Showing posts with label IT Crash. Show all posts
Showing posts with label IT Crash. Show all posts

4 Feb 2026

பணால் ஆன இரண்டு லட்சம் கோடி!

சிலிக்கான் சிப்சும் சிதறிய கனவுகளும்!

இன்று பிப்ரவரி 4 ஆம் நாள் இந்திய ஐடி நிறுவனப் பங்குகளுக்கு ஒரு கேடு காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஐடி நிறுவனப் பங்குகள் சீட்டுக்கட்டுகள் சரிவதைப் போலச் சரிந்து 8 சதவீதம் வரையிலான வீழ்ச்சியைச் சந்தித்து டைவ் அடித்துள்ளன. இது மார்ச் 2020க்குப் பிறகு ஐடி நிறுவனப் பங்குகள் சந்திக்கும் ஒரு மோசமான சரிவாகும்.

இது இயந்திரங்கள் செய்யக் கூடிய சதியா என்றால், இயந்திரங்கள் பண்ணப் போகும் வேலைகளைப் பார்த்து மனிதர்கள் ஐடி நிறுவனப் பங்குகளில் பறிக்கும் குழி. டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற பெரிய ஐடி தலைகளே இன்றைய ஆடிக் காற்றில் அம்மியைப் போலப் பறக்க ஆரம்பித்து விட்டன.

ஏன் சரிந்தன ஐடி நிறுவனப் பங்குகள்?

காரணங்கள் இதோ,

அமெரிக்காவின் Anthropic நிறுவனம் தனது 'Claude' சாட்பாட்டில் புதிய வேலைவாய்ப்பு சார்ந்த தானியங்கி கருவிகளை (Workplace Automation tools) அறிமுகப்படுத்தியுள்ளது. இது சட்டம், விற்பனை மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளை மனித உதவியின்றிச் செய்யக்கூடியது. இதனால், இந்திய ஐடி நிறுவனங்கள் செய்யும் பாரம்பரிய வேலைகளுக்கு (Outsourced services) எதிர்காலத்தில் மவுசு குறையுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. அச்சம் எழுந்தால் முதலீட்டாளர்கள் அன்ட்ராயர் கழண்டு விழுவது கூட தெரியாமல் ஓடுவார்கள் என்பதால், ஐடி நிறுவனப் பங்குகள் எல்லாம் பல்டி அடிக்க ஆரம்பித்து விட்டன.

நேற்று அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கிலேயே ஐடி நிறுவனப் பங்குகள் தலைகுப்புற விழுந்து கடும் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக Nvidia, Microsoft, Alphabet போன்ற நிறுவனங்களின் பங்குகளே டமால் டுமாலைச் சந்தித்தன.

சமீபத்திய இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக இன்று வலுவடைந்தது. ஐடி நிறுவனங்கள் தங்களது வருவாயை டாலரில் ஈட்டுவதால், ரூபாயின் மதிப்பு உயரும்போது அவற்றின் லாப வரம்பு திறந்து வைத்த கற்பூர டப்பாவைப் போலப் பாதிக்கப்படும். இதுவும் ஐடி நிறுவனப் பங்குகள் தலைகுப்புற படுத்துக் கொள்ள காரணமாகி விட்டது.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் ஐடி நிறுவனங்களின் "Billable Hours" (பணியாளர்களின் வேலை நேரத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படும் கட்டணம்) கோடையில் அடிவாங்கும் மேட்டூர் அணையைப் போலக் குறையக்கூடும். இது ஐடி நிறுவனங்களின் எதிர்காலத்தைச் சூன்யமாக்கி விடும்.

இதனால் ஒட்டுமொத்தமாக இன்று ஒரே நாளில் ஐடி துறை முதலீட்டாளர்களுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐடி நிறுவனப் பங்குகளில் ஆர்வமாக முதலீடு செய்தவர்கள் தெருக்கோடியில் நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

பொதுவாகப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் விசித்திரமானவர்கள். பயம் வந்தால் விற்றுத் தள்ளுவார்கள். ஆசை வந்தால் வாங்கித் தள்ளுவார்கள். அதனால் இன்று வீழ்ந்த ஐடி நிறுவனப் பங்குகள் சில நாட்களில் ஏறவும் கூடும், ஒருவேளை ஏறாமல் போகவும் கூடும்.

பெரும்பாலும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நாளை என்ன நடக்கும் என்ற பயத்தில் இன்றைக்கே சூசைட் அட்டெம்ப்ட் பண்ணும் கேரக்டர்கள்.

இதன் விளைவு பங்குச் சந்தையில் மட்டுமில்லை, கல்யாணச் சந்தையிலும் இனி பிரதிபலிக்கும். இனி ஐடி மாப்பிள்ளை என்றாலோ, கோடிங் தெரிந்த ஜாம்பவான் என்றாலோ பெண் கொடுக்க கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வார்கள். வியாபாரச் சந்தையிலும் இதன் பிரதிபலிப்பு இருக்கும். ஐடி நிறுவனங்களின் பக்கத்தில் இருக்கும் மால்களில், ஹோட்டல்களில் காற்றடிக்கவும் ஆரம்பித்து விடும். ரியல் எஸ்டேட்டை இனி இஷ்டப்படி ஏற்றுவதெல்லாம் வேளச்சேரியிலோ, சோழிங்கநல்லூரிலோ நடக்காது. கொஞ்ச நாள் அடங்கிக் கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை.

*****