Showing posts with label Political Philosophy. Show all posts
Showing posts with label Political Philosophy. Show all posts

2 May 2026

அரசியல் தத்துவவாதிகளின் பீதி ரிப்போர்ட்டுகள்!

அரசியல் தத்துவவாதிகளின் பீதி ரிப்போர்ட்டுகள்!

மாக்கியவல்லி என்றாலே பலருக்கும் ஒரு அலர்ஜி. குரூரமானவர், தந்திரக்காரர் என்று முத்திரை குத்திவிட்டார்கள்.

ஆனால் பாவம், அவர் ஓர் அனுபவஸ்தர். அவர் வாழ்ந்த காலத்து இத்தாலியில் நகரங்களுக்கு இடையே ஓயாத அடிதடி, வெட்டுக்குத்து.

பிளாரன்ஸ் குடியரசுக்காக உழைத்த அவரை, கடைசியில் சித்திரவதை செய்து நாடு கடத்தினார்கள்.

அவர் தி பிரின்ஸ் என்ற புத்தகத்தில் சொன்னது இதுதான். பரம்பரை ஆட்சியைத் தக்கவைப்பது ரொம்ப ஈஸி. ராஜா கொஞ்சம் விவரமானவராக இருந்தால் போதும், நாற்காலி பத்திரமாக இருக்கும்.

ஜனநாயகக் குழப்பங்களை விட, ஒரு வலுவான ராஜா தரும் ஸ்டெபிலிட்டி மேல் அவருக்கு ஒரு தனி காதல் இருந்தது.

அடுத்தது நம் மேத்ஸ் மாஸ்டர் ரெனே டெஸ்கார்ட்ஸ் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். அவர் சொன்ன தத்துவம் என்னவென்றால், உன் நாட்டுச் சட்டத்துக்கு அடங்கி நட, உன்னை வளர்த்த மதத்தை விட்டுக்கொடுக்காதே.

ஏன் இப்படிச் சொன்னார்?

டெஸ்கார்ட்ஸ் பிறக்கும்போது ஐரோப்பாவே ஒரு போர்க்களம். கத்தோலிக்கர்களுக்கும் ப்ரோட்டஸ்டன்ட்டுகளுக்கும் இடையே தீராத தர்மயுத்தம். எலிசபெத் ராணி தன் சொந்தத் தங்கை மேரியின் தலையை வெட்டுகிறார். ஸ்பெயின் நூறு கப்பல்களோடு இங்கிலாந்தை அடிக்க வருகிறது.

இப்படியொரு சூழலில் இருந்த ஒருவருக்கு என்ன பிடிக்கும்?

அமைதிதானே!

அதுதான் அவரது முதல் மாரல் மேக்சிம். ராஜாவுக்கு அடங்கி நடப்பது என்பது அவருக்கு ஒரு தார்மீகத் தேர்வு. குழப்பத்தை விட ஒரு லெஜிடிமேட் அதிகாரம் மேல் என்பது அவர் லாஜிக்.

மாண்டெய்ன் என்பவரும் இதையேதான் சொன்னார்,  ராஜாவின் குணங்களில் முக்கியமானது நீதிதான்.

டெஸ்கார்ட்ஸ் ஒன்றும் சாதாரணப்பட்டவரும் அல்ல. பிளாட்டோ சொன்ன தத்துவ ஞானி ராஜா வருவார் என்று அவர் நம்பவில்லை. ஏனென்றால், சர்வாதிகாரமும் முடியாட்சியும் எப்போது வேண்டுமானாலும் வன்முறையைத் தூண்டலாம் என்று அவருக்குத் தெரியும்.

இவற்றையெல்லாம் தொகுத்து லார்ட் ஆக்டன் என்பவர் ஒரு பஞ்ச் டயலாக் வைத்தார். அது என்னவென்றால், அதிகாரம் கெடுக்கும், முழுமையான அதிகாரம் முழுமையாகக் கெடுக்கும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்களேன்.

மாவோவின் கலாச்சாரப் புரட்சியில் கோடிக்கணக்கானோர் பலியானார்கள்.

ஸ்டாலினின் ரஷ்யாவில் லட்சக்கணக்கானோர் காணாமல் போனார்கள்.

ஹிட்லர் யூதர்கள் மேல் நடத்திய அந்தப் பயங்கரத்தில் அழிந்தவர்கள் பல்லாயிரம்.

ஜனநாயகம் கூட சில சமயம் சொதப்பும்.

1953 இல் ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொசாதிக்கைத் தூக்கிவிட்டு, ஷாவை உட்கார வைத்தது அமெரிக்காவும் பிரிட்டனும்தான்.

அதன் விளைவு?

