30 Jun 2022

சொல்லத்தான் வார்த்தைகள்

சொல்லத்தான் வார்த்தைகள்

கடவுள் கற்பனையில்லை என்கிறார்கள்

இருந்து விட்டுப் போகட்டும்

புலவர்கள் என்றால் சர்ச்சை இருக்கும் என்கிறார்கள்

எவ்வளவோ சர்ச்சைகளில் அதுவும் இருக்கட்டும்

பணம் மட்டும் வாழ்க்கையில்லை என்கிறார்கள்

அதுவும் அப்படியே இருக்கட்டும்

சாலையில் இருக்கும் மரங்களை வெட்டுபவர்கள்

வீட்டுக்கொரு மரம் வளர்க்க வேண்டுமென்கிறார்கள்

அவர்கள் சொல்வது போல ஆகட்டும்

வைகை எப்போதும் கடலைச் சேராது என்கிறார்கள்

பரவாயில்லை சேராமல் இருக்கட்டும்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்கிறார்கள்

வாழ்வு உண்டாகட்டும்

வாழ்வில் அப்படியே மங்கலம் உண்டாகட்டும்

பேசத்தானே வாய்

சொல்லத்தானே வார்த்தைகள்

சொல்பவர்களுக்குத் தெரியும் வார்த்தையின் சால்ஜாப்புகள்

சொல்லாமல் இருக்க முடியுமா வார்த்தைகளை வைத்துக் கொண்டு

உண்மையோ பொய்மையோ

பலிக்கிறதோ பலிக்கவில்லையோ

நடக்கிறதோ நடக்கவில்லையோ

பேசித்தான் ஆக வேண்டும்

சொல்லித்தான் ஆக வேண்டும் வார்த்தைகளை

பேசாமலிருப்பது எல்லாருக்கும் ஆகாது

சொல்லாமல் விடுவது பல நேரங்களில் கை கூடாது

*****

பொருந்தாப் பொருத்தம்

பொருந்தாப் பொருத்தம்

நுட்ப ரீதியாகப் பார்த்தால் அடுத்த கட்டம்

துணிச்சலான சமகாலச் சோதனைப் பதிவு

கலை ஞானம் விசய ஞானம் இரண்டின் கலவை

பிறகேன் பினாத்திக் கொண்டிருக்கிறாய்

செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்

நீ ஏறும் இடத்திற்கு

எல்லாரும் வர வேண்டும் ஏன் நினைக்கிறாய்

உனக்குப் பிடித்த இடத்தில்

இருக்க வேண்டும் என நீ நினைக்கிறாய்

அவர்களுக்குப் பிடித்த இடத்தில்

அவர்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்

உனது இடம் அவர்களுக்குப் பிடித்தால்

அவர்களாக வருவார்கள்

அவரவர் ஆசைக்கு

அவரவர் வாழ்க்கையைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்

உனது ஆசைக்கு

உன் வாழ்க்கையைச் செலுத்திக் கொண்டிருக்கிறாய்

உனது ஆசைதான் சிறந்தது என்றால்

பிறத்தியார் ஆசை மட்டமா என்ன

அவரவர் முகமூடியைக் கழற்றினால்தான் தெரியும்

முகமூடிக்குப் பொருந்துவது

முகத்திற்குப் பொருந்தாது என்பது

*****

29 Jun 2022

இல்லாத நாட்களில் இருப்பதைக் காட்டி

இல்லாத நாட்களில் இருப்பதைக் காட்டி

அடிக்கடி நிலவைக் காட்டிச் சோறூட்ட

அலுத்துக் கொண்ட நிலா

அமாவாசை நாளில் காணாமல் போனது

காணாமல் போன நிலாவை

யாரும் தேடாதது கண்டு

யாரைக் காட்டிச் சோறூட்டுகிறார்கள் என்று

ஒவ்வொரு நாளாய் எட்டிப் பார்த்தது

இருக்கின்ற நாளில்

இருப்பதைக் காட்டிச் சோறூட்டுபவர்கள்

இல்லாத நாளில்

இருக்கின்ற வேறொன்றைக் காட்டிச்

சோறூட்டுவதைப் பார்த்த பின்

யாரை நம்பியும் யாரும் சோறூட்டுவதில்லை

என்பதைப் புரிந்து கொண்டது

இப்போதெல்லாம் நிலா

அதுவாகத் தோன்றுகிறது

அதுவாக மறைகிறது

சில நாட்களில் காணாமல் போகிறது

இருக்கின்ற நாளில் நிலவைக் காட்டிச்

சோறூட்டுபவர்கள்

இல்லாத நாட்களில் இருட்டைக் காட்டியும்

