23 Feb 2019

லாலு மாமாவின் காயிதங்கள்



செய்யு - 5
            செய்யு பிறந்து இரண்டு நாட்கள் கழித்து லாலு மாமா வந்திருந்தார். அவரைக் கொண்டாட்ட மனதுக்குச் சொந்தக்காரர் என்பார்கள். கொண்டாட வேண்டும் என்று நினைத்து விட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டாராம். இடம், பொருள், ஏவலும் பார்க்க மாட்டாராம். அப்படித்தான் லாலு மாமாவைப் பற்றி ஊரில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவருக்கும் எதிர்வீட்டு சந்திரமதிக்கும் ஏதோ இருப்பதாக அரசல்புரசலாகவுகம், சமயங்களில் வெளிப்படையாகவும் பேசிக் கொள்வார்கள். இப்படி நான்காம் வகுப்புப் படிக்கும் விகடுவுக்கே தெரியும் அளவுக்கு அவர் பல விசயங்களில் நடந்து கொண்டிருந்தார்.
            சைக்கிளில் வீட்டுக்கு வந்து பார்த்தவர், "என்னடா விகடு தங்கச்சிப் பொறந்துடுச்சா?" என்றார்.
            "ஆமா மாமா!" என்றவன் அவர் வீட்டுக்குள்ளே சென்றதும் அவர் சைக்கிசை் சத்தம் எழாமல் ஸ்டாண்டை எடுத்து விட்டு சற்று தள்ளிக் கொண்டு சென்றான். குரங்கு பெடல் போட்டு மிதிக்கத் துவங்கினான்.
            லாலு மாமாவின் சைக்கிளில் கேரியரோடு ஒரு பெட்டி இருக்கும். மைக்கா ஒட்டிய மரப்பெட்டி. அப்படி ஒரு பெட்டி அநேகமாக இந்த ஏரியாவில் லாலு மாமாவின் சைக்கிளில் மட்டும்தான் இருந்தது. பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கும். அதற்கு ஒரு சிறிய பேட்லாக் போட்டு பூட்டு போட்டிருந்தார் லாலு மாமா. அதை யாரும் திறக்க முடியாது என்பது அவரின் கணிப்பு. விகடு அதை கம்பி போட்டு நெம்பி திறந்து விடுவான். திறந்தது போலவே மறுநெம்பு நெம்பி பூட்டியும் விடுவான். இதற்காகவே அவனுடைய எல்லா கால்சட்டைகளிலும் ஒரு கம்பி சுற்றிய நிலையில் இருக்கும். அந்தப் பெட்டிக்குள் கத்தைக் கத்தையாக காகிதம் இருக்கும். ரெண்டு கோடு நோட்டு, நாலு கோடு நோட்டு சில கிடக்கும். எல்லாம் பசங்களின் நோட்டுகள். அதில் கணக்கு எழுதி வைத்திருப்பார். விதை விதைத்தது, நடவாள் கூலி, நாற்றாங்கால் செலவு, களை எடுத்தச் செலவு இப்படி எதையாவது எழுதி வைத்திருப்பார். இன்னொரு நோட்டில் வட்டிக்கு விட்ட கணக்கு எழுதி வைத்திருப்பார்.
            குரங்குபெடலில் போய்க் கொண்டிருந்த விகடு. வடக்குத் தெரு வரை போய் ரெண்டு ரவுண்டு அடிக்கலாம் என்று நினைத்தான். அதற்குள் வீட்டிலிருந்து திரும்பி தெருவுக்கு வந்து சைக்கிளைக் காணா விட்டால் சத்தம் போடுவார். லேட்டாகத்தான் பள்ளிக்கூடம் வருவார். என்றாலும் லேட்டாயிடும் என்று சத்தம் போடுவார். தவிரவும் கேரியர் பெட்டி குறித்த அதீத கவனம் அவரிடம் உண்டு. மிக அரிதாக பள்ளிக்கூடம் சீக்கிரமாகவும் வருவார். அப்படி வந்தால் செம ஜாலியாக இருப்பார்.
            வடக்குத் தெரு முனையிலேயே ஒரு யூ டேர்ன் போட்டு திரும்பினான் விகடு. வேகவேமாக பெடல் போட்டு வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான். குறிப்பாக சத்தம் வராத வகையில் ஸ்டாண்ட் போட்டு சைக்கிளை நிறுத்தினான். லாலு மாமா இன்னும் திரும்பியிருக்கவில்லை. வீட்டுக்குள் ஓடினான்.
            லாலு மாமாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
            "சரி! நான் கிளம்புறேன்!" என்றவர் விகடுவைப் பார்த்ததும், "சைக்கிளை எடுக்கலைல!" என்றார்.
            "ம்ஹூம்!" என்றான்.
            "பள்ளிக்கூடத்துக்கு சீக்கிரம் வந்துடு!"
            "வந்திடறேன் மாமா!" என்ற விகடு கொல்லைப்பக்கம் ஓடினான். யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை என்று தெரிந்ததும் கால்சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த அந்தத் தாளை எடுத்துப் பார்த்தான். லாலு மாமாவின் சைக்கிள் பெட்டியிலிருந்து எடுத்துப் பார்த்த நாலுகோடு நோட்டிலிருந்து  கிழித்து வைத்திருந்த தாள். இப்படி எப்போதெல்லாம் விகடு அந்தப் பெட்டியைத் திறக்கிறானோ அப்போதெல்லாம் எதாவது ஒரு தாளைக் கிழித்து எடுத்து விடுவான்.
