22 Sept 2023

பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

பாமாவின் ‘கருக்கு’ நாவல் 1992 இல் எழுதப்பட்டது. எழுதப்பட்டு முப்பது ஆண்டுகள் கழித்தும் மீண்டும் வாசித்து தற்கால வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய முக்கிய நாவலாக இருக்கிறது.

‘கருக்கு’ வடிவத்தை நாவல் என்று சொல்வதை விட பெண்ணின் சுயதீனமாக வெளிப்படும் சுயசரிதை வடிவம் கொண்ட எழுத்து என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். தன்னளவில் ஒரு நாவலாக முழுமை பெற்றிருப்பினும் ஒரு குறுநாவல் அளவுக்குரிய 96 பக்கங்களைக் கொண்ட எழுத்து வடிவமாக இது இருக்கிறது.

பேச்சு வழக்கு மற்றும் வட்டார வழக்குக் கொண்ட நடையின் மூலம் வாசகருடன் உரையாடுவது போன்ற மொழி நடையினைப் பாமா இந்நாவல் வடிவத்தில் தேர்ந்து கொண்டுள்ளார். அவரின் கதையை அவரது வாயால் கேட்பது போன்ற வடிவத்திலேயே இந்த நாவல் நகர்கிறது.

சாதிய ஒடுக்குமுறையும் சாதிய அடையாளமும் எப்படியெல்லாம் கீழ்ச்சாதி மக்களை அலைக்கழிக்கிறது, சலனமுறச் செய்கிறது, பாதிப்படையச் செய்கிறது என்பதை லெட்சுமண் கெய்க்வாட்டின் ‘உச்சாலியா’ (பழிக்கப்பட்டவன்), லட்சுமண் மானேயின் ‘உபாரா’ (அன்னியன்) ஆகிய மராத்திய தலித் எழுத்துகளின் மூலம் வாசித்து அறிந்தவர்களுக்கு அதே போன்ற மனதைக் கனக்க செய்யும் மனோ வதையை பாமாவின் ‘கருக்கு’ உண்டாக்குகிறது.

பாமாவின் தமிழ்ப் பெண்ணெழுத்து மூலமாக தமிழ்ச் சூழலில் நிகழும் சாதிய உபாதைகளை ஓர் அனுபவக் கதையாக ‘கருக்கு’ மூலமாக வாசித்தறிய முடிகிறது.

தீண்டாமையின் வேதனையையும், சாதியத்தைப் பயன்படுத்தி உழைப்பை உறிஞ்சிக் கொள்ளும் போக்கையும் வெகு எதார்த்தமாக நாவலில் பாமா பேசுகிறார். பிள்ளைப் பருவத்தில் அவருடைய சொந்த மண்ணில் தொடங்கி, குழந்தைமை மாறாமல் பள்ளியில் படிக்கும் காலந்தொட்டு வேலைக்குப் போன பிற்பாடும் கடவுளின் சேவைக்காகத் தன்னை ஒரு கன்னியாஸ்திரியாக அர்ப்பணித்த பின்பும் சாதியத்தால் கௌரவமில்லாமல், மனப்புழுக்கத்தோடு வாழும் வாழ்வைப் பாசாங்கற்ற மேற்பூச்சுகள் இல்லாத எழுத்துகளால் பாமா எழுதிச் செல்கிறார்.

அவரது சின்னஞ்சிறு வயதின் கிராமத்து வாழ்க்கையில் பசி, பட்டினி, பலரோடு கூடிப் பரவசமாக இருந்த நாட்கள், கிராம மக்களின் நம்பிக்கைகள், ஆரவாரங்கள், சச்சரவுகள், சண்டைகள், குற்றச்சாட்டுகள், படித்த விசயங்கள், நம்பிய தெய்வங்கள், செபித்த ஜபங்கள் எனப் பலவற்றைப் பதிவு செய்கிறார்.

எவ்வளவுதான் ஒடுக்கப்பட்டாலும் உழைப்பானது உறிஞ்சப்பட்டாலும் உயிர்த்துடிப்பும் உயிரோட்டமும் நிறைந்த வாழ்க்கையுடைய கிராமத்தையும் அதே கிராமத்தில் பறையருக்கும் சக்கிலியருக்கும் கல்லறை தொடர்பாக நடக்கும் சண்டைகளையும், பறையருக்கும் பள்ளருக்கும் நடக்கும் சண்டைகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் வலிகளையும், காவலர்களின் அடக்குமுறைகளுக்குப் பயந்து ஆண்களற்று வெறிச்சோடி ஒடுங்கிப் போகும் வாழ்க்கையையும் பதிவு செய்கிறார்.

காவலர்களின் அடக்குமுறையால் ஆண்கள் ஊருக்குள் வர முடியாத சூழலில் ஒரு சாவு நிகழ்ந்து விட அந்தச் சாவிற்குச் சாதூர்யமாகக் காவலர்களின் கண்களில் படாமல் சேலையைக் கட்டிச் சம்பந்தப்பட்டவரை அழைத்து வந்து அடக்கம் செய்யும் பெண்களின் சாதூர்யத்தையும் நாவலில் பார்க்க முடிகிறது. இப்படியாக ஒடுக்கப்பட்ட கீழ்ச்சாதிகளுக்குள் நிலவும் உட்பூசல்கள், சண்டைகள், உள்ளடி வேலைகள் போன்றவற்றையும் தன்னுடைய வாழ்க்கையைக் கடந்து வரும் போக்கில் பாமா எடுத்துச் சொல்கிறார்.