சோறூட்டுகிறார்கள்

*****

அந்தக் காலத்தில் எல்லாம் இருந்தன

அந்தக் காலத்தில் எல்லாம் இருந்தன

தூக்கம் வராத நாட்களில்

கும்பர்கண ஞாபகம் வந்து விடுகிறது

அன்ன ஆகாரம் இல்லாமல்

தூக்க மாத்திரை இல்லாமல்

சுழலும் மின்விசிறி இல்லாமல்

குளிர்சாதன வசதி இல்லாமல்

கொசுக்கடி புழுக்கம் கொரோனா

கடன் இன்ஸ்டால்மெண்ட் ரெகவரி

பிக்கல் பிடுங்கல் நினைவின்றி

ஆறு மாத காலம் உறங்குவது சாதாரணமா

அந்தக் காலத்தில் எல்லாம்

அளவுக்கு அதிகமாகவே இருந்திருக்கிறது

சந்தோசம் மகிழ்ச்சி தூக்கம் எல்லாம்

இன்னும் நிறைய எல்லாம் எல்லாம்

*****

நான் முதன் முதலில் நகைக்கடைக்குச் சென்ற தினம்

நான் முதன் முதலில் நகைக்கடைக்குச் சென்ற தினம்

அட்சய திரிதியை என்றால் நகை கடைகளுக்கு வாழை மரங்கள் வரை கட்டி வரவேற்பு வழங்குகிறார்கள். நான் வாங்கும் நாளில் எல்லாம் சாதாரண வரவேற்புதான்.

பரவாயில்லை கிராமுக்கு பத்தோ இருபதோ குறைத்துக் கொண்டால் கூட போதும். வாங்கிக் கொண்டு போகும் வழியில் ஒரு டீயோ, டிபனோ சாப்பிட்டுக் கொள்வேன்.

ஒட்ட துடைத்து அனுப்பினால் வெறும் வயிற்றோடு வீடு திரும்பல்தான். வீடு திரும்பல் என்பது சாதாரணமா என்ன? வாங்குபவரின் வயிறு நிறைந்தால் அமோக வியாபாரம் செய்யப் போவது கடைக்காரர்களே!

*

அட்சய திரிதியை தினத்துக்கு நிறைய சிறப்புகள் இருக்கின்றன.

ஊழியில் அழிந்த உலகத்தை இறைவன் படைத்த தினம்

இந்தத் தினம்தான்

திருமாலின் திருமார்பில் திருமகள் நீங்காதிருக்கும்

வரம் பெற்ற தினம்

இந்தத் தினம்தான்

வியாசர் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதிய தினம்

இந்தத் தினம்தான்

அவல் கொடுத்த குசேலரைக் கிருஷ்ணர் குபேரனாக்கிய தினம்

இந்தத் தினம்தான்

கங்கை பூமிக்கு வந்த தினம்

இந்தத் தினம்தான்

பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்ற தினம்

இந்தத் தினம்தான்

முக்கியமான ஒரு சங்கதி விடுபட்டிருக்கிறது பாருங்கள்

நான் முதன் முதலில்

நகைக்கடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தினம்

இந்தத் தினம்தான்

அட்சய திரிதியை யாரால் மறக்க முடியும் சொல்லுங்கள்

அட்சய திரிதியை வருகிறது என்று தெரிந்தால்

ஒரு வாரத்திற்கு முன்பே

கந்துவட்டி கந்தசாமியிடம் அட்வான்ஸ் புக்கிங்கில்

ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை

*****

28 Jun 2022

தீர்த்த கரையினிலே சினிமாவின் தெற்கு மூலையிலே

தீர்த்த கரையினிலே சினிமாவின் தெற்கு மூலையிலே

டாட்டூ குத்தாதே

அழிக்க முடியாது என்றாய்

இதயத்திலிருந்து அழித்த பிறகு

டாட்டூ என்ன டாட்டூ

அட போ பைத்தியமே

ஆயிரம் டாட்டூ குத்தி

ஆயிரத்தையும் அழித்தால்

பரணி பாடலாம் தெரியுமோ

*

நானென்றால் சமந்தாவைப் பிரிந்திருக்க மாட்டேன்

நாக சைதன்யா பிரிந்து விட்டார்

பிரிவில் நிம்மதியும் அமைதியும் தேடுபவர்கள்

முன்பு சேர்வதில் சந்தோஷத்தைக் கண்டவர்கள்

*

வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்துக் கொள்ளச் சொல்வார் வைரமுத்து

