Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

20 Nov 2024

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை. அதற்கான சாத்தியங்கள்  தமிழகத்தில் அமைந்ததில்லையா என்று கேட்டால்…

2006 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியங்களைத் திறந்துவிட்டிருந்தன. எனினும் கூட்டணி ஆட்சி அமையவில்லை. அந்தத் தேர்தலில் திமுக 96 இடங்களிலும் காங்கிரஸ் 34 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. நியாயமாகப் பார்த்தால் கூட்டணி ஆட்சிதான் அப்போது அமைந்திருக்க வேண்டும். திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சியைப் போன்றுதான் அப்போது ஆண்டது. அதனாலேயே திமுகவின் எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவர் ஜெயலலிதா அப்போதைய திமுக அரசை மைனாரிட்டி திமுக என விமர்சித்ததும் நடந்தது.

இந்திய அளவில் என்று பார்க்கும் போது கூட்டணிக்கான சாத்திங்களே 1977க்குப்பிறகுதான் ஏற்பட்டது. அது இந்திரா காந்தி உருவாக்கிய அவசரநிலை பிரகடனத்தால் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1989 லிருந்து 2014 வரை இந்தியாவில் நடந்ததெல்லாம் கூட்டணி ஆட்சிதான். தற்போது 2024லிருந்து மத்தியில் நடப்பதும் கூட்டணி ஆட்சிதான் என்றாலும் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்வதைப் போன்றுதான் கூட்டணிகளைச் சமாளித்துக் கொண்டு ஆண்டு கொண்டிருக்கிறது.

கூட்டணியாக இருந்தாலும் தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதான ஆளுமையுடன் ஆளும் திறனுள்ள கட்சித் தலைமைகளே ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்திருக்கின்றன.

இப்போது நாம் எழுப்பிக் கொண்ட கேள்விக்கு வருவோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா? இல்லையா? என்ற கேள்வியானது தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்யால் எழுந்திருக்கிறது. அவர் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு உண்டு என்று சொல்லியிருக்கிறார். இதை அவர் அரசியல் அணுகுண்டு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இது அநேகமாகத் தேர்தல் கூட்டணிக்கான வாக்குறுதியாக வழங்கப்பட்டு பின்னர் மக்களுக்கு வழங்கப்படும் தேர்தல் வாக்குறுதியைப் போல மறக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. பொதுவாக அரசியல் தலைவர்கள் மக்களுக்குத்தான் வாக்குறுதிகளை வழங்குவார்கள். தற்போது கூட்டணி சேர்க்கைக்காகவும் புதிய கட்சிகள் இப்படி வாக்குறுதிகளை வழங்க வேண்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தியா போன்ற பரந்து விரிந்த தேசத்தில் நிலவும் பிராந்திய வேறுபாடுகள் மத்தியில் கூட்டாட்சிக்கான சாத்தியங்களை உண்டாக்குகிறது. தமிழகத்தில் அப்படி வேறுபாடுகள் இருந்தாலும் தேசிய அளவில் பிரதிபலிப்பது போல சிதறுண்ட வகையில் அப்படி பிரதிபலிக்க வாய்ப்பில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

எனவே தமிழகத்தைப் பொருத்த வரையில் கூட்டணி ஆட்சியெல்லாம் அமைய வாய்ப்பில்லை என்பதே 90 விழுக்காடு அளவுக்கு மாற்ற முடியாத கணிப்பு. இது சரியான கணிப்புதானா என்று கேட்டால் கணிப்புகளை மீறியதுதானே அரசியலும் பங்குச் சந்தையும் என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

*****

5 Nov 2024

திராவிடமா? தமிழ்த் தேசியமா?

திராவிடமா? தமிழ்த் தேசியமா?

ஓர் அரசியல் பண்பாட்டு இயக்கத்திற்கான வலுவான அடிப்படை கருத்தியல்தான். அந்தக் கருத்தியல் அடிப்படையில்தான் தங்கள் இயக்கத்திற்கான சித்தாந்தங்களை வகுத்துக் கொண்டு அரசியல் பண்பாட்டியலிலாளர்கள் செயல்படுகிறார்கள்.

தென்னிந்திய அரசியலின் வலுவான அரசியல் கருத்தியல் திராவிடம். திராவிடம் என்ற கருத்தியல் தோன்றி செழித்தது தமிழகத்தில்தான். திராவிடம் என்ற கருத்தியல் வளர்வதற்கு ஆரியம் என்ற எதிர்க் கருத்தியல் முக்கிய காரணம். மொழியும் பிரதானக் காரணம். ஆரியர்கள் சமஸ்கிருதத்தை முன்னிருத்தி தங்கள் பண்பாட்டையும் மொழிக் குடும்பங்களையும் முன்னிருத்திய போது, அதற்கு எதிரான நிலையில் தென்னிந்தியாவுக்குத் தங்கள் பண்பாட்டையும் மொழிக் குடும்பங்களையும் முன்னிருத்த திராவிடக் கருத்தியல் துணை நின்றது.

