Showing posts with label The end is at the beginning!. Show all posts
Showing posts with label The end is at the beginning!. Show all posts

28 Jun 2025

முடிவு தொடக்கத்தில் இருக்கிறது!

முடிவு தொடக்கத்தில் இருக்கிறது!

எதையெதையோ பார்க்கிறாய்

எதையெதையோ பேசுகிறாய்

எதையெதையோ எழுதுகிறாய்

உன்னைச் சுற்றி ஆயிரம் நடக்கின்றன

உனக்குள்ளே ஆயிரம் நடக்கின்றன

உன்னைப் பற்றி உன்னைச் சுற்றி

நினைப்பது அல்லாது

யாருக்காகவோ பார்க்கிறாய்

யாருக்காகவோ பேசுகிறாய்

யாருக்காகவோ எழுதுகிறாய்

யாருக்காகவோ வாழ்கிறாய்

உனக்கான வாழ்க்கை

அனாதியாய்க் கிடக்கிறது

இயலாமையில் தவிக்கும் போது

ஒரு வெற்றி தேவைப்படுகிறது

எழும்புவதற்கான உற்சாகம் வேண்டியிருக்கிறது

மனதைத் தயார்படுத்த

மனதுக்காகக் காத்திருப்பது எத்தனை முறை

மனம் துவக்க விடாது

ஆனாலும் ஆரம்பித்துவிட வேண்டும்

அதுவே தயார்படுத்தும் முறை

கொஞ்சம் நகர்ந்து விட்டால்

வண்டி கிளம்பி விடும்

வண்டியை சில அடிகள் தள்ளினால்

வண்டி பல கோடி அடிகள்

உன்னைத் தள்ளிக் கொண்டு செல்லும்

ஓடுவது என்று முடிவெடுத்துவிட்டால்

ஓடிக் கொண்டிருக்க வேண்டும்

ஓட ஓட புதிது புதிதாகத் தோன்றும்

ஓடாமல் அமர்ந்து யோசிப்பதால்

ஒடுவதில் எதையும் கண்டுபிடிக்க முடியாது

ஓடிய பின் அமர்ந்து யோசிப்பவர்கள்

வித்தியாசமாக ஓடுகிறார்கள்

எல்லாம் செய்ய செய்ய கண்டுபிடிப்பதே

கண்டுபிடித்து கண்டுபிடித்து செய்வதே

நிகழ நிகழ அறிய வருவதே

அறிய அறிய நிகழ்வதே

*****