Showing posts with label பின்னணிப் பாடகி ஜானகி. Show all posts
Showing posts with label பின்னணிப் பாடகி ஜானகி. Show all posts

12 Jul 2026

இசை × 48,000 = ஜானகி எனும் மகா பாடகி!

இசை × 48,000 = ஜானகி எனும் மகா பாடகி!

மரணத்திற்கு இசை ரசனை கம்மி என்றுதான் தோன்றுகிறது. இல்லையென்றால், 20 மொழிகளில் 48,000 பாடல்களைப் பாடி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் செவிகளிலும் தேனைக் கொட்டிய ஒரு குரலை, இப்படி சட்டென்று மியூட் செய்ய அதற்கு எப்படி மனது வந்தது?

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி தனது 88 ஆவது வயதில் மைசூருவில் காலமானார். வயது முதிர்வு என்பது ஒரு காரணம் என்றாலும், கடந்த ஜனவரியில் அவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா மறைந்த அதிர்ச்சியிலிருந்து அவரால் மீள முடியவில்லை என்கிறார்கள். கணவர் ராம்பிரசாத் 1997 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார். தனிமை, துயரம், முதுமை என எல்லாம் சேர்ந்து ஒரு மகா குரலை அணைத்துவிட்டது என்றுதான சொல்ல வேண்டும்.

பத்து வயதில் நாகஸ்வர வித்வான் பைடி சுவாமியிடம் ஆரம்பப் பாடம் படிக்கப் போனபோது, மாஸ்டர் இவரை சும்மா உட்காரச் சொல்லிவிட்டு, மற்ற மாணவர்களிடம் “இவரைப் பார்த்து சங்கதி கத்துக்கோங்கப்பா” என்று ஜானகியைக் காட்டியிருக்கிறார். பார்ன் ஜீனியஸ் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

ஜானகியின் வாழ்க்கை ஒரு விசித்திரமான இசைச் சுழல். 1938 இல் ஆந்திராவின் பல்லபட்டா கிராமத்தில் பிறந்து, 19 ஆவது வயதில் ஏவி.எம். ஸ்டுடியோவின் ஒப்பந்தப் பாடகியாக மெட்ராசுக்குள் நுழைந்தபோது, அவர் ஒரு சகாப்தத்தைத் தொடங்குகிறார் என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1957 இல் விதியின் விளையாட்டு என்ற படத்தின் மூலம் தொடங்கிய அந்தப் பயணம், அடுத்த 60 ஆண்டுகளுக்கு இந்தியத் திரையிசையை ஆட்டிப்படைத்தது.

ஆனால், அவரது சினிமா உலகப் பிரவேசம் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. 1957 இல் ஏவிஎம் ஆடிஷனில் தேர்வாகி, விதியின் விளையாட்டு என்ற படத்தில் பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடலைப் பாடினார். பாட்டு பிரமாதம். ஆனால், விதி நிஜமாகவே விளையாடியது. படம் ரிலீஸாகவே இல்லை!

முதல் பாட்டே பெட்டிக்குள் முடங்கிய சோகத்தை அவரே பகிர்ந்துள்ளார். அதற்குப் பிறகு மதகளநாட்டு மேரி என்ற படம்தான் அவரது அதிகாரப்பூர்வ முதல் தமிழ் பாடலானது.

1957 இல் தொடங்கிய அந்தப் பாட்டுப் பயணம், 2016 இல் 10 கல்பனகள் என்ற மலையாளப் படத்தோடு முற்றுப்பெற்றது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகால இசை அரசாங்கம் அது.

மரணம் ஜானகியை அழைத்துக்கொண்டு போய்விட்டது. ஆனால், போவதற்குள் அவர் அள்ளிக் குவித்த விருதுகளையும், நிகழ்த்திய வித்தைகளையும் பார்த்து எமதர்மனே சற்று மிரண்டுதான் போயிருப்பான்.

