரிக்குக் குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவதைத் தவிர வேறு என்ன பெரிய கடமை இருக்க முடியும்? சட்டநாதன் அப்படி ஒரு சம்சாரி. இதனைக் குடும்பத்தின் மூத்தப் பையன் செய்ய வேண்டும் என்ற ஒரு மரபு குடும்ப முறையில் உண்டு. சட்டநாதன் கடைக்குட்டி. கடைக்குட்டியின் தலையில் குடும்பத்தின் மொத்த பாரமும் விழுகிறது. மொத்த பாரத்தையும் இயல்பாகவும் அதே நேரத்தில் உறுதியாகவும் அமைதியாகவும் எதிர்கொள்கிறார் சட்டநாதன்.

மூத்த அண்ணன் கோபாலசாமிக்கும் இரண்டாவது அண்ணன் முத்துச்சாமிக்கும் ஏழாம் வகுப்புக்கு மேல் ஏறாத படிப்பு சட்டநாதனுக்கு ஏறுகிறது. ஏறி என்ன பயன் என்பது போல அடுத்தடுத்துக் குடும்ப பாரங்கள் சட்டநாதனின் தலையில் விழும் போது படிப்பிற்கேற்ற வேலையைத் தேடாது குடும்பத்தின் ஒவ்வொரு பாரத்தையும் அதன் போக்கில் சுமக்க ஆரம்பித்து நிகழ்வுகளின் போக்கில் எதிர்கொள்கிறார்.

படிக்கும் காலத்தில் தான் ஆசைப்பட்ட தாண்டவ வாத்தியாரின் மகள் குஞ்சம்மாளை இரண்டாவது அண்ணன் முத்துச்சாமி கட்டிக் கொண்டு அண்ணியாக ஆக்குவதும், அப்படி ஆக்கிவிட்டு மார்கழி மாதத்துச் சீக்கு எனச் சொல்லப்படும் காலராவில் சாகும் தறுவாயில் சட்டநாதனுக்கு சண்பகவனத்தின் மகள் புவனாவைப் பெண்டாட்டியாகக் காட்டி விட்டுப் போய்ச் சேர்ந்து விடுவதும் சட்டநாதனுக்கு முதல் அத்தியாயத்தில் நிகழும் ஆற்றாமையும் ஆறுதலும் ஆகும்.

இரண்டாவது அண்ணன் முத்துச்சாமி நடத்திய கடையைச் சட்டநாதன் ஏற்று நடத்துகையில் இரண்டாவது அண்ணியான குஞ்சம்மாளின் அன்னியோன்யத்தையும் வேட்கையையும் ஏற்கவும் முடியாமல் மறுதலிக்கவும் முடியாமல் சட்டநாதனின் கிரகஸ்த வாழ்க்கையை நாவலின் முதல் அத்தியாயத்தில் நகர்த்திக் கொண்டு போகிறார் தி.ஜா.

மூத்த அண்ணன் கோபாலச்சாமி ஜாமீன் கையெழுத்துப் போட்டதற்காக மொத்த சொத்தையும் இழந்து பதினான்காயிரம் கடனையும் கொண்டு வந்து சேர்த்து விடும் போது இரண்டாவது அண்ணனின் குடும்பத்தோடு மூத்த அண்ணனின் குடும்ப பாரமும் சேர்ந்து கொள்கிறது சட்டநாதனின் தோள்களில். இந்த இரண்டு குடும்ப பாரங்களையும் இரண்டு தோள்களிலும் கூடுதலாக தனது குடும்ப பாரத்தை தலையிலும் என்று மூன்று குடும்ப பாரங்களையும் மளிகைக் கடை வியாபாரத்தைக் கொண்டு அநாயசமாகக் கடந்து வருவதாகச் சட்டநாதனை வடிவமைக்கிறார் தி.ஜா.

இரண்டாவது அண்ணன் சொன்னபடி புவனாவை மணம் முடித்துக் கொள்வதாகட்டும், அண்ணனின் மகளைத் திருமணம் செய்விப்பதாகட்டும், மூத்த அண்ணனின் மகளுக்குத் திருமணம் முடிப்பதாகட்டும், அதற்காகக் கூடுதலாகக் கடன் வாங்குவதாகட்டும் அனைத்திலும் சட்டநாதனை ஒரு தேர்ந்த சம்சாரியாகச் சரியாக நிலைநிறுத்திக் காட்டுகிறார் தி.ஜா.

சட்டநாதன் எவ்வளவு தன்னைச் சரியாக நிலைநிறுத்தினாலும் குடும்பச் சொத்தை விற்ற வகையில் சம்பந்தமில்லாமல் பிற்பாடு வரும் அறுபதினாயிரம் ரூபாய் குடும்ப உறுப்பினர்களின் மனதை உருமாற்றிப் போடுவதாக நாவலின் அடுத்தடுத்த முடிச்சுகளையும் உளச் சிக்கல்களையும் கொணர்ந்து,எல்லாம் சுபமாக முடியும் இடத்தில் சுபமின்மையை உருவாக்கும் இடத்தில் நாவலை அதன் அடுத்த தளத்திற்குக் கொண்டு போகிறார் தி.ஜா. மூன்று பெண்களிடமும் வெளிப்படும் மன விகாரங்களையும் ஆற்றாமைகளையும் அளவுக்கதிகமாக அப்போதுதான் எதிர்கொள்கிறார் சட்டநாதன்.

நாவலுக்கு முடிவுக்கு இருக்கிறது. நிஜ வாழ்க்கைக்கு எங்கே முடிவு இருக்கிறது? அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தத் தொடர்ச்சியானது சிக்குச் சிக்காகிக் கொண்டே போகும் முடிச்சுகளாகவும் அவிழ்ப்புகளாகவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் இந்த நாவலில் தி.ஜா. காட்டும் குடும்ப உலகம்.

சட்டநாதனுக்கு ஒரு சம்சாரியாகக் குடும்பத்தைத் தாண்டிப் பெரிதாக வேறு எதையும் செய்யவில்லை என்ற ஏக்கமும் உண்டு. நாவல் நிகழும் காலகட்டத்தையும் தி.ஜா. துல்லியமாகச் சித்தரித்துள்ளார். 1930 லிருந்து 1960க்குள்ளான கால கட்டம்தான் அது. அப்போது சுதந்திரப் போராட்டம் நடக்கிறது. பொதுவுடைமைக் கருத்துகளின் தாக்கமும் அப்போது அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த இரண்டும் சட்டநாதனை ஓர் ஆற்றாமையைக் கொள்ள வைக்க காரணமாகும் காலப் பின்னணியையும் தி.ஜா. நாவலில் கொண்டு வருகிறார்.

காந்தியடிகள் பற்றியும், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் பற்றியும், இரண்டாம் உலகப் போர் பற்றியும், போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் பற்றியும், ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டுகள் வீசியதைப் பற்றியும் தி.ஜா. ஆங்காங்கே காலக்குறிப்பைக் காட்டிச் செல்கிறார். 06.09.1945 என்று பிள்ளைகளின் திருமணம் நடக்கும் ஓரிடத்தில் நாள்குறிப்பையும் தெளிவாகக் காட்டுகிறார். இந்தக் கால கட்டங்களில் குடும்பத்திற்காகச் செய்ததைத் தவிர சுதந்திரத்திற்காக எதையும் செய்யவில்லையே என்ற ஏக்கம் சட்டநாதனுக்கு இருப்பதை நாவலில் காட்சிப்படுத்துகிறர் தி.ஜா.

சுதந்திரத்திற்குப் பிறகும் தன் குடும்பம், பெண்டுகள், பிள்ளைகள் என்று இருந்து விட்டதைச் சட்டநாதன் யோசித்துப் பார்க்கிறார். எவ்வளவுதான் ஆதூரமாகவும் அரவணைத்துக் கொண்டு இருந்தாலும் மூன்று பெண்களின் மூலமாக அடைவது மன வேதனையாக மிஞ்சுவதையும் எண்ணிப் பார்க்கிறார். முடிவில் வானப்பிரஸ்தக் காலத்தில் சட்டநாதன் தனது மளிகைக் கடையைத் தன்னிடம் வேலை பார்த்த வேலையாட்களுக்கே எழுதி வைத்து விடுகிறார். இப்படி முடிவில் ஓர் லட்சியவாத மனிதராகச் சட்டநாதனை நிலைநிறுத்துகிறார் தி.ஜா.