எட்டாம் வாய்பாடு தெரிந்தவர்கள் அப்படியே பிரித்துக் கொள்ளலாம்

தெரியாதவர்கள்

ஒவ்வொரு எட்டிலும் ஒரு அரையைக் குறைத்துக் குறைத்துப் பிரித்துக் கொள்ளலாம்

*

பார்த்திபன் வித்தியாச வித்தியாசமாகப் படம் எடுக்கிறார்

நாம் வித்தியாசங்களைக் கண்டு கொள்ளாமல்

மசாலாவைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் மக்கள்

கொஞ்சம் வித்தியாசமான மசாலா கொடுங்கள் பார்த்திபன்

நன்றாகச் சாப்பிடுவார்கள் நம் மக்கள்

உள்ளே வெளியே என்று அலைவார்கள்

*****

அந்தப் பிணங்கள் அப்படியே நாறிக் கொண்டு கிடக்கட்டும்


அந்தப் பிணங்கள் அப்படியே நாறிக் கொண்டு கிடக்கட்டும்

            சில சுயநலத்தின் மையப்புள்ளி இருக்கிறதே, அது மிகப் பெரிய உதவிகளையும் சாதாரணமாக்கி விடுகிறது. அத்துடன் கோணிக் குறுகவும் வைத்து விடுகிறது.

            சாலையில் குறுக்காகக் கடந்த ஒருவரை அதிவேகமாக வந்த வாகனம் மோதவிருந்த நிலையில் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பின் அவர் சொன்னார், “அட அந்தாண்ட போ. மேலே மேலே வந்து ஏறிகிட்டு” என்று.

            காப்பாற்றியவர் பரதேசிக் கொலத்தில் இருந்ததால் அவருக்கு வந்த கோபம் அது. நல்ல விதமாக டிப்டாப்பாக ஆடையுடுத்திச் செல்லும் ஒருவர் வந்து காப்பாற்றியிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பார் போல. எதிர்பார்ப்பு நிறைவேறாத ஆற்றாமையில் அவர் சொன்ன வார்த்தை கங்குகள்.

            அத்துடன் பரதேசிக் கோல மனிதரின் அழுக்கு தன் மீது ஒட்டு விடுமோ என்ற சுயநலத்தின் மையப்புள்ளி உயிரைக் காப்பாற்றிய அவ்வளவு பெரிய உதவியையும் எவ்வளவு சாதாரணமாக்கி விட்டது.

            பரதேசிக் கோலத்தில் இருந்த மனிதர் ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டார். “ரொம்ப ஆச்சாரமா இருப்பார் போல. தெரியாத்தனமா போய் தொட்டு இந்தாண்ட இழுத்துட்டேன். தப்பு பண்ணிட்டேன்னுங்க”. ஆமாம் கட்டையில் போய் தொலை என விட்டிருக்க வேண்டும்.

            சில மனிதர்கள் அப்படித்தான் போல. அவர்கள் பிணமாகிப் போகும் வேளையில் கொஞ்சம் உயிர் கொடுத்துப் பார்த்தால் சுடலையில் எரிப்பவரைப் பார்த்தும், “அடச் சீ! அந்தாண்ட போ!” என்றுதான் சொல்வார்கள் போல.

            அவர்களை அந்தப் பிணங்களை அப்படியே விட்டு விட வேண்டியதுதான், நாறிக் கொண்டு கிடக்கட்டும் என்று. அந்த துர்நாற்றத்தையும் நாம்தான் சுவாசிக்க வேண்டும் என்கிறீர்களா? அவர்கள் உயிரோடு இருந்த போது இருந்த துர்நாற்றத்தை விட இந்த துர்நாற்றம் அவ்வளவு மோசமாகவா இருந்து விடப் போகிறது.

            நாம் சிறு சிறு உதவிகளால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேருதவிகள் உயிரினும் ஓம்பப்பட வேண்டியது மற்றும் போற்றப்பட வேண்டியது. அத்தனையையும் மறைப்பது சுயநலம்.

