31 Mar 2026

ஆட்டோமொபைல் அசுரனாகும் சீனா!

டெட்ராய்ட்டை விஞ்சும் பெய்ஜிங்!

ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை, சீனக் கார்களா? அதெல்லாம் பிளாஸ்டிக் பொம்மை மாதிரி, கிளம்பும்போது ஒரு சத்தம் வரும், ஓடும்போது ஒரு சத்தம் வரும் என்று அமெரிக்க ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இன்று அந்தச் சிரிப்பு கீச்சென்ற பிரேக் சத்தமாக மாறியிருக்கிறது.

சீனா இப்போது வெறும் கார் மார்க்கெட் அல்ல, அதுதான் உலக ஆட்டோமொபைல் உலகின் பவர் ஹவுஸ்.

2000களின் ஆரம்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்குள் நுழைய ஆசைப்பட்டபோது, சீனா ஒரு கண்டிஷன் போட்டது.  நீங்கள் இங்கே கார் விற்கலாம். ஆனால், எங்கள் ஆட்களோடு சேர்ந்து ஜாயிண்ட் வென்ச்சர் ஆரம்பிக்க வேண்டும், அத்துடன் உங்கள் டெக்னாலஜியை எங்களிடம் காட்ட வேண்டும் என்பதுதான் அந்தக் கண்டிஷன்.

டெட்ராய்ட் நிறுவனங்களும் சரி, ஆள் கிடைத்தால் போதும் என்று எல்லா ரகசியங்களையும் கொட்டினார்கள். விளைவு? சீனா வித்தையை மொத்தமாகப் படித்துக் கப்பென்று பிடித்துக்கொண்டது.

அமெரிக்கர்களின் செலவில், அமெரிக்கர்களின் அறிவை வைத்து, அமெரிக்கர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கார்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டார்கள் சீனர்கள்.

போர்டு நிறுவனத்தின் சி.இ.ஓ ஜிம் ஃபார்லி கடந்த ஆறு மாதமாக ஒரு காரை ஓட்டி வருகிறார். அது போர்டு அல்ல, சீனாவின் Xiaomi SU7. எப்படியிருக்கிறது? என்று கேட்டால், அற்புதம்! இதை விட்டு இறங்கவே மனமில்லை என்கிறார்.

வெறும் 30,000 டாலர் அதன் விலை. அதாவது அமெரிக்க கார்களின் பாதி விலை. ஆனால் பெர்ஃபார்மென்ஸ்? எகிறுகிறது. உள்ளே போனால் ஒரு பெரிய டச் ஸ்கிரீன். காரில் அமர்ந்து கொண்டே வீட்டின் லைட்டை ஆஃப் செய்யலாம். கூடவே ஒரு ஏஐ  அசிஸ்டெண்ட். மொத்தத்தில் அது கார் அல்ல, சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்!

சீன அரசாங்கம் ஒரு காருக்கு 10,000 டாலர் வரை சலுகை கொடுக்கிறது. இதனால் அங்கே உற்பத்தி எக்கச்சக்கமாகி, இப்போது உலகச் சந்தையை நோக்கி அந்தக் கார்கள் பாயத் தொடங்கி விட்டன. வியட்நாம் முதல் லத்தீன் அமெரிக்கா வரை சீனக் கார்கள் தான் ராஜபாட்டை நடத்துகின்றன.

இப்போது விசயத்திற்கு வருவோம். இன்றைய கார்கள் வெறும் இரும்புப் பெட்டிகள் அல்ல. அவை ரோலிங் டேட்டா சென்டர்கள். அவற்றில் கேமராக்கள், மைக்ரோஃபோன்கள், ஜி.பி.எஸ் எல்லாம் உண்டு.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஆகவே, கார்கள் என்றால் இனி என்ன நடக்கும்?

இது ஒரு கற்பனை போலத் தெரிந்தாலும் யோசிக்க வேண்டிய விசயம்தான். அதாகப்பட்டது, சீன மென்பொருளில் ஓடும் லட்சக்கணக்கான கார்கள் அமெரிக்கச் சாலையில் இருக்கும்போது, பெய்ஜிங்கில் யாரோ ஒரு ஆள் ஒரு பட்டனை அழுத்தினால் அத்தனை கார்களும் ஒரே நேரத்தில் செயலிழந்து நின்றால் என்னவாகும்?நிச்சயமாக இது ஒரு த்ரில்லர் நாவலின் க்ளைமாக்ஸ்தான்.

இந்த மாதம் டிரம்ப் சீனாவுக்குப் போகிறார். அவர் கையில் இருக்கும் அஸ்திரம் என்னவென்றால், நீங்கள் அமெரிக்காவில் கார் விற்க வேண்டுமா? தாராளமாக வாருங்கள். ஆனால், எங்கள் ஊரில் தொழிற்சாலை கட்டுங்கள். எங்கள் ஆட்களுக்கு வேலை கொடுங்கள். 25 வருஷத்துக்கு முன்னாடி நீங்கள் செய்த அதே ஜாயிண்ட் வென்ச்சர் வித்தையை இப்போது நாங்கள் செய்யப் போகிறோம், என்பதுதான். என்ன ஒரு காலம் செய்த கோலம்?!

டெக்னாலஜி என்பது ஒரு இருபுறமும் கூர்மையான கத்தி. அன்று அமெரிக்கா சீனாவுக்குக் கொடுத்தது, இன்று சுழன்று வந்து அமெரிக்காவையே மிரட்டுகிறது.

இந்த கார் யுத்தத்தில் கடைசியில் ஜெயிக்கப்போவது டாலரா அல்லது யுவானா? எனக்கென்னவோ சீனாவைப் பீட் செய்வது கஷ்டம் என்றுதான் தோன்றுகிறது. காரணம் என்ன என்கிறீர்களா? அந்த டெட் சீப் ரேட்தான்.

*****

டிரம்ப்பின் வார் ரூம் டைரி (புள்ளிவிவரப் பொரியல்)

டிரம்ப்பின் வார் ரூம் டைரி (புள்ளிவிவரப் பொரியல்)

அமெரிக்கா இனிமேல் ஊர் ஊராகப் போய் ஜனநாயகம் என்கிற பெயரில் சாம்பார் ஊற்றப்போவதில்லை. நாங்கள் வருவோம், அடிப்போம், கிளம்புவோம் - இதுதான் டொனால்ட் டிரம்பின் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட்.

வரலாறு ஒரு விசித்திரமான சுழற்சி. 1979 இல் தெஹ்ரானில் அமெரிக்கத் தூதரகத்தை ஈரான் பிடித்துக்கொண்டு 444 நாட்கள் ஆட்டம் காட்டியபோதே, இந்த யுத்தம் தொடங்கிவிட்டது என்கிறார்கள். இடையில் பெய்ரூட் குண்டுவெடிப்பு, கோபார் டவர்ஸ் என ஏகப்பட்ட ரத்த சரித்திரம். கடைசியாக 2023 அக்டோபர் 7 இல் ஹமாஸ் செய்த அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்ததும் இதே ஈரான் தான் என்பது ஓப்பன் சீக்ரெட் என்று இந்தப் போருக்கான காரணங்களை விளக்குவோர்கள் இருக்கிறார்கள்.

டிரம்ப் இப்போது செய்வது புது யுத்தத்தை ஆரம்பிப்பதல்ல.  47 வருடங்களாக இழுத்துக்கொண்டிருந்த ஒரு தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்ற ஒரு போர் பார்வையும் இருக்கிறது.

நாங்களும் ஈராக், ஆப்கானிஸ்தான் என்று போய் செருப்படி பட்டு வந்த தலைமுறைதான். எங்களுக்குத் தெரியும், அங்கே போய் உட்கார்ந்துகொண்டு அவர்களுக்குக் குடித்தனம் நடத்தச் சொல்லிக் கொடுப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று இப்போதைய ஈரான் – அமெரிக்க போர் குறித்து புலம்பும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். இருப்பினும் டிரம்பின் கோட்பாடுகள் வேறு விதமானவை. அவையாவன,

1.  அமெரிக்காவின் லாபம் என்ன என்று பார்.

2.  பேசிப் பார்.

3.  பேச்சு கேட்கவில்லை என்றால், தலைசுற்றுகிற மாதிரி ஒரு அடி கொடுத்துவிட்டு, அடுத்த பிளைட்டைப் பிடித்து ஊருக்குத் திரும்பு.

டிரம்பின் பாலிசி தெளிவானது: ஈரானின் அயாத்துல்லாவையும் அவரது ஆட்களையும் காலி செய்துவிட்டு, இனி உங்கள் இஷ்டம், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் குடும்பம் நடத்துங்கள் என்று சொல்லிவிட்டு வந்துவிடுவது. அங்கே போய் அவர்களுக்கு அமெரிக்க அரசியல் சாசனத்தை டியூஷன் எடுக்க டிரம்ப் தயாராக இல்லை.