தேசிய விருதுகள் நான்கு வாங்கியது ஒருபுறமிருக்க, மாநில அரசுகள் இவருக்குப் போட்டி போட்டுக்கொண்டு விருதுகளை வாரி வழங்கியிருக்கின்றன. மொத்தம் 33 மாநில விருதுகள்.

இதுதவிர, இந்தியில் சாஹேப் படத்திற்காக பிலிம்பேர் விருது, கர்நாடக அரசின் ராஜ்யோத்சவா விருது, மைசூரு பல்கலைக்கழகம் கொடுத்த கௌரவ டாக்டர் பட்டம் என அவரது அலமாரி விருதுகளால் நிரம்பி வழிந்தது.

ரசிகர்களோ அவரை தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்றும், கான கோகிலா என்றும் செல்லமாக அழைத்துக் கொண்டாடினார்கள்.

இளையராஜா என்னும் இசையின் ஞானமும், எஸ்பிபி என்னும் காதலின் குரலும், ஜானகி என்னும் உணர்ச்சிகளின் பேரரசும் இணைந்த அந்த முக்கோணக் கூட்டணி தென்னிந்திய திரையிசையின் பொற்காலம்.

எஸ்பிபியோடு இணைந்து ஜானகி பாடிய டூயட்டுகள் அத்தனையும் காதலர்களின் தேசிய கீதங்கள். யேசுதாஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன் என அத்தனை ஜாம்பவான்களுடனும் ஜோடி சேர்ந்து பாடியுள்ளார் ஜானகி.

ஜானகியின் தாய்மொழி தெலுங்கு. ஆனால், அவர் தன் வாழ்நாளில் அதிக பாடல்களைப் பாடியது கன்னட மொழியில்தான்! மொழி என்பது ஜானகிக்கு வெறும் உச்சரிப்பு மட்டுமே, அவரது உணர்வு எப்போதும் இசையாகவே இருந்தது.

ஜானகி ஒரு குரல் பிரம்மா. குரலை எப்படி வேண்டுமானாலும் வளைப்பார். ஐந்து வயதுக் குழந்தையின் மழலை வேண்டுமா? ஜானகி ரெடி. அறுபது வயதுப் பாட்டியின் தழுதழுப்பு வேண்டுமா? அதற்கும் ஜானகி ரெடி. காதலின் உச்சம், விரகத்தின் தவிப்பு, பக்தியின் உருக்கம் என மனித உணர்ச்சிகளின் அத்தனை அலைவரிசைகளையும் தன் தொண்டைக்குள் ஒளித்து வைத்திருந்தார்.

கே.வி.மகாதேவன் தொடங்கி, இளையராஜா வழியாக ஏ.ஆர்.ரஹ்மான் வரை அத்தனை இசையமைப்பாளர்களும் இவரை வைத்துத் தங்களின் இசைப் பசியைத் தீர்த்துக்கொண்டார்கள். மவுனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு அவரே இசையமைக்கவும் செய்தார். மவுனத்திற்கும் இசைக்கும் நடுவேயான தூரத்தை அவர் நன்கு அறிந்திருந்தார் போலும்.

மைசூரு அப்பல்லோ மருத்துவமனையில் அவரது மூச்சு நின்றபோது, இந்தியத் திரையுலகின் ஒரு பெரும் பகுதி நிசப்தத்தில் மூழ்கியது.

மரணம் ஜானகியின் உடலை எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் பாடிவிட்டுப் போன 48,000 பாடல்களையும் என்ன செய்யும்? ஏதாவது ஒரு நள்ளிரவில், எவரோ ஒருவரின் ஏகாந்தத்தின் உச்சத்தில் செந்தூரப் பூவே ஒலிக்கும்போது ஜானகி மீண்டும் உயிர்பெற்றுக்கொண்டுதான் இருப்பார். மரணமே, நீ தோற்றுவிட்டாய்!

*****