Showing posts with label 7ஜி ரெயின்போ காலனி. Show all posts
Showing posts with label 7ஜி ரெயின்போ காலனி. Show all posts

17 Jun 2026

பின்தொடரும் நிழலின் பொறுக்கித்தனம்!

சீரழித்த சினிமா – 15

7ஜி ரெயின்போ காலனி

பின்தொடரும் நிழலின் பொறுக்கித்தனம்!

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டின் அக்டோபர் மாதம், தமிழ்ச் சமூகத்தின் கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருந்த கண்ணியமான காதல் கோட்பாடுகளுக்கும் ஒட்டுமொத்தமாகக் கல்தா கொடுத்து விட்டு ரொமாண்டிசத்தைப் பொறுக்கித்தனமாக்கிய மற்றுமொரு திரைப்படம்தான் 7ஜி ரெயின்போ காலனி.

படிக்காத, வேலைக்குச் போகாத வாலிகள் வீட்டில் திட்டு வாங்கிவிட்டு ஏதாவதொரு வேலையைத் தேடுவார்கள், என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, ஒரு பொறுக்கிப் பையன் நினைத்தால், தன் வீட்டுக்குக் குடிவரும் படித்த, நாகரிகமான பெண்ணை அவளது சம்மதமே இல்லாமல் நடுத்தெருவில் வைத்து அசிங்கப்படுத்தலாம், பின்தொடரலாம், ஆபாசமாகப் பேசலாம்; கடைசியில் அந்தப் பெண்ணே அவனைக் காதலித்து அவனுக்கு வாழ்க்கை நெறி கற்றுத் தரலாம்  என்ற ஒரு புதுவிதமான பொறுக்கித்தன வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, ஏழு ஜி என்ற பெயரில் வந்த இந்த ஏழரைக்கு உண்டு.

நாயகன் என்ற உதவாக்கரை, அதேசமயம் ஆபத்தான ஸ்டாக்கர் பிம்பமும், இளசுகளின் ஹார்மோன்களைச் சுண்டி விடும் பின்னணி இசையும், நாயகி என்கிற பலிகடாப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு டாஸ்மாக் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடிமையியல் கல்வி என்ன தெரியுமா? நீங்கள் உருப்படாமல் ஊர் சுற்றுபவராக இருந்தால் போதும்; உங்கள் ஏரியாவுக்கு வரும் எந்தவொரு பெண்ணையும் அவளது விருப்பமின்றி வழிமறிக்கலாம். அவள் உங்களை மதிக்கவில்லை என்றால், அவளது தகுதியைக் கேலி செய்யலாம், பேருந்தில் வைத்து அவளது அந்தரங்கம் வரை அத்துமீறி டார்ச்சர் செய்யலாம் என்பதுதான்.

பெண்ணின் சம்மதம், தனிமனித உரிமை போன்ற விஷயங்கள் எல்லாம் கமர்ஷியல் தமிழ் சினிமாவுக்குப் பொருந்தாது என்பது வேறு விசயம். ஆனால், ஓர் ஆண் எவ்வளவுதான் கீழ்த்தரமான பொறுக்கியாக இருந்தாலும், அவன் ஒரு பெண்ணை உண்மையாக, அதாவது தீவிரமாகப் பின்தொடர்ந்து காதலித்தால், அந்தப் பெண் தன் சுய விருப்பங்களை மூட்டை கட்டிவைத்துவிட்டு, அவனைக் காதலிக்க வேண்டும் என்று தமிழ் இளைஞனை நம்ப வைத்தது இந்தக் கூமுட்டைக் காலனி.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் பெண்கள் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னால், நான்தான் உன்னை ஸ்டாக்கிங், ரேக்கிங் செய்து காதலிக்க வந்த ரெயின்போ காலனிப் பையன் என்று நினைத்துக்கொண்டு பெண்களை டார்ச்சர் செய்யும் ஓர் ஆபத்தான, முதிர்ச்சியற்ற வாலிகளின் ஆதிப்புள்ளியாக அமைந்தது இத்திரைப்படம்.

மன்மதன் படத்தில் வன்முறையை நியாயப்படுத்தினார்கள் என்றால், 7ஜி படத்தில் ஹீரோவின் அத்தனை முட்டாள்தனங்களையும் காதல் என்ற ஒற்றை வார்த்தையில் புனிதப்படுத்தினார்கள்.

நாயகன் எதற்கும் லாயக்கில்லாதவனாகப் பொறுக்கிகளின் இன்டர்நேஷனல் பிராண்ட் அம்பாசிடராகத் திரிவான். அவனுக்கு வேலை வாங்கித் தருவது, அவனது குடும்பத்தின் முன்னால் அவனைப் பெருமைப்படுத்துவது என நாயகி உருகி உருகி உழைப்பாள். ஆனால், அவளோடு அவளது திருமணத்துக்கு முன் அவளை அழைத்துப் போகும் நாயகன், அவளைச் சீரழித்து, இறுதியில் விபத்தில் அவளைப் பறிகொடுத்துவிடுவான். இந்த உறைபனியூட்டும் கொடூரத்தை விபத்தாகக் காட்டிவிட்டு, பின்னணியில் சோக இசையை ஒலிக்க விட்டு, அவன் பாவம், இப்பதான் திருந்தினான். அதுக்குள்ள அவ செத்துட்டா, என்று பார்ப்பவனுக்குக் கண்ணீர் வரவழைப்பார் இயக்குனர்.

