Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

16 Dec 2024

மனைவிக்குப் பிடித்தவை

மனைவிக்குப் பிடித்தவை

மனைவிக்கு மல்லிப்பூ பிடிக்கும்

மனைவிக்கு அல்வா பிடிக்கும்

மனைவிக்கு சினிமா பிடிக்கும்

மனைவிக்கு சீரியல் பிடிக்கும்

மனைவிக்குப் பட்டுப்புடவை பிடிக்கும்

மனைவிக்கு தங்க நகைப் பிடிக்கும்

மனைவிக்கு வெள்ளிக் கொலுசு பிடிக்கும்

மனைவிக்கு பாய் கடை பிரியாணி பிடிக்கும்

மனைவிக்கு முக்குக்கடை இடியாப்பமும் பாயாவும் பிடிக்கும்

மனைவிக்குப் பயந்தால்

மனைவிக்கு ரொம்ப பிடிக்கும்

பயப்படுவது போல நடிப்பது

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

*****

14 Nov 2024

ஒரு வார்த்தை விசாரிப்பதில் என்ன குறைந்து விடப் போகிறது?

ஒரு வார்த்தை விசாரிப்பதில் என்ன குறைந்து விடப் போகிறது?

இந்த உலகில் எதுவும் பழையது இல்லை. எல்லாம் புதுமையானதுதான். புதுமையாக இருக்கும் ஒன்றை நாம் பழையதாக மாற்றி விடலாம். நம் பராமரிப்பில் உள்ள பொருட்களை அன்றாடம் பயன்படுத்துவதாலும், அதைத் தூய்மை செய்ய வைப்பதாலும் பொருட்கள் எப்போதும் புதுமை மாறாமல் அப்படியே இருக்கும். புதிதாக வாங்கும் பொருளை விட அன்றாடம் பயன்படுத்தித் தூய்மை செய்து வைக்கும் பொருட்களின் பளபளப்பு தனித்துத் தெரியும். நமது பராமரிப்பும் பயன்பாடும் எந்தப் பொருளையும் பழையதாக்க விடாது.

பழைய மிதிவண்டி ஒன்றை விற்று விட்டு புதிய மிதிவண்டி ஒன்றை வாங்கலாம் என்று நினைத்தோம். என்ன விலைக்குப் போகும் என்று விசாரித்த போது தற்போதைய விற்கும் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைதான் கிடைக்கும் என்றார்கள். தொகையில் சொல்வதென்றால் 1700 லிருந்து 2000 க்குள் ஒரு விலை கிடைக்கும் என்றார்கள். 

அப்படியானால் பழைய வண்டியைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்து பழைய மிதிவண்டி ஒன்றை மிதிவண்டி பழுது பார்க்கும் கடை ஒன்றில் விட்டோம். அதைப் புதுப்பித்த போதுதான் அதற்கு ஆன கட்டணம் 2000 ரூபாயை நெருங்கியதை அறிந்தோம். என்ன விலைக்கு அந்த வண்டி விலை போகுமோ அதே விலைக்கு புதுப்பிக்கும் செலவைக் கொண்டு வந்திருந்தார் மிதிவண்டியைச் சரிசெய்பவர். அவர் வண்டியின் டயர், டியூப்புகளை மாற்றியிருக்க வேண்டியதில்லை. மாற்றியிருந்தார். நல்ல பாகங்கள் பலவற்றையும் உருவி புதிய பாகங்கள் போட்டிருந்தார்.

எங்கள் பக்கத்துத் தவறு என்னவென்றால் எவ்வளவு செலவு ஆகும் என்று ஒரு வார்த்தையாவது கேட்டிருக்க வேண்டும். என்ன பெரிதாக ஆகப் போகிறது? ஆயிரத்திற்குள்தான் ஆகும் என்று அலட்சியமாக நாங்களே ஒரு கணக்கிட்டுக் கொண்டது தவறாகப் போய் விட்டது. அவர் இஷ்டத்துக்கு வண்டியில் உள்ள ஏகப்பட்ட பாகங்களை மாற்றி அவருக்குக் கூலியாக அறுநூறு ரூபாயைப் போட்டு விட்டார். எல்லாம் சேர்த்து இரண்டாயிரம் வந்து விட்டது. எதற்கும் உத்தேச செலவு எவ்வளவு ஆகும் என்பதை முன்கூட்டியே கேட்டிருக்க வேண்டும் என்ற அனுபவத்தை இது தருகிறது.