சட்டநாதனுக்குப் பெரிதாக நண்பர்களோ, வெளியுலகத் தொடர்புகளோ இருப்பதில்லை. அவருக்கு இருக்கும் நட்புகளும் வெளியுலகத் தொடர்புகளும் மளிகைக்கடை வியாபாரம் மற்றும் உறவுகள் சார்ந்தது மட்டுமே. உறவுகள் என்று பார்த்தால் குடும்ப உறவுகள்தான். அதைத் தாண்டி வேறு வெளியுலக உறவுகளையும் அதிகம் அவர் ஏற்படுத்திக் கொள்வதில்லை.

இரண்டு அண்ணிகள், மனைவி என்று மூன்று பெண்கள் உருவாக்கிய நோக்கங்களும் தாக்கங்களும்தான் சட்டநாதனின் வாழ்க்கை. அவர் யாரையும் பிரிந்து விடப் பிரியப்படவில்லை. ஆனால் இரண்டு அண்ணிகளும் பிரிந்து கொண்டு போகிறார்கள். கடைசி காலக்கட்டத்தில் மனைவி புவனாவும் அவரை வருத்தும் போது சட்டநாதன் அமைதியாகவும் தனிமையாகவும் எல்லாவற்றையும் எதிர்கொள்கிறார்.

குடும்பத்திற்காக வாழ்ந்து முடிவில் எல்லாவற்றையும் துறந்து விட்டாலும் மனைவியை மட்டும் துறக்காமல் தன்னை அவள் எவ்வளவு வெறுத்த போதும் அவளிடமே கரைத்துக் கொள்கிறார் சட்டநாதன். இப்படியாகச் சாதாரண சம்சாரி வாழ்க்கையை எடுத்துக் கொண்டு அதைத் தனக்கே உரிய பாணியில் முன்னெடுத்து சொல்லும் விதத்தில் ‘செம்பருத்தி’ எனும் இந்த நாவலை அசாதாரண நாவலாக்கி விடுகிறார் தி.ஜா.

*****

29 Nov 2023

தீராத பிரமிப்பும் பெருமிதமும்!

தீராத பிரமிப்பும் பெருமிதமும்!

பாலாஜி ஐயாவைச் சந்திக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நீண்ட நாள் நிறைவேறாமல் நீண்டு கொண்டிருந்ததால் அதைக் கனவு என்றும் சொல்லலாம். இப்போதுதான் அந்த ஆசை நிறைவேறியது. கனவு நினைவானது.

அன்று பாலாஜி ஐயாவைப் பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கும் கொஞ்சம் கூட வேறுபாடில்லை. நான் சற்று பூசினாற்போல் சதை போட்டிருப்பார் என்ற முன் அனுமானத்தில் இருந்தேன். என் அனுமானத்தை ஆரம்பத் தோற்றம் தந்ததில் தவிடு பொடியாக்கி விட்டார்.

தோற்றத்தில் மட்டுமா? பேசுவதில், பழகுவதில், வாஞ்சையோடு விசாரிப்பதில் என்று எதிலும் எந்த மாற்றமும் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாத தத்துவம் என்பது அவரிடம் பொய்த்துப் போய் விட்டதோ என்று ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன்.

மிகுந்த நேர்மையும் கொள்கைப் பிடிப்பும் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாக்கியிருக்கும் என்ற என்னுடைய ஒரு கணிப்பு மட்டும் உண்மையாகியிருந்ததை அவருடைய நூலக அறையில் இருந்த மாத்திரைகள் கட்டியங் கூறிக் கொண்டிருந்தன.

எப்படி ஒரு மனிதரால் மாற்றம் இல்லாமல் அப்படியே வாழ முடியும்? தவறான பாதையில் செல்லும் போதுதானே சரியான பாதையை நோக்கிய மாற்றம் தேவைப்படும். சரியான பாதையில் சென்று கொண்டிருப்பவருக்கு அதில் என்ன மாற்றம் வேண்டிக் கிடக்கிறது என்பதை எடுத்துச் சொல்வதைப் போலத்தான் அவருடைய வெள்ளந்தியான பேச்சும் சிரிப்பும் எனக்கு மீண்டும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தன.

ஓர் ஆசிரியரின் திருமணத்தைப் பார்ப்பதற்கு எத்தனை மாணவர்களுக்குக் கொடுப்பினை இருக்கும்? எனக்கு அந்தக் கொடுப்பினை இருந்தது. பாலாஜி ஐயா அவருடைய திருமணத்திற்கு என்னை அழைத்து இருந்தார். அப்போது பனிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தேன் என்று நினைக்கிறேன். அதுதான் நான் அவரை இதற்கு முன்பு கடைசியாகச் சந்தித்தது.

வாசிப்பில் பாலாஜி ஐயாவை மிஞ்ச முடியாது. ஐம்பதைக் கடந்த இந்த வயதிலும் ஓர் இளைஞருக்கான தோற்றத்திலே இருக்கிறார். அவரையும் என்னையும் அருகருகே நிற்க வைத்தால் என்னை வயதானவர் என்றும் அவரை என்னை விட இளையவர் என்று சொல்லி விடக் கூடிய அபாயமும் இருக்கிறது. இளைஞருக்கான துடிப்புடனேயே இப்போதும் வாசித்துக் கொண்டிருக்கிறார்.

எனக்கும் என் ஆசிரியருக்கும் வாசிப்பில் ஒரு போட்டி வைத்தால் அவர் முயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார், நான் ஆமை வேகத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல வேண்டும்.

இவ்வளவு ஆண்டுகள் வாசித்தும் வாசிப்பில் ஒரு சலிப்பு வர வேண்டுமே. இன்னும் திகட்ட திகட்டத்தான் வாசிப்பதைப் பற்றிப் பேசுகிறார், பகிர்கிறார். இதென்ன தித்திப்பா தின்ன  தின்ன திகட்ட, வாசிப்பு என்பதே அவரது பதிலாக இருக்கிறது. வாசிப்பு அவரது சுவாசிப்பாகி விட்டது. சுவாசிப்பதை எப்படி நிறுத்த முடியும் என்பதைப் போல வாசிப்பை நேசித்து வாசித்துக் கொண்டிருக்கிறார்.

முகநூலில் ‘கருப்பம்புலம் பாலாஜி’ என்று தேடினால் அவரைப் பற்றிய ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எவ்வளவு களப்பணிகள், கல்விப் பணிகள், சமூகப் பணிகள். ஒவ்வொரு நாளையும் அப்பணிகளுக்காகவே அர்ப்பணித்தால் மட்டுமே அவ்வளவும் சாத்தியம்.

வேதாரண்யத்தைச் சுற்றியுள்ள அத்தனை இலக்கிய அமைப்புகளுடனும் தொடர்பில் இருக்கிறார். இலக்கிய ஆளுமைகள் அனைவரோடும் தோழமையோடு இருக்கிறார். இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். தனது இல்லத்திலும் இலக்கியக் கூடல்களை ஒருங்கிணைக்கிறார்.

முதற்பதிப்பு கண்ட பல தமிழ் நூல்கள் அவரின் நூலகச் சேகரிப்பில் இருக்கின்றன. தொன்மையான பல ஆய்வு நூல்கள் அவர் கைவசம் இருக்கின்றன. தனது இல்லத்தின் மேல் மாடி முழுவதையும் அரிய நூல்கள் அடங்கிய ஆவணக் காப்பகமாய் வைத்திருக்கிறார்.

தன்னுடைய வகுப்பறையிலும் வகுப்பறை நூலகங்களை அமைத்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆய்வு மாணவர்களுக்கும் வழிகாட்டியாக நூல்களை ஆற்றுப்படுத்துகிறார்.

மாணவர்களிடம் மரக்கன்றுகளை வளர்க்கும் ஆர்வத்தைத் தூண்டி இயற்கை நேயம் பேணுகிறார். மாணவர்களின் கையில் புகைப்படக் கருவிகளைக் கொடுத்து அரிய உயிரினங்களைப் படமாக்கச் செய்து உயிர் நேயம் கொள்ள கற்றுத் தருகிறார்.

