திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 81
அதை மறைப்பது எப்படி?
திருவாரூர், தெற்கு வீதி, அமிர்தம்
வளாகத்தின் இரண்டாவது மாடியின் எட்டாம் எண் வீடு.
இரவு மணி பதினொன்று பதினைந்து.
பலவித நீர்வண்ணக் குப்பிகளும்,
வண்ணக் கலவைகளும் அவற்றைக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்களும் அறை முழுவதும் நிறைந்திருந்தன.
அவள் தூரிகையைக் கீழே வைத்தாள். அவளது விரல் நுனிகளில் மெல்லிய வண்ணக் கலவைகள். அவள்
வரைந்திருந்த வரைபலகையில் ஓர் ஓவியம். வரிசையாய் நிற்கும் மின்கம்பங்கள், அதற்கிடையே
ஓடும் ஒரு தனிமையான தொடர்வண்டிப் பாதை, தூரத்தில் மறையும் ஒரு தொடர்வண்டியின் கடைசிப்
பெட்டியின் தோற்றம்.
சுவரில் இருந்த கடிகாரம் நொடிக்கு
ஒருமுறை மெலிதாகச் சத்தமிட்டது டிக்... டிக்... டிக்...
அவள் அலைபேசியை எடுத்தாள்.
திரை பிரகாசித்தது.
வாட்ஸ்அப்பைத் திறந்தாள்.
அவனது கடைசிப் பார்வை நேற்று
இரவு 11.42 எனக் காட்டியது.
கடைசி செய்தி அவளுடையதுதான்.
நேற்று மாலை ஆறு மணிக்கு அனுப்பியது. "இன்று ஓய்வாக இருக்கும் போது கூப்பிடவும்.
அலுவலகப் பணிகள் முடிந்து விட்டதா?"
பதில் இல்லை. நீல நிற சரிகுறிக்
கூட விழவில்லை.
அவன் இப்போது சென்னையில் இருக்கிறான்.
ஒரு மிகப்பெரிய புத்தாக்க நிறுவனத்தின் நிதி மேலாண்மை தலைவர் அவன். "மூணு மாசம்டி.
இந்தச் செயல்திட்டம் மட்டும் வெற்றிகரமா முடிஞ்சிடுச்சின்னா திருவாரூருக்கே மாறுதல்
வாங்கிட்டு வந்துடுவேன்." என்று சொல்லிவிட்டுப் போனான்.
போனவன் போனவன்தான். மூன்று மாதங்கள்
என்பது இப்போது ஆறு மாதங்களாக நீண்டுவிட்டன.
அவள் எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.
குளிர்பதனப் பெட்டியைத் திறந்து ஒரு பாட்டில் குளிர்ந்த நீரைக் குடித்தாள். தொண்டை
வறட்சி குறையவே இல்லை.
அவளுக்குள் ஏதோ ஒன்று அடைத்துக்
கொண்டு நின்றது. அது என்ன? தனிமையா? ஏமாற்றமா? அல்லது காதலா? அவளால் சட்டென்று அனுமானிக்க
முடியவில்லை.
அவன் சென்னைக்குப் போகும்போது
மிகவும் சாதாரணமாகத்தான் இருந்தது. "போயிட்டு வாங்க. பார்த்துப் போங்க."
என்று சிரித்துக்கொண்டுதான் வழிஅனுப்பி வைத்தாள். தோழிகளிடம் பேசும்போது கூட,
"அட போங்கப்பா, ரெண்டு பேரும் வேலையில் இருக்கோம். இந்த இடைவெளி கூட நல்லதுதானே?
கொஞ்ச நாள் சுதந்திரமாக இருக்கலாம்," என்றுதான் தெனாவெட்டாகச் சொன்னாள்.
ஆனால் நாட்கள் நகர நகர, அவளுடைய
அந்தத் தெனாவெட்டு தவிடுபொடியானது.
