Showing posts with label வாழ்க்கைப் புத்தகத்தின் நொடிப்பிழை. Show all posts
Showing posts with label வாழ்க்கைப் புத்தகத்தின் நொடிப்பிழை. Show all posts

18 Sept 2026

வாழ்க்கைப் புத்தகத்தின் நொடிப்பிழை

வாழ்க்கைப் புத்தகத்தின் நொடிப்பிழை

மறந்து போயிருந்த அந்த வார்த்தை

அந்த நேரத்தில்

நினைவுக்கு வராமல் போயிருக்கலாம்

கோடைக்கால நினைவுகளில்

வறண்டு போயிருந்த

கண்ணின் மழைக்காலத் துளி

அந்நேரம் விழாமல் இருந்திருக்கலாம்

டிஸ்ப்ளே போன செல்

அந்த நேரம் மட்டும் விழித்துக் கொண்டு

அக்காட்சியைக் காட்டாது இருந்திருக்கலாம்

எல்லாம் நிகழ்ந்தது அந்த ஒரு நொடி

ஒட்டுமொத்த வாழ்க்கையையும்

திருப்பிப் போடும்

அந்த ஒரு நொடி மட்டும்

இந்த வாழ்க்கையில் இல்லாதிருந்தால்

யாரும் யாரையும் பிரிந்திருக்க மாட்டார்கள்

தண்டவாளத்தில் ஓடும் வாழ்க்கை ரயில்

தடம்புரளும் என்பதை நம்பியிருக்க மாட்டார்கள்

அச்சடிக்கப்பட்ட புத்தகத்தில்

இனி பிழை திருத்த வழியில்லை என்பதைப் போல

ஒரு நொடிப் பிழையோடு

வாசிக்கப்படுவதாகிறது வாழ்க்கைப் புத்தகம்

*****