இந்தப் போரில் அன்று போல் இப்போது ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பத் தேவையில்லை. குறி தப்பாத ஆயுதங்கள், கம்ப்யூட்டரிலேயே நாட்டை முடக்குவது, காபி குடித்துக்கொண்டே ரிமோட்டில் யுத்தம் செய்வது என்று ஏகப்பட்ட புது ஐட்டங்களோடு போர் முறை அப்டேட்டாகி இருக்கிறது.

தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால், இனிமேல் அமெரிக்க வீரர்கள் அந்நிய மண்ணில் குடியிருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த வகையில் வெனிசுலா முதல் ஈரான் வரை டிரம்ப் போட்டிருக்கும் ஸ்கெட்ச் ஒன்றுதான். பொருளாதாரத் தடை. வர்த்தக அழுத்தம், அப்புறம் மீறினால் அதிரடித் தாக்குதல். அமெரிக்கா பர்ஸ்ட், மற்றதெல்லாம் நெக்ஸ்ட் என்பது இதன் பாலிஸ் பேக்ரவுண்ட்.

இருந்தாலும், அமெரிக்காவின் பழைய போர் கணக்குகளை நோண்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் சுமார் 8 டிரில்லியன் டாலர்களை அமெரிக்கா இழந்திருக்கிறது. இந்த எட்டு டிரில்லியன் என்பதற்கு 8 போட்டுவிட்டு பின்னால் 12 சைபர்களைப் போட்டுக் கொள்ளுங்கள். அத்துடன் 7,000க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். கடைசியில் நடந்தது என்னவோ, பிக்பாஸ் வீட்டில் நடப்பது போல ஒரு குழப்பமான கிளைமாக்ஸ்.

மாறி விட்ட போர் சூழ்நிலையில் இப்போதைய ட்ரோன் தாக்குதல் வித்தியாசமானது. ஈரானின் கடற்படையை நிலைகுலையச் செய்ய இப்போது சுவர்ம் எனும் தொழில்நுட்பம் தயார். நூற்றுக்கணக்கான குட்டி ட்ரோன்கள் ஒரே நேரத்தில் தேனீக்கள் போலத் தாக்கும். ஒரு பைலட் கூடச் சாகத் தேவையில்லை.

அத்துடன் ஈரானின் அணுமின் நிலையங்களை ஸ்டக்ஸ்நெட் பாணியில் கம்ப்யூட்டர் வைரஸ் மூலமே முடக்க முடியும். ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் ஒரு நாட்டின் பவரை ஆஃப் செய்வது இதுதான்.

மேலும், பழைய காலத்தில் ஒரு பீரங்கி குண்டு போட்டால் பக்கத்து வீட்டுத் தோசைக் கல்லும் உடையும். இப்போதைய ஏவுகணைகள் வெடிக்காது, கத்திகள் போல விரிந்து, காரில் செல்லும் குறிப்பிட்ட நபரை மட்டும் ஸ்லைஸ் செய்யும்.

இன்னொன்றையும் இவ்விடம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அது என்னவென்றால், டிரம்பின் மிகப்பெரிய ஆயுதம் துப்பாக்கி அல்ல, டாரிப் எனப்படும் இறக்குமதி வரி.

எங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? உங்கள் நாட்டு எண்ணெய்க்கு 100 சதவீத வரி. உங்கள் வங்கிக் கணக்குகள் எல்லாம் ப்ரீஸ். டிரம்பின் பாலிசி இப்போது இதுதான்.

டிரம்ப் அப்படிச் செய்வதால், அமெரிக்க ராணுவம் உள்ளே நுழைவதற்கு முன்பே அந்த நாட்டின் பொருளாதாரம் வெண்டிலேட்டருக்குப் போய்விடும். இதுதான் இன்றைய நவீன யுத்தம்.

ஆக, இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், டெக்னாலஜி மூலம் அச்சுறுத்தலை அழிப்பது, மின்னல் வேகத் தாக்குதல் நடத்துவது, வேலை முடிந்ததும் டாடா காட்டிவிட்டுத் திரும்புவது என்பதாக இருக்கிறது இன்றைய அமெரிக்க போர் நுட்பம்.

எனவே, உலகம் இப்போது ஒரு பெரிய வீடியோ கேம் போல மாறிவிட்டது. வாஷிங்டனில் உட்கார்ந்து கொண்டு ஒரு பட்டனை அழுத்தினால், தெஹ்ரானில் ஒரு மிஸைல் தளம் காலியாகும். டிரம்ப் விரும்புவது இந்த கிளீன் யுத்தத்தைத்தான்.

இதில் மனிதாபிமானம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அது அவுட் ஆஃப் சிலபஸ்!

ஆக, விஷயம் சீரியஸாகிவிட்டது. டிரம்ப் இப்போது ஒரு செஸ் பிளேயர் போல காய்களை நகர்த்துகிறார். ஒரு பக்கம் ஈரான், இன்னொரு பக்கம் வெனிசுலா. இரண்டுமே வெவ்வேறு விதமான கேம்கள்.

அதே நேரத்தில் அமெரிக்கா அடித்துவிட்டு டாடா காட்டிவிட்டுப் போய்விடலாம். ஆனால், ஈரான் சும்மா இருக்குமா? அயாத்துல்லாக்களின் பாணி வேறு.

ஹிஸ்புல்லா மற்றும் ஹூதிகள் ஈரானின் போர் தந்திரர்கள். இவர்கள் ஈரானின் ரிமோட் கண்ட்ரோல் படைகள். அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீதோ அல்லது செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதோ மிஸைல் மழை பொழிய வைப்பார்கள். இது ஒரு ஸ்லோ பாய்சன் போல. மெல்ல மெல்ல அமெரிக்காவின் நட்பு நாடுகளை நச்சரிப்பதுதான் ஈரானின் மாஸ்டர் பிளான்.

வெனிசுலாவில் டிரம்ப் விளையாடியது ஒரு எகனாமிக் வீடியோ கேம். அங்கே ராணுவத்தை அனுப்ப வேண்டிய அவசியமே இல்லாமல், அந்த நாட்டு எண்ணெய்க்கு சீல் வைத்து, ஒரு சொட்டு பெட்ரோல் கூட வெளியே வராமல் தடுத்தால், அந்த நாட்டு கரன்சி டிஷ்யூ பேப்பர் விலைக்குப் போய்விடும். மக்கள் பசியில் வீதிக்கு வரும்போது, அரசாங்கம் தானாகவே சரண்டர் ஆகும். இதுதான் ரத்தம் சிந்தாத ரணகளம்.

எல்லாவற்றிற்கும் மத்தியில் இனிமேல் வார் ரூமில் மேப் கிடையாது. எல்லாம் மல்டி டச் ஸ்கிரீன்கள் தான். “சிஸ்டம்! ஈரானின் 47 ஏவுகணை தளங்களை லாக் செய்”, இதுதான் இன்றைய கமாண்டர் கொடுக்கும் ஆர்டர்.

செயற்கை நுண்ணறிவுதான் அடுத்த டார்கெட்டை முடிவு செய்யும். மனிதர்கள் வெறும் கன்ஃபார்ம் பட்டனை மட்டும் அழுத்தினால் போதும். தப்பு நடந்தால் அது கம்ப்யூட்டர் எரர் என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்!

டிரம்பின் இந்த ஹிட் அண்ட் ரன் பாலிசி ஜெயிக்க வேண்டுமானால், அமெரிக்காவுக்கு உள்ளே யாரும் கேள்வி கேட்கக் கூடாது. ஆனால், இப்போது மக்கள் ‘நோகிங்ஸ்’ என்று டிரம்புக்கு எதிராகப் பேரணி நடத்தவும், போராடவும் தொடங்கி விட்டார்கள்.

பென்டகன் அதிகாரிகள் டிரம்பின் ஹிட் அன்ட் ரன் திட்டத்தைப் பார்த்து நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே கிளம்பி வந்துவிட்டால், அங்கே மீண்டும் தீவிரவாதம் வளராதா, என்பதுதான் அவர்களின் மில்லியன் டாலர் கேள்வி.

உலகம் அமைதியாகுமா அல்லது இன்னும் அதிருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அமெரிக்காவின் இந்த புதிய ஆட்டம் வெறும் உணர்ச்சிவசப்பட்ட முடிவல்ல. அதன் பின்னால் ஒரு பெரிய கால்குலேட்டர் இருக்கிறது. ரத்தக் கறை படியாத ஒரு டிஜிட்டல் யுத்தத்தின் ப்ளூபிரிண்ட் இது.

வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று நம் முன்னோர்கள் எப்போதோ சொல்லி விட்டார்கள். அது கிணறுகளுக்கும் பொருந்துகிறது, அதாவது பெட்ரோல் கிணறுகளுக்கு. அமெரிக்க நாட்டாமையில் அதிர்ந்து கொண்டிருக்கிறது உலகம்.

*****

30 Mar 2026

வலி – ஒரு கடிகாரக் கொடுமை!

