திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 84
காதல் கடலில் நீந்தக் கற்றுக் கொடுப்பார்
யார்?
திருவாரூர், செங்காந்தள் நகர்.
மழைக் காலம்.
வெளியே சில்லென்று ஈரம் சொட்டும்
காற்று.
அந்த அறையில் கதவு லேசாகத் திறந்திருந்தது.
உள்ளே அவள் மட்டும் மெத்தை இருக்கையில்
அமர்ந்திருந்தாள்.
கடந்த மூன்று மாதங்களாக இதே நிலைதான்.
அவனுக்குச் சென்னையில் ஒரு முக்கியமான
செயல்திட்டப்பணி.
வார இறுதி நாட்களில் திருவாரூருக்கு
எப்படியும் வந்து விடுவான். ஆனால், இந்த முறை நிறைவு பெறாமல் இழுத்தடித்து செயல்திட்ட
பணிகளால் அவன் திருவாரூர் வரவில்லை. அலைபேசியில் பேசும் போதும் அவசரம். "இந்த
ஒரு வாரம் மட்டும்தான். அப்புறம் நிரந்தரமாவே அங்கே வந்துடுறேன்." என்றான். இப்படித்தான்
ஒவ்வொரு முறையும் சொல்கிறான். அவன் சொன்ன அந்த ஒரு வாரம் என்பது இப்படியே ஆறு மாதங்களாகத்
தள்ளிப் போய்க் கொண்டேதான் இருக்கிறதே தவிர, அவன் சொன்ன கால இடைவெளிக்குள் அது அடைபட்டதாகத்
தெரியவில்லை.
அவள் அலைபேசியை எடுத்தாள். அவனின்
கடைசி வாட்ஸ்அப் செய்தி அப்படியே இருந்தது. "அலுவல் கூட்டத்தில் இருக்கிறேன்.
மிகவும் அவசரம். பிறகு கூப்பிடுகிறேன்."
அவளுக்குள் ஓர் அடக்க முடியாத
பெருமூச்சு வெடித்துக் கிளம்பியது. வெளியே கொட்டும் மழையின் சத்தம் அவளது தனிமையை இன்னும்
பெரிதாக்கியது.
சுற்றிலும் எல்லாமே இருக்கிறது.
அழகான வீடு, வசதியான வாழ்க்கை, எதைச் சொன்னாலும் வாங்கிக் கொடுக்கும் கணவன். ஆனால்,
இந்த நிமிடம் அவளுக்குத் தேவைப்படுவது பொருளல்ல; அவனது தோள், அவனது அரவணைப்பு.
அவள் தனக்குத்தானே முணுமுணுத்துக்
கொண்டாள், "என்ன வாழ்க்கை இது?"
அவள் சமையலறைக்குச் சென்று ஒரு
கோப்பை சூடான தேநீர் போட்டுக் கொண்டு வந்தாள். தேநீரைக் குடிக்கும்போது, அவளது சிந்தனை
கடந்த காலத்திற்குத் தாவியது.
அவனும் அவளும் கல்லூரியில் காதலித்த
காலம். அப்போது கூட இவ்வளவு பெரிய இடைவெளி இருந்ததில்லை. ஒரு நாள் பார்க்கவில்லை என்றாலும்
பைத்தியம் பிடித்தது போல் அலைவார்கள்.
நெருக்கடியான வேலை, வாடிக்கையாளர்
சந்திப்பு, தொழில்நுட்ப பிரச்சனைகள், அழுத்தும் அலவலகப் பணிகள் என அவனின் உலகம் இப்போது
வேறொன்றாக மாறிவிட்டது.
அவன் மாறவில்லைதான்; அவனது அன்பும்
குறையவில்லைதான். ஆனால், அவனது உடனிருப்பு இல்லையே? அந்த வெற்றிடம் ஒரு ராட்சதக் கடல்
மாதிரி அவளைச் சூழ்ந்து கொண்டது.