1979 புரட்சி, இன்று வரை தொடரும் மதவாதம். தற்போது அமெரிக்கத் தாக்குதல்.

நிற்க, மீண்டும் டெஸ்கார்ட்ஸ்க்கு வருவோம்.

டெஸ்கார்ட்ஸ் தன் நாடான பிரான்ஸை விட்டுவிட்டு டச்சு குடியரசுக்கு ஓடினார்.

ஏன்?

அங்கேதான் சகிப்புத்தன்மை அதிகம்.

அமைதிக் கனிகளைச் சுவைக்க அவருக்கு ஓர் இடம் தேவைப்பட்டது. அவர் ஒரு பிராக்டிகல் ஆள். இயற்கை ரகசியங்களை உடைக்க வேண்டும் என்பது அவர் லட்சியம். அதற்கு அரசியல் அமைதி தேவைப்பட்டது.

அதேசமயம், சில ஒற்றை மனித ஆட்சிகள் உருப்படியாகவும் இருந்திருக்கின்றன. ரஷ்யாவின் பீட்டர் த கிரேட், சீனாவின் டெங் சியாவோபிங் போன்றவர்கள் நாட்டை மாற்றினார்கள்.

சில நாடுகளில் பெயரளவுக்கு ராஜா இருந்துகொண்டு அமைதியைத் தருகிறார்கள் கனடா, ஆஸ்திரேலியா போல.

இன்றைய சூழலைப் பாருங்கள். உக்ரைன் மீது ரஷ்யா பாய்கிறது, தைவானைச் சீனா முறைக்கிறது, அமெரிக்கத் தேர்தலிலேயே வன்முறை வெடிக்கிறது, ஈரானை அமெரிக்கா போட்டுப் பொளக்கிறது.

மாக்கிகியவல்லி, மாண்டெய்ன், டெஸ்கார்ட்ஸ் ஆகிய இவர்கள் மூவரும் சொன்ன ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் தத்துவமும் கிடையாது, தலைவனும் கிடையாது.

ஜனநாயகம் முக்கியம்தான், ஆனால் அதற்கு அஸ்திவாரம் அமைதி. அந்த அமைதியைத் தரும் அதிகாரம் எதுவாக இருந்தாலும், அதற்கு அடங்கி நடப்பது ஒரு புத்திசாலித்தனமான டிரேட் மார்க்.

என்னதான் தத்துவம் பேசினாலும், டெஸ்கார்ட்ஸ் போல நாமும் கொஞ்சம் அரசியல் பழகிக்கொள்வது நல்லது.

ஏனென்றால், அமைதி போனால் அப்புறம் எல்லாம் போச்சு!

*****

20 Mar 2026

யோக்கியன் வருகிறான், செம்பைத் தூக்கி உள்ளே வை!

யோக்கியன் வருகிறான், செம்பைத் தூக்கி உள்ளே வை!

இந்தத் தேர்தல் நேரத்தில் இந்தத் தலைப்பு ரொம்ப பொருத்தமானதுதான்.

படிப்படியாக நாம் தலைப்பிற்கு வருவதற்கு முன் ஒரு கேள்வி.

உண்மை என்றால் என்ன?

ஸ்கூல் பையனிடம் கேட்டால், பரீட்சையில் காப்பியடிக்காமல் இருப்பது என்பார். ஒரு கணவனிடம் கேட்டால், நேற்று இரவு எங்கே இருந்தேன் என்று மனைவியிடம் சொல்லும் ஓர் அபாயகரமான விளையாட்டு என்பார். ஆனால் ஓர் அரசியல்வாதியிடம் கேட்டால்…? சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வளைக்கப்படும் ஒரு ரப்பர் பேண்ட் என்பார்.

அப்படியானால் உண்மை என்பதுதான் என்ன?

உண்மை மற்றும் நம்பிக்கை ஆகிய இவை இரண்டும் வெறும் வார்த்தைகள் அல்ல, நம் மனுஷ ஜாதியின் அஸ்திவாரம்.

இப்போது ஃபேக் நியூஸ், பொலிடிகல் ஸ்பின் என்றெல்லாம் கலர் கலராகப் பெயர்கள் வைத்திருக்கிறோம். இதெல்லாம் டொனால்ட் ட்ரம்ப்போ அல்லது டோனி பிளேயரோ கண்டுபிடித்தது என்று நினைத்தால் நீங்கள் அப்பாவிகள்.

அந்தக் காலத்துக் கிரேக்கத்தில் சோஃபிஸ்ட் என்று ஒரு கூட்டம் இருந்தது. இவர்கள் இன்றைய பி.ஆர்.ஓக்கள் மாதிரி. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்வோம், அது உண்மையோ இல்லையோ என்று விளம்பரம் செய்தவர்கள்.