மாணவப் பருவத்தில் ஆசிரியர்களிடம் இருக்கும் பிரமிப்பானது அந்தப் பருவத்தைக் கடந்த பிறகு போய் விடுவதுண்டு. எனக்கென்னவோ பாலாஜி ஐயா மீதான பிரமிப்பு இப்போதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறையாத வாசிப்பும் குன்றாத ஆசிரியப் பணியின் மீதான காதலும்தான் அவர் மீதான பிரமிப்பை அதிகப்படுத்திக் கொண்டே போகின்றன என்று நினைக்கிறேன்.

ஆசிரியர் பட்டயப் பயிற்சியை முடித்து விட்டு தமிழக அரசின் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வெழுதி புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக 1994இல் பணியேற்றவர் அடுத்த ஆண்டே இடைநிலை ஆசிரியராக 1995 இல் புள்ளமங்கலத்தில் பணியேற்றார். பதினோரு ஆண்டுகள் புள்ளமங்கலத்தில் பணியாற்றியவர் அதன் பிறகு திருமருகல், தகட்டூர் பள்ளிகளில் பணியாற்றி 2008இல் தமிழாசிரியராகக் கரியாபட்டினத்தில் பணியேற்றார். 2017லிருந்து தாம் பிறந்து வளர்ந்து கல்வி பயின்ற கருப்பம்புலம் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ஒரு மாணவராகப் பார்த்த என்னை ஓர் ஆசிரியராகப் பார்ப்பதில் அவருக்கு நிச்சயம் மனதுக்குள் ஒரு பெருமிதம் இருக்கும். அன்று பார்த்த ஆசிரியரைத் தோற்றத்திலும் பேச்சிலும் பழக்கத்திலும் பணியாற்றுவதிலும் அப்படியே இன்றும் பார்ப்பதில் அதை விட எனக்குப் பெருமிதமாக இருக்கிறது.

பாரதி மற்றும் ஜெயகாந்தனின் சமூகக் கோபம் பாலாஜி ஐயாவுக்கும் உண்டு. வள்ளுவரிலும் கம்பரிலும் தோய்ந்து தோய்ந்து ஆழம் காண முடியாத மலைப்பும் திகைப்பும் இப்போதும் அவர் கண்களில் தெரிகிறது.

அப்போது பாலாஜி ஐயாவைப் பார்த்த போது தனிப்பாடல் திரட்டைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் அவரைப் போல வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டது பசுமையாக அப்படியே நினைவில் இருக்கிறது. இப்போது பாலாஜி ஐயாவைப் பார்க்கும் போதும் அதே நினைவு அப்படியே மீள வருகிறது. இந்த நினைவை எந்த ஜென்மத்திலும் மாற்ற முடியாது போலிருக்கிறது. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய வேண்டும் என்பார்கள். ஆனால் நான் இன்னும் நான்கடி பாயும் குட்டியாகவே இருப்பதால் பாலாஜி ஐயாவின் மீதான பெருமிதமும் பிரமிப்பும் அப்படியேத்தான் இருக்கும். காலம் ஒரு நாள் பதினாறு அடி பாயும் வல்லமையைத் தந்தாலும் எனக்கு அந்தப் பெருமிதமும் பிரமிப்பும் குறைய வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது அவர் முப்பத்திரண்டு அடி பாய்பவராக இருப்பார்.

*****

27 Nov 2023

நகைச்சீட்டுகள் ஏன் வேண்டாம்?

நகைச்சீட்டுகள் ஏன் வேண்டாம்?

நகைக்கடைகள் போடச் சொல்லும் நகைச்சீட்டுகளைப் போட வேண்டாம். ஏன் வேண்டாம் என்றால் நகைக்கடைகளும் சீட்டுக் கம்பெனிகளைப் போல ஆகலாம். எப்போது வேண்டுமானாலும் சுருட்டிக் கொண்டு ஓடலாம்.

நீங்கள் நகைச்சீட்டு போடும் நகைக்கடை நம்பகமானது என்று நினைக்கலாம். நம்பகமான நகைக்கடையும் திவால் ஆகலாம். பாலு ஜூவல்லர்ஸ், கே.எப்.ஜே. ஜூவல்லர்ஸ் போன்ற நகைக்கடைகள் அப்படி ஆகியிருக்கின்றன.

நகைக்கடைகளைப் பொருத்தவரையில் நம்பகத்துக்கும் திவாலாகாது என்பதற்கும் எந்த உத்திரவாதமும் கொடுக்க முடியாது. ஒருவேளை இந்த இரண்டுக்கும் உத்திரவாதம் இருந்தாலும் நீங்கள் நகைச்சீட்டுப் போடுவது என்பது புத்திசாலித்தனமாகாது.

நீங்கள் நகைச்சீட்டு போடுவது நகைக்கடைகளுக்கு வழங்கும் வட்டியில்லா கடன் போன்றது. உங்களுக்கு யார் வட்டியில்லா கடன் கொடுப்பார்கள்? நிலைமை அப்படி இருக்கும் போது நீங்கள் ஏன் நகைக்கடைகளுக்கு வட்டியில்லா கடன் கொடுக்க வேண்டும்? ஊரான் நெய்யே, என் பெண்டாட்டி கையே என்பது போல ஊரான் சொத்தே எங்கள் வாடிக்கையாளர் சேவையே என்று நகைக்கடைகள் பைசா செலவில்லாமல் தங்களுக்கான பண சுழற்சியை (ரொட்டேஷன்) நகைச்சீட்டுகள் மூலமாகச் செய்து கொள்கின்றன.

நகைக்கடை என்பது அவர்கள் முதலீட்டில் அவர்கள் செய்ய வேண்டியது. உங்களையும் முதலீட்டில் பங்குக் கொள்ள செய்கிறார்கள் என்றால் உங்களை பங்குதாரர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். உங்களைப் பங்குதாரர்களாக ஆக்கினால் லாபத்தில் உங்களுக்கும் பங்குக் கொடுக்க வேண்டுமே! உங்களுக்கு லாபத்தில் பங்கும் கொடுக்கக் கூடாது, அதே நேரத்தில் உங்களிடம் முதலீட்டுக்கான பணத்தையும் திரட்ட வேண்டும் என்பதற்காக நகைக்கடைகள் கண்டுபிடித்த நாகரிக தூண்டில் முறையே நகைச்சீட்டுகள்.

நகைச்சீட்டு போடுவதால் செய்கூலி, சேதாரம் இல்லை, அல்லது குறைவான சதவீதத்தில் செய்கூலி சேதாரத்திற்கு நகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நீங்கள் ஆசை காட்டப்படலாம். இந்தச் செய்கூலி, சேதாரம் எல்லாம் பெரிய விசயமே அல்ல. இந்த இரண்டிலும்தான் நகைக்கடைகளின் லாபமே இருக்கிறது. அதைக் கொஞ்சம் சாமர்த்தியமாக நகைச் சீட்டுகள் மூலமாகச் செய்கிறார்கள்.

நீங்கள் நகைகளைத் தயார் செய்து மொத்தமாக கடைகளுக்கு விற்பனை செய்யும் நிறுவனங்களைக் கண்டுபிடித்து நகைகளை வாங்கினால் இந்தச் செய்கூலி, சேதாரத்தின் கதை என்னவென்று தெரிந்து விடும்.

உங்களிடம் விற்பனை செய்யும் நகைகளை நகைக்கடைகள் செய்கூலி, சேதாரம் இல்லாமல் கொடுத்தாலும் அவர்களுக்கு அதில் லாப விகிதம் இருக்கின்றது. செய்கூலி, சேதாரத்தோடு கொடுத்தால் கொள்ளை லாபம் இருக்கின்றது. செய்கூலி, சேதாரம் என்பதெல்லாம் அவர்களது லாபத்தைக் குறைத்துக் கொள்ளலாமல் இருப்பதற்காக அவர்கள் விடும் கப்சாக்கள். தங்கள் லாபத்திற்கு எப்படியாவது ஒரு நியாயத்தைச் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் செய்து கொள்ளும் போலி வாதங்கள்.