            அந்தச் சுயநலம்தான் சாதி.

            நம் அழுக்குகள் அத்தனையையும் நம் சுயநலம்தானே, சாதிதானே.

            நம் சுயநலத்தை அடை காத்துக் கொண்டிருக்கும் சாதிப்பித்தை உதறித் தள்ளினால் மிகப் பெரிய உலகம் கண்ணுக்குத் தெரியும்.

            அதை உதறித் தள்ளாத வரை நம் சிறிய உலகமே நம் கண்களில் காலம் முழுவதும் உறுத்திக் கொண்டிருக்கும்.

*****

சம்சார சங்கீதம் அப்பியாசம் செய்பவர்களுக்காக…

சம்சார சங்கீதம் அப்பியாசம் செய்பவர்களுக்காக…

            உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் சண்டை வரும் போது அட்ஜஸ்ட் செய்வீர்களா? காம்பரமைஸ் செய்வீர்களா? என்றார்கள்.

            நான் உப்புமா செய்வேன் என்றாள் மனைவி.

            நீடித்து நிலைத்து நிற்கும் பந்தத்தின் ரகசியம் இதுவன்றோ.

*

            மோதிரம் காதலின் சின்னமாம். வருடா வருடம் பிறந்த நாள் வரும் போது காதலின் சின்னம் ஒன்று வேண்டும் என்கிறாள் கட்டியதால் கட்டிக் கொண்டவள். முப்பதாயிரத்துக்குக் குறைய மாட்டேன் என்கிறான் சார் கடைக்காரன்.

            கவரிங்கில் அண்டர்கவரிங் பண்ணினால் எப்படிதான் கண்டுபிடிக்கிறாளோ, ஆச்சரியமாக இருக்கிறது மாட்டிக் கொண்டு அகப்பட்டுக் கொள்கிறேன். அப்புறம் சிக்கியதால் சின்னாபின்னமாக ஆகிறேன்.

*

            முதலில் என்னைச் சொல்லிக் கொண்டு பிறகு அவளைச் சொன்னால் கோபப்பட மாட்டாள்.

            ஆகவே சொல்கிறேன். என்னிடமும் சின்ன சின்ன மைனஸ்கள் இருக்கின்றன. அவளிடமும்தான்.

            அவற்றை நாங்கள் சின்ன சின்ன அழகுகளாகக் காண்கிறோம்.

            பெரிய மைனஸ்களைப் பேரழகுகளாகக் காண்கிறோம். சுற்றியுள்ளவர்களுக்கு அப்படித் தெரியவில்லை போலும். சரியான விவஸ்தை கெட்டவர்கள் என்கிறார்கள்.

            மைனஸ்களைப் பொருட்படுத்தாமல் சண்டையிட்டுக் கொண்டால் விவஸ்தை உள்ளவர்கள் என்று சொல்வார்களோ.

*

            நான் ஆசையாக எதையாவது கேட்டால் ஆசை, தோசை, அப்பளம், வடை என்பாள். அவ்வளவெல்லாம் வேண்டாம், இப்போதுள்ள பசிக்கு ஒரு தோசை மட்டும் போதும் என்பேன். எனக்கு ரொம்பவெல்லாம் யாரையும் சிரமப்படுத்த பிடிக்காது. இப்படித்தான் எனக்குப் பசிக்கிறது என்பதைச் சாமர்த்தியமாகச் சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கிறேன். சம்சார சங்கீதம் அப்பியாசம் செய்பவர்கள் இதையும் அப்பியாசம் பண்ணிப் பாருங்கள். ராகமும் தாளமும் ஏகப் பொருத்தமாக இருக்கும்.

*****

25 Jun 2022

நான் ஸ்டாப் நாட்டு நடப்புகள்

நான் ஸ்டாப் நாட்டு நடப்புகள்

            மழை அதிகம் பெய்தால் விடுமுறை.

            வெயில் அதிகம் அடித்தால் விடுமுறை.

            அப்போது வானத்தின் மைண்ட் வாய்ஸ் எனக்கு இப்படிக் கேட்டது, “என்னை என்னத்தான்டா பண்ணச் சொல்றீங்க?” பாவம்தான் வானம்.

            சாயுங்காலம் பார்த்த போது அழுதழுது அதன் முகம் சிவந்திருந்தது.