பிளேட்டோ அப்பவே சொன்னார், ஜனநாயகம் என்பது கொடுங்கோல் ஆட்சிக்கு ஒரு படி மேலே அவ்வளவுதான். அவருக்கு அரசியலே பிடிக்கவில்லை. உங்களுக்கும் கூட அப்படியே இருக்கலாம்.

தத்துவத்தில் ஒரு சின்ன நுணுக்கம் இருக்கிறது.

என்னிடம் 10 சட்டைகள் இருக்கின்றன என்பது ஒரு உண்மை. ஆனால் இதனால் உலகிற்கு என்ன லாபம்? இது வெறும் டேட்டா.

ஆனால் நேர்மை இருக்கிறதே. இதுதான் முக்கியம்.

ஒருவர் சாகக் கிடக்கும்போது, தன் வாழ்க்கையைப் பற்றி ஓர் உண்மையான புரிதலைத் தேடுகிறார். அது அவருக்கு நிம்மதியைத் தருமா என்பது முக்கியமல்ல, அது உண்மையா என்பதுதான் முக்கியம்.

நேர்மை இல்லாத அன்பு, ஐஸ்கிரீம் மீது வைத்திருக்கும் காதலைப் போன்றது. ஐஸ்கிரீம் உருகினால் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் ஒரு மனிதனை நாம் அப்படிப் பார்ப்பதில்லை.

ஹிட்லரை, முசோலினியை நாம் ஏன் சாத்தான்கள் என்கிறோம்? அவர்களை நாம் மனிதர்களாகப் பார்ப்பதால் தான். ஒரு நாயைக் கெட்ட நாய் என்று சொல்லலாம், ஆனால் தீய நாய் என்று சொல்ல மாட்டோம். மனிதர்களுக்கு மட்டும்தான் அது அப்ளை ஆகும்.

இப்போது விசயத்திற்கு வருவோம்.

அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் ஓட்டு.

அதற்காக அவர்கள் புள்ளிவிவரங்களைப் உருட்டுவார்கள். அதில் இருக்கும் உண்மை நிஜமான கேள்விக்குறி. உதாரணத்துக்கு நம் நாட்டுக்குள் இவ்வளவு பேர் உள்ளே வருகிறார்கள் என்பார்கள். நீங்கள் குடியேற்றத்தை வெறுப்பவர் என்றால், அந்தப் புள்ளிவிவரம் உங்களுக்கு உண்மை. இல்லையென்றால் அது வெறும் நம்பர்.

இங்கேதான் ஒரு சிக்கல் வருகிறது. ஓர் அரசியல்வாதி உங்களை ஓர் அறிவுள்ள மனிதனாகப் பார்க்காமல், ஒரு ஓட்டு இயந்திரமாக மட்டும் பார்த்தால், அங்கே நேர்மை செத்துவிடுகிறது. உங்களை அவர் ஏமாற்றத் துணியும்போதே, உங்களை அவர் ஒரு சக மனிதனாக மதிக்கவில்லை என்று அர்த்தம். உங்களை ஒரு பொருள் ஆக ஆக்கிவிடுகிறார். உங்களை ஒரு பொருளாக்கி உங்களை வாங்க அவர் எந்த உத்தியையும் பயன்படுத்துவார். உண்மை அங்கே அடிபட்டு ஐசியுவில் கிடக்கும்.

உண்மை என்பது சயின்ஸ் லேப்பில் இருக்கும் டெஸ்ட் டியூப் அல்ல, அது நம் இதயத்தின் ஒரு பகுதி. அரசியல்வாதிகள் நம்மிடம் பொய் சொல்லும்போது, அவர்கள் நம்மிடம் இருந்து ஓட்டுகளை மட்டும் திருடுவதில்லை, நம்முடைய மனிதத் தன்மையையும் சேர்த்துத்தான் திருடுகிறார்கள்.

அரசியல்வாதி சொல்லும் உண்மைக்கும், ஒரு சாமானியன் தேடும் உண்மைக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான் இன்றைய உலகத்தின் மிகப்பெரிய துயரம்.

ஆக உண்மை என்பது என்னவென்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். அவரவர்களின் சுயலாபத்திற்கு ஜோடித்திருக்கும் ஒன்று. ஆனால் உண்மையான உண்மை என்ற ஒன்று இருக்கும் அல்லவா! அதுதான் உண்மை. அதைத் திரிக்க முடியாது, மாற்ற முடியாது. அப்படிப்பட்ட உண்மைகளில் ஒன்றுதான் அரசியல்வாதிகளிடம் உண்மை இருப்பது இல்லை என்பதும், அப்படி இருந்தால் அவர்கள் அரசியல்வாதிகளாக இருப்பது இல்லை என்பதும்.

*****