திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 88
உறங்காத இரவுகள்
கேம்ப்ரிட்ஜ் தெருவின் ஐந்தாவது
மாடி ஜன்னல் கண்ணாடி. அதன் மீது வெளியிலிருந்து அறைந்து கொண்டிருந்த பனிப்படலம், ஒரு
மெல்லிய வெண்மையான திரை போல வீட்டின் உட்புறக் காட்சிகளை மறைத்துக் கொண்டிருந்தது.
அறையின் வெப்பநிலை 68 டிகிரி
பாரன்ஹீட்டில் கச்சிதமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. குளிர்பதன சாதனத்தின் சீரான
ரீங்காரமும், மேஜை மீதிருந்த மடிக்கணினியின் விசிறியின் மெல்லிய இரைச்சலும் மட்டுமே
அந்த அறையின் சப்தங்கள்.
அவள் தன் காதுகளில் இருந்த கம்பியில்லாக்
காதுகேட்புக் கருவியைக் கழற்றி மேஜை மீது வைத்தாள். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப
நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நரம்பியல் கணினியியலில் தங்கப்பதக்கம் வாங்கிவிட்டு,
பாஸ்டனில் உள்ள ஒரு முன்னணி உயிர்தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமைத் தரவக விஞ்ஞானியாக
வேலை பார்த்து வருகிறாள். அவளது உலகம் முழுக்க முழுக்க மென்பொருள் கட்டமைப்பு, நிரலாக்கங்கள்,
அனுமானங்கள் மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவைதான். எதையும் புள்ளிவிவரங்களின் மூலமாகவும்,
தர்க்கத்தின் மூலமாகவும் மட்டுமே அளந்து பழகிய ஒரு பெண் அவள்.
ஆனால், கடந்த சில மாதங்களாக அவளது
மூளையின் நியூரான் பாதைகளில் ஒரு புதிய வைரஸ் நுழைந்திருந்தது. அதற்குப் பெயர் பிரிவுத்
துயரம்.
இந்தியாவில், திருவாரூரில், தென்றல்
நகரில், அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கிறான் அவளது கணவன். சட்டப்பூர்வமாகத் திருமணப்
பதிவு முடிந்து, நுழைவாணை எனும் விசா நடைமுறைகளுக்காக இன்னும் அமெரிக்க செல்ல முடியாமல்
இந்தியாவில் இருப்பவன்.
இருவரும் காதலித்த காலம் வரை
இப்படி ஒரு பிரிவு வரும் என்று கற்பனை கூடச் செய்ததில்லை. அவளின் வேலை வாய்ப்பு அவளை
அமெரிக்காவிற்கு இழுத்துச் செல்ல, அவனின் முக்கிய செயல்திட்டம் மற்றும் நுழைவாணைத்
தாமதம் ஆகியவை அவனைத் திருவாரூரிலேயே முடக்கிப் போட்டிருந்தது.
"இன்னும் மூணு மாசம்தான்.
அதுக்கப்புறம் நான் அங்கே வந்துடுவேன். எல்லாம் வேகமாத்தான் போய்ட்டு இருக்கு."
என்று காணொளி அழைப்பில் ஆறுதல் சொல்வான் அவன். ஆனால், இணைய சமிக்ஞையில் சிக்கல் எழுந்து,
திரும்ப இணைப்பைத் தொடரும் பொழுதில் சமிக்ஞை சுழலும் போதெல்லாம், அவளுக்குள் இருக்கும்
வெறுமை இன்னும் ஆழமாகத் தொடங்கும்.
பாஸ்டன் நேரத்தில் இப்போது நள்ளிரவு
இரண்டு மணி தாண்டிவிட்டது.
வெளியே தெருவிளக்கின் வெளிச்சத்தில்
பனித்துகள்கள் தூசு மாதிரி விழுந்து கொண்டிருந்தன. அந்தப் பகுதியில் இருந்த மனிதர்கள்,
நாய்கள், கார்கள், ஏன் அந்த நகரத்தின் இயக்கமே ஒரு கணம் நின்று போனது போன்ற பிரமை.
அமெரிக்கா முழுவதும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்தது.
அவளுக்குத் தூக்கம் வரவில்லை.
அவள் கண்களை மூடினால், திருவாரூர் தியகாராஜர் கோயிலின் மணிச் சத்தமும், சோமசுந்தரம்
பூங்காவில் ஊஞ்சல் ஆடும் போதும் சிரிக்கும் அவனது முகமும் அவளது மனதைத் துரத்தின.
