இதயத்தைக் காக்கும் இதயபூர்வமான வாழ்வியல்!
உலகம்
ஓடிக் கொண்டிருக்கிறது. வேகமும் போட்டியும் நிறைந்த இந்த நவீன வாழ்க்கைப் பெருவெளியில்,
மனிதன் எதையெல்லாம் துரத்திக் கொண்டு ஓடுகிறான் எனப் பட்டியலிட்டால் அது பதவி, பணம்,
புகழ், அதிகாரம் என அந்தப் பட்டியல் முடிவிலியைத் தாண்டியும் நீளும். ஆனால், இவை அனைத்தையும்
அனுபவிப்பதற்கு அடிப்படையாக இருக்க வேண்டிய ஆரோக்கியம் எனும் அடித்தளத்தை மனிதன் தன்னை
அறியாமலேயே தகர்த்துக் கொண்டிருக்கிறான்.
வருடத்திற்கு
ஒருமுறை செப்டம்பர் 29 அன்று நாம் உலக இதய தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்நாளின் முழக்கம்,
"ஒரு துடிப்பைக்கூட தவறவிடாதீர்கள்!" என்பதுதான். ஆனால் உண்மையிலேயே நாம்
எதை தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்? நம் உடலுக்குள் இரவும் பகலும் ஓய்வின்றி உழைக்கும்
அந்த நான்கு அறை அதிசயத்தின் மெல்லிய எச்சரிக்கை குரலைத்தான்!
மாரடைப்பு
என்பது பல நாட்கள் மறைந்திருந்து தாக்கும் கொலையாளி. மாரடைப்பு என்பது ஏதோ ஒரு நாள்
திடீரென்று வானத்திலிருந்து வந்து விழும் பேரிடர் அல்ல; அது நாம் தினமும் சேமித்து
வைக்கும் தவறான வாழ்க்கை முறையின் வட்டி!
உயர்
ரத்த அழுத்தம் என்பதை மருத்துவர்கள் அமைதியான கொலையாளி என்கிறார்கள். ஏனெனில் அது எவ்வித
சத்தமும் இன்றி, வெளிப்புற அறிகுறிகளும் இன்றி நம் உடலுக்குள் ஊடுருவி வாழ்கிறது. நாற்பது
வயதைக் கடந்த பின்னும் குருதி அழுத்தத்தைப் பரிசோதிக்கத் தயங்கும் அலட்சியம், ஆபத்தை
நாமே அழைப்பதற்குச் சமம்.
அதேபோல்தான்
கெட்டக் கொழுப்பு. ரத்தக் குழாய்களில் படிந்து, நதியின் ஓட்டத்தைத் தடுக்கும் பாறை
போல் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனுடன் நீரிழிவும் சேர்ந்துகொண்டால், நெஞ்சு வலியைக்
கூட உணர்த்த முடியாமல் நரம்புகளின் உணர்ச்சியை மரத்துப் போகச் செய்து விடுகிறது.
"வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்" (குறள், 435)
என்ற
வள்ளுவரின் வாக்கு, பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, நமது உடலியல் ஆரோக்கியத்திற்கும்
நூற்றுக்கு நூறு பொருந்தும்.
திரைப்படங்களில்
காட்டுவதைப் போல, மாரடைப்பு என்றால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஒருவர் திடீரென மயங்கி
விழ வேண்டும் என்பதில்லை. உடலின் மொழி மிகவும் நுட்பமானது.
1) வழக்கத்திற்கு
மாறான சோர்வு
2) லேசான
மூச்சுத்திணறல்
3) முகத்தில்
வழியும் அசாத்திய வியர்வை
4) தாடை,
தோள்பட்டை அல்லது முதுகில் தோன்றும் விவரிக்க முடியாத அசௌகரியம்
5) அஜீரணம்
போன்ற எரிச்சல்
இவை
அனைத்துமே இதயம் நமக்கு அனுப்பும் அவசரக் கடிதங்கள். இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அஜீரணக்
கோளாறு என்று நாமே சுய மருத்துவம் செய்து அலட்சியப்படுத்தினால், விளைவு மீள முடியாத
துயரமாகி விடும்.
இதய
நோய்களுக்கான பெரும்பாலான ஆபத்துக் காரணிகள் 'நம்மால் மாற்றக்கூடியவை' என்பதுதான் இதில்
நம்பிக்கையளிக்கும் செய்தி.
வாரத்திற்கு
குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் அதாவது, ஒரு நாளைக்கு வெறும் 20 முதல் 25 நிமிடங்கள்
வேகமான நடைப்பயிற்சியோ அல்லது மிதமான உடற்பயிற்சியோ தேவை. அசைவற்ற நிலைதான் தேக்க நிலை;
தேக்க நிலைதான் நோயின் தொடக்கம்.
நாவிற்கு
ருசியான பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், அதிக உப்பையும், கெட்ட கொழுப்புகளையும் தவிர்த்து,
இயற்கை தந்தப் பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள் மற்றும் முழு தானியங்களை உணவில்
சேர்க்க வேண்டும்.
புகைப்பிடித்தல்
என்பது இதய ரத்தக் குழாய்களை நேரிடையாகச் சிதைக்கும் கொடூரம். நீங்கள் எந்த வயதில்
புகையைத் துறந்தாலும், அந்த நொடியிலிருந்தே உங்கள் இதயம் தன்னைத்தானே புதுப்பித்துக்
கொள்ளத் தொடங்குகிறது.
அளவற்ற
மன அழுத்தமும், அரைகுறைத் தூக்கமும் இதயத்தின் இயல்பான தாளத்தைக் குலைத்துவிடும். தியானம்,
வாசிப்பு, நல்ல உறக்கம் ஆகியவை இதயத்திற்கு நாம் தரும் சிறந்த பரிசுகள்.
மருத்துவமனைகளின்
கதவுகளைத் தட்டுவதை விட, தினமும் காலைப் பொழுதில் நடைப்பயிற்சிக்காக வீட்டின் கதவுகளைத்
திறப்பது மேலானது. நோயை குணப்படுத்துவதை விடத் தடுப்பதே உண்மையான பேரறிவு.
நம்
உடலின் ஒவ்வொரு இதயத் துடிப்பும் ஒரு வாழ்வியல் வாய்ப்பு. அதை அலட்சியத்தால் தவறவிடாமல்,
விழிப்புணர்வோடும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையோடும் வாழக் கற்றுக்கொள்வோம். நம் இதயம்
துடிப்பது நமக்காக மட்டுமல்ல, நம்மை நேசிக்கும் நம் குடும்பத்திற்காகவும்தான்!
*****
