Showing posts with label Backgrounds of a sparkle. Show all posts
Showing posts with label Backgrounds of a sparkle. Show all posts

11 Jun 2025

ஒரு பிரகாசத்தின் பின்னணிகள்

ஒரு பிரகாசத்தின் பின்னணிகள்

மறுபடியும் துவங்கு

முடியும் என்று தோன்றாது

முன்முடிவுகள் குழப்பும்

குழப்பங்களைத் தூக்கித் தூர வை

முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறும்

இப்படித்தான் நடக்கும் என்று எதுவுமில்லை

எதுவும் நடக்கலாம்

எதையும் யாரும் முடிவு செய்து விட முடியாது

முன்முடிவுகள் தவறாக வழி நடத்துகின்றன

முடிவுகளை நீ எடுக்க முடியாது

ஏதோ சில முடிவுகள் கட்டுபடலாம்

எல்லாமும் கட்டுபடாது

அதற்காக மேம்போக்காக இருந்து விட முடியாது

மேம்போக்கில் பிரச்சனைகள் இல்லை என்று நினைக்கலாம்

பிரச்சனையே அதுதான்

நிறைய பிரச்சனைகள் சிக்கல்கள்

அது பாட்டுக்கு வரும் போகும்

எதுவும் நிலையல்ல

கற்றுக் கொள்ள நினைப்பவருக்கு

பிரச்சனைகளும் சிக்கல்களும் அதிகம்

ஆழ்ந்து போகாமல் அகழ்ந்தெடுக்க முடியாது

அலுப்பில் ஆக்கங்கள் விளையாது

சோம்பலில் சரித்திரங்கள் பிரகாசிக்காது

மெனக்கெடாமல் மீனைப் பிடிக்க முடியாது

உயரே உயரே செல்லாமல் வீண்மீனை எட்டிப் பிடிக்க முடியாது

முடிவாக ஒரு முடிவு என்னவென்றால்

எதுவும் ஒரு நாளில் நடந்து விடாது

தன்னைத் தேய்த்துக் கொள்ள விரும்பாமல்

ரத்தினங்கள் பிரகாசிக்காது

*****