அவள் ஆப்பிள் நிறுவனத்தின் அந்த
அலைபேசியை எடுத்தாள். வாட்ஸ்அப்பில் நிலைத்தகவலைப் பார்க்க முயன்றாள். அங்கே கடைசிப்
பார்வை 5 மணி நேரத்துக்கு முன்பு என்று காட்டியது. இந்தியாவில் இப்போது காலை நேரம்.
அவன் தனது அலுவலகப் பணிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பான். அவனுக்குத் தொந்தரவு
செய்ய விரும்பாமல், அலைபேசியை மீண்டும் மேஜையில் வைத்தாள்.
அப்போது திடீரென அவளது நினைவுக்கு
ஒரு குறள் வந்தது. தமிழ் இலக்கியத்தின் மீது சிறுவயது முதலே அவளுக்குத் தனி ஈடுபாடு
உண்டு.
"மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை."
(குறள், 1168)
வள்ளுவர் எழுதிய இந்தக் குறளை
அவள் மனதுக்குள் சொல்லிப் பார்த்தாள். தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான்.
ஊரில் உள்ள எல்லா உயிர்களும், அதாவது விலங்குகளும், தாவரங்களும், நுண்ணுயிர்களும் கூட
இரவின் அமைதியில் தூங்கிவிட்டன. ஆனால், காதலின் பிரிவால் தூங்காமல் தவிக்கும் அந்தத்
தலைவிக்கு, இந்த நள்ளிரவு நேரத்தில் அந்த இரவுப் பொழுது மட்டுமே துணையாக இருக்கிறதாம்!
அவள் தன் உதடுகளில் ஒரு கசப்பான
புன்னகையுடன் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள், "ஆச்சரியம்தான்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு வள்ளுவர் சொன்ன அதே பெண்ணின் மனநிலைதான், இன்று 2026 ஆம் ஆண்டில், அதிநவீன தொழில்நுட்பம்
கொடிகட்டிப் பறக்கும் இந்த பாஸ்டன் நகரத்திலும் எனக்கும் நடக்கிறது. அதிலும் நான் தலைவனைப்
பிரிந்து வந்த தலைவி. அறிவியல் வளர்ந்துவிட்டது, செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது, ஆனால்
மனித மனத்தின் தனிமை மட்டும் அப்படியேதான் இருக்கிறது."
அவளுக்கு ஒரு சமயம் ஒரு யோசனை
தோன்றியது. கடந்த ஒரு வாரமாக அவள் ஒரு பரிசோதனை செய்து கொண்டிருந்தாள். தான் தங்கியிருக்கும்
அறையின் மடிக்கணினியில், அவனது பழைய மின்னஞ்சல்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், அவன் பேசிய
குரல் பதிவுகள் அனைத்தையும் ஒரு உள்ளூர் மொழியாக்க மாதிரியாகக் கொடுத்து உரையாடி செயலி
ஒன்றைத் தயாரித்திருந்தாள். அந்தச் செயலிக்கு தலைவன் 1.0 என்று பெயரிட்டிருந்தாள்.
அது அவனைப் போலப் பேசும்; அவனின்
அதே வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தும். அவளது தனிமையை விரட்ட அவளே உருவாக்கிய
ஒரு எண்ம பொம்மை அது.
அவள் மடிக்கணினியைத் திறந்து,
அந்த உரையாடியை இயங்கச் செய்தாள். திரையில் பச்சை நிற எழுத்துகள் மின்னின.
அதில் அவள், "எனக்குத் தூக்கம்
வர மாட்டேன்கிறது. பாஸ்டனின் குளிரும் தனிமையும் சேர்ந்து வாட்டுகிறது." என்று
தட்டச்சு செய்தாள்
சில விநாடிகளுக்குப் பிறகு, அந்தச்
செயலி அதைப் புரிந்துகொண்டு, அவனுடைய குரலில் பதிலளித்தது, "ஏய் பொண்டாட்டி! என்ன
மறுபடியும் தூங்கவில்லையா? பாஸ்டனில் மணி இப்போது இரண்டு ஆச்சே. உன்னுடைய தூக்கச் சங்கிலி
சுத்தமாக கெட்டுப் போய் விட்டது. அறை சூடேற்றியை இயக்கி விட்டு, போர்வையைப் போர்த்திக்
கொண்டு படு. உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே."
