Showing posts with label An Election Illusion. Show all posts
Showing posts with label An Election Illusion. Show all posts

12 Apr 2026

வாக்காளரும் வேட்பாளரும் – ஒரு தெருக்கூத்து!

வாக்காளரும் வேட்பாளரும் – ஒரு தெருக்கூத்து!

இதுவரை கூகுள் மேப்பிற்கே தெரியாத உங்கள் வீட்டுச் சந்துக்குள், விலையுயர்ந்த கார்கள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு நுழைகின்றன என்றால், ஊரில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

வேட்பாளர்கள் இப்போதுதான் முதன்முதலாக உங்கள் தெருவின் மேடு பள்ளங்களை அதாகப்பட்டது சாலைகளை நேரடியாகத் தரிசிக்க தொடங்குவார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் என்பவர் வெறும் சட்டங்களை இயற்றுபவர் மட்டுமல்ல, உங்கள் ஏரியா சாக்கடை அடைப்பிற்கும், உலகளாவிய பொருளாதாரக் கொள்கைக்கும் இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டியவர். அவர் உங்கள் சுக துக்கங்களில் பங்கேற்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் மக்கள் விரும்புவது ஒர் அணுகக்கூடிய மனிதரை. அதாவது, போன் செய்தால் எடுக்க வேண்டும், நேரில் போனால் பார்க்க வேண்டும். ஆனால் பல பிரதிநிதிகள் பதவிக்கு வந்ததும் அவுட் ஆஃப் ரீச் ஆகிவிடுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் மனசாட்சியும்தான்!

ஒரு மக்கள் பிரதிநிதிக்கு இருக்க வேண்டிய தகுதிகளை விட, இருக்கக் கூடாத கலைகளை மக்கள் இப்போது கூர்ந்து கவனிக்கிறார்கள்.

ஊரில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றம் போக வேண்டும். ஆனால் இங்கே மக்கள் பிரதிநிதி அலுவலகமே ஒரு நடமாடும் நீதிமன்றமாக மாறுகிறது. தீர்ப்பு யாருக்குச் சாதகம் என்பது, யார் கொண்டு வரும் கவர் கனமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. இது மாபெரும் அரசியல் கலையாகவே வளர்ந்து வருகிறது.

ஆற்று மணல் முதல் மலை வரை அனைத்தையும் கூறுபோட்டுச் சாப்பிடுவது மக்கள் பிரதிநிதிகளுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. இவர்களுக்குத் தேவைப்படும் ஒரே இயற்கை வளம் பணம் மட்டுமே.

சாலை போடுகிறார்களோ இல்லையோ, கமிஷன் வாங்குவதில் ஒரு நேர்மை வைத்திருக்கிறார்கள். தரமான வேலை என்பது மாறி, இவர்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு விஷயம் தரமான ஊழல் என்பதாக இருக்கிறது. அந்தக் கலையில் வல்லவர்களே அரசியல்வாதிகளாக ஜொலிக்கிறார்கள்.

மக்கள் ஒன்றும் மலையைக் கேட்கவில்லை. தரமான கல்வி, நல்ல ஆஸ்பத்திரி, பிள்ளைகளுக்கு ஒரு வேலை அவ்வளவுதான். லஞ்சம் வாங்காத, சமூக விரோதிகளுக்குப் பெரியப்பாவாக இருக்காத ஒரு மனிதரைத்தான் தேடுகிறார்கள்.

இந்த மக்கள் பிரதிநிதிகள் நேர்மையை மட்டும் மூலதனமாகப் போட்டால், மக்கள் பணத்தையோ, பிரியாணி பொட்டலத்தையோ எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களின் நேர்மையே மக்களுக்குப் பெரிய போதை!

மக்களை ஏமாற்றுவது எளிது என்று நினைப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள் - ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் கையில் ஒரு மெஷின் அதாகப்பட்டது, ஓட்டிங் மெஷின் கிடைக்கிறது. அதில் அவர்கள் வைக்கும் குத்து, பலரது அரசியல் வாழ்க்கைக்கு வைக்கும் முற்றுப்புள்ளியாகாமல் இருக்க வேண்டுமானால், மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவே இருக்க வேண்டும். பணத்துக்கும், ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் அவர்கள் பிரதிநிதிகளாகி விடக் கூடாது!

*****