Showing posts with label Leader - Movie Review. Show all posts
Showing posts with label Leader - Movie Review. Show all posts

9 Apr 2026

லீடர் – அண்ணாச்சியின் ஆக்சன் ஸ்டோர்ஸ்!

லீடர் – ஒரு திரைப்பார்வை!

பொதுவாக ஒரு நடிகருக்கு முகம் அசையவில்லை என்றால் அதை நடிப்பு வராது என்பார்கள். ஆனால், லெஜண்ட் சரவணனைப் பொறுத்தவரை அது ஒரு ஸ்டைல். பாறை போல உறுதியான முகம், காற்றிலேயே அசையாத தலைமுடி என இவற்றையெல்லாம் பார்க்கும்போது அவர் ஒரு மனிதர் அல்ல, ஓர் அசையாத கொள்கை விளக்கப் படம்.

பொதுவாக மெக்கானிக் என்பவர்கள் காரின் இன்ஜினைப் பிரிப்பார்கள். ஆனால், படத்தில் மெக்கானிக்கான நம் சக்திவேல் ஆகிய லெஜண்ட் சரவணன் காரைப் பிரிப்பதை விட, எதிரிகளின் எலும்புகளைப் பிரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

தூத்துக்குடியில் மகளுடன் கொஞ்சி விளையாடும் ஒரு பாசமலராக அறிமுகமாகும் இவர், காரின் பின்சீட்டில் ஒரு பாட்ஷாவைப் பூட்டி வைத்திருக்கிறார் என்பதுதான் படத்தின் ஒரு வரித் தத்துவம்.

கதையென்னும் கமர்ஷியல் குழம்பு என்னவென்று பார்த்தால், மகள் ஐரீனுடன் வசிக்கும் சக்திவேலுக்கு, துறைமுகத்தில் நடக்கும் ஸ்மக்லிங் விவகாரத்தில் போலீஸ் ஆண்ட்ரியாவுக்கு உதவ விருப்பமில்லை. ஆனால், வில்லன்கள் அவர் மகளைத் தொட்டதும், மாணிக்கம் மோடை மாற்றிவிட்டு, பாட்ஷா மோடில் கியரை மாற்றுகிறார். அதன் பிறகு நடப்பதெல்லாம், லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸில் நடக்கும் ஆடித் தள்ளுபடி போல ஒரே ஆக்‌ஷன் மயம்!

ஆண்ட்ரியா, ஷ்யாம், லால் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது, சரவணா ஸ்டோர்ஸில் ஒவ்வொரு செக்‌ஷனுக்கும் ஒரு ஆள் இருப்பது போல.

முந்தைய லெஜண்ட் படத்தில் நூறடி உயரத்தில் நின்ற லெஜண்ட் சரவணன், இதில் தரைக்கு இறங்கி வந்திருக்கிறார்.

ஆக்சன் காட்சிகளில் அவர் காட்டும் வேகம், ஒரு பந்தயக் குதிரைக்கும் ரோபோவுக்கும் பிறந்த கலவை போல இருக்கிறது.

உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் கூட அண்ணாச்சி மிக நிதானமாக இருக்கிறார்.

குறிப்பாகக் கார் மெக்கானிக் என்பதால் சண்டைக் காட்சிகளில் அண்ணாச்சி வண்டிகளைப் பறக்கவிடுவதில் நல்ல ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் இருக்கிறார்.

இயக்குநர் துரை செந்தில்குமாரைப் பாராட்ட வேண்டும். அண்ணாச்சிக்கு எதெல்லாம் வராதோ, அதையெல்லாம் கேமரா ஆங்கிள் மற்றும் எடிட்டிங் மூலமே வரவழைத்து விடுகிறார். ஒரு மனிதனை எப்படிப் பேச விடாமல் வைத்தே படம் எடுக்கலாம் என்பதற்கு இந்தப் படம் ஒரு பிஎச்டி ஆய்வு.

படத்தில் மியூசிக்கைக் காது கிழியும் அளவு ஒலிக்க வைத்து, படத்தில் அண்ணாச்சி பேசாத வசனங்களுக்கு ஈடாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தன் இசைக் கருவிகளை வைத்துப் பேச முயற்சித்திருக்கிறார்.

ஸ்கிரீனில் நடக்கும் ஆக்சனுக்கும் இசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, தியேட்டரில் யாரும் தூங்கிவிடக் கூடாது என்பதில் ஜிப்ரான் கவனமாக இருந்திருக்கிறார். அதே நேரத்தில் ஜிப்ரானின் பின்னணி இசை இல்லையென்றால், அண்ணாச்சியின் அமைதி நம்மை அச்சுறுத்தியிருக்கும்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் லீடர் ஆகலாம், சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் கூட.

அண்ணாச்சிக்கு நடிப்பு வருகிறதோ இல்லையோ, நடிக்க வேண்டும் என்ற அந்த விடாமுயற்சி இருக்கிறதே, அதுதான் படத்தின் உண்மையான ட்விஸ்ட்.

லீடர் ஒரு கமர்ஷியல் சினிமா என்பதால், இதில் லாஜிக் தேடுவது, சரவணா ஸ்டோர்ஸில் போய் தள்ளுபடிக்கு மேல் தள்ளுபடி கேட்பதைப் போன்றது.

ஆக விசயம் இதுதான், லெஜன்டைத் தொடர்ந்து லீடர் மூலமாக அண்ணாச்சி மீண்டும் வந்துவிட்டார், ஆக்சன் செய்கிறார், பறக்கிறார். இதையெல்லாம் பார்த்து ரசிக்க உங்களுக்கு ஒரு தனி இதயம் வேண்டும்.

படத்தின் இறுதியில் பார்ட் 2 வரும் என்று ஒரு க்ளூ கொடுத்திருக்கிறார்கள். இது எச்சரிக்கையா அல்லது கொண்டாட்டமா?

ஆனால் முடிவைச் சொல்ல வேண்டும் இல்லையா? இதுதான் அந்த முடிவு. அது என்னவென்றால், ஒரு மெக்கானிக் நினைத்தால் காரைச் சரி செய்யலாம். ஒரு லெஜண்ட் நினைத்தால் சினிமாவையே மெக்கானிக் ஷாப்பாக மாற்றலாம்!

படத்திற்கு பத்துக்கு 5½ மார்க் தாராளமாகக் கொடுக்கலாம். அந்த அரை மார்க் எக்ஸ்ட்ரா எதற்கென்றால், அண்ணாச்சியின் விதவிதமான காஸ்ட்யூமுக்கு.

*****