Showing posts with label Economic Gap. Show all posts
Showing posts with label Economic Gap. Show all posts

5 May 2026

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் டைனோசர் இடைவெளி!

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் டைனோசர் இடைவெளி!

உலகம் ரொம்பவே முன்னேறிவிட்டது.

எப்படித் தெரியுமா?

ஒரு பக்கம் மக்கள் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள், இன்னொரு பக்கம் எந்தத் தீவில் போய் தங்குவது? என்று பணக்காரர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக மக்கள் தொகையில் அந்த மேல்தட்டு 10 சதவீத புண்ணியவான்கள் இருக்கிறார்களே, அவர்களிடம்தான் உலக சொத்தில் 75 சதவீதம் இருக்கிறதாம். மீதமுள்ள 90 சதவீதம் பேர், மீந்து போன கேக்கில் விழும் துகள்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் துல்லியமாகச் சொன்னால், வெறும் 60,000 பேர் கையில் இருக்கும் சொத்து, உலக மக்கள் தொகையில் பாதி பேரின் சொத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

இதைச் படிக்கும்போது உங்களுக்குக் கோபம் வந்தால், நீங்கள் அந்த 90 சதவீதத்தில் ஒருவர். சிரிப்பு வந்தால், நீங்கள் அந்த 60,000 பேரில் ஒருவர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூச்சு விடாதே, கார்பன் டை ஆக்சைடு வரும், என்று ஏழைகளைத்தான் மிரட்டுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், உலகின் அடிமட்ட 50 சதவீத மக்கள் வெளியேற்றும் கார்பன் வெறும் 3 சதவீதம் தான்.

அந்த மேல்தட்டு 10 சதவீத முதலீட்டாளர்கள் தங்கள் சொகுசு வாழ்க்கை மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் 77 சதவீத கார்பனை வாரி வழங்குகிறார்கள்.

அதாவது, பணக்காரர்கள் ஏசி அறையில் அமர்ந்து புகையை கிளப்புவார்கள், அதன் வெப்பத்தில் ஏழைகள் ரோட்டில் வெந்து சாவார்கள். இதுதான் உலக நீதி!

பாலின சமத்துவம் பற்றி மேடையில் பேசுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும்.

நிதர்சனத்தில், வீட்டு வேலையையும் சேர்த்தால் பெண்கள் வாரத்திற்கு 53 மணிநேரம் உழைக்கிறார்கள். ஆண்கள் வெறும் 43 மணிநேரம்தான். இதில் அந்தப் பத்து மணிநேரம் எங்கே போனது என்று கேட்காதீர்கள், ரிமோட் தேடுவதிலேயே போயிருக்கும்.

இவ்வளவு உழைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் ஆண்களில் பாதி கூட இல்லை.

தொழில்நுட்பம் எவ்வளவு உயர்ந்த போதும் பெண் தொழிலாளர்களின் வருமானம் உயரவே இல்லையாம். அநேகமாக, பணவீக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் செல்லாது என்று உலகம் முடிவு செய்துவிட்டது போலும்!

இந்த விஷயத்தில் இந்தியா மட்டும் சளைத்ததா என்ன? இந்தியாவின் முதல் ஒரு சதவீத பணக்காரர்கள் நாட்டின் 40 சதவீத சொத்துகளை வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் கடைநிலை 50 சதவீத மக்களிடம் இருக்கும் சொத்து வெறும் 6 சதவீதத்திற்கும் குறைவு.

இதைப் பார்த்தால், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது பழைய பாட்டு, எல்லாப் பணமும் ஒருவருக்கே சொந்தம் என்பதுதான் புதிய டூயட்டு.

இந்நிலையைப் போக்க அரசாங்கம் நிறைய வைத்திருப்பவர்களிடம் நிறைய வரி வாங்க வேண்டும். ஆனால் நடப்பதோ வேறு.

பணக்காரர்களுக்கு வரி குறைப்பு செய்தால்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள் என்கிற நவீன தாராளமயக் கொள்கைதான் இப்போதும் ஹாட் கேக்.

சுருக்கமாகச் சொன்னால், உலகம் ஒரு பெரிய டைட்டானிக் கப்பல் போலப் போய்க்கொண்டிருக்கிறது. மேல் தளத்தில் பார்ட்டி நடக்கிறது, கீழ் தளத்தில் தண்ணீர் புகுந்து கொண்டிருக்கிறது.

சமத்துவத்தை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்காமல், புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் என்று பேசுவது, செல்போனில் சார்ஜ் போடாமலேயே ரீல்ஸ் பார்ப்பதற்குச் சமம்.

உண்மை என்னவென்றால், வளர்ச்சி என்பது ஒர் ஏணி. ஆனால் அந்த ஏணி இப்போது பணக்காரர்கள் மட்டும் ஏறிச் செல்லும்படி லிப்ட் ஆக மாற்றப்பட்டுவிட்டது. ஏழைகள் இப்போதும் கீழே நின்று ஏணியைத் துடைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

எத்தனை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வந்தாலும் இந்த நிலை மாறாது என்பதுதான் எதார்த்தம் போலும்!

*****