*

            குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரசாங்க அறிவிப்புகள் மீது ஒரு புதுவித ஈர்ப்பும், எதிர்பார்ப்பும் வந்து விட்டது. அவ்வபோது அரசின் அறிவிப்புகளை எதிர்பார்த்து செய்திச் சேனல்களை அவ்வளவு ஆக்ரோஷமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

            வீட்டிலுள்ள நண்டு, சுண்டு, நாவர வண்டிலிருந்து பல் கழன்ற பாட்டி வரை டிவி பார்த்துக் கொண்டிருந்தால் நான் புரிந்து கொள்வேன் அரசின் முக்கிய அறிவிப்பு ஒன்று வரப் போகிறதென்று.

            குழந்தைகளைக் கேட்டால் சொல்வார்கள், “பரீட்சையை ரத்துப் பண்ணப் போறாங்களான்னு பாத்துக்கிட்டு இருக்கோம்.”

            பெரியவர்களைக் கேட்டால் சொல்வார்கள், “பயிர்க்கடனை ரத்து செய்யப் போகிறார்களான்னு பாத்துக்கிட்டு இருக்கோம்.”

            குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புரிந்திருக்கிறது, அரசாங்கம் என்பது ரத்து செய்வதற்காகத்தான் இருக்கிறதென்று.

*

            எப்போதாவது யாராவது ஒருவர் என்னிடம் எதையாவது பற்றிக் கேட்பார்கள்.

            அப்படி நாட்டிலுள்ள புதுமை விரும்பிகளைப் பற்றி என்ன நினைக்கீறீர்கள் என்று ஒருவர் கேட்டார். நான் சொன்னேன், நீ என்ன புதுமை செய்தால் என்ன, அவரவருக்கும் அவரவர் வருமானம்தான் முக்கியம்.

            அப்படியானால் நாட்டிலுள்ள பழமை விரும்பிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். நான் சொன்னேன், நீ என்னதான் பழமை விரும்பியாக இருந்தால் என்ன, அவரவருக்கும் அவரவர் வருமானம்தான் முக்கியம்.

            அப்படியானால் நான் எந்த விரும்பியாக இருக்க வேண்டும் என்றார். நீ வருமான விரும்பியாக இரு என்றேன்.

*****

தமிழர் என்றோர் இனமுண்டு – தனியே அவருக்கோர் சினிமா உண்டு

தமிழர் என்றோர் இனமுண்டு – தனியே அவருக்கோர் சினிமா உண்டு

            தமிழகம் முழுவதும் மின்சாரம் பரவலாகாத இருண்ட காலத்தில் நல்ல படமோ, கெட்ட படமோ எல்லா படத்தையும் மாய்ந்து மாய்ந்து தமிழ் மக்கள் பார்த்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சில இருப்பதாக திரை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

            அப்போது தியேட்டர் இருக்கும் ஊரில் மின்சாரம் இருந்தது. மின்சாரம் இருந்த ஊர்களில் தியேட்டர் இருந்தது. பள்ளிக்கூடம் இருப்பதை விட ஊரில் தியேட்டர் இருப்பதை முக்கியமாக மக்கள் கருதியிருக்கிறார்கள். ஊருக்குள் தியேட்டர் இருந்தால் சொர்க்கம் இருப்பதாய் நினைத்து மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். 

            நாள் முழுவதும் பாடுபட்டு நான்கு காசு சம்பாதித்து டூரிங் கொட்டகையில் ஒரு படம் பார்த்தால் பிறவிப் பயனுக்கு அது போதும் என்று மக்கள் மகிழ்வோடு வாழ்ந்ததாக அக்காலத்தில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட சன்சிமோ புகாகோ போன்ற உதவாக்கரை ஊர் சுற்றிப் பயணிகள் தங்கள் நாட்குறிப்பில் கவனமாகக் குறித்து வைத்திருக்கிறார்கள். 

            தூர்தர்ஷன் வரும் வரை அப்படி ஒரு நிலை இருந்திருக்கிறது. தூர்தர்ஷன் வந்த பிறகு வீட்டுக்கு ஒரு கழிவறை இல்லை என்றாலும் எப்படியாவது வீட்டுக்கு ஒரு டிவிப் பெட்டியை வாங்கி வைப்பது மக்களின் லட்சியக் கனவாக இருந்தது. மேலும் தூர்தர்ஷன் வந்த போது ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தியேட்டர் வந்தததாய் நினைத்து மக்கள் ஆனந்த கூத்தாடியிருக்கிறார்கள்.