தமிழிலிருந்து தோன்றிச் செழித்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு போன்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பங்களாகக் கால்டுவெல் போன்ற தமிழாய்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மொழியின் பின்னணியில்தான் தென்னிந்தியாவின் அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் வளர்த்தெடுக்கப்பட்டன. இதற்கான வரலாற்றுப் பின்புலமும் நோக்கப்பட வேண்டியது.

அன்றைய சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரம், ஒரிசாவை உள்ளடங்கிய பெரும் நிலப்பகுதி. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாத வரையில் சென்னை மாகாணம் என்பது தென்னிந்தியாவின் கணிசமான பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இதனால் சென்னை மாகாணத்திற்குத் தென்னிந்தியாவின் பல மொழி பேசும் பகுதிகளை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் இருந்தது. திராவிடம் என்ற கருத்தியலுக்கு அப்போது வலுவான தேவையும் இருந்தது.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு மொழி சார்ந்த பின்னணியில் தங்கள் கருத்தியல்களை மாநிலங்கள் வளர்க்க முற்பட்ட போது திராவிடத்தைத் தமிழ் தேசியமாகத் தொடர வேண்டிய நிலை தமிழ்நாட்டிற்கு உண்டாகிறது. திராவிடம் தமிழ்த் தேசியமாக வளர்த்தெடுக்கப்பட்டதா என்பதுதான் முக்கியமான கேள்வி.

தமிழர்களுக்குத் தமிழுணர்வு இருந்த அளவுக்குத் தமிழ்த் தேசியமாக வளர்த்தெடுக்கப்படுவதற்கான உணர்வு இல்லை என்றே குறிப்பிட வேண்டியிருக்கிறது. இதனால் திராவிடம் என்ற நிலையிலிருந்து தமிழ்த் தேசியமாக வளர வேண்டிய அரசியல் மற்றும் பண்பாட்டு பின்புலமானது திராவிடம் என்ற அளவிலேயே நின்று கொண்டது.

இந்தித் திணிப்பின் போது வெளிப்பட்ட தமிழுணர்வு இந்தி எதிர்ப்பு என்ற அளவில் மட்டும் சுருங்கிப் போனது. தமிழ்த் தேசியத்திற்கான கட்டமைப்பு இல்லாமல் அரசியல் முழக்கமாக மட்டும் அது தொடரப்பட்டு வருகிறது.

தமிழ்த் தேசியத்தின் அவசியத்தை உணர்ந்திருந்தால் மக்கள் உணர்வெழுச்சியுடன் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களை வைப்பதில் ஆர்வம் காட்டியிருப்பார்கள். கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பதாகைகள் தமிழில் இடம் பெற்றிருக்கும். தமிழ் வழிக் கல்வியில் தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் உவப்புடன் சேர்த்து தமிழ் வழிக் கல்வி நிலையங்களைப் பெருக்கியிருப்பார்கள். தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் மந்திர முழக்கங்கள் மட்டுமே கேட்டிருக்கும். தமிழர்களின் பேச்சு வழக்கிலும் இவ்வளவு ஆங்கில மற்றும் பிறமொழி கலப்புச் சொற்கள் வந்திருக்காது.

தமிழ்த் தேசியத்திற்கான அரசியல் முன்னெடுப்புகள் தமிழ்நாட்டில் தொடர்ந்த வண்ணம் இருந்தாலும் அது தொடர்ந்து அரசியல் முழக்கமாகவும் தமிழகத்திற்கான லட்சிய எதிர்பார்ப்பாகவும் மட்டுமே இருந்து வருகிறது.

தமிழ்த் தேசியம் என்பதை அரசியல் நெருக்கடியாகவும் கட்டாயமாகவும் இயக்கப்படுத்திச் சட்டங்களை ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் தமிழ் வழிக் கல்வியை விரும்புவார்களா? தமிழ்ப் பெயர்கள் வைப்பதில் ஆர்வம் காட்டுவார்களா? தமிழ் வழியில் தமிழகம் பயணிப்பதை விரும்புவார்களா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் லட்சிய ரீதியாகச் அணுகப்படுவதை விடவும் எதார்த்த ரீதியாக அணுகப்பட வேண்டும். அந்த எதார்த்தம் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்பதே நடைமுறை உண்மை.

தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் விநோதமாகப் பார்க்கப்படும் சூழல் இருக்கிறது. தமிழ்நாட்டில் தனித்தமிழ் பள்ளிகள் நடத்தப்படுவது ஆச்சரியமாகப் பார்க்கப் படுகிறது. தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைப்பதைத் தமிழர்கள் உவப்புடன் ரசித்துப் பார்க்கின்றனர். ஐந்து நிமிட உரையில் ஆங்கிலமோ, பிறமொழிச் சொற்கள் கலப்பில்லாமல் பேசும் அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் அரிதாக இருக்கின்றனர்.