மழை பெய்யும் மாலை நேரங்களில்,
தேநீர் குடித்துக்கொண்டே ஜன்னல் வழியே பார்க்கும்போது, அவனின் நினைவுகள் அவளைப் பிடுங்கித்
தின்றன. அவன் சட்டையின் வாசம், அவனது சிரிப்பு, மகிழ்வுந்தில் போகும்போது திடீர் தடையமைப்பை
அடித்து விட்டு அவளைப் பார்த்து அபத்தமாக முழிக்கும் அந்த முகம் என எல்லாமே ஞாபகத்திற்கு
வந்தன.
யாரிடமாவது இதைச் சொல்ல வேண்டும்
போல்தான் இருக்கிறது. ஆனால் முடியாது.
அவள் அம்மா ஒருமுறை அலைபேசியில்
அழைத்து, "என்னடி, உங்க வீட்டுக்காரன் அழைத்தானா? சண்டை எதுவும் இல்லையே?"
என்று கேட்கும்போது, "ச்சே ச்சே... தினமும் பேசுறார்ம்மா. அவர் செயல்திட்டத்தில்
ரொம்ப தீவிரமா இருக்கார். எனக்கும் நீர்வண்ண ஓவியங்கள் வரையறது, வேலைக்குப் போறதுன்னு
அதுலேயே நேரம் போயிடுது." என்று பொய் சொன்னாள்.
அவள் தோழி ஒருத்தி, "என்னடி
முகம் ஒரு மாதிரியா இருக்கு? புருஷன் ஞாபகமா?" என்று கேட்டபோது, எனக்கா? எனக்கு
அதெல்லாம் இல்லப்பா. நான் என்ன சங்கக்காலத்து தலைவனைப் பிரிந்த தலைவியா? நான் ரொம்ப
இயல்பா இருக்கேன்பா!" என்று சிரித்தாள்.
மறைத்தாள்.
ஆம், தான் கணவனின் பிரிவுத் துயரில்
வாடுகிறோம் என்பதை உலகத்திற்கு மறைத்தாள்.
சுயமரியாதை, மிடுக்கு, தான் மிகத்
தைரியமானவள் என்கிற பிம்பம் என எல்லாவற்றையும் காப்பாற்றிக் கொள்ள அவளுக்கு அந்த மறைப்பு
தேவைப்பட்டது.
ஆனால், இப்போது…
இரவு மணி பன்னிரண்டை நெருங்கிக்
கொண்டிருந்தது.
அவளால் தூங்க முடியவில்லை. கட்டிலில்
புரண்டு புரண்டு படுத்தாள். குளிர்சாதனக் கருவியின் காற்றில் மெல்லிய குளிர் இருந்தாலும்,
நெஞ்சுக்குள் ஒரு தகிப்பு.
நினைவுகள் ஊற்று நீரைப் போலப்
பெருகத் தொடங்கின.
மணற்கேணியில் தோண்டத் தோண்ட நீர்
சுரக்கும் என்பார்கள். ஆனால், இறைக்க இறைக்கத்தானே ஊற்று நீர் மேலும் மேலும் பெருகும்?
அதேபோலத்தான் இதுவும். "எனக்கு அவர் ஞாபகம் இல்லை, நான் சாதாரணமாகத்தான் இருக்கிறேன்"
என்று நினைத்து நினைத்து, அவள் அந்த உணர்வை மனதின் ஏதோ ஒரு மூலையில் போட்டு அழுத்த
அழுத்த... அது அடங்குவதற்குப் பதிலாக, கிணற்று ஊற்றைப் போலப் பொங்கி வழிந்தது.
மறைக்க மறைக்கக் காதல் நோய் பெருகுகியது!
திருவள்ளுவர் எப்போதோ ஈராயிரம்
வருடங்களுக்கு முன்பு எழுதிய ஈரடி வரி அவளது ஞாபகத்தில் மின்னலென வெட்டியது,
"மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்."