            இந்தி படம் என்றாலும் தெலுங்கு படம் என்றாலும் மலையாள படம் என்றாலும் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வோடு ஒன்றிப் படம் பார்த்தார்கள். பிறமொழி படங்களை டப்பிங் பண்ணி போட வேண்டிய அவசியம் எல்லாம் இல்லாமல் இருந்ததாக அக்காலத்தில் டிவியைப் பார்த்தே இந்தி கற்றுக் கொண்ட நல்லாம்பாட்டி நானாமுத்து கல்லாடனார் தெரிவிக்கிறார்.

            கால ஓட்டத்தில் கேபிள் டிவியும் ரிமோட்டும் கையில் வந்த போது ஒரு டிவியானது ஏகப்பட்ட சேனல்களை மாற்றிக் கொள்ள முடியாமல் அல்லாட ஆரம்பித்தது. ஒரு வீட்டில் இருந்த ஒரு டிவி ஒன்பது மனிதர்களால் பல்வேறு விதமாகப் பலாத்காரம் செய்யப்பட்டது.

            டிவிக்களின் பலாத்கார வழக்கு அப்போது பெரிதாக விவாதிக்கப்பட்டு வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு டிவி என்ற தீர்ப்பு வெளிவந்தது அப்போது பெரிதாகப் பார்க்கப்பட்டது.

            அந்தத் தீர்ப்பின் விளைவாக அதுவரை சினிமா பார்த்த பெரியவர்கள் மெகா சீரியல் பார்க்கத் தொடங்கினார்கள். தம்பதியர்கள் மியூசிக் சேனல் பார்க்க ஆரம்பித்தார்கள். விடலையர்கள் பேஷன் டிவி, ஸ்டார் டிவி என்று சர்வதேச தரத்திற்குத் தங்களை முன்னேற்றிக் கொள்ள முயன்றார்கள். குழந்தைகள் சுட்டி டிவி பார்க்க தொடங்கினார்கள். தாத்தாக்களும் பாட்டிகளும் முரசு டிவி பார்க்கத் தொடங்கினார்கள்.

            மொபைல்களின் வருகை டிவிக்களை ஓரம் கட்டத் தொடங்கிய போது ஆப்புகள் ஆப்படிக்கத் தொடங்கின. ஒரு படத்தை ஒரு நிமிடம் பார்ப்பது கூட கடினமாகத் தொடங்கிய போது டிரெய்லர்கள் டீசர்களாகச் சுருக்கப் பட்டன. டீசர்களைப் பார்த்தே மக்கள் கதை சொல்லத் தொடங்கினார்கள்.

            எந்தப் படம் எந்தெந்த பிறநாட்டு படங்களிலிருந்து சுட்டெடுத்து வறுத்துப் பொரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது என்பதைச் சுட சுட வழங்கினார்கள்.

            இப்போது படம் நன்றாக இருந்தால் மட்டும் ரசித்துப் பார்க்கிறார்கள். இல்லாது போனால் விமர்சனம் செய்து ரசிக்கிறார்கள்.

            ஆனால் இப்போதும் எம்.ஜி.ஆர். – சிவாஜி படங்கள் போல்தான் ரஜினி – கமல் மற்றும் விஜய் – அஜித் படங்கள் கொண்டாடப்படுகின்றன.

            எம்.ஜி.ஆர். – சிவாஜிப் படங்களை அப்போது பிறமொழிப் படங்கள் வந்து முறியடித்ததில்லை. தற்போது விஜய் – அஜித் படங்களை கே.ஜி.எப். – ஆர்.ஆர்.ஆர். போன்ற படங்கள் வந்து முறியடிக்கின்றன.

            எம்.ஜி.ஆர். – சிவாஜி காலத்தில் கிண்டிய மசாலாக்களை அதே தரத்துடன் பாரம்பாரியம் மாறாத நிறம், சுவை, திடத்துடன் விஜய் – அஜித்தும் கிண்டி வருவது தமிழ் சினிமாவின் பாரம்பரியத்தையும் மரபையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு என்று பொருள்பட நாமக்கல் கவிஞர் பாடிய பாடல் வரிகளுக்கு என்றும் பெருமை சேர்ப்பதாகத் தமிழ்ச் சமூகம் நடந்து கொள்வதாகப் புளாங்காகிதம் கொள்கிறது.