தங்கள் முதலீட்டை வட்டியில்லாத கடன் முறையில் பெருக்கிக் கொள்ளவும், தங்களது வியாபாரத்திற்கான பண சுழற்சியைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளவும் நகைக்கடைகள் கண்டுபிடித்த உத்தியே நகைச்சீட்டு என்பது.

சும்மா நகைச்சீட்டு போடச் சொன்னால் நீங்கள் போடுவீர்களா? போட மாட்டீர்கள்தானே? அதற்காகத்தான் செய்கூலி, சேதாரக் குறைப்பு, ஒரு தவணையை அல்லது அரை தவணையை ஏற்றுக் கொள்வது என்று சொல்வதெல்லாம். இப்படி குறைத்தது மற்றும் தவணையை ஏற்றுக் கொண்டதற்கும் சேர்த்து நகை விலையில் ஒரு விளையாட்டை விளையாடி நீங்கள் அறிய முடியாதபடி மறைமுகமாகக் கறந்து விடுவார்கள்.

இப்படி ஒரு நிலையையும் யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் பணம் கட்டிய மாதத்தில் ஒரு கிராம் தங்க நகை 5000 ஆக இருக்கிறதாக வைத்துக் கொள்வோம். பத்து மாதங்கள் அல்லது பதினோரு மாதங்கள் கழித்து நீங்கள் நகையை வாங்கும் போது அது 5500 ஆகியிருக்கும். இப்போது உங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கணக்கிட்டுப் பாருங்கள். நகைக்கடைக்காரர்கள் அப்போது நீங்கள் செலுத்திய தொகைக்கு ஒரு கிராம் 5000 என்ற விலையில் வாங்கி வைத்திருந்தால் நீங்கள் வாங்கும் போது 500 ரூபாய் லாபத்தோடும் மற்றும் அந்த நகைக்கே உரிய லாபத்தோடும் இரட்டை லாபம் சம்பாதிக்க நீங்கள் வாய்ப்பு கொடுக்கிறீர்கள்.

நீங்கள் ஒவ்வொரு மாதமும் கட்டும் பணத்தால் நகை விலை ஒரு குறைந்தபட்ச சராசரி விலையில் இருக்கும். அந்த நகைக்கான விலையை நீங்கள் எடுக்கும் மாதத்தில் என்ன விலையோ அந்த விலையில்தான் வழங்குவார்கள். அது நீங்கள் மாதாம் கட்டிய சராசரியான குறைந்தபட்ச விலையை விட அதிகமாக இருக்கும். இந்த அதிகமாகும் லாபமும் கடைக்காரர்களுக்கே. கூடுதலாக அந்த நகைக்கே என்று இருக்கிற மார்ஜின் பிராபிட் என்று சொல்கிறார்களே அந்த லாபமும் அவர்களுக்கே. அதில் உங்களுக்குச் செய்கூலியைக் குறைத்திருக்கிறேன் அல்லது சேதாரத்தைக் குறைத்திருக்கிறேன் என்று ஒரு பெரிய மீனைப் பிடித்து விட்டு ஒரு சிறிய மீனை உங்களுக்குத் தூக்கிப் போடுவார்கள். இந்தச் சேதாரம் மற்றும் செய்கூலி கதை நமக்குத் தெரியாததா என்ன?

இதிலிருந்து தப்பிக்க வழியில்லையா?

ஏன் இல்லை?

மூன்று வழிகள் இருக்கின்றன. இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பின்பற்றலாம். அல்லது கலவையாகவும் பின்பற்றலாம். அல்லது உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வழி 1 :

மாதா மாதம் நகைக்கடையில் பணத்தைக் கட்டுவதற்குப் பதிலாக அஞ்சலகம் அல்லது வங்கியில் தொடர்வைப்பில் (ஆர்.டி.) பணத்தைக் கட்டுங்கள். முதிர்வில் அந்தப் பணத்தை எடுத்து நகை எடுங்கள். இந்த முறையில் பணத்திற்கும் பாதுகாப்பு இருக்கிறது. முடிவில் தொடர்வைப்புக்கான வட்டித்தொகையும் நீங்கள் கட்டிய தொகையும் கூடுதலாக நல்ல தொகை உத்திரவாதமாக உங்களுக்குக் கிடைக்கும்.

வழி 2 :

இந்த முதல் வழியில் பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் வட்டி வருமானத்தில் இழப்பு இருக்கிறது என்ற கருதினால் ஒரு டீமேட் கணக்கைத் துவங்கி இ.டி.எப்பில் மாதா மாதம் தங்கத்தை வாங்குங்கள். உதாரணமாக கோல்ட் பீஸ் இ.டி.எப்பை வாங்கலாம். இப்படி மாதா மாதம் வாங்குவதால் சரசாரியான குறைந்தபட்ச விலை கிடைத்து விடும். தங்க நகை வாங்க வேண்டும் எனும் போது டீமேட்டில் உள்ள இ.டி.எப்களை விற்று காசாக்கி எடுத்துக் கொண்டு போய் நகைக்கடையில் நகையாக வாங்கிக் கொள்ளுங்கள்.

வழி 3 :

இந்த டீமேட், காகிதத் தங்கம் எல்லாம் ஒத்து வராது என்றால் அதே நகைக்கடைகளில் தங்க நாணயங்களாக வாங்குங்கள். மில்லி கிராம் அளவிலும் தங்க நாணயங்கள் விற்கப்படுகின்றன. இந்த தங்க நாணயங்களுக்குச் சேதாரம் செய்கூலி இருக்காது அல்லது அதிகமாக இருக்காது. இவற்றிற்கு ஈடாக நகைகளை மாற்றும் போது கிராமுக்கு 50 அல்லது 100 என்று குறைத்துக் கொள்வார்கள். இதிலும் ஒவ்வொரு மாதமும் வாங்குவதில் இதில் சராசரியான குறைந்தபட்ச விலையும் கிடைக்கும்.

எனக்குத் தெரிந்த வகையில் இந்த மூன்று வழிகள்தான் நகைக்கடையின் நகைச்சீட்டுகளில் நீங்களாகச் சிக்கிச் சோரம் போகாமல் தடுத்துக் கொள்வதற்கான வழிகள்.

