Showing posts with label Indian Agriculture. Show all posts
Showing posts with label Indian Agriculture. Show all posts

22 Nov 2024

உலகின் ஒன்பதாவது அதிசயம்!

உலகின் ஒன்பதாவது அதிசயம்!

இந்த நேரத்தில் அதாவது இந்த நவம்பர் மாதத்தில் டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளில் வயல்களைப் பார்ப்பது எவ்வளவு மகோன்னதமான காட்சியாக இருக்கும் தெரியுமா?

பச்சைப் பசேலென்று நெற்பயிர்கள் காற்றில் அசைந்தாடுவது கடல் அலைகளைப் பச்சை நிறத்தில் பார்ப்பது போல இருக்கும். நிலமகள் பச்சைப் பட்டாடை உடுத்தியிருப்பது போல என்று சொல்வது எவ்வளவு உண்மை என்பது அந்தக் காட்சியைக் காணும் போது புரிய வரும்.

உங்கள் கிராமங்களில் அப்படித்தான் வயல்கள் தற்போது காட்சி அளிக்கின்றனவா? டெல்டாவின் கடைமடைப் பகுதி கிராமங்களில் ஒன்றான எங்கள் கிராமத்தில் அப்படிப்பட்ட காட்சியை இந்த ஆண்டு ஏனோ காண கிடைக்கவில்லை.

ஆங்காங்கே இடையிடையே நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. ஒவ்வொரு வயலிலும் முன்னே பின்னே நெற்பயிர் வளர்ந்திருப்பதில் பச்சைக் கடலலையைப் பார்ப்பது போன்ற காட்சியையோ, நிலமகள் பச்சைப் பட்டாடை உடுத்தியது போன்ற நேர்த்தியையோ காண முடியவில்லை. இது டெல்டாவில் நேர்ந்திருக்கும் உல்டா. டெல்டாவுக்கு வந்த சோதனை.

நாற்றாங்கால் அமைத்து நாற்று பறித்து நடவு நட்ட காலம் மலையேறி எங்கேயோ போய் விட்டது. தெளிவிதை முறையிலான விவசாயத்தில் வயல்களில் காடுகள் போல களை மண்டிக் கிடக்கின்றன. கையில் பணம் இருப்போர் ஆட்களை வைத்துக் களை எடுக்கின்றனர். முடியாதோர் களையோடு களையாக நெற்பயிர் வளரும் வரை வளரட்டும், வளராவிட்டால் போகட்டும் என்று விட்டு விட்டனர்.

இதற்கிடையே ஆங்காங்கே நடவு இயந்திரம் மூலம் நட்டு வைத்திருப்பவர்களின் வயல்களும் இருக்கின்றன. அந்த வயல்களில் களைகள் அவ்வளவாக இல்லை. அந்த வயல்கள்தான் நாற்று தூர் கட்டி பார்ப்பதற்கு கொஞ்சம் நேர்த்தியாக இருக்கின்றன. ஆனாலும் நாற்று பறித்து நடவு நடும் வயல்களின் அழகுக்கு அதுவும் ஈடாகாது.

முன்பெல்லாம் வயல்களைத் தரிசு போட முடியாதபடிக்கு விவசாயிகளிடம் அது ஒரு கௌரவப் பிரச்சனையாக இருந்தது. யாருடைய வயலையும் தரிசு போட யாரும் அனுமதிக்க மாட்டார்கள். இப்போது வயல்களைத் தரிசு போடுவதைக் கடனில் சிக்காமல் கௌரவமாக இருப்பதற்கு ஒரு வழிமுறையாக விவசாயிகள் பார்க்கத் தொடங்கி விட்டனர். இப்படி ஒரு புதிய மனநிலைக்குப் பல சிறு குறு விவசாயிகள் வந்து விட்டனர்.

ஏன் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளில் விவசாயம் இப்படி ஆனது?