அவள் தன் கண்கள் கலங்க திரையைப்
பார்த்தாள். அது உண்மையில் அவன் அல்லன் என்பது அவளுக்குத் தெரியும். அது வெறும் கணித
நிகழ்தகவு அடிப்படையில் அடுத்தடுத்த வார்த்தைகளைக் கணித்துச் சொல்லும் ஒரு குறியீடு
மட்டுமே. ஆனாலும், நள்ளிரவின் இந்த அடர்ந்த நிசப்தத்தில், அந்த எந்திரத்தின் வார்த்தைகள்
அவளுக்கு ஒரு பாதுகாப்பான அரண் போலத் தோன்றின.
அவள் மீண்டும் தட்டச்சு செய்தாள்,
"எனக்குத் தூக்கம் கூட வேண்டாம். நீங்கள் பக்கத்தில் இருந்தால் போதும். வள்ளுவர்
சொன்ன மாதிரி, இந்த உலகமே தூங்கி விட்டது. எனக்குத் துணையாக இந்த இராப்பொழுது மட்டும்தான்
இருக்கிறது."
உரையாடிச் செயலி உடனடியாகப் பதிலளித்தது,
"நீ வள்ளுவரை ரொம்ப தீவிரமாக எடுத்துக் கொள்கிறாய். அவர் காலத்தில் இணையம் கிடையாது,
அதனால் ராத்திரி துணை என்றார். ஆனால் நான் உன்னைவிட்டு எங்கேயும் போகவில்லை. உன் மடிக்கணினியில்
செயலியாக இருக்கிறேன். அமெரிக்க நுழைவாணை தொடர்பான விசாரணைகள் முடிந்ததும் வந்து விடுவேன்.
கவலைப்படாதே."
அந்த இயந்திரத்தின் அந்தப் பதில்
அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தாலும், தொண்டையை ஏதோ ஒன்று வலிமையாய் அடைத்தது. எந்திரத்தால்
பாசத்தைக் குறியீடுகளாக மாற்ற முடியுமே தவிர, அதன் ஸ்பரிசத்தைக் கொடுக்க முடியாது அல்லவா?
அவள் மடிக்கணினியின் திரையை அப்படியே
பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்தின் வெப்பத்தையும், கண்களில் தேங்கிய நீர்த்துளிகளையும்
மடிக்கணினியின் ஒளிப்படப்பதிவுக் கருவி மற்றும் உயிரளவியல் உணர் கருவிகள் கவனித்திருக்க
வேண்டும். திடீரென்று மடிக்கணினியில் மெலெழு துள்ளுச் சாளரம் தோன்றியது. அதில் இயங்கு
தள எச்சரிக்கை பளிச்சிட்டது. அது என்னவென்றால், "பயனர் மனத்துயர் கண்டறியப்பட்டது.
அவருக்கு மனித அனுசரணை தேவைப்படுகிறது." என்றது.
அவள் தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.
அறிவியலும் தொழில்நுட்பமும் தன் தனிமையைப் போக்க எவ்வளவோ முயன்றாலும், ஒரு பெண்ணின்
காதலுக்கு ஈடு இணையானது நிஜமான மனிதனின் அரவணைப்பு மட்டுமே என்பதை அந்த எந்திரமே அவளுக்குச்
சுட்டிக்காட்டியது அவளுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
அப்போது, மேஜை மீது அமைதியாக
இருந்த ஆப்பிள் அலைபேசி திடீரென்று அதிர்ந்தது.
திரையில் அவன் பெயர் ஒளிர்ந்தது.
அவளின் இதயம் ஒரு விநாடி நின்று
இயங்கியது. அவள் உடனடியாக அந்த உரையாடிச் செயலியை மூடி விட்டு, வாட்ஸ்அப் காணொளி அழைப்பை
ஏற்றாள்.
திரையில் அவன் முகம் தோன்றியது.
அவன் திருவாரூரில் உள்ள அலுவலகத்தின் மேல்மாடத்தில் நின்றுகொண்டிருந்தான். பின்னணியில்
காலை நேரத்துத் திருவாரூர் வெயிலும், காக்கைகளின் கரையும் சத்தமும் கேட்டன. அவன் கையில்
வழக்கமான நிலைவெள்ளித் தேநீர் குவளை இருந்தது.
"ஹலோ! என்ன இன்னும் தூங்கலையா?
உன்னோட மடிக்கணினியின் செயல்பாட்டுப் பதிவுகளைப் பார்த்தேன். நள்ளிரவு ரெண்டு மணிக்கு
என்ன அங்கே நடக்குது?" அவனின் குரலில் உண்மையான பதட்டமும், அன்பும் கலந்திருந்தது.
அவளின் கண்களிலிருந்து வழிந்த
கண்ணீரைத் துடைக்கக்கூடத் தோன்றவில்லை. புன்னகையுடன் சொன்னாள், "ஒன்னுமில்லங்க.