வேறு வழிகள் இருப்பின் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*****

23 Nov 2023

விழா

விழா

ரங்காவின் நூற்றாண்டு விழா

இந்தத் தேசத்திற்காகவும் மண்ணிற்காகவும் எவ்வளவு உழைத்திருக்கிறார்

ஏரி குளம் என்று போடப்பட்ட பிளாட்டுகளில்

முக்கால்வாசி அவர் போட்டது

பல லேக் வியூ அபார்ட்மெண்டுகளில்

அவரது ஆத்மா சாந்தியடைகிறது

அம்ரா நதி வண்ணக்கழிவுகளால் ஓடிக் கொண்டிருக்கும் அளவுக்கு

தொழிற்புரட்சியை ஆகா ஓகோவென்று நடாத்திக் (நடத்தியல்ல) காட்டியவர்

தலைவரிடம் நூற்றாண்டு விழா அனுமதி கேட்க போன போது

அவன் யார்

அவனுக்கென்ன விழா என்றார்

காரியாலயத்தில் ரங்காவின் புகைப்படம் இருப்பதைச் சொன்னதும்

அதைப் பேசிக் கொண்டு வருபவர்களைத்

தெருநாயைத் துரத்தியடிப்பதைப் போல விரட்டியடிக்கச் சொன்னார்

ரங்காவின் நூற்றாண்டு இப்படியாக

அவரது குடும்பத்தாருக்கே தெரியாமல் போனது

தலைவரது பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டதைப் பார்த்த போது

ரங்காவின் இடத்தைத் தலைவர் பிடித்து விட்ட பிறகு

ரங்காவுக்கென்ன விழா

*****

20 Nov 2023

சைபர் வீதிகளின் விளையாட்டுகள்

சைபர் வீதிகளின் விளையாட்டுகள்

ஆசையைத் தூண்டும் வாசகங்கள்

நூதன மோசடிகள்

நிர்வாணங்களைப் பதிவு செய்யும் காமிராக்கள்

ரகசியங்களைப் பின்தொடரும் கண்காணிப்புகள்

வாட்ஸ் ஆப்பிலோ பேஸ்புக்கிலோ கசியும்

காசு பறிப்புப் படலங்கள்

ஐம்பது ரூபாய்க்கு அச்சாரமிடும் யூடியூப் லைக்குகள்

முப்பது சதவீத வட்டிக்குத் தூண்டில் போடும் முதலீடுகள்

வேலை வாங்கித் தருவதாகக் கறக்கப்படும் முன்பணங்கள்

பான் எண்ணும் ஆதார் எண்ணும் இருந்தால்

நொடிகளில் வழங்கப்படும் கண்கொத்திக் கடன்கள்

மிரட்டி மிரட்டி

பிடுங்குபவர்கள் பிடுங்க

பயந்து பயந்து

பின்வாங்குபவர்கள் பின்வாங்க

சாகிறவர்கள் சாகிறார்கள்

பிழைத்திருப்பவர்கள் பிழைத்திருக்கிறார்கள்

குழந்தைகளுக்கென்று விட்டு விட முடியுமா

சைபர் வீதிகளில்

பெரியவர்களுக்காகவும் பம்மாத்தாக ஆடப்படுகின்றன

திருடன் போலீஸ் விளையாட்டுகள்

*****

16 Nov 2023

போலிப் பிரசவங்கள்

போலிப் பிரசவங்கள்

கதை என்ற பெயரில் ஏதோ ஒன்றைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கான தர்க்க ஒழுங்கும் நியாயமும் எப்போதும் இருக்க வேண்டும். கதையிலேயே கப்சா அடிப்பது யோக்கியாம்சம் ஆகாது. அதற்கும் ஒரு தர்மம் இருக்கிறது. அந்தத் தர்மத்திற்குக் கட்டுப்பட்டுச் செய்ய வேண்டும்.

வாயால் சொல்வது, எழுத்தால் எழுதுவது எல்லாம் கதைதான். கேட்பவருக்குச் சொல்ல சொல்ல கதையில் ஒரு நியாய அம்சம் தென்பட வேண்டும். இல்லையென்றால் இதெல்லாம் சும்மா அவிழ்த்து விடுவது என்று கேட்பவரோ / வாசிப்பவரோ சொல்லி விடுவார். கதையே அவிழ்த்து விடுவதுதான். அதைத் தாண்டியும் ஏதோ அவிழ்த்து விடுகிற சங்கதி என்று கதையை நுகர்பவருக்குத் தோன்றி விட்டால் அது கதைக்கான தாத்பர்யத்தை அடையாமல் போய் விடுகிறது.

கதையைச் சொல்வதற்கு முன் அல்லது எழுதுவதற்கு முன் ஓர் உணர்வுப்பூர்வமான அனுபவம் இருக்க வேண்டும். அதிலிருந்து புனைந்து கொண்டு போகலாம். அதை விடுத்து இவரிடமிருந்து கொஞ்சம் அவரிடமிருந்து கொஞ்சம் என்று ஒவ்வொருவரிடம் கலந்து கட்டி அடித்துக் கொண்டிருந்தால் அது போலித்தனமான ஒன்றாகி விடும்.

சாதாரண சம்பவத்தைச் சொல்வதும் ஒரு கதைதான். கதைகளுக்கு என்று பிரமாதமான சம்பவங்கள் வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதில் நிஜம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறதல்லவா அதுதான் அதற்கான தர்மம். அப்படித்தான் புனைவு கலந்திருந்தாலும் அதில் எழுதுபவரின் சுய அனுபவம் ஏதோ ஒன்று கடுகளவேனும் இருக்க வேண்டும். அது வரித்துக் கொண்டதாகவோ தழுவிக் கொண்டதாகவோ இருக்கக் கூடாது.

நல்லதோர் வீணை செய்து நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்று பாரதி சொல்வதற்கும், அதை அப்படியே பாரதியின் தாக்கத்தில் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பாரதியின் வாழ்க்கையே அப்படி. அவர் சொல்லும் போது அது அடர்த்தியாக வெளிப்படும். அதை யார் படித்தாலும் அந்தச் சுரீர் தன்மை இருக்கும். அந்த வகையில் அது ஒரு வாசக அனுபவம்.

அந்த வாசக அனுபவத்தை எடுத்துக் கொண்டு நான்தான் பாரதி என்று மார் தட்டிக் கொள்ள முடியாது. அது போலியானது. பாரதிக்குப் பொருந்துகிற இந்த அனுபவம் வாசக அனுபவத்தில் எல்லா வாசகருக்கும் பொருந்தும். ஒரு படைப்பாளராகச் சொல்ல நினைத்தால் பாரதியைக் காப்பியடிப்பதாகவோ, போலச் செய்வதாகவோ ஆகி அது உங்கள் போலித்தனத்தைப் போட்டு உடைத்து விடும்.

ஒரு படைப்பின் தரம் படைப்பாளரின் அனுபவத்திலிருந்து வருகிறதா, அவரிடமிருந்து சுயம்புவாகக் கிளம்புகிறதா என்பது முக்கியம். வாசித்து வாசித்து ஒரு புலியைப் பார்த்து பூனையைப் போலச் சூட்டைப் போட்டுக் கொண்டும் ஒரு படைப்பைப் படைத்து விடலாம். அது ஏற்கப்படாமல் போனால் அதன் போலித் தன்மைக்காகத்தான் அப்படி நடக்கிறது என்பதை அந்தப் படைப்பாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விடுத்து தமது மேதைமைக்கான வாசகர்கள் இங்கில்லை என்று பிலாக்கணம் பாடிக் கொண்டு இருக்கக் கூடாது.

நல்ல படைப்புகள் வாசிக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பதும், அவற்றை வாசிக்கும் வாசகர்கள் தோன்றித்தான் ஆக வேண்டும் என்பதும் இயற்கையின் விதிகளைப் போன்றவை. அவை விவாதத்தைக் கிளர்ச்சியை உண்டு பண்ணி விட்டுதான் ஓயும். இதை ஒரு சூத்திரம் போல அளவெடுத்துக் கொண்டு செய்து விட முடியாது. பாரதிக்குப் பிறகு ஒரு பாரதியை ஒரு சூத்திரத்தால் உருவாக்கி விட முடியாது.

படைப்பு என்பது ஒரு பெருவெளிக்குள் ஓர் உண்மையைக் கனன்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து அதை பிரசவிப்பது. அப்படிக் கனன்று கொண்டிருப்பதை முதலில் படைப்பாளர் கண்டு கொள்ள வேண்டியிருக்கிறது. தான் கண்டு கொண்டதைத்தான் படைப்பாளர் வாசகர்களுக்கு அறிவிக்கிறார். காணாத ஒன்றைக் கண்டு கொண்டது போல அறிவிக்க முடியாது. அப்படி அறிவிப்பதுதான் போலித்தனமாகிறது.

ஒரு திருக்குறள் உண்டு.

“காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தாம்கண்ட வாறு.”              (குறள், 849)

*****

13 Nov 2023

ஆபர்களுக்கு நாட்கள் போதவில்லை!

ஆபர்களுக்கு நாட்கள் போதவில்லை!

முன்பெல்லாம் ஆடி ஆபர் ஒன்றுதான் இருந்தது.

படிப்படியாக தீபாவளி ஆபர் வந்தது. பொங்கலை விட்டு விட முடியுமா என்று பொங்கல் ஆபரும் வந்தது. நியூ இயர் கோபித்துக் கொள்ளக் கூடாதே என்று நியூ இயர் ஆபரும் வந்தது.

சம்மர், வின்டர் எல்லாம் என்ன பாவம் செய்தன என்று சம்மர் ஆபர், வின்டர் ஆபர் எல்லாம் வந்து இப்போது வருடத்தின் முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும் ஆபர்தான்.

வருடத்திற்கு முன்னூற்று அறுபத்தைந்தே கால் நாட்கள். இந்த கால் நாள் மட்டும்  எப்படியோ தப்பி விட்டது. அல்லது வருடம் முழுவதும் ஆபர் கொடுக்கும் ஆட்கள் அந்த கால் நாளை அந்த வருடத்திற்கான ஆபராகக் கொடுத்து விட்டார்கள் போல.