வலி – ஒரு கடிகாரக் கொடுமை!

வலியைப் பற்றிப் பேசும் போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும். ஆனால், மனிதன் பரிணாம வளர்ச்சியில் தப்பிப் பிழைத்ததே இந்தப் பெய்ன் கொடுத்த அலாரத்தால்தான்.

வலிக்கும் போது, மூளைக்கு ஓர் எலக்ட்ரிக்கல் சிக்னல் போகிறது. இதற்கு மேல் தாங்க முடியாது என்று சினாப்ஸ் வழியே ஒரு மெசேஜ். இது பிஸியாலஜி. ஆனால், இதே வலியைத் தமிழன் எப்படித் ஹேண்டில் செய்திருக்கிறான் தெரியுமா?

சங்க இலக்கியத்தில் தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் வலியைப் பசலை என்கிறார்கள். இது ஒரு விசித்திரமான ஸ்கின் டிசீஸ் கிடையாது, அது ஒரு சைக்கோசோமாடிக் வலி.

இங்கே வலி என்பது ஒரு தனிமை. தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நேரும் கோடுமை. ஒரு நியூட்ரினோ துகள் போல எவராலும் உணர முடியாத நுணுக்கமான வலி. சங்கப் புலவர்கள் வலியைப் பிசையத் தெரிந்தவர்கள்.

குறுந்தொகையில் பார்த்தீர்களானால், காமம் கடும் பகல் செய்தே என்ற வரியை வலிக்காமல் உங்களால் கடக்க முடியாது.  அதாவது காதல் என்பது மதிய வெயிலைப் போலச் சுடுகிறதாம். ஏர்கண்டிஷன் இல்லாத காலத்தில் இதைவிட ஒரு மெட்டபார் சொல்ல முடியாது.

சினிமாவில் சும்மா இருப்பார்களா? சினிமாவுக்கு வரும் போது அது கொஞ்சம் கமர்ஷியல் ஆகிறது.

கண்ணதாசன் ஒரு ரசவாதி. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா என்பார். இங்கே துரோகத்தால் வரும் வலியை ஒரு தத்துவமாக மாற்றிவிடுவார். கர்ணன் படத்தில் அந்தப் பாடலைக் கேட்கும் போது, நம் முதுகில் அம்பு தைப்பது போல ஒரு சென்சேஷன் வரும் பாருங்கள், அதுதான் கவிதையின் மூலமாகவே கடத்தப்படும் வலி.

இன்றைய ஒய் திஸ் கொலவெறி காலத்தில் கூட, கண்ணான கண்ணே, என்று இமான் இசையில் வரும்போது, அந்தத் தந்தை, மகள் பாசத்தின் வலி ஒரு ஸ்லோ பாய்சன் போல ரத்தத்தில் கலக்கிறது.

இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும்படி வலியை மறந்து சிரிக்க வைத்ததுதான் வடிவேலுவின், வலிக்குது அழுதுடுவேன் என்ற வசனம். இது பெய்ன் என்டர்டெய்ன் ஆன இடம்.

இப்போது கொஞ்சம் அறிவியலுக்கு வருவோம். இது ஒரு பெரிய நியூரோ சயின்ஸ் டாபிக். அது வலியை எப்படி ஹேண்டில் செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

வலி என்பது வெறும் உணர்ச்சியல்ல, அது ஒரு டைம் மெஷின். அடிபட்டால் வலிக்கும், சரி. ஆனால் அந்த வலி 3 மாதங்களுக்கு மேல் நீடித்தால் அதை குரோனிக் பெய்ன் என்கிறது அறிவியல். கூடவே போனஸாக டிப்ரஷன், தூக்கமின்மை, கவலை எல்லாம் வந்து ஒட்டிக்கொள்ளும்.

இது ஏன் நடக்கிறது?

நம்மில் பலருக்கு ராத்திரியில் வலி அதிகமாகும். பகலில் பிஸியாக இருப்பதால் தெரிவதில்லை என்று நாம் நினைப்போம். ஆனால் பிசிக்ஸ் ரீதியாக விஷயம் வேறு.

நம் மூளையின் நடுவே ஹைப்போதாலமஸ் பகுதியில் ஒரு மாஸ்டர் கடிகாரம் இருக்கிறது. இது ஒரு விசித்திரமான ஒயரிங் மூலம் முதுகெலும்புக்கு சிக்னல் அனுப்புகிறது.

பகலில் இந்த சிக்னல் வலியைத் தணிக்கும் அனல்ஜிசிக் சிஸ்டத்தை ஆக்டிவேட் செய்கிறது. இரவில் இந்த சிஸ்டம் தூங்கிவிடுகிறது. அதனால் நரம்புகள் வலியை அப்படியே மூளைக்கு கடத்துகின்றன.

அதாவது, வலி என்பது வெளியே இருந்து வரும் சிக்னல் மட்டுமல்ல, நம் மூளை இப்போது வலிக்கலாம் என்று கேட் திறந்துவிடும் ஒரு ஏற்பாடு! இதைப் புரிந்துகொண்டால், பெயின் கில்லர் மாத்திரைகளை எந்த நேரத்தில் போடவேண்டும் என்கிற கணக்கு மாறும்.

அடுத்தது வலி நீடிக்கும்போது மூளையின் ஹிப்போகாம்பஸ் என்ன ஆகிறது என்று பார்த்தார்கள். ஆச்சரியமாக, ஹிப்போகாம்பஸ் கொஞ்சம் வீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கிறது. இது ஒரு அடாப்டிவ் நிலை. மூளை வலியை சமாளிக்க தன்னைத் தயார் செய்கிறது.

வலி தொடர்ந்தால், மூளையிலுள்ள மைக்ரோகிளியாசெல்கள் ஓவர் ஆக்டிவ் ஆகி, ஹிப்போகாம்பஸைத் தின்ன ஆரம்பிக்கின்றன. மெல்ல மெல்ல அந்தப் பகுதி சுருங்குகிறது.

வலி ஒரு பக்கம் இருக்க, கூடவே டிப்ரஷனும், அறிவுத்திறன் குறைபாடும் கைகோர்த்துக்கொண்டு வருகின்றன. இது வெறும் மனக்கவலை அல்ல, மூளையின் சர்க்யூட் மாற்றியமைக்கப்படுவதால் வரும் கோளாறு.

வலியை இனிமேல் வெறும் சென்சாராகப் பார்க்காமல், ஒரு டைம் ஸ்ட்ரக்சர்ட் மூளை நிலையாகப் பார்க்க வேண்டும். வலியைத் தணிக்க மாத்திரை மட்டும் போதாது, மூளையின் கடிகாரத்தையும் கொஞ்சம் சரி செய்ய வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

ஆக அறிவியல் வளர்கிறது. ஆனால் வலி மட்டும் இன்னும் பழைய பாணியிலேயே நம்மை வதைத்துக் கொண்டிருக்கிறது!

*****

ஹோர்முஸ் எபெக்ட் – ஒரு சமையலறை அட்டாக்!

ஹோர்முஸ் எபெக்ட் – ஒரு சமையலறை அட்டாக்!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடக்கும் சண்டையை ஏதோ ஒரு ஹாலிவுட் ஆக்சன் படம் போல சோபா நுனியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், அந்தப் படத்தின் கிளைமாக்ஸில் நம் வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

பெட்ரோல், டீசல், எரிவாயு என ஒவ்வொன்றாக இனி ஏறப் போகும் விலையைப் பார்க்கையில் போரை நிறுத்துவதுதான் விலை மலிவான விஷயமாக இருக்கும் போலிருக்கிறது. எரிபொருள் சிக்கனம் என்பது போய், இப்போது மூச்சு விடுவதைத் தவிர மற்ற எல்லாச் செயல்களிலும் சிக்கனம் தேவைப்படும் காலமாகி விட்டது.

இந்தப் போரைப் பற்றி அப்பாவித்தனமாகச் சொல்லப்போனால், இது ஏவுகணைகளின் பரிமாற்றம். டெக்னிக்கலாகச் சொன்னால், இது ஒரு சப்ளை செயின் தற்கொலை. எப்படி என்கிறீர்களா? ஈரானில் ஒரு வெடி விழுந்தால், ஏன் இங்கே என் சமையலறையில் சிலிண்டர் எரிய மறுக்கிறது?

விசயம் இத்தோடு முடியப் போவதில்லை. இன்னும் கூடுதல் விசயங்களும் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

விசயம் ஒன்று என்னவென்றால், பிளாஸ்டிக் தண்ணீர் கேன் விலை ஏறப்போகிறது. ஏன்? பிளாஸ்டிக் என்பது அடிப்படையில் ஹைட்ரோகார்பன். கச்சா எண்ணெய் விலை ஏறினால், அந்த 20 லிட்டர் கேன் விலையும் ராக்கெட் வேகத்தில் ஏறும். தாகம் எடுக்கும்போது பெட்ரோல் குடிப்பது மலிவாக இருந்தாலும் ஆச்சரியமில்லை. நாம் குடிநீரை அடிபம்பு மற்றும் கிணற்றிலிருந்து பெட் பாட்டிலுக்கும், கேன் வாட்டருக்கும் மாற்றியதன் விளைவு இது.