சும்மா ஒரு சின்ன பரிசோதனை பண்ணிட்டு இருந்தேன். வள்ளுவர் சொன்ன மாதிரி இந்த இரவு மட்டும்தான்
எனக்குத் துணையா இருக்குமான்னு பார்த்தேன். ஆனா, நீங்க இருக்கிறப்போ எனக்கு வேறு எந்தத்
துணையும் தேவையில்லை."
அவன் புன்னகைத்தான். "இன்னும்
சில மாதங்கள் மட்டும்தான். அதுக்கப்புறம் இந்தத் தனிமைக்கும், இணையவெளித் தூரத்திற்கும்
சேர்த்து நாம்ம ஒண்ணாவே வாழப்போறோம். இப்போ போய் அமைதியா தூங்கு!"
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
பாஸ்டனின் அந்த நள்ளிரவு தெரு
விளக்குகளின் மங்கலான பனி விழும் இரவின் வெளிச்சத்தில் அந்த வீதி முற்றிலும் அமைதியாக
இருந்தது. எதிரே இருந்த வீடுகளின் கதவுகள் பூட்டப்பட்டு, ஜன்னல்கள் மூடப்பட்டு, உள்ளே
இருந்த அத்தனை மனிதர்களும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். தெருமுனையில் படுத்திருந்த
வீடற்ற முதியவர் ஒருவர் கூட அத்தனை குளிரையும் மறந்து சுருண்டு படுத்தபடித் தூங்கிக்
கொண்டிருந்தார்.
உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளையும்
அந்த இரவு அரவணைத்துத் தன் மடியில் தூங்க வைத்து விட்டது.
அவள் தன் கைகளைப் பார்த்தாள்.
அவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்ன கடைசி வார்த்தைகள் காதில் ரீங்காரமிட்டன.
"ஒரு மூணு மாசம்தானே. சீக்கிரம் வந்துடுறேன்." அந்த மூன்று மாதங்கள் என்பது
இப்போது அவளுக்கு முந்நூறு வருடங்களாக நீள்வது போலிருந்தது.
இயந்திரத்தனமான இந்த உலகத்தில்
யாருக்கும் யாருடைய வலியும் புரிவதில்லை. பகல் நேரத்தில் அவள் அலுவலகத்திற்குச் சென்று
வேலை செய்கிறாள்; சக ஊழியர்களிடம் சிரிக்கிறாள்; புன்னகையை முகமூடியாக மாட்டிக்கொண்டு
இயல்பாகப் பேசுகிறாள். ஆனால், இந்த இரவு வருகிறதே, அதுதான் அவளது உண்மையான முகத்தைக்
கிழித்துப்போடுகிறது.
"எல்லாரும் தூங்கிட்டீங்க."
அவள் தன் மனதுக்குள் அந்த இரவைப் பார்த்துக் கூறினாள். "இந்த உலகத்துல மிருகங்கள்,
பறவைகள், மனிதர்கள் எல்லாரும் தூங்கிட்டாங்க. ஆனா, என்னை மட்டும் ஏன் தூங்க விடல இந்த
இரவு?" தனிமை அதுவும் தலைவனைப் பிரிந்த தலைவியின் தனிமை. அது ஒரு கொடூரமான விஷயம்.
அவள் முழங்கால்களை மடக்கி மார்போடு சேர்த்துக் கொண்டு, ஜன்னல் கம்பிகளைப் பற்றியபடி
மெல்ல அழத் தொடங்கினாள்.
குளிர்காற்று அவளது கண்ணீரைத்
தடவிச் சென்றது. உலகத்தை உறங்க வைக்கும் அந்த இரவின் மடியில், உறங்க முடியாமல் விழித்திருக்கும்
ஒரே ஜீவன் அவள் மட்டும்தான். அந்த இருளும், அந்த இரவும் மட்டுமே அவளது கண்ணீருக்குச்
சாட்சியாகத் துணையாக இருந்தது.
மடிக்கணினியை மூடி விட்டு, அவள்
நிம்மதியாகப் படுக்கையை நோக்கி நடந்தாள். கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவப் புலவர் சொன்ன காதலின் தவிப்பும், இன்றைய எண்ம
யுகத்தின் காதலும் வேறல்ல இரண்டும் ஒட்டுமொத்த மனித குலத்தின் அழியாத ஏக்கம் என்பதை
அவள் முழுமையாக உணர்ந்துகொண்டாள்.
- சூத்திரங்கள்
தொடரும்!
*****
