Showing posts with label எள்ளல் சிரிப்பும் காதல் குறிப்பும். Show all posts
Showing posts with label எள்ளல் சிரிப்பும் காதல் குறிப்பும். Show all posts

8 Oct 2026

எள்ளல் சிரிப்பும் காதல் குறிப்பும்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 60

எள்ளல் சிரிப்பும் காதல் குறிப்பும்

"ஹலோ! டேய் உனக்குச் கொஞ்சமாச்சும் பொது அறிவு இருக்கா?"

போனை எடுத்தவுடனே அவளின் கோபமான குரல்.

அவன் சிரித்துக் கொண்டே கேட்டான், "அன்பே, காலையிலேயும் இந்த மிரட்டலா? என்னாச்சு இந்தத் தடவை?"

"பக்கத்து அப்பார்ட்மெண்ட் பால்கனில இருந்து உன்னை யார் பார்க்கச் சொன்னது? உனக்கு வெட்கமே இல்லையா? அதெ பார்த்துட்டு இங்க பக்கத்துல இருக்குற எல்லாரும் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டிட்டுப் போறாங்க தெரியுமா?"

"நான் என்ன செஞ்சேன்? கொஞ்சம் முகத்த தூக்கி எட்டிப் பார்த்தேன். அந்த நேரம் பார்த்து அங்க நீ வந்துட்டே. இன்னிக்கு செம்மொழிப் பூங்காவுல சந்திப்போம். அப்ப வச்சுக்கலாம் பஞ்சாயத்து."

"முடியாது! இன்னைக்கு முழுவதும் எனக்கு வேலை இருக்கு. நான் வரல."

"சரிதான், அப்போ நானே உன்னோட ஆபீஸ்க்கு வந்துடுறேன்."

"டேய்! ஆபீஸ்ல எல்லாரும் பார்ப்பாங்க. வேண்டாம்!" என்று அவள் அலைபேசியைத் துண்டித்து விட்டாள். ஆனால் அவள் குரலில் இருந்த அந்த லேசான நடுக்கமும் நாணமும் அவனுக்குத் தெரியாமல் இல்லை.

மாலை ஐந்து மணி.

அவள் அலுவலகத்தின் எதிரில் இருந்த தேநீர் கடையில் சுவரோரம் அவள் உட்கார்ந்திருந்தாள். அவள் எதிரில் அவன் போய் உட்கார்ந்ததும், தேநீர் கோப்பை கையில் நடுங்கியது.

"நீ ஏன் இப்படி இருக்க?" என்றாள் மெல்லிய குரலில்.

"எப்படி இருக்கேன்? காதலிக்கிறவளைக் கண்குளிரப் பார்க்கிறது குற்றமா?" அவனும் அதே மெல்லிய குரலில்.

"ச்சே! நான்தான் வராதேன்னு சொன்னேன்ல. ஆபீஸ்ல இருக்கிறவங்க எல்லாரும் நம்மளத்தான் பாக்குறாங்க. உன்னோட நண்பன் ஒருத்தன் இருக்கானே, அவன் சிரிச்சிட்டே போறான். என்ன ஜோடிடாங்கிற மாதிரி பாக்குறான். நமக்குள்ள இருக்கிற இந்தத் தவிப்பு அவங்களுக்குப் புரியுமா? நம்ம கண்ணில் படும் இந்தத் தவிப்பை, அறிவில்லாத அவங்க பார்த்துச் சிரிக்கிறாங்க. ஆனா, என்னைக்காவது ஒரு நாள் இவங்களும் காதலில் விழுந்து, நாம்ம படும் அதே தவிப்பை அவங்களும் படும்போதுதான் புரியும்!"

அவன் அவளது கையை என் கைகளுக்குள் மெதுவாகப் பற்றிக்கொண்டான். "அட! வள்ளுவர் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி சொன்னதை அப்படியே அட்சரம் பிசகாம சொல்றீயேடி. எப்பூடி?" என்றான் அவன்.

"வள்ளுவர் இதையெல்லாமா சொல்லியிருக்கார்?" என்றாள் அவள் ஆச்சரியத்துடன்.

"பின்னே. நீ இப்போ சொல்றதை அப்போவோ அவர் சூத்திரமா வடிச்சிட்டாரு.

"யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு."                       (குறள், 1140)

அப்படின்னு."

"ரெண்டாயிரம் வருஷங்களா இந்த மனுஷங்களுக்கு வேற வேலையே இல்லையா? காதலிக்கிறவங்கள பார்த்து நக்கல் சிரிப்பு சிரிக்கிறதே வேலையா போச்சுல்ல."

"விடு செல்லம்! அவங்க சிரிக்கட்டும். நான் உன்னைச் ரசிப்பதும், நீ என்னை முறைப்பதும் நமக்கு ஒரு கவிதை. உலகத்துக்கு அது ஒரு நாடகம். இருக்கட்டும். இந்த உலகம் காதலை எப்போதுமே ஒரு நாடகமாகவோ, அல்லது விசித்திரமான சேட்டையாகவோதான் பார்க்குது. அவங்க சிரிப்பாங்க. கிண்டல் செய்வாங்க. ஏன்னா, நம்ம் கண்களும் சந்திக்கும் அந்த நொடியில் நிகழும் ரசாயன மாற்றத்தை, மூளையில் சுரக்கும் எண்டார்பின் மாயையை அவங்களால உணர முடியாது. சில விஷயங்களை அனுபவித்தால் மட்டுமே புரியும்."

அவள் என் கையை மெலிதாக அழுத்திக் கொண்டே, முகத்தைத் திருப்பிக்கொண்டு முணுமுணுத்தாள், "போடா..."

ஆனால் அவள் கண்ணில் வழிந்த அந்தச் சின்னக் குறும்புப் புன்னகை, உலகத்தின் அத்தனை கேலிகளையும் அடித்து நொறுக்கியது. இவர்களைப் பார்த்துச் சிரிக்கும் அவர்களுக்குப் புரியாது, காதலின் அந்தச் சுமை எவ்வளவு இனிமையானது என்று!

-           சூத்திரங்கள் தொடரும்!

*****