18 Feb 2019

சு. தமிழ்ச்செல்வியின் அளம் நாவல் - விமர்சனம்



இரங்கல் நிமித்தமான நாவல்
            குடியால் கணவனை இழந்த குடும்பங்கள்,
            வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்கள்,
            கணவன் உயிரோடு இருந்தும் பிரயோஜனம் இல்லாத குடும்பங்கள்,
            குற்றச் செயல்களில் ஈடுபட்டு கணவன் சிறைக்குச் சென்று விட்டதால் அல்லாடும் குடும்பங்கள் என்று பலவகைக் குடும்பங்கள் இந்தப் பூமியில் இருக்கின்றன.
            அப்படிக் கணவன் என்ற அச்சாரம் இல்லாமல் போனாலும் எந்தப் பெண்ணும் வீழ்ந்து விடுவதில்லை. அந்தக் குடும்பத்துக்கு அச்சாரமாய் சுழன்று பெண் வழி நடத்துகிறாள்.
            ஆண் இல்லாவிட்டாலும் பெண் அந்த குடும்பத்தைத் தாங்குகிறாள். சமாளிக்கிறாள். போராடுகிறாள். அதே பெண் இல்லாவிட்டால் அந்தக் குடும்பம் ஒளியிழந்துதான் போகிறது.
            பெண்கள் மென்மையானவர்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் மென்மையானவர்கள்தான். அதே நேரத்தில் அந்தக் குடும்பத்தில் ஆண் இல்லாத போது அவர்கள் எவ்வளவு வலிமையாகச் செயல்படுகிறார்கள். எவ்வளவு உறுதியோடு போராடுகிறார்கள்.
            ஆண் இல்லாத குடும்பத்தைப் பழிக்காத ஊர் ஏது? அந்தப் பழியையெல்லாம் பொறுமையாக சகித்துக் கொண்டு அவர்கள் அப்பழிகளைத் துடைத்து புதிய சரித்திரத்தை எழுதுகிறார்கள்.
            துயரமான சூழ்நிலைகளில் அவர்கள் அழுகிறார்கள். உடைந்து போகிறார்கள். ஆனால் மீண்டெழுகிறார்கள். தங்களைப் பொறுப்பானவர்களாக உணர்ந்து போராடுகிறார்கள். குடும்பம் எனும் அமைப்பின் ஆதாரச்சக்தி அவர்கள்தான்.
            ஜான்சிராணி, வேலுநாச்சியார் என்று சரித்திரப் பெருமையுள்ள நிறைய பெண்கள் இந்தத் தேசத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்களையொத்த வரலாற்றில் கவனம் பெறாத பெண்களும் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிறார்கள். அப்படி அடையாளப்படுத்தாமல் போன எவ்வளவு பெண்களின் பதிவாக சு. தமிழ்ச்செல்வி படைத்துள்ள 'அளம்' நாவல் தமிழின் மிக முக்கியமான படைப்பு.
            எந்த வித பாசாங்கு அற்ற எழுத்து அவருடைய எழுத்து. எதார்த்தம் எதுவோ அதுவே அவரது எழுத்து. உள்ளது உள்ளபடி, அந்த எளிய பெண்மணிகளின் போராட்டத்தை தன் எழுத்தில் முன் வைக்கிறார்.
            அளம் என்ற அச்சொல் உப்பளம் என்ற சொல்லிலிருந்து பிறக்கிறது. அதனால் என்னவோ இந்த நாவலின் கரிப்பை அதன் கண்ணீரிலிருந்தே உணர முடிகிறது.
            நெய்தல் என்ற நிலத்துக்கு இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்ற உரிப்பொருள் தமிழ் இலக்கியத்தில் அப்போதே எழுதப்பட்டு விட்டது. கடற்கரையை ஒட்டிய நெய்தல் நிலமான அளத்தில் நிகழும் இந்நாவலுக்கும் அப்படிப்பட்ட இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்ற உரிப்பொருள் இயல்பாகவே உரித்தாயிருக்கிறது. வெளிநாட்டுக்குக் கப்பலேறிப் போன கணவன் திரும்பி வராமல் போனால் அவளைக் கட்டியப் பெண்ணின் இரங்கல்கள் என்னவென்பதை உப்பளத்தின் நிலவியலோடு இந்நாவல் பேசுகிறது.
            நாவலின் சுருக்கமான கதை என்னவென்றால்,
            சுந்தராம்பாள் கணவன் சுப்பையன். ராமையாப் பிள்ளையோடு கப்பலேறி சிங்கப்பூர் போகிறான். போனவன் போனவன்தான். சுப்பையன் அங்கு எங்கு போனானோ? யாருக்குத் தெரியும். அவர்களைப் பொருத்தவரை சுப்பையன் சிங்கப்பூரில் எங்கோ இருக்கிறான். எப்போதோ வரலாம். வராமலும் போகலாம்.