பாத்திரம் பண்டம் புழங்குவதில், பேருந்தில் இருக்கைகளில் அமர்வதில், கடவுளுக்காகச் சேவை செய்யும் இடங்களில், அடக்கம்செய்யும் கல்லறைகளில் என்று எல்லா இடங்களிலும் விடாமல் துரத்திக் கேவலப்படுத்திச் சாகிற வரை சீரழிக்கும் சாதிய அடையாள அடுக்குகள் குறித்தான சம்பவங்களைப் புட்டு புட்டு வைத்து எந்த விதத்தில் மேல்சாதி உயர்ந்தது, கீழ்ச்சாதி தாழ்ந்தது என்ற கேள்வியை எழுப்புகிறார்.

இதே நிலை பரம்பரை பரம்பரையாகத் தொடர்வதால் தங்களைத் தாங்களே அடிமைகளாக, அசிங்கமானவர்களாக, தீண்டத்தகாதவர்களாகக் கருதிக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளும் உளவியல் சிக்கலையும் பாமா எடுத்துச் சொல்கிறார்.

எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் பாமாவின் தன் வரலாற்று எழுத்துகளில் பதிவாகிறார்கள். என்னதான் ஆண்கள் பொறுப்பின்றி இருந்தாலும், சண்டைகளில் ஈடுபட்டுச் சிறைகளுக்குப் போனாலும் நிர்கதியான சூழல்களிலும் குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவது இந்தப் பெண்களின் புத்திசாலித்தனமும் உழைப்பும்தான் என்பதை எந்தச் சமரசமும் இன்றிப் பதிவு செய்கிறார். விடிந்ததிலிருந்து விடியல் மறைந்து அஸ்தமனம் ஆகும் வரை உழைப்புதான் இந்தப் பெண்களுக்கு. அவ்வளவு உழைப்பவர்கள் எவ்வளவு சம்பாத்தியம் பண்ணியிருக்க வேண்டும்? அந்தச் சம்பாத்தியத்தில் எவ்வளவு வளமாக வாழ்ந்திருக்க வேண்டும்? எவ்வளவுகௌரவமாக இருந்திருக்க வேண்டும்? ஆனால் அதுதான் இல்லை. அவ்வளவு வந்து சேர வேண்டிய சம்பாத்தியம், வளம், கௌரவம் அனைத்தையும் சாதியமானது காலம் காலமாக கூலி தருவோருக்கு அடிமைகளாக மாற்றி வைத்திருக்கிறது என்கிறார்.

ஒடுக்கப்பட்டவர்களைத் கடைத்தேற்றம் செய்வதாக அமையும் மதமாற்றமும் சாதிய மாற்றத்தை அனுமதிப்பதில்லை. ஆப்பிள்களையும் ஆரஞ்சுகளையும் வாங்கிக் கடவுளுக்கும் கடவுளோடு தொடர்புடைய சாமியார்களுக்கும் படைக்கச் செய்கிறதே தவிர அவர்களைத் தின்ன அனுமதிப்பதில்லை. எந்த மாற்றம் நிகழ்ந்தாலும் அவர்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு அவர்கள் அடக்கப்படுகிறார்கள், ஆளப்படுகிறார்கள் என்பதை நிகழ்சாட்சியாக நின்று பாமா சுட்டுகிறார்.

அன்பான கடவுள் முன்பும் அவர்கள் அடக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள். படித்த முடித்து அறியாமையை விலக்கிக் கேள்விகளை எழுப்பும் இடத்திலும் கீழ்படிதல் என்ற சொல்லாடலால் மீண்டும் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிறார்கள். இப்படி தன் வாழ்வில் சந்தித்த அனைத்தையும் பாமா ‘கருக்கு’ நாவலில் பதிவு செய்கிறர்.

இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு தெம்பு, ஒரு வீம்பு, வாழ முடியும் என்ற நம்பிக்கை, வாழ வேண்டும் என்ற ஆசை இவைதான் தன்னை வழிநடத்திக் கொண்டிருப்பதாக நாவலை முடிக்கிறார்.

எல்லாவற்றையும் விட்டு இறுதியாக வெளியேறிய பின்னும் இவை அனைத்து குறித்தும் அர்த்தப்பாட்டோடு சிந்திக்க முடிவதே இழப்பின் வெற்றி என்பதாக தன்னுடைய எழுத்தை முன் வைக்கிறார்.

ஒரு நாவலாக இந்த ‘கருக்கு’ பாமாவை அடையாளப்படுத்துகிறது. இந்த அடையாளத்துக்காக அவர் பல அவமானங்களையும் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தித்து இருக்கிறார். சொந்தக் கிராமத்து மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ஏசப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டும் இருக்கிறார்.

நம்முடைய சமூகம் எந்த அளவுக்குச் சாதியம் புரையோடிப் போன சீக்கால் எளியோர்களைப் பாதித்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு பாமாவின் ‘கருக்கு’ நேரடி சாட்சியமாகவும், காலத்தின் ஆவணமாகவும் இருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தின் சாதிய வெம்மையை அறிந்து கொள்ள நினைப்பவர்கள் பாமாவின் ‘கருக்கு’ நாவலை ஒன்றுக்குப் பலமுறை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.

நூல் வெளியீடு குறித்த விவரங்கள் :

பாரதி புத்தகாலயம், 421 அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018 வலைதளம் : www.thamizhbooks.com மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...