விசயம் இரண்டு என்னவென்றால், உணவைச் சமைக்கத்தான் கஷ்டம் என்று பார்த்தால், விளைவிக்கவே சிக்கல். உரம் தயாரிக்கத் தேவைப்படும் எல்.என்.ஜி அரபு நாடுகளிலிருந்து வர வேண்டும். அந்த ஹோர்முஸ் நீர்ச்சந்தி ஒரு குறுகிய வாசல். ஈரான் அதை மூடினால், இந்திய விவசாயம் பபரிங் மோடிற்குப் போய்விடும். நாம் இயற்கை விவசாயத்திலிருந்து ரசாயன மோடிற்கு மாறியதற்குக் கொடுக்கும் விலை இது.

விசயம் மூன்று என்னவென்றால், பங்குச் சந்தை சரிவது ஒரு பக்கம் என்றால், அந்நிய முதலீட்டாளர்கள் எஸ்கேப் கீ-யை அழுத்திவிட்டு ஓடுகிறார்கள். டாலர் எகிறுகிறது, ரூபாய் மூச்சு வாங்குகிறது. விளைவு? பணவீக்கம். நாம் தற்சார்பை விட அந்நிய முதலீட்டை அதிகம் நம்பியதன் விளைவு இது.

தற்சமயம் அங்கே அந்த நீர்ச்சந்தியைச் சுற்றி என்ன நடக்கிறது என்றால், இஸ்ரேல் ஈரானின் எண்ணெய் வயல்களைத் தாக்குகிறது. பதிலுக்கு ஈரான் கத்தாரின் எரிவாயு தளங்களைச் சிதைக்கிறது. அமெரிக்கா மின்சார நிலையங்களைத் தூக்குவோம் என்கிறது. ஈரான் நீர்ச்சந்தியை மூடுவோம் என்கிறது. இது ஒரு முடிவில்லாத லூப் ஆகி விட்டது. ரிப்பீட் மோடில் எல்லாம் திரும்பதிரும்ப ஒரே மாதிரியாக நடக்கன்றன. இப்படி நடந்து கொண்டே இருந்தால், சிதைந்த எண்ணெய் வயல்களை ரீபூட் செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும். ஆக, இந்த ரிப்பீட் மோடுக்கு ஓர் என்ட் கார்டு அவசியம்.

இந்த வளைகுடா போரால் நிஜத்தில் மட்டுமல்லாது, உலக மக்கள் எல்லாருடைய அன்றாட வாழ்க்கையிலும் சேர்த்து கடும் சூறாவளியில் வாழ்வாதாரம் எனும் கப்பல் சிக்கியிருக்கிறது. கேப்டன்கள் ஆகிய ஆட்சியாளர்கள் லாவகமாகத் திருப்பினால்தான் கரை சேர முடியும். இல்லையென்றால், நம் பட்ஜெட் சிஸ்டம் கிராஷ் ஆகிவிடும்.

*****

29 Mar 2026

தூக்கம் – மூளையின் டீடாக்ஸ்!

தூக்கம் – மூளையின் டீடாக்ஸ்!

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

அந்தத் தூக்கமும் அமைதியும் நானால்

உன்னைத் தொடர்ந்திருப்பேன்

என்றும் துணையிருப்பேன்

ஆலயமணி படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் இவை. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம்பெற்ற இந்தப் பாடலின் ராகம் கூட நீலம்பரிதான். தூக்கத்திற்கு உகந்த ராகம்.

கண்ணதாசனின் மேற்படி வரிகள் ஷேக்ஸ்பியர் தழுவல். தத்துவத்தைக் கவித்துவமாக வெளிப்படுத்துவதில் ஷேக்ஸ்பியரை அடித்துக் கொள்ள முடியாது. அவர் தூக்கத்தைச் சாவுக்கும், அமைதிக்கும் ஒப்பிட்டு கூட நிறைய எழுதியிருக்கிறார்.

திருவள்ளவரும்,

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.          (குறள், 339)

என்று எழுதியிருக்கிறார்.

ஆனால், நவீன விஞ்ஞானம் சொல்வது வேறு. நாம் குறட்டை விட்டுத் தூங்கும்போது, நம் மூளைச் செல்கள் ஒன்றும் ஓய்வெடுப்பதில்லை. சொல்லப்போனால், அவை அப்போதும் செம பிஸி.

பகலில் வேலை செய்த களைப்பில் மூளையில் சேர்ந்த நச்சுப் பொருட்களை இரவு நேரத்தில் மூளை ஒரு திரவத்தைக் கொண்டு வாஷ் செய்கிறது. ஒரு பெரிய பார்ட்டி முடிந்த பிறகு, ஹாலைப் பெருக்கிச் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களைப் போல நம் மூளை இரவு முழுக்க வேலை செய்கிறது. இதை டீடாக்ஸ் என்கிறார்கள்.

மூளைக்கும் தூக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்வதற்காக, ஓர் ஆய்வு செய்தார்கள். இதற்காக இரண்டு குரூப்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அவர்களிடம் 20 அந்நியர்களின் முகங்களையும் பெயர்களையும் காண்பித்தார்கள். ஒரு குரூப்பை நன்றாகத் தூங்க வைத்தார்கள். இன்னொரு குரூப் விழித்துக்கொண்டே இருந்தது.

மறுநாள் காலையில் செக் செய்தபோது, நன்றாகத் தூங்கிய குரூப் மற்றவர்களை விட 12 சதவிதம் அதிகத் துல்லியமாகப் பெயர்களைச் சொன்னார்கள்.

இதில் மேட்டர் இதுதான். நாம் தூங்கும்போது, அந்த கடல் குதிரை வடிவ ஹிப்போகாம்பஸ் பகலில் நாம் சேகரித்த குப்பையான தகவல்களில் எதைச் சேமிக்க வேண்டும், எதை டெலீட் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறது. பிறகு, அந்தத் தகவல்களை மூளையின் பாதுகாப்பான லாக்கரான கார்டெக்ஸ் பகுதிக்குப் பார்சல் பண்ணி அனுப்பி வைக்கிறது.

இது பற்றி ஒரு சுவாரஸ்யமான தியரி இருக்கிறது. நாம் தூங்கும்போது மூளை அலைகள் மெதுவாக மாறும். அந்தச் சமயத்தில் மூளைக்குள் சின்னச் சின்ன மின்மினிக் கீற்றுகள் போல மின்சாரம் பாயும். இதற்கு ஸ்லீப் ஸ்பின்டில்கள் என்று பெயர்.

இது என்ன செய்கிறது தெரியுமா? நம் மூளையின் ஷார்ட் டெர்ம் மெமரி ஷெல்ஃபுகளைக் காலி செய்துவிட்டு, முக்கியமான கோப்புகளை லாங் டெர்ம் மெமரிக்கு மாற்றுகிறது. இதனால் காலையில் எழுந்ததும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள மூளையில் ப்ரீயான ஸ்பேஸ் கிடைக்கிறது.

கனவுத் தூக்கம் இன்னும் விசித்திரமானது. ஒரு சோதனையில், சிலரிடம் மிகவும் வருத்தப்படக்கூடிய புகைப்படங்களைக் காண்பித்தார்கள். தூங்கிய பிறகு மீண்டும் அதே படங்களைப் பார்த்தபோது, அவர்களுக்கு அந்தப் படங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லையாம்.

ஏன் என்கிறீர்களா?

தூக்கத்தில் மூளை ஒரு ஓவர்நைட் தெரபி செய்கிறது. ஒரு சம்பவத்தின் நினைவை மட்டும் வைத்துக்கொண்டு, அதோடு ஒட்டியிருக்கும் வலி அல்லது பயத்தை மட்டும் கத்தரித்து எடுத்துவிடுகிறது. அதனால்தான் தூங்கி எழுந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று முன்னோர்கள் சொன்னார்கள் போல!

ஐந்து மணி நேரத்திற்குக் குறைவாகத் தூங்குபவர்களுக்குப் பொய் நினைவுகள் உருவாகும் வாய்ப்பு அதிகமாம். அதாவது நடக்காத ஒரு விஷயத்தைத் தானாகவே கற்பனை செய்து நினைவு என்று மூளை சேமித்துவிடும். எட்டு மணித் தூக்கம் அவசியம். அப்போதுதான் மூளை வேலையில் கில்லியாக இருக்கும். நீங்கள் அறிவார்ந்த வேலையில் அதிகம் ஈடுபட்டால் பத்து மணி நேரம் கூட தூங்கலாம்.

