Showing posts with label அண்ணாமலை. Show all posts
Showing posts with label அண்ணாமலை. Show all posts

9 Jun 2026

பால்காரனைப் பணக்காரனாக்கி, தமிழனைப் பரம ஏழையாக்கிய சபதச் சீரழிவு!

சீரழித்த சினிமா – 7

அண்ணாமலை

பால்காரனைப் பணக்காரனாக்கி, 

தமிழனைப் பரம ஏழையாக்கிய சபதச் சீரழிவு!

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகம் பொருளாதார ரீதியாகப் புதிய தாராளமயமாக்கலுக்குள் நுழைந்து கொண்டிருந்த சமயம். உலகமே அறிவையும், உலகளாவிய வணிக நுணுக்கங்களையும் நோக்கி நகர்ந்தபோது, தமிழனை மட்டும் ஒரு சைக்கிள், இரண்டு மாடு, கொஞ்சம் பாசம், நிறையக் கோபம் இருந்தால் போதும்... உலகக் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்று நம்ப வைத்த உன்னதத் திரைப்படம்: 1992இல் வெளியான 'அண்ணாமலை.

உச்ச நடிகரின் மாஸ் பிம்பமும், கமர்ஷியல் சினிமாவுக்கே உரிய விறுவிறுப்பான இயக்கமும் சேர்ந்து அண்ணாமலை என்ற திரைப்படம் தமிழர்களின் உழைப்பு, நட்பு, பொருளாதாரம் சார்ந்த சிந்தனைகளை எப்படிக் கூசாமல் சீரழித்தன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்தைத் தட்டி எழுப்பிட்டீங்க. இதுவரை இந்த அண்ணாமலையை நண்பனாத்தான் பாத்திருக்கே. இனிமே விரோதியா பார்க்கப் போறே. இந்த நாள் உன்னுடைய காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ… என்று தொடங்கி, நண்பன் கட்டிய ஹோட்டலுக்கு முன்னால் அண்ணாமலை போடும் அந்தச் சபத வசனம் தமிழர்களின் நரம்புகளை இன்றும் புடைக்கச் செய்கிறது. ஆனால், கூர்ந்து கவனித்தால் அது கற்றுக்கொடுத்த தத்துவம் என்ன?

நண்பனுடனான ஈகோ பிரச்சினையைத் தனிப்பட்ட முறையில் பேசித் தீர்க்கவோ அல்லது சட்டப்படி அணுகவோ கூடாது. அவனுக்கு இணையாகப் பணக்காரனாகி, அவன் கண் முன்னால் அவனது கௌரவத்தை மிதிப்பதே ஆணழகன் லட்சணம் என்பதுதானே?

ஆரோக்கியமான தொழில் போட்டி என்பதற்கும், தனிநபர் வன்மத்திற்கும் உள்ள வித்தியாசத்தைத் துடைத்து அழித்துவிட்டு, பழிவாங்குவதற்காகவே தொழில் தொடங்குங்கள் என்ற ஆபத்தான வணிகப் புத்தியைத் தமிழனின் மண்டையில் ஏற்றியது அண்ணாமலைதான்.

இத்திரைப்படத்தின் ஆகப்பெரும் அபத்தம் என்னவென்றால், அண்ணாமலை பால்காரனாக இருந்து வெற்றி நிச்சயம்… எனத் தொடங்கும் ஒரே ஒரு பாடலில்  சென்னை நகரின் ஆகப்பெரும் தொழிலதிபராக மாறுவார். எந்தவித அறிவார்ந்த முன்னெடுப்பு இல்லாமல், முறையான வணிகத் திட்டமிடல் இல்லாமல், வெறும் உழைப்பையும், நண்பன் மீதான வெறியையும் மட்டுமே முதலீடாக வைத்து ஒருவன் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற மாயையை இந்தப் படம் வெற்றிகரமாக விற்றது.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் திட்டமிட்டு, படித்து, உழைத்து முன்னேற வேண்டிய இளைஞர்கள் பலரை, நமக்கும் ஒரு ஜாக்பாட் அடிக்காதா? ஒரே நாளில் நாமும் நண்பனைப் பழிவாங்க மாட்டோமா? என்று உழைப்பின் மீதான யதார்த்த நம்பிக்கையை இழந்து, பகற்கனவு காணும் சோம்பேறிக் கூட்டமாக மாற்றியது இத்திரைப்படம்.

அண்ணாமலை பணக்காரனான பிறகு தன் மகளைக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பார். அவளுக்குக் காதல் வரக்கூடாது, நவீன நாகரிகம் தெரியக்கூடாது, அப்பா சொல்லும் பழமைவாத வட்டத்திற்குள் மட்டுமே வாழ வேண்டும் என்று நிர்பந்திப்பார். தன் மகள் தன் எதிரியின் மகனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்ததும், அண்ணாமலையின் உள்ளே இருக்கும் முரட்டுப் பாசக்காரன் ஒரு சர்வாதிகாரியாக மாறுவார்.

பெண்களின் தனிமனித சுதந்திரத்தை, அப்பாக்களின் போலிக் கௌரவம் என்ற பெயரில் அடக்கி ஆள்வதை இந்தப் படம் நியாயப்படுத்தியது. என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டா, என்று நிஜ வாழ்க்கையில் மகள்களின் கழுத்தை நெரிக்கும் பல அண்ணாமலைகளுக்கு இந்தப் படமே ஊக்க மருந்து.

அண்ணாமலை நண்பனிடம் காட்டும் அந்தப் போலித் தீவிர நட்பு, நடைமுறை வாழ்க்கைக்குச் சாத்தியமே இல்லாதது. நண்பன் அப்பா செய்யும் சதிகளுக்கு நண்பனை வில்லனாக்குவதும், அண்ணாமலை தன் நண்பனை முழுமையாக நம்பாமல் உணர்ச்சிவசப்படுவதும் தமிழர்களின் உறவுச் சிக்கல்களை இன்னும் சிக்கலாக்கியது. இந்த மெலோடிராமா தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் அதீத உணர்வார்ந்த தளத்திலானது. அறிவார்ந்த நகர்தலுக்கான முன்னெடுப்பைப் பின்னுக்குத் தள்ளுவதாக இத்திரைப்பட உள்ளடக்கம் அமைந்தது.

ஆக மொத்தத்தில், சமூகத்தில் உறவுகளைப் பகுத்தறிவோடு அணுகாமல், எல்லாவற்றிலும் அதீத எமோஷனல் கலந்து, சின்னச் சின்ன தவறுகளையும் துரோகம் என்ற பெரிய லேபிளுக்குள் அடைக்கும் முதிர்ச்சியற்ற உறவுப் பழக்கத்தை இது தமிழர்களிடம் உருவாக்கியது.

அண்ணாமலை பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைத்தது. நாயகனுக்கு உச்ச நட்சத்திரம் என்ற பிம்பத்தை முத்திரையிட்டது. ஆனால், சிந்தனை ரீதியாக அது தமிழ்ச் சமூகத்தை எங்கு கொண்டு போய் விட்டது?

ஒருவன் பொருளாதார ரீதியாக உயர வேண்டுமென்றால் அறிவு சார்ந்த உழைப்போ, நவீன வணிகப் புரிதலோ தேவையில்லை. வெறும் பழிவாங்கும் வெறியும், உணர்ச்சிவசப்படும் மனோபாவமும் இருந்தால் போதும் என்று நம்ப வைத்ததுதான் இந்த அண்ணாமலை செய்த ஆகப்பெரும் சாதனை, மன்னிக்கவும், சீரழிவு!

*****