Showing posts with label Cauvery Water Issues. Show all posts
Showing posts with label Cauvery Water Issues. Show all posts

10 Jun 2026

காயும் டெல்டா… கரையாத மேட்டூர்!

காயும் டெல்டா… கரையாத மேட்டூர்!

இந்த உலகத்தில் நாம் எப்போதுமே இரண்டு விஷயங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். ஐந்து நிமிடத்தில் வருவதாகச் சொல்லும் நண்பர் மற்றும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட வேண்டிய காவிரி தண்ணீர். இரண்டுமே பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை என்பதுதான் பிரபஞ்சத்தின் மாறாத விதி.

வாட் அபௌட் ஜூன் 12 என்றால், நீர் வளத் துறை வட்டாரங்கள் மிகவும் கூலாக, ஜூன் 12இல் சான்ஸே இல்லை பாஸ். ஆகஸ்ட் கடைசியில வேணா வந்து பாருங்க, அப்பவும் இல்லைன்னா செப்டம்பர் பர்ஸ்ட் வீக் கன்பார்ம் என்று டோக்கன் வழங்கிவிட்டார்கள்.

டெல்டா மாவட்டங்களில் இருக்கும் 16 லட்சம் ஏக்கர் நிலங்களும், அதை நம்பியிருக்கும் விவசாயிகளும் குறுவை சாகுபடி என்ற பெயரில் ஏதோ ஒரு கனவு கண்டுகொண்டிருந்தார்கள். பாவம், அவர்கள் கனவில் மண் அள்ளிப் போடுவதுதான் தென்மேற்கு பருவமழையின் தற்போதைய பொழுதுபோக்கு.

பொதுவாக நம் ஊரில் காரியம் நடக்கவில்லை என்றால், உடனே ப்ளாஷ்பேக் கதைகளைப் பேச ஆரம்பித்துவிடுவோம். மேட்டூர் அணைக்கும் ப்ளாஷ்பேக் இருக்கிறது.

91 வருஷ அணை வரலாற்றில், கரெக்டா ஜூன் 12க்கு தண்ணி திறந்தது வெறும் 20 முறைதான்.

அணை நிரம்பி வழிந்ததால், சொன்ன தேதிக்கு முன்னாடியே திறந்துவிட்ட கதையும் நடந்திருக்கிறது. அது 11 முறை. இது போன்ற அதிசயங்கள் எப்போதாவது நடக்கும். இப்போது நோ சான்ஸ்.

60 ஆண்டுகள் தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணையை லேட்டாகத் திறந்திருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், லேட்டாகத் திறப்பதுதான் மேட்டூர் அணையின் இயல்பு நிலை.

கடந்த நீர்ப்பாசன ஆண்டில் ஏதோ தெரியாமல் 330 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துவிட்டது. உடனே இந்த வருஷமும் அதே மாதிரி நடக்கும் என்று எதிர்பார்ப்பது காளை மாட்டின் கொம்பில் பால் கறக்கும் கதைதான்!

தற்போது அணை நீர்மட்டம் 79 அடியாகவும், உள்ளே வரும் தண்ணீரின் அளவு வெறும் 760 கனஅடியாகவும் இருக்கிறது. ஆனால், வெளியே குடிநீருக்காக 1,000 கனஅடி திறந்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, கல்லாப்பெட்டிக்கு உள்ளே வரும் காசை விட, வெளியில் போகும் காசு அதிகம். இப்படியே போனால் அணை சீக்கிரம் ஜீரோ பேலன்ஸ் ஆகிவிடும்.

இதற்கெல்லாம் காரணம் நம் அண்டை மாநிலமான கர்நாடகா. அங்கே கபினி, கிருஷ்ணராஜசாகர் என்று இரண்டு அணைகள் இருக்கின்றன. அங்கே யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுவதை விட, பெங்களூர் டிராபிக்கைக் குறைப்பது எளிது என்று நினைப்பார்கள் போலிருக்கிறது. அந்த இரண்டு அணைகளும் கொள்ளளவு நிரம்பி, வழிந்து, தட்டக் கெட்டு, வேறு வழியே இல்லாமல் வெளியேறும் உபரி நீர் மட்டும்தான் தமிழகத்திற்கு வரும். அதாவது, அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு இலைகளில் சிந்தும் பருக்கைகளைத்தான் நாம் காவிரித் தாய் என்று பயபக்தியோடு வரவேற்க வேண்டும்.

இனி என்ன நடக்கும்?

ஜூன் 12க்கு இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. நாளை கடந்து நாளை மறுநாள் அந்த 12 வந்து விடும். மேஜிக் நடந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கப் போவதில்லை. பருவமழை பொய்த்தால் குறுவை சாகுபடி காலி.

மத்திய அரசு, மாநில அரசு, கர்நாடக அரசு, இயற்கை அன்னை என நான்கு தரப்பும் சேர்ந்து நடத்தும் இந்த மாபெரும் வாட்டர் கேம் ஷோவில், எப்போதுமே தோற்றுப் போவது விவசாயி மட்டும்தான்.

டெல்டா விவசாயிகள் இப்போது கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். அணையில் தண்ணீர் இருக்கும்போது விவசாயம் செய்வது சாதாரண விஷயம். அணையில் தண்ணீரைக் கண்ணிலும் காட்டாமல், கவலையை மட்டுமே அறுவடை செய்ய வைப்பதுதான் இந்திய விவசாயத்தின் உன்னதக் கலை!

அடுத்த ஆகஸ்ட் இறுதியில் மேட்டூர் அணையின் மதகுகள் திறக்கப்படுகிறதா, அல்லது விவசாயிகளின் கண்கள் திறக்கப்படுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

*****