Showing posts with label குறள் கூறும் ரசாயன மாற்றம். Show all posts
Showing posts with label குறள் கூறும் ரசாயன மாற்றம். Show all posts

19 Sept 2026

குறள் கூறும் ரசாயன மாற்றம்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 41

குறள் கூறும் ரசாயன மாற்றம்!

அது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அலுவலகம். மதியம் இரண்டு மணி. அறை முழுவதும் கணினித் திரையின் வெளிச்சம்.

அவன் தனது அறையில் அமர்ந்து விசைப்பலகையை விசையோடு இயக்கிக் கொண்டிருந்தான் அல்லது வேலைப்பளு தாளாமல் நசுக்கிக்கொண்டிருந்தான். குளிர்சாதன இயந்திரத்தின் சத்தம் மட்டுமே பின்னணியில் ரீங்காரமிட்டது.

அப்போது, கோப்புடன் அவன் மேஜைக்கருகில் வந்து நின்றாள் அவள். நிறுவனத்தின் புதிய செயல்திட்டம். அவளது கண்கள் லேசான சோர்விலும் ஒரு கூர்மையான கவனத்தோடு இருந்தன.

"இந்த டேட்டாவை முடிக்க எவ்வளவு நேரமாகும்?" என்று கேட்டாள். அவள் குரல். எப்போதும் அது ஒரு மெல்லிய கிசுகிசுப்பு போலவும், அதே நேரம் துல்லியமாகவும் இருக்கும். அந்தப் பணிவான குரல், அவனின் காதுகளில் ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை நிகழ்த்தியது.

அவன் நிமிர்ந்து பார்த்தான்.

அவள் லேசாகப் புன்னகைத்தாள். அப்போது அவளது உதடுகள் விலகிய அந்த விநாடியில், உள்ளே பளிச்சென்று மின்னிய வெள்ளை வெளேர் பற்களின் ஓரத்தில், அந்த நளினமான புன்னகையின் ஈரப்பசை மின்னியது.

அது வெறும் புன்னகை அல்ல.

திருக்குறள் ஞாபகத்திற்கு வந்தது அவனுக்கு.

"பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்."                              (குறள், 1121)

பால். அதில் கலந்த தூய தேன். அதோடு அந்த வெண்மையான பற்களின் இடையே சுரந்த அந்தத் துளி நீர். திருவள்ளுவர் எதைச் சொன்னார் என்று அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. அது ஓர் அறிவியல் ரீதியான காவிய ரசாயனம்.

அவளது அந்தப் பணிவான குரலும், அவளது வெண்பற்களுக்கு இடையே ஊறி வெளிப்பட்ட அந்தச் சொற்களும் அவனுக்குள் ஒரு சுகமான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தின. கணினித் திரையின் நீல வெளிச்சத்தில், அவள் முகத்தில் படும் லேசான வெளிச்சம் ஒரு கவிதை போலிருந்தது.

"ஹலோ மிஸ்டர்? கேட்டீங்களா?" அவள் மீண்டும் அதே மெல்லிய குரலில் அவன் கவனத்தைக் கலைத்தாள்.

அவள் உதட்டோரம் தளும்பிய அந்தச் சின்னத் துளி நீரின் மினுமினுப்பு, அவனுடைய மூளையில் இருந்த மொத்த எண்களின் குழப்பங்களையும், தர்க்கங்களின் முடிச்சுகளையும் நொடியில் அழித்துவிட்டது.

வள்ளுவர் அன்று சொன்னது எவ்வளவு நிஜம்! வாழ்க்கையின் அத்தனை கசப்புகளையும், டென்ஷன்களையும் இந்தச் சிறிய புன்னகையும் பேச்சும் அடித்துச் சென்றுவிடுகிறது.

அவன் லேசாகத் தொண்டையைச் செருமிக்கொண்டு சொன்னான், "ம். பத்து நிமிஷம். முடிச்சிடுறேன். ஆனா…"

"ஆனா, அப்புறம் என்ன தயக்கம்?" என்றாள் அவள், புருவத்தை உயர்த்தி.

அவன் புன்னகைத்தான். "ஒன்னுமில்ல. உங்ககிட்ட பேசினா மட்டும் அந்தப் ப்ரோக்ராமிங் எரர் மாதிரி, மனசுல இருக்கிற எல்லா எரரும் சடனா கிளியர் ஆயிடுது" என்றான்.

அவள் இதழோரம் லேசான வெட்கத்துடன் சிரித்தாள். "எப்படியோ கிளியர் ஆனா சரிதான்!" அவள் மீண்டும் ஒருமுறை லேசாகப் புன்னகைத்துவிட்டுத் திரும்பினாள்.

அந்த மேஜையை விட்டு அவள் நகர்ந்தாலும், அந்த குளிரூட்டப்பட் அறையின் காற்றில் இன்னும் எங்கோ அந்தப் பாலும் தேனும் கலந்து கொண்டிருந்தது போல ஒரு மாயம் மிஞ்சியிருந்தது அவனுக்கு. அவளது பணிவான பேச்சும், அந்தத் தேன் போன்ற புன்னகையும் அவன் சோர்வையும் குழப்பதையும் நீக்கி மீண்டும் துடிப்பாக்கின.

பத்தே நிமிடத்தில் அந்தப் புதிய செயல்திட்டத்தின் அத்தனை சிடுக்குகளையும் அவன் விடுவிக்க, அவன் உற்சாகமாக வேலை பார்ப்பதை, கண்காணிப்பு அறையில் ஒளிர்ந்த திரையில் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****