அப்படியானால் தமிழ்த் தேசியம் என்பது சாத்தியம் இல்லையா என்றால் அதற்கான அடித்தளம் தமிழர்களிடம் உணர்வு ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் ஆழமாகவும் அதே நேரத்தில் பொறுமையாகவும் மென்மையாகவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அது தமிழர்களின் பழக்கமாகவும் வழக்கமாகவும் தொடர சில பத்தாண்டுகள் தேவைப்படும். அதுவரை தமிழ்த் தேசியத்தை அரசியல் லாபம் பார்க்காது வளர்த்தெடுக்கும் நீண்ட கால நோக்குடைய தலைவர்கள் தமிழகத்துக்குக் கிடைப்பார்களா?

அடித்தளம் வலிமையாக இல்லாமல் மேற்கட்டுமானத்தைக் கனவுகளால் கட்டுவது எப்போதும் நிலைத்து நிற்காது என்பதால் தமிழ்த் தேசியம் என்பதை அரசியல் முழக்கமாகக் கருதி ஆதாயம் அடைய நினைக்கும் தலைவர்களால் தமிழ்த் தேசியம் என்பது வெற்றியை நோக்கிச் செல்லாத கருத்தியலாக மாறும் ஆபத்தும் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்ற லட்சியவாத கருத்தியலை வெகுஜன கருத்தியலாக மாற்றுவதில்தான் இருக்கிறது தமிழ்த் தேசியத்தின் வெற்றி.

*****

22 Sept 2024

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்!

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்!

வாழ்க்கையில் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று யாருக்காவது புரிகிறதா?

அரசியலுக்கு வருவார் என்று நினைத்த ரஜினி வரவில்லை. வர மாட்டார் என நினைத்த கமல் வருகிறார்.

எவ்வளவோ மல்லுகட்டியும் அப்பா சந்திரசேகர் சொன்ன போது விஜய் அரசியலுக்கு வர மாட்டேன் என்று போக்குக் காட்டினார். தற்போது அரசியல் கட்சி துவங்கி, மாநாடு வரை வந்து விட்டார்.

எப்படியும் விஜயகாந்த் ஆட்சியைப் பிடிப்பார் என எதிர்பார்ப்பு நிலவியது. அவரோ இரண்டு கட்சிகளிடையே மாறி மாறி கூட்டணிப் பேசும் விநோத நிலைக்குப் போய் விட்டார்.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்த போது முரசொலி மாறன் சொன்ன கருத்தை அப்போது கேட்டவர்களுக்கு, அவர் பின்னாளில் தமிழ்நாட்டின் முதல்வராக வருவார் என யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆரைக் கட்சியை விட்டு நீக்கிய போது இனி அவர் செல்லாக் காசாக ஆகி விடுவார் எனத்தான் கருணாநிதி நினைத்திருக்க வேண்டும். ஆனால் அவரோ அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவாகினார். சிவாஜிக்கோ நிலைத்து நிற்கும் வாய்ப்பை அரசியல் கொடுக்கவில்லை.

அண்ணாவுக்குப் பின் நெடுஞ்செழியன் முதல்வர் ஆவார் என்ற கணிப்பும் அப்படித்தான் ஆனது. அப்போதிருந்து சூழ்நிலையில் மன்மோகன் சிங் பிரதமர் ஆவார் என்று அவரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

அம்மாவுக்குப் பின் சின்னம்மாதான் ஆட்சிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய போது நிலைமை அப்படியே மாறியது.

வாஜ்பாயிக்குப் பின் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையைப் பிடித்த போது அத்வானி பிரதமராகியிருக்க வேண்டும். நரேந்திர மோடி பிரதமரானார்.

அடுத்து அஜித் அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என நாமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. அவர் ஆரம்பிக்கலாம். ஆரம்பிக்காமலும் போகலாம். அல்லது இரு சக்கர வாகன விரும்பிகளுக்கான ஓர் இயக்கத்தை ஆரம்பிக்கலாம்.

உள்ளூர், உள்நாட்டு அரசியலை விடுங்கள். இங்கிலாந்தின் பிரதமராக ஓர் இந்திய வம்சாவளி வருவார் என்று நாம் நினைத்திருப்போமா? ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமர் ஆகவில்லையா? இப்போது அமெரிக்காவில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு என்ன நடக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியலில் அவசரம் காட்ட முடியாது.

அரசியலைப் பொருத்த வரை முன் கணிப்புகள் பெருமளவு வேலை செய்வதில்லை. ஏனென்றால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் சரியான கணிப்பாக இருக்கிறது.

கணிப்புகளை மாற்றி வைக்கும் வரலாறு அரசியலுக்கு நிறையவே உண்டு. அரசியலில் ஒருவருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இன்று அன்றாடங் காய்ச்சியாக உங்கள் கண்ணில் படும் ஒருவர் நாளை பெரிய அரசியல்வாதியாக வரலாம். இன்று பெரிய அரசியல்வாதியாக உங்கள் கண்ணுக்குத் தெரியும் ஒருவர் நாளை அன்னக்காவடியாகவும் ஆகலாம்.

ஏன் இப்படி அரசியல் மனிதர்களைப் போட்டுப் பாடாய்ப் படுத்துகிறது என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அதுதான் அரசியல்! அரசியலில் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்ற சொலவம் சாதாரணமானதா என்ன?

*****