Showing posts with label How are overseas Indians developing in India?. Show all posts
Showing posts with label How are overseas Indians developing in India?. Show all posts

27 Jun 2025

உள்நாட்டில் வெளிநாட்டு இந்தியர்கள் எப்படி உருவாகிறார்கள்?

உள்நாட்டில் வெளிநாட்டு இந்தியர்கள் எப்படி உருவாகிறார்கள்?

சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது? நமது கல்வி முறை இங்கிலாந்திலிருந்து வந்தது. நாம் விரும்பிப் பார்த்துக் கொள்ளும் மருத்துவமும் ஆங்கில மருத்துவம்.

நமக்கான பென்சில்கள், பொம்மைகள் சீனாவிலிருந்து வருகின்றன.

சமைப்பதற்கும், இயங்குவதற்கும் தேவையான எரிவாயுவும், எரிபொருளும் அரபு நாடுகளிலிருந்து வருகின்றன.

பீட்ஸாவின் தாயகம் இத்தாலி. நூடுல்ஸின் தாயகம் சீனா. அமெரிக்காவில் பிரபலமான பர்க்கரின் தாயகம் ஜெர்மனி. பெப்சியும் கோக்கும் அமெரிக்காவில் பிறப்பெடுத்த இந்தியர்களின் ஆஸ்தான பானங்கள். நாம் விரும்பி உண்ணும் உணவின் நிலை இப்படி இருக்கிறது.

மகிழ்வாக நாம் பயணிக்கும் ஊர்திகளான ஹூண்டாய், டொயொட்டா, வோல்க்ஸ்வேகன், போர்டு போன்றவை கொரியா, ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சார்ந்தன.

எல்ஜி மின்சாதனப் பொருட்களும் சாம்சங் மின்சாதனப் பொருட்களும் கொரியாவைச் சார்ந்தவை. வேர்ல்பூல் மின்சாதனப் பொருட்கள் அமெரிக்காவைச் சார்ந்தவை.

கூகுள், வாட்ஸ்ஆப், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் எல்லாம் அமெரிக்க உபயம்.

வானில் பயணிக்கும் போயிங் விமானம் அமெரிக்க தயவு.

அவ்வளவு ஏன் இராணுவம் பயன்படுத்தும் ரபேல் விமானம் பிரான்ஸ் தயவு.

கையில் இருக்கும் கணினியாக இருந்தாலும், மேசையில் இருக்கும் கணினியாக இருந்தாலும் லெனோவா சீனாவைச் சார்ந்தது என்றால் ஹெச்பி, டெல், ஆப்பிள் போன்றவை அமெரிக்காவைச் சார்ந்தவை.

ஆப்பிள் அலைபேசி அமெரிக்க நாட்டுக் கொடை என்றால் சாம்சங் கொரிய நாட்டுக் கொடை. விவோவும், ஆப்போவும் சீனாவின் கொடை.

சரிதான் போ என்று திரையரங்கில் உட்கார்ந்தால், பார்க்கின்ற படங்கள் எல்லாம் கொரியன் படங்களைச் சுட்ட தமிழ்ப் படங்களாகவோ, ஹாலிவுட்டின் வெட்டி ஒட்டிய (காப்பி – பேஸ்ட்) படங்களாகவோ இருக்கின்றன.

நாம் இருக்கும் நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. இங்கு இருப்பதெல்லாம் வெளிநாட்டுப் போருட்களாய் இருக்கின்றன.

என்ன செய்வது?

இவ்வளவு வெளிநாட்டு சமாச்சாரங்களோடுதான் இந்தியராய் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இதனால்தானோ என்னவோ பலரும்வெளிநாட்டு இந்தியராய் மாற விரும்புகிறார்களோ?!

நாம் மட்டும்தான் என்ன? நாம் உள்நாட்டில் வாழும் வெளிநாட்டு இந்தியர்கள்!

*****