அடுத்த முறை யாராவது உங்களைப் பார்த்து, என்ன எப்பப்பாரு தூங்கிக்கிட்டே இருக்கே? என்று கேட்டால், நான் தூங்கலை, மூளையில மெமரி ஹவுஸ்கீப்பிங் பண்ணிக்கிட்டு இருக்கேன், என்று தைரியமாகச் சொல்லுங்கள்! தட் இஸ் பிரைன் டீடாக்ஸ். எஸ் நீங்கள் டீடாக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

அதனால்தான் ராமாயண யுத்தக் காண்டத்தில் எது நீதி என்பது குறித்து இராவணனுக்கு இல்லாத தெளிவு, கும்பகர்ணனுக்கு இருந்தது போலும். ஸோ கும்பகர்ணன் அதிகம் தூங்கி நன்றாகவே பிரைன் டீடாக்ஸ் செய்திருக்கிறார்.

*****

பணம் + பிரியாணி = ஓட்டு – பார்முலாக்களின் வரலாறு!

பணம் + பிரியாணி = ஓட்டு – பார்முலாக்களின் வரலாறு!

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தேர்தல் என்பது ஒரு அரசியல் நிகழ்வு, ஆனால் தமிழகத்தில் அது ஒரு திருவிழா விற்பனை. ஜனநாயகத் திருவிழா என்று இதைப் புகழ்பவர்கள், இதில் புழங்கும் பணத்தைப் பார்த்தால், இதை ஜனநாயக ஏல விற்பனை என்றுதான் அழைப்பார்கள். இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என் மீது கோபப்படக் கூடாது. தொடர்ந்து கீழே படியுங்கள். உங்களுக்கே அந்த உண்மை புரியும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தேர்தல் என்பது ஓர் அரசியல் நிகழ்வு. அங்கும் அப்படி இப்படி என்று கொஞ்சம் உண்டென்றாலும், அவற்றையெல்லாம் தூக்கி ஸ்வாஹா செய்வதுதான் தமிழ்நாடு.

ஆம், தமிழ்நாட்டில் அது ஒரு ஹை டெக் மார்க்கெட்டிங் கேம்பெய்ன். டெக்னிக்கலாகச் சொன்னால், ஒரு வாக்காளரின் மனநிலையை டிஜிட்டல் முறையில் ஹேக் செய்வது. இவ்வளவு டெக்னிக்கல் நிறைந்த அவற்றைப் பார்முலாக்கள் என்று சொல்லாவிட்டால் அவை நிச்சயம் கோபித்துக் கொள்ளும். எனவே அவை பார்முலாக்கள்தான்.

அந்த வெற்றிகரமான பார்முலாக்கள் பற்றிய ஒரு ரவுண்ட். இவை கற்பனையல்ல, தமிழ்நாட்டில் நிகழ்ந்தவைதான்.

அதில் முதன்மையானது திருமங்கலம் பார்முலா.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் திருமங்கலம் பார்முலா என்பது ஒரு மைல்கல். 2009 இல் மதுரை அருகே நடந்த அந்தச் சோதனையில், இரவு ஒன்பது மணிக்கு மின்சாரம் போனால், அது மின்வாரியத்தின் தவறு அல்ல, அது பணப் பட்டுவாடாவுக்கான சிக்னல். ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் வரை போய் சேர்ந்த அந்தப் பொற்காலத்தை இப்போதும் மக்கள் சிலாகித்துப் பேசுகிறார்கள்.

அந்தப் பார்முலாவுக்கு முன்பே காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டியில் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கும் தாராள பிரபு கலாச்சாரம் தொடங்கிவிட்டது வேறு விசயம். இது ஒரு வகை பார்முலா என்றால், இதன் அடுத்த வெர்ஷனான ஆர்.கே.நகர் பார்முலா அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டது. அங்கே 20 ரூபாய் டோக்கன் என்கிற ஒரு வினோதமான கரன்சியே அறிமுகமானது. டோக்கன் கடைசியில் செல்லாமல் போனாலும், வெற்றி என்னவோ செல்லுபடியானது.

கடைசியாகத் தற்போது உருவானதுதான், எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் பகாசுர ஈரோடு கிழக்கு ஃபார்முலா. இதை பட்டி பார்முலா என்றும் அழைக்கிறார்கள். வாக்காளர்களைக் கால்நடைகளைப் போல ஒரு பந்தலில் அடைத்து வைத்து, காலை முதல் மாலை வரை பிரியாணி, சினிமா, பணம் என்று கவனிப்பதுதான் இந்த பார்முலாவின் ஸ்பெஷல். மற்ற கட்சியினர் வாக்காளர்களைப் பார்க்கவே கூடாது என்கிற இந்த மேதாவிலாசம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் இடைத்தேர்தல் பார்முலாக்கள் என்று சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. இந்த பார்முலாக்களின் பட்டி டிங்கரிங் பேட்ச் ஒர்க் பார்க்கப்பட்ட வெர்ஷன்கள்தான் பணம் + பிரியாணி = ஓட்டு எனும் ஈக்குவேசனே.

மக்கள் எப்போது இதைப் புரிந்துகொள்வார்கள் என்று கேட்பதை விட, அரசியல்வாதிகள் எப்போது இதைக் கைவிடுவார்கள் என்று கேட்பது உண்மையில் மாபெரும் ஜனநாயக நகைச்சுவை.

இதில் கொடுமை என்னவென்றால், இந்தப் பார்முலா மேலும் மேலும் அப்கிரேடாகி, இப்போது தேர்தல் தேதி வரும் வரை யாரும் வெயிட் பண்ணுவதில்லை. ஹாட்பாக்ஸ், எவர்சில்வர் அண்டா, கிரிக்கெட் பேட் என அட்வான்ஸ் கிஃப்ட்கள் வீடு தேடி வருகின்றன.

ஆனால் அறிவியல் என்ற ஒன்று இருக்கிறதே. அது என்ன சொல்கிறது?

ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்று நியூட்டன் எப்போதோ எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார். ஆனால் தமிழகத் தேர்தலில், ஒவ்வொரு நோட்டுக்கும் ஒரு ஓட்டு உண்டு என்று அதை மாற்றி எழுதி வைத்து விட்டார்கள்.

நிஜமான மக்கள் பணி என்பது ஒரு ஸ்லோ ப்ராசஸர். ஆனால் இந்தப் பார்முலாக்கள் எல்லாம் குவாண்டம் கம்ப்யூட்டிங் போல வேகமானவை. மக்கள் எப்போது ரீ பூட் ஆவார்கள்? ஒருவேளை ஆகாமலே போய் விடுவார்களா?

*****

28 Mar 2026

ஐ அம் பைன்! – ஓர் உலக மகா நடிப்பு!

ஐ அம் பைன்! – ஓர் உலக மகா நடிப்பு!

நம்மூர் கலாச்சாரத்தில் எப்படி இருக்கீங்க? என்று கேட்டால், நல்லா இருக்கேன், என்று சொல்வது ஒரு கட்டாயம்.

வேலைக்குப் போகிறோம், மெசேஜ்களுக்குப் பதில் சொல்கிறோம், மற்றவர்களைக் கவனித்துக் கொள்கிறோம். இரவு படுத்ததும் எதையும் யோசிக்கத் தெம்பில்லாமல் மொபைலைத் தேய்க்கிறோம்.

தொடர்ந்து சுழலும் வாழ்க்கையில்,

தாங்க முடியாத ஒரு கட்டத்தில்,

உடல் சொல்கிறது, எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்.

உணர்ச்சிகள் சொல்கிறது, நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்.

ஆன்மா சொல்கிறது, ப்ளீஸ், கொஞ்சம் மெதுவாக போ!

ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய ஓர் உண்மை என்னவென்றால், நாம் எல்லாவற்றையும் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. ஐயோ தாங்க முடியவில்லை என்று கத்துவது ஒன்றும் கௌரவக் குறைச்சல் அல்ல, அழுவதற்கு உரிமை உண்டு, சோர்வடைவதற்கு அனுமதி உண்டு.

விசயம் என்னவென்றால், நாம் உடைந்த மெஷின் அல்ல, ரீசார்ஜ் தேவைப்படும் ஓர் உயிரியியல் படைப்பு! அவ்வபோது ரெஸ்ட், ரிலாக்ஸ்தான் அந்த ரீசார்ஜ்.

நிஜ வாழ்க்கையில் எமோஷனல் ஓவர்லோட் என்பது ஏதோ சினிமாவில் வருவது போல தலையைப் பிடித்துக் கொண்டு கத்துவதெல்லாம் கிடையாது. அது ரொம்ப சைலண்ட்டான ஒரு வில்லன். ரெஸ்ட், ரிலாக்ஸ் இவையெல்லாம் இல்லை என்றால் அந்த வில்லனின் என்ட்ரி மற்றும் அட்ராசிட்டி தவிர்க்க முடியாதது.

நமக்கு ஓவர்லோட் இருக்கிறதா என்று நாமே செக் பண்ணிக் கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா?