என்னடா வருடம் 365 நாட்களோடு நின்று விட்டதே என்ற வருத்தம் ஆபர் ஆசாமிகளுக்கு. இன்னும் சில ஆபர் நாட்களை உருவாக்கலாம் என்று பார்த்தால் வருடாந்திர நாட்கணக்கு செய்தது அநியாயம்தானே.

*****

உங்களை வாங்கும் பொருட்கள்!

பொருட்கள் தேவைதான். நாம் தேவையான பொருட்களைத்தான் வாங்குகிறோமா?

பொருட்களை நாம் வாங்குகிறோமா? நம்மைப் பொருட்கள் வாங்குகின்றனவா?

எந்த வீட்டுக்குப் போனாலும் பொருட்கள், பொருட்கள்தான். அங்கு இங்கு என்று கால் வைக்க இடமில்லை. வருஷம் முழுவதும் ஆபர் சேல், டிஸ்கௌண்ட் சேல் போன்று போட்டுத் தள்ளிக் கொண்டு இருந்தால் மக்கள்தான் என்ன செய்வார்கள் என்று சில நேரம் அவர்களைப் பற்றிப் பரிதாபப்படவும் தோன்றுகிறது. சில நேரங்களில், இப்படி வாங்கிக் குவிக்கிறார்களே இந்தச் சாம்பிராணிகள் என்று கோபப்படவும் தோன்றுகிறது. பரிதாபப்படுவதா, கோபப்படுவதா என்று குழப்பமாகத்தான் இருக்கிறது.

தெரிந்த வங்கி, தெரியாத வங்கி, தெரிந்த நிதி நிறுவனம், தெரியாத நிதி நிறுவனம் என்று யார் கிரெடிட் கார்டு கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். ஏன் இப்படி என்றால் ஒவ்வொன்றிலும் பொருட்கள் வாங்கும் போது ஒவ்வொரு சலுகை இருப்பதாகச் சொல்கிறார்கள். அட்டையைக் கொடுத்து ஆட்டையைப் போடுகிறார்கள் என்பது புரியாமல் மக்களும் பொக்கிஷத்தை வாங்கி வைப்பது போல வாங்கி வைத்துக் கொண்டு கடனை மடியில் கட்டிக் கொள்கிறார்கள்.

இது போதாது என்று இரண்டு சிம் போட்ட செல்போனைத்தான் வைத்துள்ளார்கள். இரண்டு சிம்முக்கும் எஸ்.எம்.எஸ்களும் வாட்ஸ் ஆப் செய்திகளும், டெலிகிராம் செய்திகளும் வந்த வண்ணமாக இருக்கின்றன. வருவதெல்லாம் இந்தப் பொருளை இந்த ஆபரில் வாங்கு, அந்தப் பொருளை அந்த ஆபரில் வாங்கு என்பதாகத்தான் இருக்கின்றன.

இமெயில்களையும் ஒன்றுக்குப் பத்தாக வைத்துள்ளார்கள். அவற்றிலும் அப்படித்தான் இதை வாங்கு, அதை வாங்கு என்று ஏகப்பட்ட இமெயில்கள். ஒவ்வொன்றுக்கும் எந்த அட்டையைப் பயன்படுத்தினால் எவ்வளவு சலுகைகள் என்ற விஸ்தீரன விளக்கங்கள் வேறு.

பேஸ்புக்கைத் திறந்தால் சொல்ல வேண்டுமா? அதிலும் அப்படி ஏகப்பட்ட லிங்குகள், பொருட்களை வாங்குவதற்கான அழைப்புகள்.

தொலைக்காட்சியைப் பார்த்தால், யூடியூப்பைப் பார்த்தால் இதை வாங்கு, அதை வாங்கு என்று ஏகப்பட்ட விளம்பரங்கள்.

இவற்றையெல்லாம் பார்த்து வாங்கித் தள்ளா விட்டால் இந்தப் பூமியில் ஒரு மனிதனா என்றுதான் தோன்றுகிறது.

இந்தப் பொருளை வாங்கினால் அதை வைப்பதற்கு இடம் இருக்கிறதா என்று கூட யோசிக்க முடிவதில்லை. இருந்தால் இருக்கிறது, இல்லாவிட்டால் போகிறது, அக்கம் பக்கத்து வீடுகளிலாவது வைத்துக் கொள்வோம் அல்லது வாடகைக்காவது ஒரு வீட்டைப் பித்துக் கொள்வோம் என்றுதானே பொருட்களை வாங்குகிறோம், வாங்கித் தள்ளுகிறோம்.

ஒரு கட்டத்தில் என்னவாகிறது என்றால் வீட்டுக்குள் நுழைய முடியாத அளவுக்குப் பொருட்களாக நிறைந்திருக்கின்றன. காலை எங்கே வைத்து எங்கே நுழைவது என்பது புதிர்பாதையைக் கண்டுபிடித்து போவது போல இருக்கிறது. ஆபரில் கிடைக்கிறது என்றால் ஒரு டிரெய்ன், ஏரோபிளேன் கிடைத்தாலும் வாங்கி தெருவில் நிறுத்தி விடுவார்கள் போலிருக்கிறது.

வாங்கிய பொருட்களில் எத்தனைப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என்று கேள்வி எழுப்பினால் பெண்களுக்குக் கோபம் வந்து விடுகிறது. பயன்படுத்தத்தான் பொருட்களை வாங்க வேண்டுமா? பயன்படுத்தாமல் இருக்க பொருட்களை வாங்கக் கூடாதா? அக்கம் பக்கத்தில் காட்டி அவர்களை வெறுப்பேற்ற பொருட்களை வாங்கக் கூடாதா? என்று சண்டை பிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பயன்படுத்தாத பொருள் என்றாலும் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவை அடுத்தவர்களை வாயைப் பிளக்க வைக்க, நம்முடைய பணத்தை நாமே கொள்ளை அடித்து பெருநிறுவனங்களின் பையில் போட்டு வைக்க.

எதிர்வீட்டில் ஒரு பெண்மணி இருக்கிறார். வீட்டுக்கொரு பெண்மணி போல அந்த வீட்டில் அவர் ஒருவர் மட்டும்தான் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை ஷேவிங் ரேசர் ஒன்று ஆபரில் வந்ததாக வாங்கி வைத்திருக்கிறார். இதை ஏன் வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்றால் இவ்வளவு குறைந்த விலையில் இன்னொரு முறை கிடைக்காது, அந்த விலைக்கு வாங்கவும் முடியாது என்கிறார். இதை நீங்கள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றால் அது முக்கியமில்லை, சீப் ரேட்டில் வாங்குவது மட்டும்தான் முக்கியம் என்கிறார்.

பிள்ளைகள் அதற்கு மேல். வீட்டிற்கு வந்ததும் வராதுமாகச் செல்லை நோண்டத் தொடங்குகின்றன. சரி எதையாவது நோண்டிக் கொண்டு கிடக்கட்டும் என்று பார்த்தால் மறுநாள் பொட்டலம் (பார்சல்) ஒன்று வீடு தேடி வருகிறது. நான் வேண்டுமென்று கேட்கவில்லையே (ஆர்டர் பண்ணவில்லையே) என்று எவ்வளவு அடம் பண்ணினாலும் கேட்காமல் கையில் திணித்து விட்டுப் போய் விடுகிறார்கள். யாரது நமக்குத் தெரியாமல் வேண்டுமென்று கேட்டிருப்பார்கள் (ஆர்டர் பண்ணியிருப்பார்கள்) என்று பார்த்தால் சாட்சாத் பிள்ளைகளின் கேட்போலைகள்தான் (ஆர்டர்கள்தான்) அவை. நமக்குத்தான் எப்படி வாங்குவது என்று (ஆர்டர் பண்ணவும்) தெரிய மாட்டேன்கிறதே. அது ஒன்றுதான் பிரபஞ்சத்தில் நடக்கும் நல்லவற்றில் ஒன்று. நாமும் இணைய வழியில் வாங்கத் தெரிந்து வாங்க ஆரம்பித்தால் (ஆர்டர் போடத் தெரிந்து ஆர்டர் போட்டால்) வீட்டில் வந்துக் குவியும் பொருட்கள் இன்னும் சில நூறையோ, ஆயிரங்களையோ தாண்டி விடும்.

