Showing posts with label Epstein Files. Show all posts
Showing posts with label Epstein Files. Show all posts

5 Feb 2026

உலகைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் எப்ஸ்டீன் கோப்புகள்!

எப்ஸ்டீன் – ஒரு கணினி காலத்து லோலிதா

ஜெப்ரி எப்ஸ்டீன். பெயர் ஒரு மாதிரி ஜேம்ஸ் பாண்ட் வில்லன் போல இருக்கிறது இல்லையா? ஆள் நிஜமாகவே வில்லன்தான். ஒரு பில்லியன் டாலர் மூளை. அசாத்தியமான நெட்வொர்க்கிங். எலெக்ட்ரானிக் வேகம் கொண்ட வாழ்க்கை.

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆலோசகரான எப்ஸ்டீன் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுடன் நெருங்கிய டச் அப்பில் டூ மச்சாக இருந்தவர்.

2000 ஆவது ஆண்டுகளின் தொடக்கத்தில், சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், அவர்களைக் கடத்திச் சென்று தனது சொந்தத் தீவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் இவர் மீது புகார்கள் எழுந்தன. 2019 இல் கைது செய்யப்பட்ட இவர், சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

இந்த மனுஷன் செய்தது என்னவோ மகா தப்பு. ஒரு தீவையே விலைக்கு வாங்கி, அதில் சிறுமிகளை வைத்துக்கொண்டு தனி உலகம் நடத்தியிருக்கிறார். அந்த லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவில் நடந்தவை எல்லாம் அப்பட்டமான குரூரங்கள்.

அது குறித்து விசாரணை நடத்தி அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்டு வரும் இந்தக் கோப்புகளில் எப்ஸ்டீனுடன் பழகியவர்கள், அவரது தீவிற்குச் சென்றவர்கள் அல்லது அவரது லோலிதா எக்ஸ்பிரஸ் தனி விமானத்தில் பயணம் செய்தவர்களின் பெயர்கள் உள்ளன.

ஏன் இது உலகையே பூகம்பம் போல அதிர வைக்கிறது என்றால், இந்தக் கோப்புகளில் உலகின் மிக சக்திவாய்ந்த நபர்களின் பெயர்கள் 9.8 ரிக்டர் ஸ்கேலில் அடுத்தடுத்து அடிபடுவதுதான் இதற்கு முக்கியக் காரணம்:

இப்போது வெளியாகி இருக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் என்பது ஒரு வகை பண்டோராவின் பெட்டி. திறந்தால் உள்ளிருந்து வண்டுகள் வெளியே வருகின்றன.

யார் யார் அந்த வண்டுகள்?

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தொடங்கி இந்நாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட, பிரிட்டிஷ் இளவரசர் ஆன்ட்ரூ, மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யத்தின் பில்கேட்ஸ் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், பெயர் வந்தவர்கள் எல்லாம் இப்போது கோரஸாகப் பாடுவது ஒரே ஒரு பல்லவிதான் - அவரை எனக்குத் தெரியும். ஆனால், அவர் இப்படிப்பட்டவர் என்று தெரியாது. பில் கேட்ஸ் மட்டும் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டு விட்டார்.

ஆனால் அவர்கள் சொல்வது ரொம்ப சௌகரியமான தர்க்கம் இது. இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தக் கோப்புகளில் இந்தியாவின் நிலை?

இப்போதைக்கு இந்தியா தப்பித்திருக்கிறது. இங்கே கோப்புகள் என்பவை பெரும்பாலும் ரேஷன் கார்டாகவும், மின்சார பில்லாகவும்தான் இருக்கின்றன. எப்ஸ்டீன் கோப்புகளில் இந்தியத் தலைவர்களின் பெயர்கள் இருப்பதாக வரும் வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளை இப்போதைக்கு நம்ப வேண்டாம். அவை பெரும்பாலும் குரூப் 4 தேர்வுக்கான வதந்திகளை விட மோசமானவை.

அதே நேரத்தில் வருங்காலத்தில் இந்தியா தப்பிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்துகொண்டார், அல்லது செய்யப்பட்டார் இல்லையா! அது இன்னொரு மர்ம நாவல். ஆனால் அவர் விட்டுச் சென்ற டிஜிட்டல் தடயங்கள், இப்போது பல விஐபிகளின் தூக்கத்தைக் கலைத்துக்கொண்டிருக்கின்றன.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் சாமானிய மனிதனுக்கு ஒரு சின்ன பயம் வரலாம். அதிகாரம், பணம், ரகசியம் – இந்த மூன்றும் சேர்ந்தால் மனிதன் மிருகமாக மாற எவ்வளவு நேரம் ஆகும்? அதற்கான பதில் ஒன்றும் கடினமானதல்ல, ஒரு நேனோ செகண்ட் போதும்.

கடைசியாக ஒரு கேள்வி என்னவென்றால், இவ்வளவு பெரிய மர்மங்களைச் சுமந்து கொண்டு, எப்ஸ்டீன் மட்டும் எப்படி அத்தனை ஆண்டுகள் ஜாலியாகச் சுற்றித் திரிந்தார்?

தப்பு செய்பவர்களை விட, தப்பை வேடிக்கை பார்ப்பவர்களின் அதிகாரம் பெரியது. நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். ஆனால், உண்மை ஒரு நாள் வெளிவரும் போது வேடிக்கை பார்த்த அதிகார மையங்கள் அனைத்தும் ஆட்டம் காண்பதை அந்த ஆண்டவனே நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

*****