Showing posts with label கடைசியாகப் படிக்கும் தலைமுறை. Show all posts
Showing posts with label கடைசியாகப் படிக்கும் தலைமுறை. Show all posts

23 Dec 2024

கடைசியாகப் படிக்கும் தலைமுறை

கடைசியாகப் படிக்கும் தலைமுறை

ஒரு போட்டித் தேர்வுக்குப் போயிருந்தேன்

யார் கையிலும் புத்தகம் இல்லை

யாரிடமும் என்றால் என்னைத் தவிர

எல்லார் கையிலும் அலைபேசி

அலைபேசியில் படித்துக் கொண்டிருந்தார்கள்

மற்றும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்

மகள் கூட படிப்பதற்கு PDF அனுப்பியிருக்கிறாள்

அடிக்கடி இது போன்று அனுப்பி

அச்செடுத்து வந்து விடுங்கள் என்கிறாள்

புத்தகம் கிடக்கட்டும்

குறைந்தபட்சம் கையேடுகள் (நோட்ஸ்) வைத்து படிக்கும் தலைமுறை கூட

ஒழிந்து விட்டது

நானெல்லாம் கையேடு (நோட்ஸ்) வைத்து படிப்பது தெரிந்து

ஆசிரியர்களிடம் செமையாக அடி வாங்கியவன்

என்று சொன்னால் எந்தத் தலைமுறை நம்பும்?

சொல்ல மறந்துவிட்டேன் பாருங்கள்

மாத்திரை போட்டுக் கொண்டும் படித்தார்கள்

சர்க்கரையோ ரத்த அழுத்தமோ

படித்ததால் வந்ததோ

படிப்பதற்கு முன்போ வந்ததோ

ஆயிரம்தான் சொன்னாலும்

தேர்வு ஒன்றுதான் படிக்க வைக்கிறது

அல்லது படிக்க வேண்டியதைப் பார்க்க வைக்கிறது

தேர்வுகள் இல்லாத உலகில்

படிப்பது என்பது மதிப்பிழந்து போய் விடுமோ என்னவோ

கடைசியாகப் படிக்கும் தலைமுறையாக

இதுவாக இருக்குமோ என்னவோ

*****