Showing posts with label Dog. Show all posts
Showing posts with label Dog. Show all posts

12 Jan 2025

காட்டுத்தீப் போல பரவும் பேச்சு

காட்டுத்தீப் போல பரவும் பேச்சு

நடுரோட்டில் உலாத்திக் கொண்டு

தெருவோரத்தில் துயில் கொள்ளும்

நாய்க்கு நான்கு குட்டிகள் பிறந்தன

அழகான குட்டிகள் இரண்டு

அசிங்கமான குட்டிகள் இரண்டு

நான்காவது நாளில்

அழகான குட்டிகள் இரண்டும் காணாமல் போயின

அசிங்கமான குட்டிகள் இரண்டும்

தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தன

காட்டுத்தீ போலப் பரவிய செய்தி கேட்டு

அழகான குட்டிகள் இரண்டும்

அதிர்ஷ்டம் செய்தவை என்று பேசிக் கொண்டனர்

தாய்ப்பால் குடிக்க

அசிங்கமாய்ப் பிறக்கும் அதிர்ஷ்டம் வேண்டும் போல

என்பதைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை

*****

3 Dec 2024

ஒவ்வொரு நாய்க்கும் ஒரு கல்

பிரார்த்தனை

இன்றைக்கு எதுமில்லை

தேடி வந்து நாயே ஓடிப் போ

இன்று போய் நாளை வா

நாளை இல்லையென்றால் மறுநாள் வா

வராமல் இருந்து விடாதே

கைக்கு எது எப்போது கிடைக்கும் என்று

யாருக்கு என்ன தெரியும்

இப்போது ஒரு கல் கிடைத்திருக்கிறது

உன்னை நோக்கித் தூக்கி எறிகிறேன்

அதை எடுத்துக் கொள்வதற்கு மனமில்லாது

பயந்து ஓடுகிறாய்

ஒரு ரொட்டித் துண்டு கிடைக்கும் போது

உன்னைத் தேடி வருகிறேன்

நீ வேறு யாரையும் தேடிப் போகாமல் இருக்க வேண்டும்

என்ற பிரார்த்தனையோடு

*****