அவள் யோசித்துப் பார்த்தாள்.
இந்தக் காதல் கடல் எத்தனை விசித்திரமானது!
ஆரம்பத்தில் இது ஒரு சின்ன குளம் மாதிரிதான் தெரிகிறது. மகிழ்ச்சியாகக் கால் நனைக்கலாம்,
ரசிக்கலாம், சிரிக்கலாம். போகப் போக அது கடலாக மாறுகிறது. கணவன் அருகில் இல்லாதபோது,
பிரிவின் ஆழம் தெரியும்போது, அந்தக் கடல் ஆவேசமாக எழுகிறது. அலைகள் வந்து நெஞ்சில்
மோதுகின்றன.
இப்படியே யோசித்தவள் திடீரென,
"நான் என்ன பைத்தியமா?" என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்.
இல்லை, அவள் பைத்தியம் அல்லள்.
தனிமை பலம் வாய்ந்தது. அது மனிதர்களை உள்ளிருந்து அரித்துத் தின்னக் கூடியது.
அவனின் பழைய ஒளிப்படங்களை அவள்
அலைபேசியில் கை விரல்களால் நகர்த்திப் பார்த்தாள். கடந்த ஆண்டு ஊட்டிக்குப் போன போது
எடுத்த படம். அவன் அவளது தோள் மீது கைபோட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறான்.
அந்தப் படத்தில் இருப்பது நிஜமா அல்லது இந்தத் தனிமைதான் நிஜமா?
எவ்வளவு நேரம்தான் நடுக்கடலில்
தத்தளிப்பது போல இந்தப் பிரிவுத் துயரைத் தாங்குவது? அவள் அவனுக்கு ஒரு வாட்ஸ்அப் குரல்
பதிவு அனுப்பலாமா என யோசித்தாள்.
"ரொம்பக் கஷ்டமா இருக்கு.
நீங்க எப்பத்தான் வரப் போறீங்க? தயவுபண்ணி, சீக்கிரம் வந்துடுங்க." என்று பேசத்
தொடங்கிப் பாதியிலேயே அழித்துவிட்டாள்.
ஏனென்றால், இது ரொம்ப உணர்ச்சிகரமாகத்
தெரிந்தது. அவன் இதைப் பார்த்தால், "உனக்கு என்ன குறைச்சல்? ஏன் இப்படி குழந்தை
மாதிரி யோசிக்கிற? பெருநிறுவன ஊழியர்களின் வாழ்க்கை அப்படித்தான், புரிஞ்சுக்கோ"
என்பான். அவனது நடைமுறைப் புத்திக்கு இந்த உணர்ச்சிகரமான தத்தளிப்பு புரியாது. அவன்
தர்க்கம் பேசுவான்; இவள் உணர்ச்சியில் தவிப்பாள். இதுதான் இருவருக்குமான இடைவெளி.
அவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.
தெரு விளக்கு வெளிச்சத்தில் மழைத் துளிகள் மின்னின. எதிர் வீட்டு மேல்மாடத்தில் ஒரு
நாய் நனைந்தபடி நின்று கொண்டிருந்தது. அதற்குத் தெரியும் மழை எப்போது நிற்கும் என்று;
ஆனால் அவளுக்குத் தன் கணவன் எப்போது வருவான் என்று உறுதியாகத் தெரியாது.
பிரிவென்னும் மாபெரும் பள்ளத்தாக்கால்
உண்டான காதல் கடலில் தத்தளிக்கும் ஒருவத்திக்கு அந்தத் தோணி எதுவாக இருக்க முடியும்?
அது பெற்றோர்களின் ஆறுதலா? இல்லை.
இந்த வயதில் பெற்றோரிடம் இதைப் போய்ச் சொன்னால், "உனக்கு என்ன திமிரு? அவர் உனக்காகத்தான்
உழைக்கப் போறாரு, பொறுமையா இரு." என்பார்கள்.