ஓர் உதவாக்கரையின் பொறுப்பின்மையால் ஒரு பெண்ணின் வாழ்க்கை அழிந்ததை மறைத்து, அவனைக் கல்லறையோடு பேசும் ஒரு தத்துவஞானியாக மாற்றியதுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

இதன் காரணமாக நிஜ வாழ்க்கையில் படித்து முன்னேற வேண்டிய இளைஞர்கள், நாமக்கும் ஒரு நாயகி கிடைத்தால் உருப்பட்டு விடுவோம், என்று பகற்கனவு காணும் ஒரு சோம்பேறித்தனமான பொதுப்புத்தியை வளர்த்துக்கொண்டார்கள்.

படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் பாடல்கள் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், தன் காதலி இறந்துவிட்ட பிறகு, நாயகன் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே, அவளது ஆவியோடு பேசிக்கொண்டு வாழ்வான். இதை ஏதோ கற்பின் உச்சக்கட்டத் தியாகம் என்பது போலச் சினிமா கொண்டாடும்.

ஆனால் கூர்ந்து கவனித்தால், அது தியாகம் அல்ல; அது ஒரு பலவீனமான ஆணின் குற்ற உணர்ச்சி என்பது புரிய வரும். தன் பிடிவாதத்தால் ஒரு பெண்ணின் உயிரே போய்விட்டது என்ற உண்மையை மறைக்க, நான் அவ நினைப்பிலேயே வாழ்கிறேன் என்று தாடி வளர்த்துத் திரிவதை மாஸாகக் காட்டியது இத்திரைப்படம்.

காதலி செத்த பிறகுதான் நாயகன் ஒழுங்காக வேலைக்கே போகிறான். அப்படியென்றால், காதலை விட காதலியின் மரணம்தான் ஒருவனை உருப்படியாக்கும் என்கிறதா இத்திரைப்படம் என்பது நீங்கள்தான் விடை காண வேண்டிய கேள்வி.

தமிழ் இளைஞர்களுக்குக் காதல் தோல்வி என்றால் உடனடியாகக் குடிக்கப் போக வேண்டும், தாடி வளர்க்க வேண்டும், சோகப் பாட்டு வைக்க வேண்டும் என்ற போலி கலாச்சாரத்தை மிக நுணுக்கமாகப் பட்டுவாடா செய்தது இந்த 7ஜி.

காதல் கொண்டேன் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. அப்படம் மற்றும் இப்படத்தின் நாயகி கதாபாத்திரம், ஏதோ இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை உருப்படாத பொறுக்கிகளையும் திருத்த வந்த ஒரு மறுவாழ்வு மையம் போலக் காட்டப்படுவார். அவளுக்கு என்று தனியாக ஒரு குடும்பம், கனவுகள் இருந்தாலும், ஹீரோவின் அசிங்கமான டார்ச்சருக்குப் பயந்து, பிறகு அவனது அப்பாவித்தனத்தைப் பார்த்து உருகி, தன் வாழ்க்கையையே அவனுக்காகத் தியாகம் செய்வதே அவளது வேலையாக இருக்கும்.

பெண் என்பவள் தன் வாழ்க்கைத் துணையாக ஒரு தகுதியான, அறிவான ஆணைத் தேர்ந்தெடுக்கக் கூடாது; தன்னைத் தெருவில் வைத்து அசிங்கப்படுத்தும் ஒரு பொறுக்கியைத் தத்தெடுத்து, அவனுக்குச் சோறு ஊட்டி, வேலை வாங்கித் தந்து, அவனது வாழ்க்கையைத் திருத்த வேண்டும் என்ற கொடூரமான ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் மிக நளினமாக சமூகத்தில் வேரூன்றச் செய்தது.

7ஜி ரெயின்போ காலனி பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, மன்மத ராசாவின் அண்ணாவை ஒரு ஹிட் இயக்குநராக ஆக்கியிருக்கலாம். சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒரு தலைமுறைத் தமிழர்களைப் பொறுக்கித்தனத்தை நோக்கி அனிச்சையாகப் பின்தொடரும் நோயாளிகளாக மாற்றியதில் இந்தத் திரைப்படத்திற்குப் பெரும் பங்குண்டு. உடலை முறுக்கிக் கொண்டு, மப்பை ஏற்றிக் கொண்டு, பைக்கை ஸ்டார்ட் செய்து, எந்தப் பெண்ணாவது தங்களைத் திட்டி உத்தமனாக்க மாட்டாளா என்று ஒரு தலைமுறையே ஏங்கித் தவித்ததுதான் இத்திரைப்படச் சீரழிவின் உச்சக்கட்டம்.

ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களைத் தெருவில் வைத்து மிரட்டுவதுதான் உண்மையான வாலிபம் என்றும், பொறுக்கியாகத் திரிந்துவிட்டுப் பின் அழுது வடியும் நாயகன்தான் உன்னதமான காதலன் என்றும், ஆண்களைத் திருத்தும் இயந்திரமாகத் தங்களைப் பெண்கள் நினைப்பதே காதல் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற டாஸ்மாக் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****