ஊன் சோற்று மனிதர்கள்!
நாகேசுவரனுக்குள் அதிர்வு ஏற்பட்டது,
ஒரு பூகம்பத்தின் ரிக்டர் அளவில் இல்லை; பழைய சோற்றில் ஊறுகாய் விழுந்தால் ஏற்படும்
ஒரு சிறிய கிளர்ச்சி போல.
சின்ன கடைத் தெருக் கோடியில்
ஒரு புது பிரியாணி கடை.
சங்க காலத்தில் போருக்குப் போன
வீரன் ஊன் சோறு தின்றானாம். நெய்யும் மசாலாவும் மணக்க அதை உண்டானாம். அதைத்தான் இப்போது
பிரியாணி என்கிறார்கள்.
பிரியான் என்றால் பாரசீகத்தில்
வறுப்பது என்று அர்த்தமாம். முகலாயர்களும் நிஜாம்களும் தம் வயிற்றுப் பெருக்கத்திற்காகக்
கண்டுபிடித்த அந்த பிலாப், இன்று நாகேசுவரனின் தெருவையே ஆக்கிரமித்திருந்தது.
தமிழ்நாடே பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு
பிரியாணி தின்கிறதாம். இதில் தெருவோரக் கடைகள் மட்டுமே ஏழாயிரத்து ஐந்நூறு கோடியைச்
சுருட்டுகின்றனவாம்.
மக்களுக்கு உணவின் மீதிருக்கும்
மோகமா, அல்லது தம் அந்தஸ்தைக் காட்டிக்கொள்ளும் வெறியா? நாகேசுவரனுக்குள் தத்துவார்த்தமான
கேள்விகள். காதணி விழா முதல் காரிய கருமாதி வரை இப்போது பிரியாணிதான் பிரதானம்.
அன்று மாலை. தெருவோரக் கடைக்காரன்
தாண்டவராயன் தம் பிரியாணி பானையைத் திறந்தான்.
வாசனை நாகேசுவரனின் மூக்கைத்
துளைத்தது. ஆனால், அந்த வாசனையின் அடிவயிற்றில் ஏதோ ஒரு அழுகல் மணம் ஒளிந்திருப்பதாக
அவருக்குப் பட்டது. வடமாநிலத்து ரயில்களில் பனிக்கட்டிக்குள் அடைக்கப்பட்டு, உற்பத்தித்
தேதியே இல்லாமல் வரும் ஆட்டிறைச்சிகள். மதுரையில் ஏதோ ஒரு ஹோட்டலில் 1200 கிலோ கெட்டுப்போன
இறைச்சியைக் கைப்பற்றினார்களாம்.
மனிதர்கள் இறைச்சியை உண்கிறார்களா,
அல்லது இறைச்சி மனிதர்களை உண்கிறதா? நாகேசுவரனுக்குள் மீண்டும் ஒரு தத்துவம்.
நாகேசுவரனின் தம்பி கணேசன் தினமும்
பிரியாணி தின்பவன்.
"ஏன்டா, டால்டாவும் டிரான்ஸ்பேட்டும்
உன் ரத்தக் குழாய அடைச்சு, மாரடைப்பு வந்தாத்தான் அடங்குவியா? தினமும் எதையாவது தின்னுட்டு
வாந்தி, பேதின்னு கிடப்பியா?" என்றார் நாகேசுவரன்.
"அண்ணே, ருசிண்ணே. அந்த
வாசனையண்ணே!" என்றான் கணேசன், தன் அறியாமையை ரசித்தபடி.
"ருசி இல்லைடா அது. உன்னைக்
கொல்லும் விஷம்! அளவுக்கு மீறினா அஜீரணம், சர்க்கரை நோய், இதய நோய்னு வரிசையா வரும்.
போன வருஷத்துல மட்டும் அஞ்சு பேர் கெட்டுப்போன கறியைத் தின்னு செத்துப் போயிருக்காங்க.
ஐந்நூறு பேருக்கு மேல ஆஸ்பத்திரியில கிடந்திருக்காங்க!"
தமிழகம் முழுக்க பல லட்சம் கடைகள்.
முப்பத்தெட்டாயிரம் கடைகளில் சோதனையிட்டு, அய்யாயிரம் கிலோ அழுகிய கறியைப் பிடித்து,
ஒன்னரை கோடி ரூபாய் அபராதம் போட்டாலும், தாண்டவராயன்களும் பெரிய முதலாளிகளும் மாறுவதாயில்லை.
நாகேசுவரன் தன் சட்டைக் பையிலிருந்த
சுருங்கிய காகிதத்தை எடுத்தார். அதில் ஒரு எண் குறிக்கப்பட்டிருந்தது. உணவுப் பாதுகாப்புத்
துறையின் வாட்ஸ்அப் எண். புகார் அளிக்கலாம் என்று போட்டிருந்தது.
அவர் போனை எடுத்தார். எண்ணைத்
தட்டச்சினார். அப்புறம் என்ன நினைத்தாரோ, விரல்கள் தங்கிவிட்டன.
சுற்றிலும் பார்த்தார். தாண்டவராயன்
கடையில் பிரியாணி வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த மனிதர்களின் முகங்களில் பசியை
விட, ஏதோ ஒரு விவரிக்க முடியாத அவசரம் தெரிந்தது. அவர்கள் எதை உண்கிறோம் என்பதைப் பற்றி
கவலைப்படவில்லை; நாவிற்குத் தரும் அந்த சில நிமிடக் கிளர்ச்சிதான் அவர்களுக்கு முக்கியமாக
இருந்தது.
நாகேசுவரன் பெருமூச்சுடன் போனை
வைத்தார்.
தொலைவில் பிரியாணி பானையின் மூடி
திறக்கப்படும் சத்தம் கேட்டது. புகை மண்டலத்திற்குள் மனிதர்கள் தம் ஆரோக்கியத்தையும்
ஆயுளையும் மறந்து மூழ்கிக் கொண்டிருந்தார்கள். நாகேசுவரனும் தன் மீதமிருந்த ஆயுளை எண்ணியபடி
அமைதியாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
*****
