Showing posts with label Life. Show all posts
Showing posts with label Life. Show all posts

27 Oct 2024

எழுதப்பட்ட விதிக்குள் எழுதப்படாத விதி

எழுதப்பட்ட விதிக்குள் எழுதப்படாத விதி

ஆசைகள் எங்கெங்கோ கொண்டு போய் நிறுத்துகின்றன

கத்தியின் கூர் முனையின் மேல் இதயத்தை

செஞ்சுடரின் மேல் வெண்பஞ்சை

யாரையும் யாரும் மாற்றுவது ரொம்பவே கஷ்டமானது

மாற்றத்தை உணர்ந்து அவரவர் மாறிக் கொள்வது எளிதானது

அதுவரை அவர்கள் அப்படியே இருப்பது உசிதமானது

உண்மையான அன்பு

ஒருவரின் ஆசைக்குக் குறுக்கே நிற்காது

எப்படியோ ஒவ்வொன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

எதற்காகவும் யாரையும் குறை கூற முடியாது

கனமாகிப் போகின்ற இதயம்

லேசாகத் துடித்து வெடித்துச் சிதறுவது இயற்கையானது

என்றோ ஒரு நாள் வெடிப்பதற்காக

எரிமலையை யார் என்ன செய்ய முடியும்

தலைக்கு மேல் தொங்கும் கத்திகள் போல்

தற்செயல்கள் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழும்

விபத்துகள் எப்போதோ நேரும் என்பதற்காகப்

பயணிக்காமல் இருக்க முடியுமா

வாழ்க்கைப் பயணிகள் மனிதர்கள் என்பது எழுதப்பட்ட விதி

பயணித்துக் கொண்டிருக்க வேண்டும்

என்பது எழுதப்படாத விதி

*****

 

25 Oct 2024

நீரில் வரையும் காற்றின் ஓவியம்

நீரில் வரையும் காற்றின் ஓவியம்

வாழ்ந்து முடித்தப் பிறகு

அர்த்தம் கொடுக்கத் தோன்றுகிறது

நோக்கம் கற்பிக்க ஆசை பிறக்கிறது

உலகிற்கு ஏதோ சொல்ல வேண்டுமென்ற

பரிதவிப்பு தோன்றி விடுகிறது

சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்ட

விருந்தாளியைப் போலாகி விட்ட வாழ்க்கையில்

வாழ்தலே அர்த்தம்

வாழ்தலே நோக்கம்

வாழ்தலே செய்தி

அதற்கு மேல் ஒன்றுமில்லை என்று

உரக்க கத்தத் தோன்றுகிறது

அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம் என்று

காற்றில் அசைகின்றன மரங்கள்

வானில் பறக்கின்ற பறவைகள்

நிலத்தில் ஊர்கின்றன புழுக்கள்

நீரில் நீந்துகின்றன மீன்கள்

முகத்தில் வந்து அப்புகின்றது தூசி

சொல்வதற்கு ஏதுமில்லை என்று கைவிரிக்கையில்

கேட்கத் தொடங்குகிறது ஓலம்

*****

9 Oct 2024

வாழ்க்கை எனும் சுண்டி விடப்படும் நாணயம்

வாழ்க்கை எனும் சுண்டி விடப்படும் நாணயம்

நடக்கிறது நடக்கவில்லை

மென்மையாக இருங்கள்

தோல்வியில் முடிவதற்காகக் கடினமாகி விடாதீர்கள்

வெற்றியைப் போல தோல்வி ஒரு நிகழ்வு

தோல்வியைப் போல வெற்றி ஒரு நிகழ்வு

நிகழ்தலில் எது வேண்டுமானால் நிகழட்டும்

பூவா தலையா எது வேண்டுமென

யார் நிர்ணயிக்க முடியும்

நிர்ணயிக்க முடியாத ஒன்றுக்காக

சுண்டி விடுதலை நிறுத்த முடியாது

வாழ்க்கை சுண்டி விடப்படும் நாணயம்

எது வேண்டுமானாலும் விழலாம்

விழுந்து விட்டுப் போகட்டும்

நாணயத்திற்கு ஆகப் போவதென்ன

இரண்டு பக்கங்களும் உள்ள நாணயத்தில்

ஏன் ஒற்றைப் பக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள்

*****