ஹோட்டலில் மெனு கார்டைப் பார்த்தால், என்ன ஆர்டர் செய்வது என்று தெரியாமல் முழிப்பது, அதாவது, சிம்பிள் டிசிஷன் கூட எடுக்க முடியாது.

உருப்படியாக எதையும் செய்யாமல், சும்மா உட்கார்ந்திருந்தாலே டயர்டாக இருப்பது.

ரொம்பப் பிடித்த விஷயங்களைக் கூட, அப்புறம் பார்த்துக்கலாம் என்று தள்ளிப் போடுவது.

திடீரென்று எரிச்சல் படுவது அல்லது யாரிடமும் பேசாமல் அப்படியே ஷட் டவுன் ஆகிவிடுவது.

ஆக இதில் விசயம் என்னவென்றால், நம்மில் பல பேர் இரண்டு மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு அலைகிறோம்:

நாளைக்கு பால் வாங்கணும், கரண்ட் பில் கட்டணும், ஆபீஸ்ல அந்தப் பைலை முடிக்கணும் – இப்படி ஒரு மெண்டல் பிரசர். அத்தோடு, அந்தப் பையன் அப்படிப் பேசிட்டானே, இவங்க நம்மள தப்பா நினைப்பாங்களோ? என்பன போன்ற உணர்ச்சிப் பாரங்கள்.

ஆரம்பத்தில் சின்னதாகத் தோன்றும், ஆனால் முழு சிஸ்டத்தையும் கிராஷ் செய்துவிடும்.

இது போன்ற நேரங்களில் ஐ அம் பைன் என்றெல்லாம் பிட்டைப் போட்டுக் கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் இருக்கும் சூழ்நிலையை மாற்றுங்கள். பத்து நாட்களுக்கு தலைமறைவாக எங்காவது போனாலும் நல்லதுதான். ஒரு சின்ன ஓய்வு அல்லது ஓர் இடைவெளி அல்லது சில நாட்களுக்கு எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது போன்ற உத்திகள் உதவும். விசயம் இதுதான், ஒரே மாதிரி விசயம் ஒரே மாதிரியாகத் தொடர்ந்து வேண்டாமே. கொஞ்சம் மாற்றி மாற்றிச் சுழன்று பாருங்கள். நீங்கள் ஹேங் ஆக மாட்டீர்கள். ரெப்ரெஷாக இருப்பீர்கள்.

மற்றவர்கள் கேட்டு ஐ அம் பைன் என்று சொல்வது உண்மையாகவோ, பொய்யாகவோ எப்படியோ இருக்கலாம். நம்மிடம் நாமே அப்படி ஒரு கேள்வி கேட்டு ஐ அம் பைன் என்று சொல்லும் பதில் உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா!

*****

கூகுள் மெமரி – மூளை ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்!

கூகுள் மெமரி – மூளை ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்!

கி.மு. 370.

அந்தக் காலத்து அறிஞரான சாக்ரடீஸ் ஒரு விஷயத்தைக் கடுமையாக எதிர்த்தார்.

"இந்தக் கண்டுபிடிப்பு மனிதர்களிடம் மறதியை உண்டாக்கும். எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் பயிற்சியே இல்லாமல் போய்விடும்" என்று எச்சரித்தார்.

அவர் எதைச் சொன்னார் தெரியுமா?

எழுத்து வடிவத்தை!

அன்று 'எழுத்து' மெமரியைக் கொல்லும் என்றார்கள்.

1400களில் அச்சு இயந்திரம் வந்தபோது, "இனிமேல் மடாலயத்தில் இருப்பவர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள்" என்று கவலைப்பட்டார்கள்.

இப்போது நம் முறை.

"இணையமும், ஸ்மார்ட்போனும் நம் கவனத்தைச் சிதறடிக்கின்றன, மூளையை மழுங்கடிக்கின்றன" என்று அலறுகிறோம்.

ஓர் ஆய்வுத் தகவலின்படி, வேலை நேரத்தில் ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒருமுறை மின்னஞ்சல், சேட் என்று நம் கவனம் சிதறடிக்கப்படுகிறதாம்.

ஒரு காலேஜ் மாணவர் தன் கிளாஸ் நேரத்தில் 20 சதவீத நேரத்தை வாட்ஸ்அப் செய்வதிலும், கேம் விளையாடுவதிலும் செலவிடுகிறாராம்.

இதன் விளைவு?

2000இன் தொடக்கத்தில் 12 விநாடிகளாக இருந்த மனிதனின் கவனம் செலுத்தும் நேரம், இப்போது 8 விநாடிகளாகக் குறைந்துவிட்டது. பாவம், ஒரு தங்க மீனுக்கு கூட 9 விநாடிகள் கவனம் இருக்குமாம்!

இப்போது நாம் வெயிட்டர் எபெக்ட் என்கிற ஒரு விசயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

அதாகப்பட்டது, ஹோட்டலில் ஒரு வெயிட்டருக்கு நீங்கள் ஆர்டர் செய்த உணவை கொண்டு வந்து வைக்கும் வரை எல்லாம் ஞாபகம் இருக்கும். பில் கட்டி முடித்த அடுத்த நிமிடம், நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் அவருக்குத் தெரியாது. இதைத்தான் வெயிட்டர் எபெக்ட் என்கிறார்கள். இன்று பலரும் இந்த வெயிட்டர் எபெக்டோடேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்புறம் இந்தச் சோசியல் மீடியாக்கள் இருக்கின்றனவே. இதனால் மூளைக்கு என்ன நடக்கிறது தெரியுமா?

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உரையாடல்கள் பல நேரங்களில் அரைகுறையாகவே நிற்கின்றன. இந்த முடிவடையாத வேலைகள் நம் மூளையை ஒருவித பதற்றத்திலேயே வைத்திருக்கின்றன.

மெமரி ஹவுஸ்கீப்பிங் செய்ய மூளைக்கு ஓய்வு தேவை. ஆனால் நாம் அந்த ஓய்வு நேரத்தை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்து நிரப்புகிறோம்.

ஆக என்ன நடந்தாலும், இன்னொரு விசயத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது என்னவென்றால், அது ஓர் ஆய்வு சம்பந்தப்பட்டது.

இப்படி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

அதாகப்பட்டது, சில தகவல்களை கம்ப்யூட்டரில் டைப் செய்யச் சொன்னார்கள்.

ஒரு குரூப்பிடம் "நீங்கள் டைப் செய்தது சேவ் ஆகிவிடும்" என்றார்கள்.

இன்னொரு குரூப்பிடம் "இது டெலிட் ஆகிவிடும்" என்றார்கள்.

ரிசல்ட்?

சேவ் ஆகும் என்று தெரிந்தவர்கள் அந்தத் தகவலை ஞாபகம் வைத்துக்கொள்ளவே இல்லை. ஆனால், அந்தத் தகவல் எந்த போல்டரில் இருக்கிறது என்பதை மட்டும் கச்சிதமாக ஞாபகம் வைத்திருந்தார்கள்.

டெலிட் ஆகிவிடும் என்று தெரிந்தவர்கள் டைப் செய்ததைக் கச்சிதமாக ஞாபகம் வைத்துக் கொண்டார்கள்.

இப்போது அந்த முதல் கேஸை எடுத்துக் கொள்ளுங்கள்.

இங்கே,  மூளை இப்போது டேட்டாவை சேமிப்பதை விட, அந்த டேட்டா எங்கே இருக்கிறது என்பதைச் சேமிக்கப் பழகிவிட்டது.

இதை காக்னிட்டிவ் ஆப்லோடிங் என்கிறார்கள்.

அனைவரது மூளையும் இந்த முறையில்தான் தற்போது ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் போல இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது.

இணையத்தினால் நம் அறிவு குறைகிறதா? இல்லை என்கிறார்கள் சில நிபுணர்கள்.

தகவல்களைத் தட்டச்சு செய்து தேடுவதை விட, இணையத்தில் மேயும்போது மூளை அதிக வேலை செய்கிறது என்கிறது ஓர் ஆய்வு.

அதாகப்பட்டது, உண்மையில், சின்னச் சின்னத் தகவல்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும் வேலையை இணையத்திடம் கொடுத்துவிட்டு, மூளை இன்னும் பெரிய விஷயங்களைச் சிந்திக்க இப்போது தயாராகிவிட்டது என்றும் சொல்லலாம்.

அன்று சாக்ரடீஸ் பயந்தது நடக்கவில்லை. எழுத்து நம் அறிவை வளர்த்தது.

இன்று நாமும் இணையத்தைப் பார்த்துப் பயப்படுகிறோம்.

ஆனால் மூளை என்பது ஒரு பிளாஸ்டிக் போன்றது. நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ, அப்படி அது தன்னை மாற்றிக்கொள்ளும். அதுதான் பிரைன் பிளாஸ்ட்டிட்டி.

அடுத்த முறை ஏதோ ஒரு தகவலைத் தேட கூகுளுக்குப் போகும்போது ஒன்று மட்டும் நினைவில் இருக்கட்டும். உங்கள் மூளை சோம்பேறி ஆகவில்லை, அது அப்டேட் ஆகிக்கொண்டிருக்கிறது!

