Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

27 Oct 2024

எழுதப்பட்ட விதிக்குள் எழுதப்படாத விதி

எழுதப்பட்ட விதிக்குள் எழுதப்படாத விதி

ஆசைகள் எங்கெங்கோ கொண்டு போய் நிறுத்துகின்றன

கத்தியின் கூர் முனையின் மேல் இதயத்தை

செஞ்சுடரின் மேல் வெண்பஞ்சை

யாரையும் யாரும் மாற்றுவது ரொம்பவே கஷ்டமானது

மாற்றத்தை உணர்ந்து அவரவர் மாறிக் கொள்வது எளிதானது

அதுவரை அவர்கள் அப்படியே இருப்பது உசிதமானது

உண்மையான அன்பு

ஒருவரின் ஆசைக்குக் குறுக்கே நிற்காது

எப்படியோ ஒவ்வொன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

எதற்காகவும் யாரையும் குறை கூற முடியாது

கனமாகிப் போகின்ற இதயம்

லேசாகத் துடித்து வெடித்துச் சிதறுவது இயற்கையானது

என்றோ ஒரு நாள் வெடிப்பதற்காக

எரிமலையை யார் என்ன செய்ய முடியும்

தலைக்கு மேல் தொங்கும் கத்திகள் போல்

தற்செயல்கள் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழும்

விபத்துகள் எப்போதோ நேரும் என்பதற்காகப்

பயணிக்காமல் இருக்க முடியுமா

வாழ்க்கைப் பயணிகள் மனிதர்கள் என்பது எழுதப்பட்ட விதி

பயணித்துக் கொண்டிருக்க வேண்டும்

என்பது எழுதப்படாத விதி

*****