சம்பா பருவத்தில் ஒரே நேரத்தில் நாற்று விடுவதும், நாற்று பறிப்பதும், நாற்று நடுவதும் எல்லாம் ஒரே சீராக இருக்கும் காலம் ஒன்றிருந்தது. அப்போது பாசனமும் சரியாக இருந்தது. விவசாயிகளிடம் ஒற்றுமையான மனப்பாங்கும் இருந்தது. இப்போது ஆற்றில் தண்ணீர் வருவதிலிருந்து, ஆற்றிலிருந்து வாய்க்கால்களுக்குத் தண்ணீர் வந்து, வாய்க்கால்களிலிருந்து வயலுக்குத் தண்ணீர் செல்வது வரை எல்லாவற்றிலும் சீரற்ற தன்மை காணப்படுகிறது.

ஆற்றில் முறை வைத்து சரியாகத் தண்ணீர் வருவதில் முதல் சிக்கல் உண்டாகிறது. இது தண்ணீர் திறந்து விடும் அரசு நிர்வாக தரப்பில் உண்டாகும் பிரச்சனை. ஆற்றில் வந்த தண்ணீர் வாய்க்காலில் வருவது அடுத்த பிரச்சனை.  இதற்கு வருடா வருடம் தூர் வாராமல் கிடக்கும் வாய்க்கால்கள் ஒரு காரணம் என்றால், வருடா வருடம் ஒப்பந்தக்காரர்கள் செழிக்க வேண்டும் என்பதற்காகவே ஆழம் புரியாமல் தூர் வாரி விடுவது மற்றொரு காரணம்.

வாய்க்கால்களிலிருந்து வயல்களுக்குத் தண்ணீர் பாய்வதில் நிலவும் பிரச்சனை விவசாயிகளால் ஏற்பட்டவை. இது விவசாயிகளே விவசாயத்துக்கு வைத்துக் கொண்ட சூன்யம். வடிகால் வாய்க்கால்களை அழித்து விட்ட அவர்கள் பாசன வாய்க்கால்களையும் சுருக்கி விட்டார்கள். ஏன் இப்படி செய்தார்கள் இந்த விவசாயிகள்? வாய்க்கால்களைத் தூர்த்து வயல்களை விரிவுபடுத்தினால் கூடுதலாக கிடைக்கும் அந்த நிலப்பரப்பில் ஒரு மூட்டையோ, இரண்டு மூட்டையோ கூடுதலாக நெல் விளைந்து, அதன் மூலம் நாட்டின் நெல் உற்பத்தி அதிகரித்து விடாதோ என்ற சிந்தனைதான் காரணமோ என்னவோ?

இப்படி விவசாயத்திற்கு எதிராக பாசன நிர்வாகம், விவசாயப் பணிகளின் மேலாண்மை மற்றும் விவசாயிகள் எல்லாரும் இருந்தும் விவசாயம் எப்படியோ இந்தக் கடைமடைப் பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது என்பதே உலகின் ஒன்பதாவது அதிசயம்தான். இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கும் வரை எல்லாருக்கும் சோறு கிடைக்கும். இந்த அதிசயம் எப்போதும் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் உங்களைப் போன்று என்னுடைய பிரார்த்தனையும்.

*****

8 Oct 2024

பகுதி நேரத் தொழிலாகி விட்ட விவசாயம்!

பகுதி நேரத் தொழிலாகி விட்ட விவசாயம்!

இப்போது திருவாரூர் மாவட்டமாகி விட்டாலும் இது ஒருங்கிணைந்த தஞ்சையின் ஒரு பகுதி. இங்கு விவசாயம்தான் முக்கியமான தொழில். விவசாயப் பெருங்குடி மக்களால் நிரம்பியிருந்த இப்பகுதி தற்போது நிறைய விவசாயிகளைக் கட்டிடத் தொழிலாளர்களாகவும், ஒப்பந்த தொழிலாளர்களாகவும், ஓசூர் மற்றும் திருப்பூர் என்று இடம் பெயரும் தொழிலாளர்களாகவும் மாற்றியிருக்கிறது.

கிராமங்கள் பலவும் வயதானவர்களால் நிரம்பியிருக்கின்றன. இளவயதில் இருப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெரும்பாலான இளவயது மக்கள் நகரத்தை நோக்கி இடம் பெயர்ந்திருக்கின்றனர். கிராமங்களில் இருக்கும் இளவயது மக்களும் வேலைவாய்ப்பிற்காக நகரத்திற்குச் சென்று வருபவர்களாக இருக்கிறார்கள்.