*****

27 Mar 2026

மெமரி பவர் – சில கப்சாக்களும் நிஜங்களும்!

மெமரி பவர் – சில கப்சாக்களும் நிஜங்களும்!

ஞாபகசக்தி என்றாலே நம்மூரில் சில செட் நம்பிக்கைகள் உண்டு. இருபது வயதுக்கு மேல் அறிவு மழுங்கிடும், வல்லாரை மாத்திரை சாப்பிட்டால் எல்லாம் ஞாபகம் வரும் -  இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று நினைக்கிறீர்கள்?

உலகெங்கம் நடைபெற்றுள்ள ஆய்வுகள் என்ன சொல்கின்றன தெரியுமா?

இருபதுகளில் ஷார்ட் டெர்ம் மெமரி உச்சத்தில் இருக்கும் என்பது உண்மை. ஆனால் அதற்காக முப்பது வயதில் மூளை ரிடையர் ஆகிவிடாது. தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும் நுண்ணறிவு ஒருவருக்கு 60 முதல் 70 வயதில்தான் பீக்கில் இருக்குமாம்.

இளைஞர்கள் வேகமாக யோசிக்கலாம், ஆனால் சீனியர்கள் ஷார்ட்கட்களில் ஜெயிப்பார்கள். அனுபவம் என்கிற டேட்டாபேஸ் அவர்களிடம் அதிகம். அதனால், வயதாகி விட்டது, இனிமேல் என்ன இருக்கிறது? என்பது வெறும் சோம்பேறித்தனம்.

ஞாபக சக்தியை அதிகப்படுத்துவதாக வரும் விளம்பரங்கள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிஷ் ஆயில், ஜின்கோ பிலோபா, மெமரி டேப்லெட்டுகள் என்று விளம்பரம் செய்யப்படும் எந்த மெமரி சப்ளிமெண்ட்டும் வேலை செய்வதில்லை என்று பல ஆய்வுகள் கைவிரித்துவிட்டன.

அப்புறம் எதுதான் வேலை செய்யும்?

காய்கறிகள், பழங்கள், ஆலிவ் ஆயில், மீன், முழு தானியங்கள். இதைச் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக மறதி நோய் வரும் வாய்ப்பு 35 சதவீதம் குறைகிறதாம். சும்மா மாத்திரை விழுங்குவதை விட, தட்டில் என்ன இருக்கிறது என்பதில் கவனம் தேவை.

உயர் இரத்த அழுத்தம் இருந்தால் ஜாக்கிரதை. அது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களைச் சுருக்கிவிடும். அதேபோல கொலஸ்ட்ரால் அதிகமானால் மூளையில் நச்சுப் புரதங்கள் சேரத் தொடங்கும். இதுதான் அல்சைமர் நோய்க்கு விசிட்டிங் கார்டு.

மன அழுத்தம், கவலை இருந்தால் உடனே ட்ரீட்மென்ட் எடுங்கள். ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்டிசோல் உங்கள் மூளையைத் தற்காலிகமாக ஆஃப் செய்துவிடும். இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக யோகா மற்றும் உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படும் பாரம்பரிய மருந்துகள்.

அதுமட்டுமல்ல, மூளையைக் கூர்மையாக வைத்திருக்க ஆகச்சிறந்த வழி யோகா மற்றும் உடற்பயிற்சி. வாரத்தில் மூன்று முறை உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மூளையின் ஹிப்போகாம்பஸ் அதாவது அந்த நினைவாற்றல் மையம் அப்படியே இருக்கிறது. ஆனால், சோம்பேறியாக உட்கார்ந்திருப்பவர்களுக்கு அது சுருங்கத் தொடங்குகிறது. ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் மூளை மெலிந்து போகும் அபாயம் உண்டு. எனவே, நாற்காலியை அதிகம் தேய்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கணினியில் பிரைன் கேம்ஸ் விளையாடினால் அறிவு வளரும் என்று நம்புவது ஒரு மாயை. அந்த கேம்களில் வேண்டுமானால் நீங்கள் சாம்பியன் ஆகலாம். ஆனால், அது நிஜ வாழ்க்கையில் மளிகைக் கடைக்குச் செல்லும் வழியைக் கூட ஞாபகம் வைத்திருக்க உதவாது.

மேலும் சில வழிகளும் ஞாபக ஆற்றலை வளர்க்க சொல்லப்படுகின்றன. அவற்றில் சில - புதிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள், தினசரி பேப்பர் படியுங்கள், ஒரு புதிய பயிற்சி வகுப்புக்குச் செல்லுங்கள் அல்லது யாருக்காவது தன்னார்வலராக உதவி செய்யுங்கள் என்பதெல்லாம். மூளையை பிஸியாக வைத்திருப்பவர்களுக்கு டிமென்ஷியா வரும் வாய்ப்பு மிகக் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.

ஆக, விசயம் இதுதான். 80 வயதில் ரிடையர் ஆகிவிடாதீர்கள். மூளைக்குத் தீனி போடுங்கள், உடலுக்கு வேலை கொடுங்கள். உங்கள் ஞாபக சக்தி அவ்வளவு சீக்கிரத்தில் பழுதுபட்டு விடாது.

ஆகவே, கப்சாக்களுக்கு குட்பை சொல்லுங்கள். உண்மைக்கு வெல்கம் சொல்லுங்கள்.

*****

மிஸ்ஸிங் மெமரி – அந்த மூன்று வயது வரை என்ன நடந்தது?

மிஸ்ஸிங் மெமரி – அந்த மூன்று வயது வரை என்ன நடந்தது?

நீங்கள்இப்படிச் சொல்லக் கூடும்.

எனக்கு இரண்டு வயது இருக்கும்போது காது வலி உயிர் போனது. நள்ளிரவில் என் அம்மா என்னைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியதும், அங்கே ஒரு சின்ன சர்ஜரி நடந்ததும் எனக்குத் துளி கூட நினைவில்லை. ஆனால், அடுத்து சில வருடங்கள் கழித்துப் பக்கத்து வீட்டுப் பூனை புதருக்கு அடியில் ஒளிந்திருந்தது மட்டும் ஹைடெபனிஷன் தரத்தில் ஞாபகம் இருக்கிறது.

அப்படியானால், நடுவில் இருந்த வருடங்கள் எங்கே போயின?நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணும் கதையாய் அவை எங்கே போயின?

விஞ்ஞானிகள் இதற்கு சிறுவயது மறதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மூன்று வயது வரை நம் மூளை ஒரு மெமரி கார்டு இல்லாத கேமரா போலச் செயல்படுகிறது. பதிவாகும், ஆனால் சேமிக்கப்படாது. ஏழு வயது ஆகும்போது, நம்முடைய ஆரம்பகால அந்த மூதல் மூன்றாண்டு நினைவுகள் கிட்டத்தட்ட முழுவதுமாக டெலீட் செய்யப்பட்டுவிடுகின்றன.

ஒரு பதின்பருவப் பையனுக்கும் அல்லது பெண்ணுக்கும் மற்றும் 50 வயதுப் பெண்ணுக்கும் அல்லது ஆணுக்கும் தங்கள் மூன்று வயது நினைவுகளைப் பற்றி இருக்கும் அறிவு ஒன்றுதான். அதாவது பூஜ்யம்.

இதற்குப் பின்னால் சில கோட்பாடுகள் இருக்கின்றன.

முதல் கோட்பாடு சொல்வது என்னவென்றால், மூளையின் நினைவாற்றல் மையமான ஹிப்போகாம்பஸ், நாம் பிறக்கும்போதே தயாராக இருந்தாலும், அதன் சில பகுதிகள்  வளர இன்னும் சில காலம் ஆகிறது. இதனால் மூன்று வயது வரையிலான நினைவுகள் பிக் அக் ஆகாது.

இரண்டாவது கோட்பாட்டின்படி, ஆரம்பகாலத்தில் மூளை மிக வேகமாக வளர்கிறது. புதிய நியூரான் இணைப்புகள் உருவாகும்போது, பழைய மெல்லிய நினைவுகளை அவை ஓவர் ரைட் செய்துவிடுகின்றன. பழைய வீட்டை இடித்துவிட்டுப் புதிய அப்பார்ட்மெண்ட் கட்டுவது போல! எனவே அந்த பழைய மூன்று வயதுக்குள்ளான நினைவுகள் அப்ஸ்காண்ட்.

மூன்றாவதாக ஒரு கோட்பாடு இப்படிச் சொல்கிறது. நமக்கு மொழி தெரியாதபோது ஒரு சம்பவத்தை எப்படிப் பதிவு செய்வோம்? பிம்பமாகத்தானே. அம்மா பால் கொடுத்தார் என்று வார்த்தைகளால் கோர்க்கத் தெரியாதபோது, அந்த நினைவு ஒரு பிம்பமாக மட்டும் இருந்து காலப்போக்கில் அழிந்துவிடுகிறது என்கிறது இந்த மூன்றாவது கோட்பாடு.