செலவினக் கணக்கைக் கேட்பதோ, ஒரு பொருளின் விலை என்னவென்று விசாரித்து விட்டு வாங்குவதோ ஆரம்பத்தில் எங்களுக்குக் கூச்சமும் தயக்கமும் தருவதாகத்தான் இருந்தது. இது நாங்கள் பழகிய பழக்கத்தால் நாங்களே ஏற்படுத்திக் கொண்டது என்பதும் புரிந்தது. படிப்படியாகத் தற்போது பொருளின் விலையைக் கேட்டு விட்டு வாங்கும் பழக்கத்தை இப்போது உருவாக்கிக் கொண்டு விட்டோம். அதே போல ஒரு வேலையைச் செய்வதென்றால் உத்தேசமாக அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைக் கேட்டு வாங்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டு விட்டோம். உண்மையில் அவ்வளவுதான் செலவாகுமா என்பதை விவரம் அறிந்த நான்கைந்து பேரிடம் விசாரித்துப் பார்க்கும் பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டு விட்டோம். இது பல வகைகளில் எங்களுக்கு உதவுகிறது. ஒரு பொருளின், ஒரு வேலையின் உண்மையான மதிப்பை அறிந்து கொள்ள உதவுகிறது. உங்களுக்கும் இந்தப் பழக்கம் நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்.

*****

7 Nov 2024

எங்கே போய் நிறுத்துகிறது தெரியுமா இந்த போலித்தனம்?

எங்கே போய் நிறுத்துகிறது தெரியுமா இந்த போலித்தனம்?

யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையில் ஓர் அசல், ஒரு நேர்மை தேவைப்படுகிறது. இவை இரண்டும் கை தூக்கி விடுமா என்ற பயமும் இருக்கிறது. இந்தப் பயம்தான் போலித்தனங்களை உருவாக்குகிறது.

அசலும் நேர்மையும் அப்பட்டமாக இருந்தால்தானே பிரச்சனை. அப்படி இருப்பது போலச் செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது போலித்தனங்களின் எண்ணிக்கை அதிகமாகி விடுகின்றன.

போலித்தனம் நடிப்பைத் தருகிறது. இந்த நடிப்பு எல்லாவற்றிலும் பிரதிபலிக்கிறது. எழுத்திலும் பிரதிபலிக்கிறது. அப்படிப் பிரதிபலிக்கும் போது அது போலித்தனமான எழுத்தாக, மலினமான எழுத்தாக மாறி விடுகிறது. இன்று உருவாக்கப்படும் வெகுஜன எழுத்து என்பதும் ஒரு போலித்தனமான எழுத்துதான்.

வெகுஜனம் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று ஓர் எழுத்தை உருவாக்கி அதை நிலைநிறுத்துகிறார்கள். எப்படி? விளம்பரங்கள் மூலமாக, வியாபாரத் தந்திரங்கள் மூலமாக, உணர்வுகளைச் சுண்டி விடுவதன் மூலமாக.

ஏன் இப்படி போலித்தனமாக இருக்க வேண்டும் என்ற கேள்வியை உங்களுக்குள் நீங்கள் எழுப்பிப் பார்க்க வேண்டும்? கார்ப்பரேட் சாமியார்களை வளர்க்கவா? அல்லது உங்களுக்கு நீங்களே அந்நியமாகிக் கொள்ளவா? அல்லது மது, போதை என்று உங்களை நீங்களே அடிமையாக்கிக் கொள்ளவா? முடிவில் போலித்தனம் அங்குதான் போய் நிற்கிறது.

*****

4 Nov 2024

மன்னார்குடி கோபாலர் எண்ணெய் ஆலையின் திருவிளையாடல்!

மன்னார்குடி கோபாலர் எண்ணெய் ஆலையின் திருவிளையாடல்!

மன்னார்குடிக்கு ‘கோபாலர் எண்ணெய் ஆலை’ எனும் கோபாலர் ஆயில் மில்லும் சிறப்பு பெற்றதுதான். எண்ணெய் ஆலை எனும் ஆயில் மில்லை நடத்துவதற்கான அத்தனை கொழுப்பும் அவர்களுக்கே உரியது.

எள்ளை என்ன விலைக்கு எடுத்துக் கொள்வீர்கள்? என்றால் எள்ளை எடுத்து வா விலை சொல்கிறேன் என்பார்கள்.

தங்கத்தை உரசிப் பார்த்துச் சொல்லும் காலத்தில், இவர்கள் எள்ளைக் கண்ணால் பார்த்தே விலை சொல்வார்கள்.

எள்ளை எடுத்துக் கொண்டு போய் விலை கட்டாது என்று திரும்ப எடுத்துக் கொண்டா வர முடியும்? அவர்கள் கேட்கும் குறைந்த விலைக்குக் கொடுத்து விட்டுதான் வர வேண்டியிருக்கும்.

ரொம்ப யோக்கியர்கள் மாதிரி பேசுகின்ற கோபாலர் எண்ணெய் ஆலை எனும் கோபாலர் ஆயில் மில்லின் உரிமையாளர்கள் எண்ணெயிலும் கலப்படம் செய்கிறார்கள்.