அல்லது அது தோழிகளின் அலைபேசி
உரையாடலா? அது கொஞ்ச நேரத்திற்கு வேண்டுமானால் மனசை திசை திருப்பலாம்; ஆனால் அலைபேசியை
வைத்ததும் தனிமை இன்னும் பயங்கரமாகத் தொற்றிக் கொள்ளும்.
அல்லது அது புத்தகங்களா, திரைப்படங்களா?
அவை தற்காலிக மயக்க மருந்து போலத்தான்.
உண்மையில், காதல் கடலைக் கடக்கக்
காதலைத் தவிர வேறு எந்தத் தோணியும் உதவாது. கணவனின் பிரியமான ஒரு வார்த்தை, அவனது அணைப்பு,
அவனது தொடுகை என இவை மட்டும்தான் அந்தத் தத்தளிப்புக்கு மருந்து. அது இல்லாதபோது, எதை
வைத்தும் அந்த வெறுமையை நிரப்ப முடியாது.
அவள் மெல்ல எழுந்து சென்று தன்
மடிக்கணினியைத் திறந்தாள். கணினியின் திரைச்சேமிப்பில் அவனும் அவளும் சிரித்துக் கொண்டிருக்கும்
புகைப்படம்.
அவள் மனதுக்குள் ஒரு தீர்மானத்திற்கு
வந்தாள். இந்தத் தனிமையை நினைத்து அழுவதில் அர்த்தமில்லை. இந்தக் காதல் கடல் பெரிதுதான்;
அதில் அலைகளும் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், அந்தத் தத்தளிப்பு அவன் மீதுள்ள அன்பின்
ஆழத்தையும்தானே காட்டுகிறது? அன்பு இல்லாவிட்டால் இந்தத் தவிப்பும் இருந்திருக்காதே!
அவள் அலைபேசியை எடுத்து அவனுக்கு
ஒரு குறுஞ்செய்தியைத் தட்டச்சு செய்தாள்.
"இரவு உணவை முடிச்சிட்டுக்
கூப்பிடுங்க. ரொம்ப தாமதம் பண்ண வேண்டாம்."
செய்தியை அனுப்பிவிட்டு, ஜன்னல்
கதவை இன்னும் கொஞ்சம் அகலமாகத் திறந்தாள். சில்லென்று முகத்தில் அடித்த காற்றில் ஒரு
புத்துணர்ச்சி இருந்தது. மழை இன்னும் நின்றபாடில்லை. ஆனால், அவள் மனதுக்குள் இருந்த
அந்தப் பயமும் தனிமையும் லேசாகக் கரைந்தது போலிருந்தது.
சன்னலின் வழியே உள்ளே வந்து விழுந்த
சாரல் அவள் முகத்தை வருடிக் கொடுப்பது போலிருந்தது.
அரை மணி நேரம் கடந்திருந்தது.
அவள் அனுப்பிய செய்திக்கு அவனிடம்
இருந்து இன்னும் பதில் வரவில்லை. அலுவல் கூட்டம் முடிந்ததும் பார்ப்பான் அல்லது வழக்கம்
போல் "அவசரம். பிறகு கூப்பிடுகிறேன்." என்று ஒரே வரியில் தட்டிவிடுவான்.
எதார்த்தத்தின் முகமூடியைக் கழட்டிவிட்டுப்
பார்த்தால் காதலும் காமமும் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை மனித மனத்தின் மிக ஆழமான
ஏக்கம். திருமணம் என்ற சடங்குக்குப் பிறகு காதல் தீர்ந்துவிடுகிறது என்று சிலர் சொல்வார்கள்.
ஆனால், அவனுடனான இந்தப் பிரிவு அவளுக்கு உணர்த்தியது வேறு.
திருமணம் காதலைக் குறைக்கவில்லை,
மாறாக அதன் வேர்களை இன்னும் ஆழத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது. அந்த வேர்கள் நீரின்றி,
அதாவது கணவனின் உடனிருப்பின்றி வாடும்போது ஏற்படுகிற தவிப்புதான் இந்தக் காதல் கடல்.
