Showing posts with label யாரும் அறியாத மென்மை. Show all posts
Showing posts with label யாரும் அறியாத மென்மை. Show all posts

9 Sept 2026

யாரும் அறியாத மென்மை!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 31

யாரும் அறியாத மென்மை!

ஆவணி மாதத்து மாலை.

மெல்லிய சாரல்.

எஸ்.ஆர்.ஆர் கபேயில் அமர்ந்தபடி திருவாரூருக்கே உரிய வாசன் காபி தூளில் தயாரான காபியைக் குடித்துக்கொண்டிருந்தான் அவன்.

ஈரக் காற்றில் ஏதோ ஒரு மெல்லிய பூவின் வாசனை.

அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த அவளது மேஜை மீது, ஒரு சிறிய கண்ணாடிக் குடுவையில் அனிச்ச மலர் வைக்கப்பட்ருந்தது. தொட்டாலே அல்லது முகர்ந்தாலே வாடிவிடும் அபூர்வ வகை அது.

அதைப் பார்த்ததும் அவனது நண்பன் தன் மொபைலில் அந்தப் பூவைப் பற்றி ஆர்வம் தாங்காமல் தேடிக் கொண்டிருந்தான்.

"டேய், இந்த அனிச்சப் பூ பத்தி கூகுள் பண்ணிட்டு இருக்கேன்டா. முகர்ந்து பார்த்தாலே வாடிடுமாம். எவ்வளவு சென்சிட்டிவ் பார்த்தியா? உலகத்திலேயே இதான் இருக்கறதுலயே ரொம்ப மென்மையான விஷயம்னு நினைக்கிறேன்." என்றான் நண்பன் ஆச்சரியத்துடன்.

அவன் காபியை ஒரு மிடறு உறிஞ்சிவிட்டு உரக்கச் சிரித்தான்.

"அடப்பாவமே! பூவை முகர்ந்தா வாடும்னா, நிச்சயம் என் எதிரே உட்கார்ந்திருக்க அவளைப் பார்த்திருக்க மாட்டான்."

எதிரே அமர்ந்திருந்த புருவத்தை உயர்த்தினாள். "என்ன? சும்மா இருந்த என்னை எதுக்கு வம்பு இழுக்கிறீங்க?"

"பின்ன என்ன? இந்த அனிச்சப் பூவெல்லாம் லோக்கல் மேட்டர். அன்னைக்கு ஒரு நாள் உன்கிட்ட, ஏய், இன்னைக்கு கொஞ்சம் டல்லா இருக்க போலன்னு சும்மாதான் கேட்டேன். அவ்வளவுதான். அன்னைக்கு ஈவினிங் வரைக்கும் மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு பேச்சையே நிறுத்திட்ட. கண்ணுல இருந்து டப் டப்னு தண்ணி கொட்டுது. குடம் வெச்சு பிடிச்சிருந்தா நாலு குடமாவது நிரம்பியிருக்கும்."

"சும்மா எதாச்சும் சொல்லணும்னு சொல்றதுக்காக, எதையாவது அடிச்சு விடாதீங்க!" என்றாள் அவள்.

நண்பன் சிரித்துக்கொண்டே இருவரையும் பார்த்தான்.

அவன் தன் காபி கப்பை கீழே வைத்துவிட்டு அவளது கண்களை நேரடியாகப் பார்த்தான். குரலில் இருந்த கேலி மறைந்து, ஒரு மெல்லிய ஆழம் கூடியது.

"அப்படியெல்லாம் அடிச்சு விடல. இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய தீசிஸே இருக்கு. அதாவது,

"நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்."         (குறள், 1111)

அப்படின்னு வள்ளுவர் ஒரு சூத்திரமே சொல்லியிருக்கார். அனிச்சப் பூவே! நீ நல்ல இயல்புடையவள்தான், ஆனா, நான் விரும்பும் என் காதலி உன்னை விட ரொம்ப மென்மையானவள்ன்னு தலைவன் பூகிட்ட சவாலே விடுறான்னா பார்த்துககோ!"

"அப்படியா சார்?" அவள் லேசாகச் புன்னகைத்தபடி, "அவ்வளவு மென்மையான பொண்ணா உங்க ஆளு? ஒரு வார்த்தை தவறா சொன்னாக் கூட உடனே வாடிடுவாளா?" எனக் கேட்டாள்.

"அது மட்டும் இல்ல!" அவன் குரலைச் சற்றே தாழ்த்தினான். "வள்ளுவர் சொன்னது வெறும் உடம்போட மென்மையைப் பத்தி மட்டும் இல்ல. மனசைப் பத்தி. இந்த அனிச்சப் பூவை முகர்ந்து பார்த்தாத்தான் வாடும். ஆனா என் காதலி இருக்காளே, அவளை ஏன் இப்படி இருக்கன்னு லேசாக நினைச்சுக் கேட்டாலோ, இல்ல நான் கவனிக்காம வேற பக்கம் என் பார்வை திரும்பினாலோ அவளோட மனசு வாடிடும். அந்தப் பூவை விட அவ அவ்வளவு மென்மையானவ!"

நண்பன் சூழலைப் புரிந்து கொண்டு அமைதியானான்.

அவளது குரலில் ஒரு மெல்லிய நடுக்கம் கூடியது. வேறு யாராவது பெண்ணைப் பற்றி இவன் சொல்கிறானோ என்ற சந்தேகம் வேறு மனதைப் போட்டு அரிக்க ஆரம்பித்து விட்டது. அத்துடன் மனதுக்குள் சின்னதாக ஒரு கோபமும் வந்தது. அதற்கு மேல் முடியாமல், அவள் வினவினாள், "யார் அந்தப் பொண்ணு?"

அவன் மேஜை மீதிருந்த அந்தச் சிறிய அனிச்சம்பூவை லேசாகத் தொட்டான். பூ தன் இதழ்களைச் சாய்த்துக் கொண்டது. பிறகு அவன் நிமிர்ந்து அவளது கண்களை நேராகப் பார்த்தான்.

"வேற யாரு? நீதான்!"

அவள் இமைகளைச் சிமிட்டினாள். அவளது கன்னங்களில் லேசான சிவப்பேறியது. மேஜை மீதிருந்த பூ வாடியதோ இல்லையோ, ஆனால் அவளது வெட்கப் புன்னகை சாரல் மழை பொழியும் அந்த மாலையை இன்னும் அழகாக மாற்றியது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****