Showing posts with label அதிர்ஷ்டம். Show all posts
Showing posts with label அதிர்ஷ்டம். Show all posts

15 Nov 2024

இப்படித்தான் எல்லாம்!

இப்படித்தான் எல்லாம்!

இப்படித்தான் வழங்கப்படுகின்றன இலவசங்கள்

ஒரு தோடு வாங்கினால் இன்னொரு தோடு இலவசம்

அதிர்ஷ்ட நாட்கள் இப்படித்தான் கணக்கிடப்படுகின்றன

தலைக்கவசம் அணியாமல் சென்று

தண்டம் அழாமல் வரும் நாட்கள் அதிர்ஷ்ட நாட்கள்

தள்ளுபடிகளில் இப்படித்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது

உடனடியாகச் செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்கு

இருபது சதவீத தள்ளுபடி

லாபங்கள் இப்படித்தான் புரிந்து கொள்ளப்படுகின்றன

திருடு போனதைக் கண்டுபிடிக்க புகார் கொடுக்காமல்

கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது லாபம்

கடைசி வரை இப்படித்தான் வாழப்படுகிறது வாழ்க்கை

உன்னுடன் மனிதர் வாழ்வாரா என்றபடி

எப்படியோ கடைசி வரை வாழ்ந்து முடித்து விடுகிறார்கள்

இப்படித்தான் என்றில்லாமல் எதைக் கேட்டாலும்

காலம் பதில் சொல்லும் என்கிறார்கள்

காலத்திற்கும் பரீட்சை வைத்து

மதிப்பெண் போட நினைக்கும் மனிதர்கள்

இப்படித்தான் வெற்றியை நம்ப முடியாத மனிதர்கள்

அதை கடவுள் கொடுத்தது என்கிறார்கள்

இப்படித்தான் தோல்வியை நம்ப முடியாத மனிதர்கள்

அதை மனிதர்கள் கொடுத்தது என்கிறார்கள்

இப்படித்தான் ஏரிகள் மேல் வீடுகளைக் கட்டி

வீடுகள் ஏரியாகும் போது

போக்குவரத்து நெரிசலுக்காகக் கட்டிய மேம்பாலங்களில்

வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள்

முன்யோசனையுள்ள மனிதர்கள்

*****

1 Nov 2024

அதிர்ஷ்ட கணக்கு

அதிர்ஷ்ட கணக்கு

நான் என்ன பெரிய அதிர்ஷ்டசாலி என்று

நீங்கள் நினைக்கலாம்

என்னைப் பற்றி நினைக்க

நான்கு பேர் இருக்கிறார்கள்

எனக்காகக் கவலைப்பட

எட்டு பேர் இருக்கிறார்கள்

எனக்காகக் கண்ணீர் சிந்த

இருண்டு பேர் இருக்கிறார்கள்

அவ்வபோது என்னைப் பார்த்து விட்டுச் செல்லும்

ஆறு பேர் இருக்கிறார்கள்

இப்படி இருபது பேர் இருக்கையில்

இந்த ஜென்மத்தில் எனக்கு வேறென்ன வேண்டும்

அதிர்ஷ்டசாலியாக இருக்க

அப்படி ஒருவர் இருந்தாலே போதுமானது எனும் போது

இருபது பேர் என்பது ரொம்ப அதிகம்

*****

31 Oct 2024

காகிதத்தின் அதிர்ஷ்டம்

காகிதத்தின் அதிர்ஷ்டம்

எல்லாருக்கும் ஆசை

விதவிதமான ஆசைகள்

வேகமாகச் சம்பாதிக்க வேண்டும்

விரைவில் பணக்காரராக வேண்டும்

காரில் செல்ல வேண்டும்

பிறகு விமானத்தில் செல்ல வேண்டும்

விண்வெளிக்குச் சுற்றுலா செல்ல வேண்டும்

எல்லாருக்கும் பணத்தின் மீது ஆசை

பணத்திற்கு யார் மீதும் ஆசையில்லை

பணத்திற்கு மட்டும் பணத்தின் மீது ஆசையில்லை

ஆசையிருந்தால் கறையான் அரிக்கும் பொழுதில்

கண்டு கொள்ளாமல் இருந்திருக்குமா

கிழிபட்ட போது கதறாமல் இருந்திருக்குமா

செல்லாது என அறிவித்த போது

சும்மா இருந்திருக்குமா

காலம் நேரம் லக்னம் ராசி பார்க்காமல்

கைமாறிக் கொண்டே இருக்குமா

பணமாக அச்சாகும் காகிதத்திற்கு அன்றோ

பணமாகும் அதிர்ஷ்டம் இருக்கிறது

*****