இப்படியே போனால் மனிதர்கள் வாங்கும் பொருட்களுக்கு ஓர் அளவு இருக்காது போலிருக்கிறது. ஓர் அந்நிய விலங்கு (ஓர் ஏலியன்), சந்திரனில் ஓரிடம் (ஒரு பிளாட்), சனிக் கோளின் ஒரு வளையம் என்றாலும் வாங்கித்தான் தள்ளுவோம் போலிருக்கிறது.

*****

9 Nov 2023

பேராசை என்றால் கௌரவம் குறைந்து விடுமோ?

பேராசை என்றால் கௌரவம் குறைந்து விடுமோ?

ஐ.எப்.எஸ்.

ஆருத்ரா

ஹிஜாவு

அம்ரோ கிங்ஸ்

ஏ.ஆர்.பி. ஜூவல்லர்ஸ்

சி.பி.ஆர்.எஸ்.

ராஹத் டிரான்ஸ்போர்ட்

எல்பின்

இவையெல்லாம் என்ன என்கிறீர்களா?

மக்களை நேரடியாக ஏமாற்றிய நிறுவனங்கள். அல்லது மக்கள் நேரடியாக ஏமாந்த நிறுவனங்கள். இவற்றை மோசடி நிறுவனங்கள் என்று சொன்னால் அவமதிப்பாகுமோ என்னவோ?

எப்படி ஏமாந்தார்கள்? எல்லாம் பணத்தைக் கட்டித்தான். அதுவும் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கட்டித்தான்.

இந்த நிறுவனங்களிடம்தான் என்றில்லை. குறியீட்டுப் பணத்தில் இரு மடங்கு ஆக்கி விடுவோம் (கிரிப்டோவில் டபுள் பண்ணி விடுவோம்) என்றாலும் பணத்தை மூட்டைக் கட்டிக் கொண்டு போகிறார்கள். பங்குச் சந்தை சார்ந்த ஊக வணிகத்தில் மும்மடங்கு ஆக்கி விடுவோம் (எப் அன்ட் ஓவில் டிரிபிள் பண்ணி விடுவோம்) என்றாலும் பணத்தைப் போட விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். மாதா மாதம் நூறு ரூபாய் சீட்டுக் கட்டினால் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்றாலும் தலைகால் தெரியாமல் குதித்துக் கொண்டு போடுகிறார்கள்.

ஒரு கல்லை வீசிப் பத்து மாங்காய்கள் என்றால் யாருக்குத்தான் கல்லை வீச மனம் வராது? வீசுகின்ற கல் மாங்காய்களை அடித்துக் கொண்டு விழுந்தால் பரவாயில்லை. வீசியவரின் தலையில் அல்லவா விழுகிறது. இப்படி எத்தனைத் தலைக்காயங்கள் ஏற்பட்டாலும் கல்லை வீசுவதை யாரும் நிறுத்துவதில்லை. வீசிக் கொண்டே இருக்கிறார்கள் காயம் எவ்வளவு பயங்கரமாக இருந்தாலும். காயம் பட்ட பின் தலையில் ஏற்பட்ட காயத்திற்குக் காரணமானவர்களைத் தண்டியுங்கள் என்றால்… வீசியவர்களே வீசியவர்களைத் தண்டித்துக் கொள்ள வேண்டியதுதான். அப்படித்தான் இருக்கிறது நிலைமையும்.

இது போன்ற ஆசைகளே துன்பங்களுக்குக் காரணம் என்று புத்தர் சொல்லியிருப்பாரோ?

இது போன்ற பேராசைகளே பெருநஷ்டம் என்று நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்களோ?

இவையெல்லாம் நேரடி வகையறாக்கள். மறைமுக வகையறாக்களின் பட்டியல் தாங்காது. நேரடி வகையறாக்கள் வீடு புகுந்து கொள்ளையடிப்பதைப் போன்றது. இரண்டாவது வகையறா சன்னல் கம்பிகள் வழியாகக் காற்று போல புகுந்து அடித்துக் கொண்டோடுவது. காற்றுக்கு அப்படி ஒரு சக்தி உண்டா என்று கேட்கக் கூடாது. காற்றில் வரும் சைகைகளைப் பயன்படுத்திச் செய்வதை வேறெப்படிச் சொல்வது? சைகை வடிவில் கணினி, அலைபேசிக்குள் புகுந்து கொள்ளை பண்ணுவதை அப்படித்தானே சொல்ல வேண்டும்.

ஓர் இணைப்பை (லிங்க்) அனுப்பி அதைச் சொடுக்கச் செய்து ஒட்டு மொத்த பணத்தையும் லவட்டிக் கொண்டு போவது.

ஒரு லைக் போட்டு ரூபாய் ஐம்பது சம்பாதியுங்கள் என்று லட்சத்தைப் பிடுங்கும் வகையறாவும், ரூபாய் நூறு தந்து ரூபாய் நூற்று ஐம்பது பெறுங்கள் என்று கோடிகளைச் சுரண்டும் வகையறாவும் இப்படி இன்னபிற வகையறாக்களும் இந்த மறைமுகக் கொள்ளையைச் சார்ந்தவை.

ஐம்பது ரூபாய்க்காக லைக் போட்டு லட்சத்தை இழந்தவர் யார் என்று கேட்டால் அவர் ஒரு பொறியாளர்.

நூறைப் போட்டு நூற்று ஐம்பதைப் பிடிக்கிறேன் என்று கோடியை இழந்தவர் யார் என்று கேட்டால் அவர் ஒரு தொழில் முனைவோர்.

அறியாமைதான் மோசடியில் ஏமாந்துப் போவதற்குக் காரணம் என்பவர்களிடம் பொறியாளர் மற்றும் தொழில் முனைவோரின் அறியாமையை எந்த அறியாமையில் சேர்ப்பது என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

அடுத்து பகுதி நேர வேலை என்ற ஒரு புரட்டு. பகுதி நேர வேலை செய்யுங்கள், ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதியுங்கள் என்ற வலை. முழு நேர வேலையிலேயே தம்புடி புரட்டுவது கடினமாக இருக்கும் போது பகுதி நேர வேலையில் பணம் எப்படிக் கொட்டிக் கிடக்கும்?

எல்லாம் அறியாமை என்று எத்தனைக் காலம் சொல்லிக் கொண்டிருக்க முடியும்? ஆசை அதுவும் பேராசை என்று சொன்னால் கௌரவம் குறைந்து போய் விடுமோ என்னவோ? அதுவும் படித்தவர்களுக்கு இருக்கும் பேராசை இருக்கிறதே, அதற்குப் படிக்காதவர்களே பரவாயில்லை.

*****

6 Nov 2023

விற்பனையுகம்

மாறித் தொலைதல்

யாராலும் யாராகவும் மாற முடியாது

அவர் அவராக இருக்கலாம்

அவரைப் போல மாற நினைப்பவர்

கூடிய விரைவில் மரணித்து விடுவார்

உயிரோடு இருக்க நினைப்பவர்கள் யாராயினும்

நீங்கள் நீங்களாகவே இருங்கள்

மரணிக்க நினைப்பவர்கள் மட்டும்

மாறித் தொலையுங்கள்

*****

விற்பனையுகம்

அவரவர்கள் ஏதாவது செய்தால்தான்

அவரவர்களும் பிழைக்க முடியும்

குறிப்பாக வியாபாரம்

மக்கள் நிறுவனங்களே அதைத்தான் செய்கின்றன

மது விற்கின்றன

நீங்களும் எதையாவது விற்றுத் தொலையுங்கள்

மானம் வெட்கம் ரோஷம் கற்பு

இப்படி எதையாவது

*****

பிக்கல் பிடுங்கல்

வாழ்க்கையில் இருக்கும் பிக்கல் பிடுங்கல் போதாதா

போலீஸ்காரர் பல்லைப் பிடுங்குகிறார்

பல் மருத்துவர்களிடமிருந்து

எந்த எதிர்ப்பும் இல்லை

ஒரு பேரணி

ஒரு ஆர்ப்பாட்டம்

ஒரு போராட்டம்

எதுவும் இல்லாவிட்டால்

இந்தப் பிரச்சனை எப்படி அடங்கும்

*****

2 Nov 2023

எப்படி வாங்குவது நல்லது?

