திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 80
உயிர் பிரிந்த பின் உயிர் வாழ்வது
எப்படி?
கணினித் திரையில் இந்தக் கோப்பு
வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது என்ற செய்தி எரிச்சலூட்டும் வகையில் மின்னிக்கொண்டிருந்தது.
ஆனால் அவளோ தன் வாழ்க்கையில் எதையுமே சேமித்து வைக்க முடியாமல் எல்லாவற்றையும் தொலைத்துக்
கொண்டிருந்தாள்.
மணி இரவு ஒன்பது முப்பது.
அறையின் குளிர்காற்று அவள் முதுகெலும்பைக்
குடைந்தது. வெளியே திருவாரூரின் சில்லென்ற மழைத் தூறல். மடிக்கணினியில் அவள் விரல்கள்
சோம்பேறித்தனமாக நகர்ந்தன.
எதிரில் உட்கார்ந்திருந்தான்
அவன்.
அவளுடைய காதலன். வெறும் காதலன்
மட்டுமில்லை, காதல் கணவன்.
இன்னும் ஓரிரு மணி நேரத்தில்
அவன் மும்பைக்குச் செல்லும் தொடர்வண்டியில் ஏறப் போகிறான். அங்கே அவனுக்குப் பெரிய
பதவி காத்துக் கொண்டிருந்தது. பெருநகரத்தின் ஒரு மூலையில் ஆடம்பரமான பங்களா, அங்கே
வார இறுதி நாட்களின் கொண்டாட்டங்கள். சில மாதங்கள் தொடர்ந்தால் அமெரிக்கா செல்லும்
வாய்ப்பு.
"தயவுசெய்து புரிஞ்சுக்கோ.
இது என் தொழில்வாழ்க்கையில முக்கியமான கட்டம். உனக்கும் புரியும்னு நினைக்கிறேன். நாம
ரெண்டு பேரும் காதலிச்சோம், கல்யாணம் பண்ணிக்கிட்டோம், பிரிய மாட்டோம்ன்னு சத்தியம்
பண்ணிக்கிட்டோம். ஆனா எதார்த்தமா யோசிச்சுப் பார். இந்த வாய்ப்பை விட்டுட்டா, அப்புறம்
பெரிசா சம்பாதிக்கிறதுக்கான வாய்ப்பு கிடைக்காது. நம்மோட வாழ்க்கைத் தரத்தைப் பிறகு
நம்மால உயர்த்திக்கவே முடியாது. இப்போ இருக்குற விலைவாசியில இன்னும் போகப் போகப் பொருளாதாரச்
சுமையைச் சமாளிக்க முடியுமா? யோசிச்சுப் பார்." அவன் வழக்கமான நடுத்தர வர்க்கத்துப்
பயத்தோடும், அதே சமயம் வருங்காலத்தை பற்றிய தெளிவோடும் பேசினான்.
அவள் தேநீர் கோப்பையைப் பார்த்தாள்.
ஆவி பறக்கவில்லை. ஆறிப்போயிருந்தது.
"நான் உங்ககிட்ட என்ன கேட்டேன்?
பணத்தையா? பெரிய அடுக்குமாடி வீட்டையா? உங்க கூட சும்மா ரெண்டு மணி நேரம் பேசுறது போதும்னு
நினைச்சவள் நான். ஆனா நீங்க?"
"அதே வசனம்! எதார்த்தமா
பேசுவோம். தொடர்வண்டிக்கு நேரமாச்சு. நம்ம காதல் அழியாது, அது எப்போதும் இருக்கும்.
இப்போ உள்ள காலகட்டத்துல இதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயம். அப்பவே, பொருள்வயிற் பிரிந்த
தலைவன் சங்க காலத்திலிருந்தே இருந்திருக்கான். காலம் ரொம்ப வேகமா ஓடிடும். நாம்ம தினமும்
வாட்ஸ்ஆப்ல பேசிக்கலாம், செய்திகள் அனுப்பிக்கலாம். கொஞ்ச நாள்ல பழகிடும். எல்லாம்
சரியாயிடும். நீ நினைக்கிற மாதிரி பிரிவுங்றது முன்ன மாதிரி கஷ்டமெல்லாம் இல்ல. இப்போ
இருக்குற தொழில்நுட்ப யுகத்துல பிரிவே இல்லைன்னுதான்னு சொல்லணும்."
எவ்வளவு குளுமையாக அவன் சொல்கிறான்
என்று அவளுக்கு வேதனையாக இருந்தது.
"சரிங்க நீங்க கிளம்புறதுக்கான
வேலையைப் பாருங்க. வேலையும் பணமும் அங்கே காத்துக்கிட்டு இருக்கு." என்றாள் அவள்.