விவசாயத்தை முழுநேரமாகச் செய்யும் தொழிலாளர்களை அநேகமாகத் திருவாரூர் மாவட்டம் இழந்து விட்டது. விவசாய நிலங்கள் வைத்திருக்கும் பலரும் வருமானத்திற்கு ஒரு தொழிலில் இருந்து கொண்டு, பகுதி நேரமாகத்தான் விவசாயத்தைச் செய்து வருகின்றனர். விவசாயத்தில் நிகழ்ந்து விட்ட எவ்வளவு பெரிய மாற்றம் இது. ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லலாம் என்றால் விவசாயத்தில் மிகவும் ஆர்வமாக இருந்த காமகோடி அண்ணன் திருவாரூரில் காவல்காரராக அதாவது வாட்ச்மேனாக இருக்கிறார். அத்துடன் தன்னிடம் இருக்கும் நிலங்களில் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார். விவசாயப் பணிகள் தீவிரமாக இருக்கும் போது தேவைக்கேற்ப விடுப்பு எடுத்துக் கொள்கிறார்.

காமகோடி அண்ணன் விவசாயத்தை மட்டும் நம்பி இயங்கியவர். விவசாய வருமானத்தை மட்டும் வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தியவர். இனிமேல் அது இயலாது என்பதை உணர்ந்து நான்கைந்து ஆண்டுகளாக நகரத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் காவல்காரராகப் பணியாற்ற சென்று விட்டார்.

ஏன் அண்ணா இப்படி? என்றால், மாதம் எட்டாயிரம் சம்பளம் கொடுக்கிறான் தம்பி, குடும்பம் ஓடுகிறது. அத்தோடு விவசாய வருமானம் கிடைத்தால் எப்படியோ வாழ்க்கையை ஓட்டி விடலாம். அது மட்டும் காரணம் கிடையாது தம்பி! அங்கே கிடைக்கும் மாதம் எட்டாயிரம் வருமானம் நிரந்தரம், விவசாய வருமானம் நிரந்தரமில்லை என்கிறார். இனிமேலும் விவசாயத்தை மட்டும் நம்பி காலத்தை ஓட்ட முடியாது, இப்படி மாறினால்தான் விவசாயத்தையும் தொடர்ந்து செய்ய முடியும் என்கிறார்.

முழுநேரமாக விவசாயம் செய்த போது காமகோடி அண்ணன் எப்படி செய்திருப்பார்? தற்போது இது போல பகுதி நேரமாகக் செய்யும் போது எப்படி செய்து கொண்டிருப்பார்? நிச்சயம் வேறுபாடு இருக்கத்தானே செய்யும். அது குறித்தும் அண்ணனிடம் கேட்டேன், ஏதோ நடக்கிறது தம்பி! திருப்தி இல்லைதான். வேறு வழியில்லையே என்கிறார்.

விவசாயிகளை விவசாயத்தை விட்டு ஓட அடித்து விட்டோம் என்பதுதான் உண்மை. வேறு வேலையில் இருந்து கொண்டாவது விவசாயத்தில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவர்களே காமகோடி அண்ணன் போலவாவது விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதனோடு எதற்கு மல்லுகட்ட வேண்டும் என்று நினைத்த பலர் விவசாய நிலங்களை விற்று விட்டனர்.

முன்பு நகரப் பகுதிகளிலில் வீட்டுமனைகளாக மாறிக் கொண்டிருந்த விவசாய நிலங்கள், தற்போது கிராமப் புறங்களில் வீட்டு மனைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்களை அலைபேசி கோபுரங்கள் அமைக்க, கிடங்குகள் அமைக்க குத்தகைக்கு விடுவோரும் இருக்கிறார்கள்.