*****

24 Jun 2022

காற்றின்றிச் சூழலும் காற்றாடி

காற்றின்றிச் சூழலும் காற்றாடி

            காற்றாடி சுற்றுகிறது. அதன் கீழே உள்ள ஒன்றரை அல்லது ஒன்றே முக்கால் சதுர அடிக்கு மட்டும் காற்று உசும்புகிறது.

            காற்றாடி கணக்காய்ச் சுழன்று கணக்காய்க் காற்றைத் தருகிறது. அதற்கு மேல் காற்றைச் சுழலச் செய்ய வேறெங்கும் காற்றில்லை. சமயங்களில் அந்த அளவுக்குக் காற்றாடியைச் சுழலச் செய்ய மின்சாரமும் இல்லை. காற்றாடி வியர்த்துப் போய் வியர்வை ஒட்டடை பெருக்கெடுக்க ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.

            ஒவ்வொருவர் தலைக்கும் மேல் ஒரு காற்றாடி சுழன்றால் நிலைமையைச் சமாளிக்கலாம். அதற்குத் தேவையான மின்சாரத்தை நாம் எங்கிருந்து கொண்டு வரலாம்?

            ஒரு காற்றாடியை இருவர் பகிர்ந்து கொள்வதெல்லாம் வேலைக்கு ஆகாது. அப்படிப் பகிர்ந்து கொண்டால் இன்னொருவர் உடல் தொப்பல்தான். பகிர்ந்து கொள்ளும் காற்று பத்து மடங்கு உஷ்ண பிரஜையாகி விடும்.

            காற்றோட்டம் குறைந்திருக்கிறது. திரைப்படங்களில் காட்டுவார்களே, காற்று நின்றது போல ஒரு காட்சியை. அப்படி ஒரு காட்சியைத்தான் இந்தக் கோடையில் நாடெங்கும், ஊரெங்கும், தெருவெங்கும், சந்து பொந்து எங்கும் காண முடிகிறது.

            சில நேரங்களில் சுழன்றடிக்கும் காற்று இருக்கிறதே, அது எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு செல்கிறது. அது சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்று. காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் பாய்ந்தது போல என்ற உவமையைப் புரிந்து கொள்ள அந்தக் காற்று உதவுகிறது. பிடுங்கப்பட்ட காற்று பிடுங்கிக் கொண்டு போவதைப் போல அப்படி ஒரு சுழற்சி.

            அரசியல்வாதிகளின் தேர்தல் பரப்புரைகளைச் சூறாவளி சுற்றுப்பயணம் என்று சொல்லி பழக்கப்பட்டவர்கள் அல்லவா நாம். இப்போது இந்தச் சூறாவளிக் காற்றைப் பார்க்கும் போது காற்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறது என்று தாராளமாகச் சொல்லலாம். இந்த சுற்றுப்பயணம் எந்த ஓட்டைப் பிரிப்பதற்கு என்பதுதான் தெரியவில்லை.

*****

2022 இல் இருந்து இருந்து கொண்டு 2022 ஐ எழுதுதல்

2022 இல் இருந்து இருந்து கொண்டு 2022 ஐ எழுதுதல்

            2022 வது ஆண்டில் இருந்து கொண்டு 2022 வது ஆண்டைப் பற்றி எழுதக் கூடாது. அப்படி எழுதுவது இலக்கியமாகாதுஎன்று எழுத ஆசைப்பட்ட நாளிலிருந்து ஓர் இலக்கிய நண்பர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அது நாட்குறிப்பாகி விடும், பிரசுரம் ஆனால் ஒரு செய்தியாகி விடும் என்று என்னை எச்சரித்திருக்கிறார்.

            எச்சரிக்கையை மீறுவது தர்ம அதர்மம் மற்றும் சட்ட அசட்டம் மற்றும் நியாய அநியாயம் மற்றும் நட்பு விரோதம்.

            எச்சரிக்கையையும் மீறிதான் 2022 வது ஆண்டைப் பற்றி 2022 வது ஆண்டிலேயே எழுதுகிறேன். இது எப்படி என்றால் தன்னைச் சுட வரும் எதிரியிடம் சுடுடா என்று எதிரில் போய் நிற்பது போன்றதாகும். சுட்டு விட்டால் அதுவும் குறி பார்த்து சுட்டு விட்டால் அது தோசையையோ, சப்பாத்தியைச் சுடுதல் போன்றதல்ல. இங்கு சுடுதல் என்பது துப்பாக்கியால் சுடுதல்.