அவர்களிடம் வாங்கி வந்த தேங்காய் எண்ணெய் மார்கழி மாதத்தில் உறைந்ததே இல்லை. சரக்கை அரைக்கும் போதே கலக்க வேண்டியதைக் கலந்து விடுவார்கள் போலிருக்கிறது.

அவர்கள் என்னவோ ராஜாங்கம் நடத்துவதாகத்தான் படுகிறது. வாடிக்கையாளர்களை மதித்து அவர்கள் பதில் சொல்லி பார்த்ததில்லை. அப்படி ஓர் அலட்சியம். அதனால் பக்கத்தில் எண்ணெய் ஆலை வைத்திருக்கும் கேசிஆர் எண்ணெய் ஆலை எனும் கேசிஆர் ஆயில் மில்லுக்கு நல்ல யோகம். கோபாலரைக் கண்டு மிரண்டு ஓடுவோருக்கெல்லாம் கேசிஆர்தான் அடைக்கலம்.

கோபாலரின் இன்னொரு மகாத்மியத்தையும் சொல்ல வேண்டும். காலையில் அரைக்கச் சென்றால், மதியம் அரைக்க வந்தால் என்ன என்பார்கள். சரிதான் மதியம் எடுத்துச் செல்வோம் என்று சென்றால் காலையிலேயே அரைக்க வந்தால் என்ன என்பார்கள்.

இவற்றிற்கெல்லாம் என்ன சொல்ல முடியும். ஒன்றும் சொல்ல முடியாது. இவை எல்லாம் மன்னார்குடி கோபாலர் ஆடும் திருவிளையாடல்கள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். இப்போது கோபாலர் சில நேரங்களில் எண்ணெய் ஆட்டிக் கொண்டிருக்கிறார். பல நேரங்களில் ஈயை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

*****

27 Oct 2024

எழுதப்பட்ட விதிக்குள் எழுதப்படாத விதி

எழுதப்பட்ட விதிக்குள் எழுதப்படாத விதி

ஆசைகள் எங்கெங்கோ கொண்டு போய் நிறுத்துகின்றன

கத்தியின் கூர் முனையின் மேல் இதயத்தை

செஞ்சுடரின் மேல் வெண்பஞ்சை

யாரையும் யாரும் மாற்றுவது ரொம்பவே கஷ்டமானது

மாற்றத்தை உணர்ந்து அவரவர் மாறிக் கொள்வது எளிதானது

அதுவரை அவர்கள் அப்படியே இருப்பது உசிதமானது

உண்மையான அன்பு

ஒருவரின் ஆசைக்குக் குறுக்கே நிற்காது

எப்படியோ ஒவ்வொன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

எதற்காகவும் யாரையும் குறை கூற முடியாது

கனமாகிப் போகின்ற இதயம்

லேசாகத் துடித்து வெடித்துச் சிதறுவது இயற்கையானது

என்றோ ஒரு நாள் வெடிப்பதற்காக

எரிமலையை யார் என்ன செய்ய முடியும்

தலைக்கு மேல் தொங்கும் கத்திகள் போல்

தற்செயல்கள் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழும்

விபத்துகள் எப்போதோ நேரும் என்பதற்காகப்

பயணிக்காமல் இருக்க முடியுமா

வாழ்க்கைப் பயணிகள் மனிதர்கள் என்பது எழுதப்பட்ட விதி

பயணித்துக் கொண்டிருக்க வேண்டும்

என்பது எழுதப்படாத விதி

*****

 

9 Oct 2024

வாழ்க்கை எனும் சுண்டி விடப்படும் நாணயம்

வாழ்க்கை எனும் சுண்டி விடப்படும் நாணயம்

நடக்கிறது நடக்கவில்லை

மென்மையாக இருங்கள்

தோல்வியில் முடிவதற்காகக் கடினமாகி விடாதீர்கள்

வெற்றியைப் போல தோல்வி ஒரு நிகழ்வு

தோல்வியைப் போல வெற்றி ஒரு நிகழ்வு

நிகழ்தலில் எது வேண்டுமானால் நிகழட்டும்

பூவா தலையா எது வேண்டுமென

யார் நிர்ணயிக்க முடியும்

நிர்ணயிக்க முடியாத ஒன்றுக்காக

சுண்டி விடுதலை நிறுத்த முடியாது

வாழ்க்கை சுண்டி விடப்படும் நாணயம்

எது வேண்டுமானாலும் விழலாம்

விழுந்து விட்டுப் போகட்டும்

நாணயத்திற்கு ஆகப் போவதென்ன

இரண்டு பக்கங்களும் உள்ள நாணயத்தில்

ஏன் ஒற்றைப் பக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள்

*****