Showing posts with label கடைசி விசில். Show all posts
Showing posts with label கடைசி விசில். Show all posts

22 Jul 2026

கடைசி விசிலுக்குப் பிறகு…

கடைசி விசிலுக்குப் பிறகு…

12பி பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது, ஒரு பழைய இரும்புப் பெட்டி ஆஸ்த்மா நோயாளி போல் இருமுவது போல.

சுப்பையா டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தார். அவர் முகம் எனக்கு வாழ்க்கை மேல பெரிய ஈடுபாடெல்லாம் இல்லை என்பதைத் தெளிவாகச் சொன்னது. ப்ரீ பஸ் அறிவித்ததில் இருந்து, ஸ்டாப்பில் சேலை கட்டுன உருவத்தைப் பார்த்தாலே அவர் வலது கால் ஆக்ஸிலரேட்டரை அமுக்கப் பழகியிருந்தது.

கண்டக்டர் மாணிக்கத்தின் சில்லறைப் பையில் காசை விட வெறுமை அதிகம் ஒலித்தது. பஸ்ஸுக்கு போர்டு மாற்றினால் மட்டும் போதாது, டிரைவர் புத்தியும் மாற வேண்டுமென்று அவருக்குத் தெரியும்.

அந்தப் பஸ் ஸ்டாப்பில் மூன்று பேர் நின்றிருந்தார்கள். தேர்வு பதற்றத்தில் ஒரு பையன், மீன் கூடையோடு ஒரு பெண்மணி, அப்புறம், தமிழ்நாட்டு பஸ்ஸைப் பற்றி ஆராய்ச்சி பண்ண ஜெர்மனியில் இருந்து வந்த பீட்டர்.

சுப்பையா வண்டியை நிறுத்தாமல் உருட்டினார். மீன் அம்மாள் கத்திக் கொண்டே ஓட, மாணிக்கம் "போ... போ... போட்ரு!" என்று விசில் அடித்தார்.

பையன் ஓடி வந்து படியில் தொங்கினான்.

பீட்டர் தன் நோட்டுப் புத்தகத்தில் இந்தியப் போக்குவரத்து ஒரு த்ரில்லர் விளையாட்டு'என்று குறித்துக்கொண்டார்.

கொஞ்ச தூரத்தில் ஊர்மக்கள் பஸ்ஸை மறித்தார்கள். "சிற்றூருக்குள் பஸ் வர வேண்டும்!" என்று கோஷம்.

பஸ் நின்றது.

அப்போது, மீன் அம்மாள் உள்ளே வந்து உட்கார்ந்தார். "யோவ் கன்டக்டரு, நீ நிறுத்தலைனா நான் வரமாட்டேனா? அடுத்த சிக்னல்ல ஷேர் ஆட்டோவை புடிச்சு ஏறிட்டேன்ல!" என்றார்.

மாணிக்கம் கடுப்பாகி, "மீன் நாறுது, தள்ளி வை" என்றார்.

பீட்டர் மாணிக்கத்திடம், "ஐயா, இதில் ஜிபிஎஸ் இருக்கிறதா? ஆப் இருக்கிறதா?" என்றார்.

மாணிக்கம் சலிப்பாக, "தம்பி, பஸ்ஸுக்கே ஸ்பேர் பார்ட்ஸ் இல்லை, இதுல ஆப்பாவது, மாப்பாவது! இந்தப் போர்டைத் தவிர இங்க எதுவும் புதுசு இல்லை" என்றார்.

கடைசியில் ஜெர்மனிக்குப் போன பீட்டர் அறிக்கை எழுதினார், "அங்கு பொதுப் போக்குவரத்து என்பது சேவை அல்ல; அது ஒரு தொடர் போராட்டம்."

ஆறு மாதம் கழித்து அறிக்கை எழுதிய பீட்டர் மீண்டும் ஜெர்மனியிலிருந்து இங்கு வந்தார்.

பஸ்ஸில் ஜிபிஎஸ் மின்னியது. சுப்பையா எல்லா ஸ்டாப்பிலும் வண்டியை நிறுத்தினார். மாணிக்கம் பயணிகளிடம் "வாருங்கள் ஐயா" என்று வழிந்தார்.

பீட்டர் வியந்து, "என் அறிக்கையைப் பார்த்து நிர்வாகம் சீர்திருத்தி விட்டதா?" என்றார்.

மாணிக்கம் பீட்டரின் தோளைத் தட்டிச் சொன்னார், "யோவ் வெளிநாட்டுக்காரவே... போன மாசம் பஸ்ஸைத் துரத்துன பொண்ணு வீடியோ சமூக வலைதளத்துல வைரல் ஆகி, கோர்ட் எங்களை உக்கார வச்சுடுச்சு. வேலை போயிடும்னு பயந்து, டிரைவர்-கன்டக்டர் எல்லாரும் ஆளுக்கு சில ஆயிரம் ரூபாய் போட்டு ஜிபிஎஸ் மாட்டி, ஒழுங்கா வண்டி ஓட்டுறோம்!"

பீட்டர் அதிர்ச்சியில் தன் நோட்டுப் புத்தகத்தில் கீழ்கண்டவாறு குறித்துக் கொண்டார், "நிர்வாகம் செய்யாததை, ஒரு வைரல் வீடியோ செய்துவிட்டது."

*****