(குறள், 1161)
"அட வள்ளுவரே! இந்த
2026லயும் இந்த இயங்கியல் முறை மாறவே இல்லையா?" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
தான் படும் இந்த அவலத்தை, இந்த
வேதனையை, இந்த ஏக்கம் நிறைந்த பித்துப் பிடித்த நிலையை வெளியே காட்டக் கூடாது என்று
அவள் எவ்வளவு தூரம் பிரயத்தனம் செய்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவளது காதலின் ஆழம்
அவளுக்கே வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
அவள் மெதுவாக எழுந்து மேல்மாடத்துக்கு
வந்தாள்.
வெளியே திருவாரூர் நகரம் தூங்கிக்
கொண்டிருந்தது. தூரத்தில் மயிலாடுதுறை சாலையில் ஏதோ ஒரு சரக்குந்து சத்தமிட்டபடி கடந்து
சென்றது கேட்டது. காற்று அவள் கூந்தலைக் கலைத்தது.
அவள் அலைபேசியைக் கையில் எடுத்தாள்.
அவன் எண்ணைத் தட்டினாள்.
"வேண்டாம்டி. அவர் தூங்குவார்."
என்று அறிவு சொன்னது. "இல்லை, எனக்கு இப்பவே அவர்கிட்ட பேசணும்." என்று இதயம்
கத்தியது.
மறைத்து மறைத்துச் சலித்துப்
போன மனது, இனிமேலும் இந்த நாடகத்தை நடத்த முடியாது என்று அடம் பிடித்து இழுத்தது.
அழைத்தாள்.
அழைப்பொலி பூரண அமைதியில் ஒலித்தது.
நான்காவது அழைப்போலியில் அழைப்பு
ஏற்கப்பட்டது.
"ஹலோ!" அவனின் குரல்.
தூக்கம் கலந்த, சற்றே பிசிறடித்த குரல்.
அவளால் உடனடியாகப் பேச முடியவில்லை.
தொண்டையில் ஏதோ அடைத்தது.
"ஹலோ? ஏய்? என்னடி ஆச்சு?
இந்த நேரத்துல கூப்பிட்டிருக்க? உடம்புக்கு ஏதாவது முடியலையா? எதாச்சும் பேசு?"
அவனின் குரலில் சட்டென்று பதற்றம் தொற்றிக் கொண்டது. அவனது தூக்கக் கலக்கம் பறந்துபோயிருந்தது.
அவள் மூச்சை ஆழமாக இழுத்து விட்டாள்.
"என்னங்க..."
"சொல்லுடி, என்ன ஆச்சு?
ஏன் ஒரு மாதிரியா பேசுற?"
"எனக்கு... எனக்கு உங்களைப்
பாக்கணும் போல இருக்குங்க."
அப்பால் சில நொடிகள் மெளனம்.
அவன் அமைதியானான்.
"என்ன? என்ன சொல்றே?"
"ஆமாங்க. நான் உங்ககிட்ட
நிறைய பொய் சொல்லிட்டேன். நான் சந்தோஷமா இருக்கேன், எனக்கு எந்தப் பிரச்னையும்
இல்லை, நீங்க மெதுவா வாங்கன்னு ஒவ்வொரு முறையும் சொன்னதெல்லாம் பச்சைப் பொய். எனக்கு
உங்க ஞாபகமாவே இருக்கு. தினமும் ராத்திரி உங்களை நினைச்சு நினைச்சு தூங்க முடியல. அலுவலகத்துல
எல்லாரும் கேட்கும்போது சிரிச்சுட்டே நான் நல்லாத்தான் இருக்கேன்னு சொல்றேன். ஆனா உள்ளுக்குள்ள
செத்துகிட்டு இருக்கேன். இந்த நோயை, இந்த பிரிவுங்கிற வேதனையை நான் எவ்வளவு மறைக்கப்
பார்க்குறேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது ஊற்றுத்தண்ணி மாதிரி பொங்கிட்டே இருக்குங்க.
என்னால முடியலங்க!"
அவளுடைய கண்கள் தாரை தாரையாகக்
கண்ணீரைப் பொழிந்தன. இத்தனை நாட்களாகச் சேர்த்து வைத்த அத்தனை உணர்ச்சிகளும், அணை உடைந்த
வெள்ளமென வெளியேறின.