            கணவன் இல்லாமல் மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு சுந்தராம்பாளின் பாடு எப்படியிருக்கும்? வடிவாம்பாள், ராசாம்பாள், அஞ்சம்மாள் மூன்றும் பெண் பிள்ளைகள். சாப்பாட்டுக்கே கஷ்டம். அன்றாடங்காய்ச்சியாய் அவள் படும் பாடு இருக்கிறதே! கண்விழியில் எறும்பு கடித்தக் கதையாக இருக்கிறது. நாவலில் ஓரிடத்தில் அவள் விழிகளை எறும்புகளும் கடிக்கச் செய்கின்றன.
            இருந்த வீடும் ஒருமுறை புயலில் போகிறது. மறுமுறை பெருவெள்ளத்தில் போகிறது. விதைத்த வெள்ளாமையும் போகிறது.
            அவர்கள் எழ நினைக்கும் ஒவ்வொரு போதும் இயற்கையும் தன் பங்குக்கு சம்மட்டிக் கொண்டு அடிக்கிறது. எல்லா அடிகளையும் வாங்கிக் கொண்டு அவர்கள் மீண்டு எழ முயற்சிக்கிறார்கள்.
            மூத்தப் பெண் வடிவாம்பாளுக்கு கல்யாணம் தள்ளிப் போகிறது. தோஷம் ஒரு காரணம் என்றால் அவளின் கருப்பு மற்றொரு காரணம். ஐம்பது வயது பொன்னையனோடு அவளுக்கு திருமணம் நடந்தாலும் மூன்றாவது மாதமே தாலியறுத்துக் கொண்டு வந்து நிற்கிறாள்.
            அவளுக்கு மறுமணமும் நடக்கிறது. காக்காய் வலிப்பு உள்ள முத்துசாமியோடு. அவனும் குளத்தில் மாடு குளிப்பாட்டும் போது தண்ணீரில் சிக்கி இறந்து போகிறான்.
            இரண்டாவது மகள் ராசாம்பாளுக்கு வேதப்பனோடு திருணம் நடக்கிறது. இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளையோடு நன்றாகப் போகும் அவளது வாழ்க்கை வேதப்பன் இன்னொரு பெண்ணோடு வாழத் துவங்கும் போது முடிவுக்கு வருகிறது.
            மூன்றாவது பெண் அஞ்சம்மாள் அந்த ஊரிலே இருக்கும் பூச்சியை விரும்புகிறாள். பூச்சியும் விரும்புகிறான். பூச்சியின் அம்மாவும் விரும்ப வேண்டுமே! அவள் பேசும் சாடைப் பேச்சில் சுந்தராம்பாள் குடும்பமே நிலைகுழைந்து போகிறது. அவர்களின் ஒரே ஆறுதல் அவர்களுக்குக் கிடைத்த உப்பளம் மட்டுமே.
            அந்த உப்பளமே சுந்தராம்பாளுக்கு கணவனைப் போல துணை நிற்கிறது. அவளின் மூன்று பெண் பிள்ளைகளுக்கும் தந்தையைப் போல காத்து நிற்கிறது. ராசாம்பாளின் மூன்று பிள்ளைகளுமே இப்போது அந்தக் குடும்பத்தின் ஒரே ஆறுதல். வெள்ளி முளைக்காத அந்த இரவுப் பொழுதில் அந்தப் பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு அவர்கள் அளத்துக்குப் போகிறார்கள். அந்த அளத்தில் அவர்கள் உழைக்கிறார்கள். அந்த அளத்தில் விளையும் உப்பில் அவர்களின் வியர்வையும் கண்ணீரும் கலந்திருக்கும்தானே. நாம் தினம் உண்ணும் உப்பில் ஏதோ ஒரு சுந்தராம்பாள், வடிவாம்பாள், ரசாம்பாள், அஞ்சம்மாளின் வியர்வையும், கண்ணீரும் இருக்கவே செய்யும்.
            திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரே நிலவியல் பகுதியைச் சார்ந்தவைகள்தான். இங்கு இருவகைப் பேச்சு முறைகளைக் காண முடியும். சுருக்கமாகச் சொன்னால் 'அவர்கள், இவர்கள்' என்பதை 'அவங்க, இவங்க' எனும் பேச்சு மொழி கிழக்கேச் செல்ல செல்ல அதாவது திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டையை நோக்கிச் செல்ல செல்ல 'அவ்வோ, இவ்வோ' என்பதாக மாற்றமடையும். பெண் பிள்ளைகளைத் தங்கை எனும் பொருள்படும் வகையில் தங்கச்சி என்பார்கள். அதுவே மூன்று பெண் பிள்ளைகள் என்றால் மூத்த தங்கை, நடு தங்கை, கடைக்குட்டி தங்கை என்பதை பெரியங்கச்சி, நடு தங்கச்சி, சின்னங்கச்சி என்பார்கள். இந்த வட்டார மொழிப் பேச்சுகளையெல்லாம் சு.தமிழ்ச்செல்வி தன் நாவலில் அருமையாகப் பதிவு செய்துள்ளார். 'அளம்' வட்டாரவியல் வாழ்வியல் நாவல். நடப்பியல் நாவல் என்றும் சொல்லலாம். அதுதான் நாட்டில் பல பெண்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...