அவள் அலைபேசியை எடுத்து அடிக்கடி
பார்த்தாள். அவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்? இணையவெளியில் இருக்கிறானா?
அவனது கடைசி வாட்ஸ்அப் பார்வை எப்போது? அவன் வாட்ஸ்அப்பில் தட்டச்சு செய்யும் போது
தோன்றும் மூன்று புள்ளிகள் தோன்றுகிறதா? இப்படியே அவள் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
"இந்த அலைபேசியைத் தூக்கி
எறிஞ்சிட்டு போனா என்ன?" என்று ஒரு நிமிடம் கோபம் வந்தது. ஆனால், அடுத்த விநாடியே
அந்தப் பயமும் வந்து விட்டது. ஒருவேளை அவன் முக்கியமான விஷயமாக அழைத்தால்? அல்லது அவளுக்கு
ஏதேனும் உதவி தேவைப்பட்டால்? அவள் தூக்கி எறியும் முடிவைக் கைவிட்டாள்.
இந்தத் தொழில்நுட்பம் நம்மை இணைப்பதோடு
மட்டுமல்லாமல், பிரிக்கவும் செய்கிறது. அருகிலிருப்பவர்களிடம் இருந்து தூரமாக்கிவிட்டு,
தூரத்தில் இருப்பவர்களைக் கற்பனையில் அருகில் வைத்துக் கொள்ளச் சொல்கிறது.
அவள் அலைபேசியைத் தூர வைத்தாள்.
தன் நாட்குறிப்பைத் திறந்தாள். எப்போதோ எழுதிய சில குறிப்புகள் அதில் இருந்தன. அவன்
சென்னைக்குச் செல்வதற்கு முந்தைய நாள் இரவு, இருவரும் காரைக்கால் கடற்கரை மணலில் அமர்ந்து
பேசியது நினைவுக்கு வந்தது.
அப்போது கடற்கரை காற்று எப்படி
முகத்தில் அடித்தது! அலையின் சத்தம் காதுகளைத் துளைத்தது. அப்போது அவன் சொன்னான்,
"இங்கப் பாரு! நம்ம வாழ்க்கை எப்பவும் இதே மாதிரி அமைதியா இருக்காது. பெரிய பெரிய
இலக்குகள் இருக்கும். அதற்கான ஓட்டம் இருக்கும். ஆனா, எங்கு ஓடினாலும் என் மனசு உன்கிட்டதான்
வந்து சேரும்."
அவன் அன்று சொன்ன வார்த்தைகள்
இப்போது காதுகளில் எதிரொலித்தது. வார்த்தைகள் நிஜம்தான்; ஆனால் இந்த நேரத்தில் அவன்
பக்கத்தில் இல்லையே? அலைகள் கரையைத் தொட்டுவிட்டுத் திரும்புவது போல, அவனது நினைவுகள்
அவளைத் தொட்டுவிட்டுத் தன்னிச்சையாக விலகிச் சென்றன.
அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது,
திடீரென அலைபேசி ஒலித்தது.
ஒரு கணம் நெஞ்சு படபடத்தது. அவன்தான்
கூப்பிடுகிறான் போல.
அவள் பதறிக்கொண்டு அலைபேசியை
எடுத்தாள். ஆனால், அது அவன் இல்லை; அவளது அம்மா.
"ஹலோ! என்னம்மா பண்ற? இங்க
ஒரே மழை. உங்க வீட்டுக்காரர் பேசுனாரா? அவர் ஊருக்குப் போய் ரொம்ப நாளாச்சு. இன்னும்
வரலைங்குறீங்க?"