எப்படி வாங்குவது நல்லது?

ஒரு பொருளைப் பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். அதெல்லாம் ஒரு காலம். ஒரு பொருளைப் பார்க்காமல் கூட வாங்குகிறார்கள். அது இந்தக் காலம்!

இணையவழியில் (ஆன்லைனில்) வாங்கும் போது ஒரு பொருளின் படத்தைப் பார்த்துதானே வாங்குகிறோம். ஒரு பொருளை நேரில் பார்த்து வாங்குவதற்கும் அதன் படத்தைப் பார்த்து வாங்குவதற்கும் ஒப்புமை சரியாக வருமா என்ன?

இணையவழியில் பார்த்த பொருள் ஒன்றாகவும் கைக்கு வரும் போது அதன் தோற்றம் கொஞ்சமாவது மாறுபாடாக இருப்பதை அனுபவிக்காதவர்கள் நாட்டில் இருக்கிறார்களா என்ன?

ஒரு பொருளை இணைய வழிச் சந்தையில் வாங்குவதா? நேரில் வாங்குவதா?

நேரில் வாங்குவதே சிறந்தது எனக் கருதுகிறேன்.

இதில் இணையவழியில் கிடைக்கும் சலுகை விலை கிடைக்காது என நீங்கள் நினைக்கலாம். நேரடியாகப் பொருளை வாங்க மெனக்கெட்டுச் செல்ல வேண்டுமே என நினைக்கலாம். இணையவழிப் போன்று வீட்டிற்கே பொருள் வந்து சேரும் வசதி (ஹோம் டெலிவரி) இல்லையே எனக் கருதலாம். இவற்றுக்குச் சில தீர்வுகள் இல்லாமலா இருக்கும்?

நேரில் பார்த்து வாங்கும் வகையில் அருகருகே இருக்கும் நகரங்களுக்குச் செல்லுங்கள். இது கொஞ்சம் மெனக்கெடுதான். இருந்து விட்டுப் போகட்டும். வீட்டில் வாங்கிப் போட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு வேலை கொடுக்க வேண்டாமா? அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பொருள் வாங்க (பர்சேஸ் செய்ய) செல்கிறோம் என்பதைக் காட்ட வேண்டாமா?

வீட்டிற்கே பொருட்களைக் கொண்டு வந்து கொடுக்கவும் தற்போது கடைகள் தயாராக இருக்கின்றன. கையிலோ, பையிலோ எடுத்து வரக் கூடிய அளவுக்குப் பொருள் என்றால் எடுத்து வந்து விடுங்கள். இல்லையென்றால் கொஞ்சம் அடித்துப் பிடித்து அவர்களிடம் பேச வேண்டும். அப்படி ஒரு வசதி இல்லையென்றால் வேறொரு கடைக்குப் போகிறேன் என்று போக்குக் காட்ட வேண்டும். பொருள் வாங்க தயாராக இருக்கும் வாடிக்கையாளரை இழக்க எந்தக் கடைக்காரருக்கு மனம் வரும்? உங்களுக்கு ஏதோ ஒரு சலுகையைச் செய்து கொடுப்பார்.

எல்லாவற்றுக்கும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். அங்கு இருக்கும் மனிதர்களிடம் உரையாடுங்கள். பேரம் பேசுங்கள். உங்கள் கடையை விட்டால் வேறு கடை இருக்கிறது எனப் பேச்சினிடையே பயம் காட்டுங்கள். இந்தப் பயத்திற்கு எல்லா கடைக்காரர்களும் மசிவார்கள். வியாபாரம் செய்வதற்குதானே கடை வைத்திருக்கிறார்கள். அதை விட்டு விட மாட்டார்கள் என்பதால் நீங்கள் பலவித கோணங்களில் சுழன்று பேசுவதற்குக் கொஞ்சம் கூட யோசிக்க வேண்டியதில்லை.

இணையவழியில் உங்களுக்குக் கிடைக்கும் சலுகை விலை கடைகளில் கிடைக்காது என நினைத்து விடாதீர்கள். கையிலிருக்கும் அலைபேசியை நோண்டி இணையவழியில் விற்கப்படும் விலையைக் காட்டுங்கள். நீங்கள் இந்த விலைக்குத் தர தயார் இல்லை என்றால் இணைய வழியிலேயே வாங்கிக் கொள்கிறேன் என்று கடையை விட்டு வெளிநடப்புச் செய்யுங்கள். இதுவும் கடைக்காரர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தும் முறைதான். கடைக்காரரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? இப்படி பத்து வாடிக்கையாளர்களை விட்டால் அவருக்குத்தான் மாரடைப்பு வரும். அதை விடக் குறைவான விலைக்கே தருகிறேன் என்று உங்கள் பின் ஓடோடி வருவார்.

நீங்கள் ஒரு கடையில் பொருளை வாங்குவதால் இன்னும் சில நன்மைகளும் இருக்கின்றன. அதன் குறைபாடுகளுக்கும் பழுதுகளுக்கும் நிவாரணம் தேட முடியும். என்னய்யா இது, வாங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை, நீங்கள் பல்லைக் காட்டியதை விட மோசமாக இப்படி பல்லை இளிக்கிறதே இந்தப் பொருள் என்று கடைக்கு முன் நின்று சத்தம் போட முடியும்.

இணைய வழிக் குறைபாடுகளுக்கு நீங்கள் உங்கள் கருத்துகளைப் பதிவிடலாம். நேரடியாக வாங்கும் போது குறைபாடுகளுக்கு நீங்கள் ஒரு புரட்சியையே பண்ணி விடலாம். எது வசதி என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எந்தப் பொருளை வாங்க நினைத்தீர்களோ அந்தப் பொருளையே அச்சரம் பிசகாமல் பார்வை பேதமின்றி நேரில் சென்றால் வாங்கி வந்து விடலாம். இதுவே இணைய வழியில் என்றால் நீங்கள் வாங்க நினைத்த பொருள் ஒன்றாகவும், வாங்கிய பின் வந்து சேரும் பொருள் வேறொன்றாகவும் இருக்க பல சாத்தியங்கள் இருக்கின்றன.

இணைய வழியை விட நேரில் பார்த்து வாங்குவதே இயைந்த வழி என்று நினைக்கிறேன். ஒரு பொருளை வாங்குவதற்குள் நான்கு பேரிடம் நான்கு விதமாகப் பேசிப் பேரத்தில் ஏறி இறங்கி, கறாராகப் பேசி, விட்டுக் கொடுத்து, விட்டுப் பிடித்து, வாங்குவதற்கு எல்லாம் நேரில் பார்த்து வாங்குவதுதான் வசதி. நமக்கும் ஒரு பொழுதுபோக்கு வேண்டாமா?

பேசத்தானே பிறந்திருக்கிறோம் மனிதர்களாகிய நாம். அப்படிப் பேசி வாங்குவதற்கு நேரில் போய் வாங்கினால்தான் முடியும். பொருளை வாங்கிப் புதிய அனுபவத்தைப் பெறுவதைப் பேசிப் பேசியே பெற்று விட முடியும். பேசப் பேச ஒரு பொருளைப் பற்றிய அவ்வளவு புதிய விசயங்கள் வெளியே வந்து கொண்டிருக்கும். நமக்கும் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு. நாமாகப் போய் பைத்தியம் போல யாரிடமாவது பேசிக் கொண்டிருக்க முடியுமா சொல்லுங்கள்? அத்துடன் பொருளைச் சல்லிசாகத் தட்டிக் கொண்டு வரவும் மற்றொரு வாய்ப்பு. இந்த இரண்டு வாய்ப்புகளையும் ஏன் விடுவானேன்?

மற்றவர்களிடம் புரளிப் பேசிக் கொண்டிருப்பதற்கு ஒரு மாற்றாகவும் இருப்பதால் இன்றிலிருந்து பொருட்களை நேரில் பார்த்துப் பேசி வாங்கப் புறப்பட்டு விடலாம்.

*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...