Showing posts with label Financial Frauds. Show all posts
Showing posts with label Financial Frauds. Show all posts

6 Apr 2026

கையெழுத்து போட்டுக் கொடுக்கும் கலிபுருஷனா நீங்கள்?!

கையெழுத்து போட்டுக் கொடுக்கும் கலிபுருஷனா நீங்கள்?!

மனிதகுலம் கண்டுபிடித்ததிலேயே ஆகச்சிறந்த நகைச்சுவை எது தெரியுமா?

நீங்க கையெழுத்து மட்டும் போட்டுக்கொடுங்க, மத்தத நான் பார்த்துக்கறேன், என்று ஒரு அந்நியன் சொல்லும்போது, அதை அப்படியே நம்பி அதை வேதவாக்குப் போலச் செய்வதுதான்.

நீங்கள் ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருக்கிறீர்கள்.

மாதாமாதம் செக் கொடுக்க வேண்டும்.

அன்றைக்குப் பார்த்து அந்த நிதி நிறுவனத்தில் கூட்டம்.

உங்களுக்குக் கொஞ்சம் அவசரம்.

உங்கள் பதற்றத்தைப் பார்த்த புண்ணியவான் ஒருவன், தன்னை அந்த நிறுவனத்தின் புதிய ஊழியராக அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.

சார், உங்களுக்கு ஏன் சிரமம்? செக்குல ஒரு கையெழுத்தை மட்டும் போட்டுக் கொடுங்க. மத்ததை நான் பார்த்துக்கிறேன், என்கிறான் அந்தப் புண்ணியவான்.

நீங்களும் உங்களுக்கு ஏதோ உலக மகா சேவை கிடைப்பது போல, செக்கைக் கிராஸ் கூட செய்யாமல் கையெழுத்துப் போட்டு அவரிடம் நீட்டிவிட்டு, நிம்மதியாக அலுவலகம் கிளம்பிவிட்டீர்கள்.

அப்புறம் என்ன நடந்திருக்கும்?

அடுத்த மாதம் உங்களுக்குத் தவணை கட்டவில்லை என்று நோட்டீஸ் வந்திருக்கும்.

நிதி நிறுவனத்தில் போய் நின்றிருப்பீர்கள்.

பணம் நிதி நிறுவனத்துக்குப் போகாமல், யாரோ ஒரு நபரின் கணக்கில் போய்ச் சேர்ந்திருக்கிறது என்ற பதில் கிடைத்திருக்கும்.

நிதி நிறுவனமும் எவனோ ஏமாற்றுக்காரன் செய்ததற்கு, நாங்கள் பொறுப்பில்லை,  என்று கைவிரித்திருப்பார்கள்.

வெற்றுச் செக்கில் கையெழுத்துப் போட்டு, ஓர் அந்நியனிடம் கொடுப்பது என்பது, தூக்கில் தொங்குவதற்கு நீங்களே கயிறு வாங்கிக் கொடுத்துவிட்டு, முடிச்சையும் நீங்களே போட்டுடுங்க, என்று சொல்வதற்குச் சமம்.

இப்போது நீதி என்னவென்றால்,

உலகத்தில் பெரும்பாலான மோசடிகள் அவசரம் என்ற ஒற்றைச் சொல்லில்தான் தொடங்குகின்றன. உங்கள் அவசரம் அடுத்தவனுக்குக் கொண்டாட்டம்.

கழுத்தில் ஒரு ஐடி கார்டும், முகத்தில் ஒரு போலிச் சிரிப்பும் இருந்தால், எவனை வேண்டுமானாலும் ஊழியர் என்று நம்பிவிடும் அப்பாவிகள் இருக்கும் வரை, ஏமாற்றுக்காரர்களுக்குப் பஞ்சமே இருக்காது.

எங்கும் செக் கொடுக்கும்போதும், அது யாருக்குப் போகிறது என்பதில் உங்கள் பேனா முனை தெளிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் பணம் வேறு யாருக்கோ முனைப்பாகப் போய்ச் சேரும்.

ஆகக், கையெழுத்து என்பது ஒருவரது அடையாளம் மட்டுமல்ல, அது உங்கள் வங்கிக் கணக்கின் சாவியும் கூட. சாவியைத் திருடனிடம் கொடுத்துவிட்டு, பூட்டு ஏன் திறந்தது என்று புலம்புவதில் அர்த்தமில்லை.

*****