மறுமுனையில் அவனின் பெருமூச்சு
கேட்டது.
அத்துடன் மெல்லிய சிரிப்பொலி.
"ஏய் பைத்தியமே..."
என்றான் அவன். அவன் குரலில் அளவற்ற காதலும், மென்மையும் நிறைந்திருந்தன.
"சிரிக்காதீங்க! நான் இங்க
எவ்வளவு கஷ்டப்பட்ருக்கேன்னு உங்களுக்குத் தெரியாது."
"ஏய் அப்படியே மேல்மாடத்துல
இருந்து கொஞ்சம் தெருவைப் பார்க்கிறீயா?"
அவள் திடுக்கிட்டாள். "என்னது?"
"அதான் சொல்றேன்ல. அப்படியே
மாடத்துலேர்ந்து கொஞ்சம் வெளியில வந்து தெருவைப் பாருடி பைத்தியமே!"
அவள் மேல்மாடத்தின் விளிம்புக்கு
வந்து தெருவை எட்டிப் பார்த்தாள்.
கீழே, தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில்
ஒரு வாடகை மகிழ்வுந்து நின்றுகொண்டிருந்தது. அதனருகே, கையில் ஒரு சிறிய பயணப் பையுடன்
அவன் அலைபேசியைக் காதில் வைத்தபடி நின்று கொண்டிருந்தான். தலையை உயர்த்தி அவளைப் பார்த்துப்
புன்னகைத்தான்.
அவள் கை கால்கள் நடுங்கின.
"நீங்க... நீங்க எப்போ வந்தீங்க?"
"உன் பொய்யை நான் நம்புவேன்னு
நினைச்சியாடி? நான் நல்லா இருக்கேன்னு நீ செய்தி அனுப்பும் போதே எனக்குத் தெரியும்,
நீ உள்ளுக்குள்ள எவ்வளவு உடைஞ்சு போயிருக்கேன்னு. திருவாரூருக்கு மாறுதல் ஆணை இன்னைக்கு
சாயங்காலம்தான் கைக்கு வந்துச்சு. உனக்கு ஓர் ஆச்சரியம் கொடுக்கலாம்னு உடனே ஒரு வாடகை
மகிழ்வுந்தைப் பிடிச்சு இப்பதான் வந்தேன். வண்டியில இருந்து இறங்கி உனக்கு அழைக்கலாம்ன்னு
நினைக்கையில நீயே பண்ணிட்ட!"
அவளுக்குப் பேச்சு வரவில்லை.
அப்படியே சிலை போல அலைபேசியைக் காதில் வைத்தபடி நின்றாள்.
"இப்ப வெளியில வந்து கதவைத்
திறக்கப் போறியா, இல்ல நான் கீழேயே நிற்கவா?" என்றான் அவன் சிரித்துக் கொண்டே.
அவள் அலைபேசியை அணைத்துவிட்டு,
படியிறங்கி ஓடி வந்தாள். கதவின் தாழ்ப்பாளைத் திறந்தாள்.
வெளியே அவன் நின்றுகொண்டிருந்தான்.
எந்த வார்த்தைகளும் பரிமாறிக்கொள்ளப்படவில்லை.
அவள் பாய்ந்து போய் அவனைக் கட்டிக்கொண்டாள். இத்தனை நாட்களாக நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருந்த
அத்தனை ஊற்றுநீரும் அவனது தோள்களில் கண்ணீராய் நனைந்தது.
காதல் என்பது மறைக்க மறைக்கப்
பெருகும் ஊற்று நீர். அதை அடக்கி வைப்பதை விட, அன்பானவனிடம் அள்ளித் தெளிப்பதே பேரானந்தம்
என்பதை அந்த நள்ளிரவு அமைதியில் அவளது இதயம் உணர்ந்து கொண்டது!
- சூத்திரங்கள்
தொடரும்!
*****
