Showing posts with label Memory Power. Show all posts
Showing posts with label Memory Power. Show all posts

27 Mar 2026

மெமரி பவர் – சில கப்சாக்களும் நிஜங்களும்!

மெமரி பவர் – சில கப்சாக்களும் நிஜங்களும்!

ஞாபகசக்தி என்றாலே நம்மூரில் சில செட் நம்பிக்கைகள் உண்டு. இருபது வயதுக்கு மேல் அறிவு மழுங்கிடும், வல்லாரை மாத்திரை சாப்பிட்டால் எல்லாம் ஞாபகம் வரும் -  இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று நினைக்கிறீர்கள்?

உலகெங்கம் நடைபெற்றுள்ள ஆய்வுகள் என்ன சொல்கின்றன தெரியுமா?

இருபதுகளில் ஷார்ட் டெர்ம் மெமரி உச்சத்தில் இருக்கும் என்பது உண்மை. ஆனால் அதற்காக முப்பது வயதில் மூளை ரிடையர் ஆகிவிடாது. தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும் நுண்ணறிவு ஒருவருக்கு 60 முதல் 70 வயதில்தான் பீக்கில் இருக்குமாம்.

இளைஞர்கள் வேகமாக யோசிக்கலாம், ஆனால் சீனியர்கள் ஷார்ட்கட்களில் ஜெயிப்பார்கள். அனுபவம் என்கிற டேட்டாபேஸ் அவர்களிடம் அதிகம். அதனால், வயதாகி விட்டது, இனிமேல் என்ன இருக்கிறது? என்பது வெறும் சோம்பேறித்தனம்.

ஞாபக சக்தியை அதிகப்படுத்துவதாக வரும் விளம்பரங்கள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிஷ் ஆயில், ஜின்கோ பிலோபா, மெமரி டேப்லெட்டுகள் என்று விளம்பரம் செய்யப்படும் எந்த மெமரி சப்ளிமெண்ட்டும் வேலை செய்வதில்லை என்று பல ஆய்வுகள் கைவிரித்துவிட்டன.

அப்புறம் எதுதான் வேலை செய்யும்?

காய்கறிகள், பழங்கள், ஆலிவ் ஆயில், மீன், முழு தானியங்கள். இதைச் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக மறதி நோய் வரும் வாய்ப்பு 35 சதவீதம் குறைகிறதாம். சும்மா மாத்திரை விழுங்குவதை விட, தட்டில் என்ன இருக்கிறது என்பதில் கவனம் தேவை.

உயர் இரத்த அழுத்தம் இருந்தால் ஜாக்கிரதை. அது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களைச் சுருக்கிவிடும். அதேபோல கொலஸ்ட்ரால் அதிகமானால் மூளையில் நச்சுப் புரதங்கள் சேரத் தொடங்கும். இதுதான் அல்சைமர் நோய்க்கு விசிட்டிங் கார்டு.

மன அழுத்தம், கவலை இருந்தால் உடனே ட்ரீட்மென்ட் எடுங்கள். ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்டிசோல் உங்கள் மூளையைத் தற்காலிகமாக ஆஃப் செய்துவிடும். இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக யோகா மற்றும் உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படும் பாரம்பரிய மருந்துகள்.

அதுமட்டுமல்ல, மூளையைக் கூர்மையாக வைத்திருக்க ஆகச்சிறந்த வழி யோகா மற்றும் உடற்பயிற்சி. வாரத்தில் மூன்று முறை உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மூளையின் ஹிப்போகாம்பஸ் அதாவது அந்த நினைவாற்றல் மையம் அப்படியே இருக்கிறது. ஆனால், சோம்பேறியாக உட்கார்ந்திருப்பவர்களுக்கு அது சுருங்கத் தொடங்குகிறது. ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் மூளை மெலிந்து போகும் அபாயம் உண்டு. எனவே, நாற்காலியை அதிகம் தேய்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கணினியில் பிரைன் கேம்ஸ் விளையாடினால் அறிவு வளரும் என்று நம்புவது ஒரு மாயை. அந்த கேம்களில் வேண்டுமானால் நீங்கள் சாம்பியன் ஆகலாம். ஆனால், அது நிஜ வாழ்க்கையில் மளிகைக் கடைக்குச் செல்லும் வழியைக் கூட ஞாபகம் வைத்திருக்க உதவாது.

மேலும் சில வழிகளும் ஞாபக ஆற்றலை வளர்க்க சொல்லப்படுகின்றன. அவற்றில் சில - புதிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள், தினசரி பேப்பர் படியுங்கள், ஒரு புதிய பயிற்சி வகுப்புக்குச் செல்லுங்கள் அல்லது யாருக்காவது தன்னார்வலராக உதவி செய்யுங்கள் என்பதெல்லாம். மூளையை பிஸியாக வைத்திருப்பவர்களுக்கு டிமென்ஷியா வரும் வாய்ப்பு மிகக் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.

ஆக, விசயம் இதுதான். 80 வயதில் ரிடையர் ஆகிவிடாதீர்கள். மூளைக்குத் தீனி போடுங்கள், உடலுக்கு வேலை கொடுங்கள். உங்கள் ஞாபக சக்தி அவ்வளவு சீக்கிரத்தில் பழுதுபட்டு விடாது.

ஆகவே, கப்சாக்களுக்கு குட்பை சொல்லுங்கள். உண்மைக்கு வெல்கம் சொல்லுங்கள்.

*****