அத்துடன் ஆராய்ச்சியில் ஒரு வேடிக்கையான விஷயம் தெரிந்தது. எந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் பேசி, சம்பவங்களை விவரமாகச் சொல்லப் பழகுகிறார்களோ, அவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கிறது.

இன்றைக்கு என்ன ஆயிற்று? என்று கேட்கும் அம்மாவிடம், கிரிக்கெட் பந்து எதிர் வீட்டு ஜன்னலில் அடித்து, கண்ணாடி உடைந்து போய் விட்டது  என்று ஒரு குழந்தை சொல்லும்போது, அந்த நினைவு ஆழமாகப் பதிகிறது. அம்மாக்கள் சும்மா இருப்பதில்லை, அப்புறம் என்ன ஆச்சு? எதிர் வீட்டுக்காரர் என்ன செய்தார்? என்று தோண்டித் துருவி கேட்கும்போது, அது ஒரு நாவல் போல மூளையில் பதிவாகிவிடுகிறது.

நம்மில் பலர், எனக்கு ஒரு வயதில் நடந்ததெல்லாம் நினைவிருக்கிறது என்று அடித்துச் சொல்வோம். இது உண்மையா? அதற்கு முன் இந்தச் சம்பவத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிரபல சைக்காலஜிஸ்ட் ஜான் பியாஜே, தனக்கு இரண்டு வயதில் ஒரு கடத்தல் முயற்சி நடந்ததாகவும், அதிலிருந்து தப்பியதாகவும் துல்லியமாகச் சொன்னார். ஆனால் 15 வருடம் கழித்துத்தான் தெரிந்தது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, செவிலியர் சொன்ன கதையை அவர் தன் நினைவு என்று நம்பிவிட்டார்!

நாமும் அப்படித்தான். பழைய போட்டோக்கள், அம்மா சொன்ன கதைகள் இரண்டையும் மிக்ஸ் செய்து ஒரு கற்பனை மெமரியை உருவாக்கி வைத்துக் கொள்கிறோம் என்பது சாட்சாத் 100 சதவீத உண்மை.

நினைவு இல்லாவிட்டாலும் பாதிப்பு இருக்கும். சிக்கன் எலும்பு தொண்டையில் சிக்கிய ஒரு குழந்தைக்கு, வளர்ந்த பிறகு சிக்கன் என்றாலே அலர்ஜியாக இருக்கலாம். ஏன் பிடிக்காது? என்று அந்த வளர்ந்த குழந்தைக்குத் தெரியாது, ஆனால் மூளையின் ஏதோ ஒரு மூலையில் அந்தப் பயம் ஒளிந்திருக்கும்.

நமது கடந்த காலம் என்பது ஒரு பெரிய இருட்டு அறை. அதில் மூன்று வயதுக்குப் பிறகுதான் மின்விளக்கு எரிகிறது. அந்த வெளிச்சத்தில்தான் நாம் யார் என்பது நமக்குத் தெரிகிறது. அதுவரை நடந்தது எல்லாமே ஒரு ப்ரீ புரொடக்சன் வேலைதான்! ஆக, மூன்று வயது வரை நடந்ததை உங்களால் முப்பது வயதில் நினைவு கூர முடியாது. அப்படி முடியும் என்று சொன்னால், அதற்கு வேறு ஒரு பெயர் இருக்கிறது. அதன் பெயர்தான் கப்சா.

*****

26 Mar 2026

மூளை – ஒரு விசித்திர விருமாண்டி!

மூளை – ஒரு விசித்திர விருமாண்டி!

திடீரென ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூரலாம். எனக்கு அந்தத் தேதி ஞாபகம் இல்லை, ஆனால் அந்தச் சம்பவம் மட்டும் துல்லியமாக ஞாபகம் இருக்கிறது, என்று சொல்லலாம்.

ஒரு சாதாரண மனிதனுக்கு இது முரணாகத் தெரியலாம். ஆனால், ஒரு நரம்பியல் நிபுணருக்கு இதில் ஆச்சரியமே இல்லை. அங்கேதான் ஹிப்போகாம்பஸ் என்கிற அந்தச் சின்னஞ்சிறிய மூளைப் பகுதி வேலை செய்கிறது.

நமக்கு ஒரு பயமோ, அதிர்ச்சியோ ஏற்படும்போது மூளையில் நோர்பின்பிரைன் மற்றும் எபின்பிரைன் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை அந்தச் சம்பவத்தை மூளையில் ஆழமாக பச்சை குத்தி விடுகின்றன. மற்ற விபரங்களான தேதி, கிழமை எல்லாம் காற்றில் பறந்துவிடும், ஆனால் அந்த டிராமா மட்டும் ஹைடெபனிஷன் தரத்தில் பதிவாகிவிடும்.

நினைவாற்றலை விஞ்ஞானிகள் இரண்டாகப் பிரிக்கிறார்கள்.

ஒன்று, வெளிப்படையான நினைவு. இதில் பெயர்கள், தேதிகள், உங்கள் முதல் பாராட்டு, போன வாரம் சாப்பிட்ட ஹோட்டல் போன்றன ஸ்டோரேஜ் ஆகும். இது ஹிப்போகாம்பஸில் நடக்கும் விஷயம்.

மற்றொன்று, உள்ளார்ந்த நினைவு. இதில் சைக்கிள் ஓட்டுவது, ஷூ லேஸ் கட்டுவது போன்றன ஸ்டோரேஜ் ஆகும். இதற்கெல்லாம் நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. கை கால்களே பார்த்துக் கொள்ளும். இதற்கு செரிபெல்லம் மற்றும் ஸ்ட்ரியேட்டம் ஆகிய பகுதிகள் பொறுப்பு.

மருத்துவ உலகில் ஒரு சம்பவம். வலிப்பு நோயாளி ஒருவருக்கு ஒரு சர்ஜரி நடந்தது. வலிப்பு குறைய வேண்டும் என்பதற்காக அவர் மூளையின் ஒரு பகுதியை ஹிப்போகாம்பஸ் உட்பட வெட்டி எடுத்தார்கள். வலிப்பு நின்றது, ஆனால் ஒரு விபரீதம் நடந்தது. அவரால் புதிய விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளவே முடியவில்லை.

டாக்டரைச் சந்திப்பார், ஐந்து நிமிடம் கழித்து வெளியே போய்விட்டு உள்ளே வந்தால், யார் நீங்கள்? என்று கேட்பார். ஆனால் சுவாரஸ்யமாக, அவருக்கு ஒரு ஸ்டார் வரையக் கற்றுக்கொடுத்தால், அதைச் சரியாகச் செய்வார். யார் கற்றுக்கொடுத்தது? என்றால் தெரியாது என்பார். இதன் மூலம்தான், செயல்முறை நினைவு தனி, தகவல் நினைவு தனி என்று உலகிற்குத் தெரிந்தது.

விஞ்ஞானிகள் இந்த விசய்ததை இத்தோடு விட்டு விடவில்லை. நிறைய உயிரிகளை வைத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அதில் ஒன்று, ஒரு அடி நீளம் இருக்கும் அப்லீசியா என்ற கடல் நத்தையை வைத்து செய்த ஆராய்ச்சி. அதன் நரம்பு மண்டலம் மிக எளிமையானது. அந்த நத்தைக்கு ஒரு விஷயத்தைக் கற்பிக்கும்போது, அதன் நரம்பு செல்களுக்கு இடையே இருக்கும் இணைப்புப் புள்ளி பலமடைவதைக் கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நாம் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, மூளை தன்னைத்தானே ரீவயர் செய்துகொள்கிறது. இதற்குப் பெயர் நியூரோப்ளாஸ்ட்டிட்டி. டாக்ஸி டிரைவர்களை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ஊர் வழிகளை ஞாபகம் வைத்துக்கொண்டே இருந்ததால் அவர்களின் ஹிப்போகாம்பஸ் பகுதி மற்றவர்களை விடப் பெரிதாக இருந்ததாம்!

வாழ்க்கை என்பதே நினைவுதான். கடந்து போகிற இந்த ஒரு நொடியைத் தவிர மற்ற எல்லாமே நினைவுகள்தானே?

இப்படி மூளையின் நினைவுகளில், செயல்களில் பல விசித்திரங்கள் இருக்கின்றன. இங்கே ஒன்றைப் பார்த்தோம். இது போன்று நிறைய இருக்கின்றன சங்கதிகள். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நம் மூளை ஒரு விசித்திரமான லைப்ரரி. அங்கே சில புத்தகங்கள் பளிச்சென்று இருக்கும், சில கறையோடு இருக்கும், சில காணாமல் போயிருக்கும். ஆனால், அந்த லைப்ரரிதானே நாம் யார் என்பதைத் தீர்மானிக்கிறது.

*****