            துப்பாக்கியின் சுடுதலைப் போல வெயிலின் சுடுதலும் இருப்பதால் தைரியம் இயற்கையாகப் பிறந்திருக்க வேண்டும். அப்படி ஒரு தைரியத்தில் என்னையும் அறியாமல் இது எழுதப்படுகிறதோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இப்படி ஒரு சுடுதலை அதாவது சூட்டை அதாவது துப்பாக்கிச் சூட்டைப் போன்ற சூட்டை வேறெந்த ஏப்ரல், மே மாதங்களில் நான் அனுபவித்ததில்லை. இந்த 2022 இன் ஏப்ரல், மே மாதங்களே என்னை வெயில் என்ற வாணலியில் போட்டு கிள்ளுக் கீரையை வதக்குவது போல வதக்குகிறது.

            ஒரு சூளையில் அடைபட்ட செங்கல்லைப் போல நான் சுடப்படுவது நன்றாக எனக்குத் தெரிகிறது. துப்பாக்கியால் சுடுபவர் ஒரு பக்கமாகச் சுடுவார். இந்த வெயில் ரொம்பவே வித்தியாசம். நானா பக்கங்களிலிருந்தும் சுடுகிறது. சுட்டுச் சுட்டுச் சல்லடையாய்த் துளைக்கிறது. ஒவ்வொரு துளையிலிருந்தும் இரத்தத்தைப் போல வியர்வை. வழிந்து கொட்டுகிறது.

            துப்பாக்கியால் சுட்டவரை ஐ.சி.யு.வில் வைத்துக் காப்பாற்ற முயல்வதைப் போல வெயில் சுட்ட என்னை ஏ.சி.யில் வைத்துக் கொஞ்சம் ஆசுவாசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்காகவே கோடை பிறந்தால் ஏ.சி. உள்ள கடைகளாகப் பார்த்து ஷாப்பிங் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். பார்ப்பவர்களுக்கு அது ஷாப்பிங். எனக்கு மட்டும்தான் தெரியும் அது வெயிலிலிருந்து எஸ்கேப்பிங்.

            ஊட்டி, கொடைக்கானல் தூரம். காசு பிடிக்கும் விவகாரம். ரொம்ப காசு கேட்டால் பழைய சோற்றைத் தின்று விட்டு கருவை மரத்தடியில் போய் படுடா என்று பார்சல் செய்து விடுவார்கள். கருவ மரத்தடியில் பெரிய எறும்புகள் வருவதைப் போல ஊட்டி, கொடைக்கானல் கனவுகள் வாராது.

            மேற்படி பிரச்சனை பந்து மித்ர சகிதம் பார்த்தால் ஏசி கடைகள் பக்கம். ஏசி பஸ்ஸில் ஏறி ஏசி கடைகளில் இறங்கி இரண்டு மூன்று மணி நேரத்துக்கு ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுவது போல சுற்றி விட்டு ஐந்து ரூபாய்க்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டையோ, இரண்டு ரூபாய்க்கு ஒரு சாக்லேட்டை வாங்கினாலோ வந்த சோலி முடிந்து வெயில் காலி என்ற சந்தோஷப் பெருக்கு.

            2022 இன் இந்த அனுபவத்தை 2022 இல் எழுத இன்னொரு முக்கிய காரணம், 2022 இல் இருப்போர்க்குப் பயன்பட வேண்டும் என்பதும்தான். 2023 பிறந்து விட்டால் அதற்கான அணுகுமுறை வேறாகத்தான் இருக்கும். அப்போது 2022 ஐ எழுதினால் கால எந்திரத்தில் பயணித்து வந்தா நீங்கள் 2022 இல் அனுபவித்த வெப்பத்தைத் தணித்துக் கொள்ள முடியும்?

            இந்த எழுத்து நல்ல இலக்கியம் ஆகா விட்டாலும் நான்கு பேருக்குப் பயன்பட்டால் போதும். அந்த போதும் என்பதை நினைத்துதான் போதாமையைப் பொருட்படுத்தாமல் எழுதுகிறேன்.

            உங்கள் வெப்பச் சூழல்தணியட்டும். அத்துடன் மனப்புழுக்கம் குறையட்டும்.

*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...