அம்மாவின் குரலில் அந்தப் பிராந்திய
வழக்கமான அக்கறை இருந்தது. அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனாலும், குரலைச்
சமன் செய்துகொண்டு, "இல்லம்மா! அவசரக் கூட்டத்துல இருக்காரு. நாளைக்கு இல்லனா
நாளானக்கி வர்றதாச் சொன்னாரு." என்று சமாளித்தாள்.
"சரிம்மா, உடம்பைப் பாத்துக்கோ.
தனியா சமைச்சுச் சாப்பிட கஷ்டமா இருந்தா, வெளியில வாங்கு சாப்பிடு. பட்டினியா கிடந்திடாதே."
"சரிம்மா!" என்று அலைபேசியை
வைத்தாள்.
அம்மாவின் அந்தச் சாதாரண விசாரிப்பு
கூட அவளுக்கு இப்போது ஒர் ஆறுதலாக இருந்தது. இருப்பினும், அந்தத் தனிமை முழுமையாக விலகவில்லை.
அவள் இப்போது ஆழமாகச் சிந்தித்தாள்.
உண்மையில், காதல்கடலில் தத்தளிக்கும் ஒருவருக்கு எந்த வெளிப்பொருளும் தோணியாக இருக்க
முடியாது.
மழை லேசாகக் குறைந்து, வெளியே
வாகனங்களின் ஒலிப்பான் சத்தம் கேட்கத் தொடங்கியது. நேரம் இரவு ஒன்பது மணி ஆகியிருந்தது.
சரியாக அந்த நேரத்திற்குத்தான்
அவனிடம் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தது.
அவள் அலைபேசியில் அவன் அழைப்பை
ஏற்றாள். அவன் களைப்பான முகம் தெரிந்தது. பின்னணியில் உணவக விடுதி அறையின் சுவர்கள்.
"தயவுபண்ணி என்னை மன்னிச்சிடு.
இன்னைக்கு முழுவதும் வேலை நெருக்கடி. இப்பதான் அறைக்கு வந்தேன்," என்றான் அவன்.
அவனது முகத்தைப் பார்த்ததும்,
அவளுக்குள் இருந்த அத்தனை கோபமும், தனிமையும், காதல் கடலின் தத்தளிப்பும் ஒரே விநாடியில்
பஞ்சாய் பறந்துபோனது. கண்கள் லேசாகக் கசிந்தன.
"ரொம்ப களைப்பா இருக்கீங்களா?"
என்று அவளின் குரல் பாசத்தோடு கனிந்தது.
"ஆமாம்! நீயே என் முகத்தைப்
பாரேன். உன்கிட்ட பேசினா எல்லாம் சரியாயிடும்."
அவள் மெலிதாகச் சிரித்தாள்.
"சரி, சீக்கிரமா வாங்க.
உங்களைப் பார்க்காமா நான் எதையோ இழந்தது போல இருக்கிறேன்." என்றாள் காதலும் குறும்பும்
கலந்த குரலில்.
"எனக்கும்தான்!" என்றான்
அவன். இப்போது காதல் கடலைக் கடக்க ஒரு தோணி கிடைத்தது போலிருந்து அவளுக்கு. அவர்கள்
பேசி முடித்தார்கள்.
மழை முற்றிலும் நின்றிருந்தது.
செங்காந்தள் நகர் வீதியில் ஈரக்
காற்றில் நள்ளிரவின் அமைதி மெதுவாய்ப் பரவியிருந்தது.
எல்லாம் சில நிமிடங்கள்தான்.
மீண்டும் அந்தப் பெருங்கடல் சூழ
ஆரம்பித்தது.
சற்று நேரத்துக்கு முன்பு கிடைத்திருந்த
தோணி சுக்கல் சுக்கலாக நொறுங்க,
"காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்." (குறள், 1164)
என்றாக, அவள் இப்போது பெருங்கடலில்
நீந்த முடியாமல், அவள் கண்கள் கண்ணீர்க் கடலாகத் தொடங்கின.
- சூத்திரங்கள் தொடரும்!
*****