            லாலு மாமாவின் கையெழுத்து வித்தியாசமாக இருக்கும். இடது பக்கமும் வலது பக்கமுமாக நீட்டி நீட்டி அதாவது இழுத்து இழுத்து எழுதியிருப்பார். எழுத்துகள் ஒவ்வொன்றும் மண்டைக் கணக்கில் மண்டை மண்டையாக இருக்கும். அந்தத் தாளில் சந்திரமதிக்குக் கொடுத்தது என்று தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்தது. தேதி போட்டு எழுதியிருந்த தொகையைத் தட்டு தடுமாறிக் கூட்டினான். இருநூற்று இருபது ரூபாய் வந்தது. அதைக் கால்சட்டைப் பைக்குள் மீண்டும் பத்திரப்படுத்திக் கொண்டான்.
            "சீக்கிரமா பள்ளியோடம் கிளம்புடா! அப்பா கிளம்பிடுவாங்க!" அம்மாவின் சத்தம் வீட்டுக்குள்ளிலிருந்து வந்தது.
            விகடு கால்சட்டை, சட்டையைக் கழற்றி விட்டு துண்டைக் கட்டிக் கொண்டு குளிக்க ஆயத்தமானான்.
            சட்டியிலிருந்த சாம்பலை அள்ளி பல்லை வேக வேகமாக விலக்கியவன், அடிபம்பிலிருந்து அன்னக்கூடையில் தண்ணியை அடித்து கால் கூடை இருக்கும் போதே அப்படியே தலைக்கு மேல் தூக்கி ஊத்திக் கொண்டான். அம்மா பக்கத்தில் இருந்தால் வாய்க்குள் விரலை விட்டு "நல்ல வெலக்கித் தொலைடா!" என்று ரெண்டு இழு இழுத்து விடுவார். சோப்பை தலைக்கும், மூஞ்சுக்கும் போட்டு கண்ணெரிச்சலை உண்டு பண்ணி விடுவார்.
            அம்மா இல்லாதது விகடுவுக்கு வசதியாய்ப் போனது. தண்ணியை அடிபம்பிலிருந்து அடித்து அடித்து ஊத்திக் கொண்டிருந்தான். குளிக்கும் போதே அப்படியே கொஞ்சம் தண்ணியை வாயில் ஊத்திக் கொண்டு கொப்புளித்துக் கொண்டிருந்தான். அம்மா இருந்தால் அப்படியெல்லாம் முடியாது. பல்லை விலக்கிக் கொப்புளித்து விட்டுதான் குளிக்க வேண்டும். குளித்து முடித்ததும் அதே கால்சட்டையை மாட்டிக் கொண்டு உள்ளே வந்தான் விகடு. உடம்பு, தலை எதையும் அவன் சரியாகத் துவட்டியிருக்கவில்லை. சட்டையைப் போட்டுக் கொண்டு தலையை ஒரு மாதிரியாகச் சீவி முடித்தான்.
            செய்யு பிறந்திருந்ததால் அம்மாவையும், பாப்பாவையும் கவனித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிராம்பட்டினத்து ஆத்தா வந்திருந்தார். அவர் வைத்தி தாத்தா வழி உறவு. அந்த உறவுமுறையைச் சொன்னால் விகடுவுக்கு தலைச்சுற்றல் வந்து விடும். சொந்தக்காரர்களில் யாருக்கு குழந்தை பிறந்தாலும் அந்த ஆத்தா வந்து விடுவார். இரண்டு மூன்று மாதங்கள் தங்கி செய்ய வேண்டிய பணிவிடைகளையெல்லாம் செய்து விட்டுப் போய் விடுவார். அவரை எந்த வித விசேசங்களிலோ, தேவைகளிலோ பார்க்க முடியாது. யாருக்கேனும் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் இருப்பார். மற்றபடி அவர் வெளிசோலி வைத்துக் கொள்ள மட்டார் என்று அவரைப் பற்றி எல்லாரும் பேசுவார்கள்.
            அதிராம்பட்டினத்து ஆத்தா சூடாக இட்டிலி சுட்டு வைத்திருந்தார். இடியாப்பமும் பாலும் கூட இருந்தது.
            இட்டிலியை எடுத்து தட்டில் வைத்தவர், "ராத்திரி வெச்ச கருவாட்டுக் குழம்பு இருக்கு! ஊத்திக்கிறியாடா?" என்றார்.
            "சீனி மட்டுந்தான். வேற எதையும் வெக்கக் கூடாது. வெச்சின்னா சாப்பிட மாட்டேன்!" என்றான் விகடு.
            நான்கு இட்டிலிகளைத் தின்று முடித்தவன் பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் கிளம்பினான். படுத்திருந்த அம்மா அவன் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தார். இரவெல்லாம் அழுது யாரையும் தூங்க விடாமல் செய்த செய்யு தூங்கிக் கொண்டிருந்தாள். அம்மா எதுவும் சொல்லவில்லை. இதுவே வேறொரு நாளாக இருந்திருந்தால் அவன் சரியாக துவட்டாததற்கு முதுகில் படார் படாரென்று அடி விழுந்து இருக்கும்.
            "டேய் விகடு! என்னடா சீக்கிரமா கிளம்பிட்டே. அப்பா வந்திடட்டும். அப்பா கூட போ!" என்றார் அம்மா.
            "லாலு மாமா சீக்கிரமே பள்ளிக்கூடம் வரச் சொன்னாங்க!" என்றான் விகடு.
            "ம்ஹூம்! உருப்பட்டாப்பலதான்!" அம்மாவின் முகத்தில் எரிச்சல் தோன்றி மறைந்தது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...