அவள் குரலில் நடுக்கம் இல்லை; ஒருவித மரத்துப்போன அமைதி இருந்தது.
அவன் பெருமூச்சு விட்டான். ஒரு
நிம்மதிப் பெருமூச்சு. எங்கே அழுது அரற்றித் தன்னைப் போக விடாமல் செய்து விடுவாளோ என்ற
அச்சம் அவன் மனதுக்குள் இருந்தது.
வீட்டிலிருந்து தொடர்வண்டி நிலையம்
வரும் போதும் அவள் பெரிதாக எதையும் பேசவில்லை. மௌனித்தே இருந்தாள். அவனும் அப்படியே
மௌனித்திருந்தான்.
கிளம்பும்போது அவள் கையைப் பிடித்துக்
குலுக்கினான். "பத்திரமா இரு."
அவன் தொடர்வண்டிக்குள் ஏறி மறைந்ததும்,
அந்த நடைமேடையில் அவளுக்கு ஒரு வெறுமை காத்திருந்தது போலிருந்தது.
அவள் வீட்டிற்குத் திரும்பினாள்.
திண்ணைக்கு நான்கைந்து படியேறியதும்
மூச்சு வாங்கியது. கால்கள் தள்ளாடின. கதவைத் திறந்தவுடன் அந்த வீடு அவளுக்குப் புதிதாகத்
தோன்றியது. அங்கே அவன் வாசம் இருந்தது. அவன் கடைசியாகப் போட்டுவிட்டுப் போன அவன் ஆடைகள்
கலைந்து கிடந்தன. அவன் குடித்த தேநீர் கோப்பை மேஜையில் இருந்தது.
அவள் கட்டிலில் உட்கார்ந்தாள்.
"சமூகத்தில் கோடிக்கணக்கான
பெண்கள் இருக்கிறார்கள். கணவன் துபாய் சென்றாலும், அமெரிக்கா சென்றாலும் அதை ஏற்றுக்
கொண்டு, அதற்கிடையில் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, சமையலறையில் காய்கறி நறுக்கிக்கொண்டே
பழைய பாடல்களை முணுமுணுத்துக் கொண்டு வாழும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். காதலை
வேறு வழியில்லாமல் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அந்தச் சுமையை மறைத்துக
கொண்டு இயல்பாக வாழ்பவர்கள் போல நடித்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் பிரிவு என்பதைப்
பெரிய விஷயமாகவே இல்லாதது போல் வாழ்பவர்கள். ஆனால், நான் அப்படிப்பட்டவள் இல்லையே!"
அவளது யோசனை பலவிதமாகச் சுழன்றது.
இப்போது அவள் கண்களில் கண்ணீர்
வரவில்லை. ஒரு பெண்ணின் சோகம் எப்போதும் கண்களில் மட்டும் தெரிவதில்லை. அது அவளுடைய
மௌனத்தில், அவளுடைய மூச்சில், அவளுடைய ஒவ்வொரு செல்களிலும் பரவியிருக்கும்.
அவள் மேஜை இழுப்பறையைத் திறந்தாள்.
அங்கே அவன் எழுதிய பழைய கடிதங்கள் இருந்தன. அவனுடன் எடுத்த சுயபட புகைப்படங்கள் இருந்தன.
ஒரு சிறிய குறிப்பேடு. அதில் அவன் அவளுக்கு எழுதிய கவிதைகள் இருந்தன.
நவீன காலத்தில் யாரும் கடிதம்
எழுதுவதில்லைதான். ஆனால் அவர்கள் எழுதியிருந்தார்கள்.
அவர்களின் வாட்ஸ்அப் விவாதங்களை
அவள் திரைப்பிடிப்பு செய்திந்தாள். அவற்றை எடுத்துப் பார்த்தாள்.
"நீயின்றி ஒரு நொடி கூட
என்னால் வாழ முடியாது. நீ என் சுவாசம். சுவாசிக்காமல் ஒருவனால் எப்படி வாழ முடியும்."
"நான் வெறும் சுவாசம்தானா?
உன் உயிரில்லையா?"
"ஆம்! உயிர்தான். என் உயிரே
நீயின்றி நான் எப்படி வாழ முடியும்?"
இப்படியெல்லாம் வாட்ஸ்அப்பில்
விவாதம் செய்த அவன்தான் இன்று வருங்காலம், பொருளாதாரம் என்றெல்லாம் பேசி மும்பைக்குக்
கிளம்பியிருக்கிறான்.
