Showing posts with label How to save?. Show all posts
Showing posts with label How to save?. Show all posts

3 Jun 2025

எப்படிக் காப்பாற்றுவது?

எப்படிக் காப்பாற்றுவது?

எதையாவது செய்து விட்டு என்னைக் காப்பாற்றுங்கள் என்றால் எப்படிக் காப்பாற்றுவது?

இப்படிப்பட்ட கூக்குரல்களை அதிகம் கேட்கும் தலைமுறையில் நாம் வாழ்கிறோம்.  அவர்களை ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக யோசிக்கப் பழக்க வேண்டும். அவர்களுக்கு யோசிப்பது அழுத்தமாக இருக்கலாம், அலுப்பாகவும் இருக்கலாம், நேர விரயமான காரியமாகவும் தோன்றலாம். இப்படி ஒரு பழக்கத்தை அவர்களிடம் வளர்த்துதான் ஆக வேண்டும்.

உணர்வு வேகத்தில் கண்மூடித்தனமாக மனம்போன போக்கில் செய்வதைச் செய்து விட்டு, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்றால் எப்படிக் காப்பாற்ற முடியும்?

அப்படிக் காப்பாற்றுவதற்கான தெய்வாம்ச சக்திகள் யாரிடம் இருக்கிறது?

நீங்கள் நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்ற வாசகத்தை அவர்கள் முணுமுணுப்பதுண்டு. உண்மை என்னவென்றால் ஒவ்வொரு செயலைச் செய்வதற்கு முன்பும் அவர்கள் நினைத்திருந்தால் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

நாமும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நாம் எதையும் யோசிக்க விரும்பாத ஒரு முன்கோபித்தனமான தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோமா என்று தோன்றுகிறது.

அன்பாக இருப்பதும், பாசமாக இருப்பதும் அனைவரது கடமை. அது அவர்களை யோசிக்க விடாத அளவுக்கு கண்மூடித்தனமாக எதை வேண்டுமானாலும் செய்ய விடுமானால் அதை எப்படி அன்பென்றும், பாசமென்றும் சொல்ல முடியும்?

அது ஒருவரை ஒருவர் உணர்வுரீதியாக ஏமாற்றுவதும், பயமுறுத்துவதும், பயன்படுத்துவதும் போன்றதுதான்.

நாம் ஒருவர் மீது அன்பாக இருப்போம் என்றால், பாசமாக இருப்போம் என்றால் அவரது மனநிலையைச் சீராக்கிக் கொடுப்பதும் நமது கடமை. முரட்டுத்தனமாகப் போகும் அளவுக்கு மனநிலையைச் சீர்கெடுத்துக் கொடுப்பது அன்பாகாது.

அன்பு என்பது எல்லாரிடமும் அன்பாக இருப்பதுதான். காரியார்த்தமாக இருப்பதுகிடையாது. உங்களுக்குப் பிடித்தவர் சந்தோசமாக இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்பதற்கு ஆதரவாக இருப்பது எப்படி அன்பாகும்?

சந்தோசம் என்பது அவர் சந்தோசமாக இருப்பது போல எல்லாரும் சந்தோசமாக இருக்க வேண்டும். ஒருவருடைய சந்தோசம் இன்னொருவருக்குத் துயரம் என்றால் அது சந்தோசமும் கிடையாது, அப்படிப்பட்ட சந்தோசத்தை ஆதரிக்கும் அன்பும் அன்பு கிடையாது.

ஒருவரது மகிழ்ச்சி என்பது இன்னொருவரை அதிகாரம் செய்து அடிமைப்படுத்தும் என்றால் அது எப்படி மகிழ்ச்சியாகும்? இப்படிப்பட்டவர்கள் எதையாவது செய்து விட்டு, நிலைமை விபரீதமாகப் போகும் போது, என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று அன்பை அல்லது பாசத்தைப் பணயமாக வைத்து மிரட்டுகிறார்கள். அவர்களை எப்படிக் காப்பாற்றுவது?

ஒருவர் தன்னுடைய தவறுகளால் காப்பாற்ற முடியாத அளவுக்குச் செல்லும் வரையில் அவருக்கு ஆதரவு அளித்தால் அதுவும் அன்பின் காரணமாக என்றால் அது நிச்சயம் அன்பு செலுத்துபவரின் தவறுதான். உண்மையான அன்பு செலுத்தும் ஒருவர் அப்படிப்பட்ட நிலைக்கு ஒருவர் செல்வதற்கு முன்பு தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும். அதனால் சில நேரங்களில் பயன் இல்லாமல் போனாலும் கொஞ்சமாவது யோசித்துப் பார்க்க அவருக்கு அது ஒரு வாய்ப்பாகும். அப்படிச் செய்வதன் மூலம் ஒருவர் தன்னிலை மறந்து தன் போக்கில் செயல்படும் போது, அவருடைய செயலுக்கு அவரே பொறுப்பாவார் என்பதை உணர்த்துதல் அன்பானவரின் கடமையாகும்.

*****