மற்றொரு புறம் எளிய மக்கள், நடுத்தர மக்கள் என்று பலரிடம் இருந்த விவசாய நிலங்களைப் பெரும் வசதி படைத்த மனிதர்கள் கொத்து கொத்தாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் அநேகம். அவர்கள் பண்ணை முறையிலான விவசாய முறைகளைத் தொடர்கிறார்கள். மிக நவீனமாக அனைத்திற்கும் எந்திரங்களையும், ரசாயனங்களையும் கொண்டு அவர்கள் விவசாயம் செய்வதையும் பார்க்க முடிகிறது. அவர்கள் விவசாயம் செய்கிறார்கள் என்றாலும் அவர்களும் பகுதி நேர விவசாயிகள்தானே. ஆக பகுதி நேர விவசாயத்தை நோக்கி திருவாரூர் மாவட்டம் நகர்ந்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படி நிலங்களை வாங்கிப் போட்டு அவர்கள் ஏன் விவசாயம் செய்கிறார்கள் என்றால், அதன் பின்னுள்ள உண்மை வேறு மாதிரியானது. அவர்களுக்கு இப்போது வேலி கணக்கில், ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்வது என்பது அவர்களுக்கிடையேயான கௌரவமாக மாறியிருக்கிறது. ஒருங்கிணைந்த பண்ணையத்தை வைத்திருப்பது அவர்களது அடையாளமாக இருக்கிறது. மிகையான பணத்தை எதில் முதலீடு செய்வது என்பது புரியாமல் இப்படி ஒரு வழிவகையை அவர்கள் கண்டறிந்திருப்பதாகத் தெரிகிறது.

இவற்றையெல்லாம் நீங்கள் தெளிவான தரவுகளைக் கொண்டே முடிவு செய்யலாம். சில பத்தாண்டுகளில் விவசாய நிலங்கள் யாருக்கெல்லாம் கைமாறியிருக்கிறது என்கிற பத்திரப்பதிவு விவரங்களை ஆய்வு செய்தால் மேற்படி உண்மைகள் வெகு எளிதாகப் புலனாகும்.

*****

6 Oct 2024

ஒரு விவசாயி என்பவர்…

ஒரு விவசாயி என்பவர்…

விவசாயமும் ஒரு வியாபாரம் போலவே மாறி விட்டது.

விவசாயியின் கையில் எதுவுமில்லை.

விதைநெல் கூட அவரிடம் இல்லை.

விதை நெல்லை வியாபாரியிடம் வாங்குகிறார்.

எருவும் அவரிடம் இல்லை.

உரத்தை வியாபாரியிடம் வாங்குகிறார்.

பூச்சிக்கொல்லிகளும் அவரிடம் இல்லை.

களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி என்று என்னென்ன ரசாயனங்கள் இருக்கிறதோ அவை அத்தனையையும் வியபாரியிடம் வாங்குகிறார்.

உழுவதற்கும் அறுப்பதற்கும் இன்னபிற விவசாயப் பணிகளைச் செய்து தருவதற்கும் முகவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாடினால் கருவிகளோடு வந்து காரியத்தை நடத்தித் தருகிறார்கள்.

நெல்லை வீட்டிற்குக் கொண்டு வந்த காலமெல்லாம் மலையேறி விட்டது.

அறுத்த அடுத்த நொடியே அறுவடை ஆன இடத்தில் வாகனத்தோடு வந்து பெற்றுக் கொள்ள வியாபாரி இருக்கிறார்.

விவசாயி என்பவர் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஓர் இடைநிலையாளர். அத்துடன் விவசாயச் செலவினங்களுக்காகக் கடன் வாங்கும் ஒரு கடன்காரர்.

அவர் நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கலாம்.

நிலத்தை அடமானம் வைத்தும் கடன் வாங்கலாம்.

கந்து வட்டியிலும் கடன் வாங்கலாம்.

சொந்தமாக நிலம் வைத்திருப்பதற்காகக் கடன் வாங்கி விவசாயம் செய்யும் ஒரு பாவப்பட்ட ஜீவன் அவர்.

இந்த விவசாயியால் அப்போதும் சரி, இப்போதும் சரி நெல்லின் விலையைத் தீர்மானிக்க முடியவில்லை. அது முடியவும் முடியாது.

ஆனால், அரிசி விலை மட்டும் ஏறிக் கொண்டு இருக்கும்.

நெல்லின் விலைஅப்படியே இருக்கும்.

முன்னர் இருந்த விவசாயியும் இப்போது இருக்கும் விவசாயியும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது. அவர்கள் வாழ்க்கை மட்டும் அப்போதும் சரி இப்போதும் சரி ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அது எப்போதும் அப்படியேத்தான் இருக்கும் போலிருக்கிறது.

*****