அவள் மனம் தொடர்ந்து பழைய நினைவுகளையே
மாற்றி மாற்றிப் புரட்டிக் காண்டிருந்தது. ஒரு கட்டத்தில் நினைவுகள் அதிகமாகி,
அதைத் தாள முடியாமல் கணினியின் தலைமைச் செயலகம் ஸ்தம்பித்து நின்று விடுவது போல,
அவள் மூளை ஸ்தம்பித்தது.
அவள் சமையலறைக்குச் சென்றாள்.
குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தாள். நேற்று அவன் வாங்கித் தந்த பனிக்கூழ் டப்பா பாதி
அப்படியே இருந்தது. அதை எடுத்து அப்படியே சாப்பிட ஆரம்பித்தாள். குளிர்ந்த சூடாக இறங்குவது
போல இருந்தது. சட்டென அது தொண்டையில் அடைத்தது. கண்களில் லேசாக ஈரம் கசிந்தது.
"கொஞ்ச நாள்ல எல்லாம் பழகிடும்."
என்று அவன் சொல்லிவிட்டுப் போனான். ஆனால், அப்படியெல்லாம் அது முடியாது. ஏனென்றால்,
அவள் மொத்த உலகமும் அவனாக இருந்தான். அவனைத் தவிர்த்து அவளுக்கு என்று தனியாக ஒரு அடையாளம்
இல்லை. அவன் இல்லாத இந்த உலகம் அவளுக்கு ஒரு பெரிய வெறிச்சோடிய பாலைவனம் போலத் தெரிந்தது.
மற்றவர்கள் பிரிவைத் தாங்குவார்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு வேறு பல ஆசைகள் இருக்கும். சொந்த வீடு, குழந்தைகளின் எதிர்காலம்,
சமூகத்தில் அந்தஸ்து, கழுத்தை அலங்கரிக்கும் நகைகள் என்று ஆயிரம் வேர்கள் அவர்களைத்
தாங்கிப் பிடிக்கும். ஆனால் அவளின் உலகம் மிகச் சிறியது. அதில் அவன் மட்டுமே இருந்தான்.
அவன் அருகில் இல்லாவிட்டால் அவளுடைய உலகில் எதுவுமில்லை.
அவள் ஜன்னலைத் திறந்தாள். திருவாரூர்
நகரில் மழைக்காலத்திற்கான மழை ஆரம்பித்து விட்டிருந்தது.
காலத்தின் ஓட்டத்தில் எல்லாம்
பழகி விடும் என்று ஆளாளுக்கு ஏதேதோ சொல்லலாம். ஆனால், இது போன்ற பிரிவு தாள முடியாதது.
அவள் அலைபேசியை எடுத்தாள். அவனுக்கு
ஒரு செய்தியைத் தட்டச்சு செய்தாள்.
"உங்களைப் பிரிந்து வாழ
என்னால் முடியாது. பலர் வாழ்வார்கள்; ஆனால் நான் அவர்களில் ஒருத்தி இல்லை." அதை
அனுப்புகைப் பொத்தானை அழுத்தாமல் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அழித்து
விட்டாள்.
அவளுக்குத் தெரியும், இப்போது
அவன் தொடர்வண்டியில் பயணித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு இந்தப் போராட்டம் எதுவுமே
தெரியாது. அவன் பார்வையில் இது ஒரு சாதாரண விசயம். ஆனால் அவளைப் பொறுத்தவரை இது அவளுடைய
இருத்தலின் முடிவு.
அவள் படுக்கையில் சாய்ந்தாள்.
அறை முழுவதும் இருள் கவிழ்ந்திருந்தது. வெளியே தூறல் ஓசை மட்டும் கேட்டது.
சில பிரிவுகள் மனிதர்களைக் கொல்வதில்லை;
ஆனால் உயிரோடு இருக்க வைத்து மரணத்தை அனுபவிக்கச் செய்கிறது. அந்த மரணத்தின் வலியைச்
சுமந்தபடி, அவளும் அந்த இரவில் தனியாக விழித்திருந்தாள்.
2026 இல் நடக்கும் ஒன்றை,
2000 ஆண்டுகளுக்கு முன்பே,
"அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்."
(குறள், 1160)
எனத் திருவள்ளுவர் எழுதி விட்டார்
அவரது கூற்றுப்படியே, மற்றவர்கள்
வாழலாம். ஆனால் அவள்?
அது சரி, உயிர் பிரிந்த பின்
உயிர் வாழ்வது எப்படி? அவனல்லவா அவள் உயிர்.
அவளுக்கு விடை தெரியவில்லை.
மழையின் சத்தம் மட்டும் இன்னும்
அதிகமானது.
- சூத்திரங்கள்
தொடரும்!
*****
