Showing posts with label Tamilnadu. Show all posts
Showing posts with label Tamilnadu. Show all posts

6 Nov 2024

திராவிடத்தை நோக்கியா? தமிழ்த் தேசியத்தை நோக்கியா? தமிழக அரசியல் செல்ல வேண்டிய பாதை!

திராவிடத்தை நோக்கியா? தமிழ்த் தேசியத்தை நோக்கியா?

தமிழக அரசியல் செல்ல வேண்டிய பாதை!

திராவிட சித்தாந்த அரசியலானது தமிழ்த் தேசிய அரசியலாக வளர்ச்சி பெற்றிருந்தால் தமிழகத்தில் சர்வ சிக்ஷா அபியான், ஜல் ஜீவன் மிஷன், சமக்ரா சிக்ஷா அபியான் போன்ற சொற்களை உங்கள் காதுகள் கேட்டிருக்காது. அந்தச் சொற்களை மறந்தும் கூட நீங்கள் உச்சரித்திருக்கவும் மாட்டீர்கள். தமிழகத்தில் இந்த அளவுக்கு ஆங்கில வழி பள்ளிகளும் செழித்திருக்காது. நீங்கள் ‘திராவிட மாடல்’ என்ற சொல்லாட்சியையே எடுத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் மிக அதிமாக உச்சரிக்கப்படும் இந்தச் சொல்லில் ‘மாடல்’ என்ற சொல்ல எந்த மொழிச் சொல் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

தமிழ்த் தேசியத்திற்கான கட்டமைப்பை அரசியல் கட்சிகள் தங்கள் ஓட்டு லாபத்திற்கான ஒரு யுக்தியாக மட்டுமே கையாள்கின்றன.

தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை முழுமையாக முன்னெடுத்தால், மற்ற மாநிலங்கள் மலையாள தேசியம், கன்னட தேசியம், தெலுங்கு தேசியம் என்று ஆரம்பித்தால், நிலைமை என்னவாகும் என்று நீங்கள் கேட்கலாம். மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு அத்தகைய தேசியத்தைத்தான் உண்டாக்கியிருக்கிறது. கேரளா மலையாள தேசியமாகவே இருக்கிறது. கர்நாடகமும் கன்னட தேசியமாகவே இருக்கிறது. ஆந்திராவும் தேலுங்கு தேசியமாகவே இருக்கிறது. அங்கு தெலுங்கு தேசம் என்று மொழியின் பெயரிலான கட்சியே இருக்கிறது. அம்மாநில மக்களுக்கு இருக்கும் மொழி உணர்வும் பண்பாட்டு உணர்வும் தமிழர்களிடையே இருக்கிறதா என்ற வினாவை நாம் இப்போது எழுப்ப வேண்டியிருக்கிறது.

தமிழ்த் தேசியம் என்ற இலக்கில் தமிழகம் மற்ற திராவிட மொழி தேசியங்களை விட பின்தங்கியே இருக்கிறது. தமிழுணர்வு என்பது பிறமொழி எதிர்ப்புணர்வாக மட்டுமே இங்கு உணர்ச்சிகரமாக விதந்தோதப்படுகிறது. தமிழையும் தமிழுணர்வையும் வளர்க்கும் பண்பாட்டுப் பின்புலங்கள் மிகவும் பலவீனமடைந்தே இருக்கின்றன.

மாநிலங்களில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்கிற அடிப்படையில் தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தையும் ஒன்றிய அளவில் திராவிடத்தையும் முன்னிருத்த வேண்டிய அரசியல் சூழ்நிலையில் தமிழகம் இருக்கிறது.

ஏன் இப்படி என்று நீங்கள் இருக்கலாம்.

இந்திய அரசியலில் வட இந்திய அரசியலுக்கு இருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அதிகார இடம் தென்னிந்திய அரசியலுக்கு இல்லை. தென்னிந்தியாவிலிருந்து உருவான பிரதமர்கள் சொற்பமாகவே இருக்கிறார்கள். தேவேகௌடா இந்தியப் பிரதமராக இருந்தார் என்ற செய்தி எத்தனை பேருக்குத் தெரியும்? சுருங்கச் சொன்னால் ஐந்தாண்டு கால முழுமையும் தென்னிந்தியாவிலிருந்து யாரும் இந்திய பிரதமராக இல்லை. இந்த அரசியல் எதிரொளிப்பை மறைக்கவே தென்னிந்தியாவிலிருந்து கணிசமான குடியரசுத் தலைவர்களை வட இந்திய அரசியல் முன்னிருத்துகிறது.

நிலைமை இப்படி இருக்கையில் தென்னிந்திய அரசியலை ஒருங்கிணைக்கும் அரசியல் கருத்தியலாகத் திராவிடத்தை வலுவாக முன்னெடுக்க வேண்டிய நிலை தமிழகத்துக்கு இருக்கிறது. விரைவில் மக்கள்தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புகள் செய்யப்பட இருக்கின்றன. அப்படி மறுசீரமைப்புச் செய்யப்பட்டால் தென்னிந்திய நாடாளுமன்ற தொகுதிகள் குறையவும், வட இந்திய நாடாளுமன்ற தொகுதிகள் அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.  நிலைமை அப்படியானால் உத்தரபிரதேச மாநிலம் உள்ளிட்ட சில வட இந்திய மாநிலங்களை மட்டுமே பிரதானமாகக் கொண்டு வட இந்திய அரசியல் மட்டுமே ஆட்சியைப் பிடிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் ஏற்பட்டு விடும்.

இராஜாஜி, காமராஜர் காலத்தில் தென்னிந்தியாவுக்கு அதுவும் குறிப்பாகத் தமிழகத்துக்கு இருந்த அரசியல் முக்கியத்துவம் தற்போது இல்லை. நிதி வழங்கும் அளவில் மத்திய அரசு தமிழகத்தை எந்த அளவுக்குப் புறக்கணிக்கிறது என்பதை வைத்து நோக்கும் போது தமிழகத்தின் அரசியல் தாக்கம் வட இந்தியாவில் எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

இதனால்தான் திராவிட அரசியலைத் தமிழ்த் தேசிய அரசியலாக மாநிலத்தில் வளர்த்தெடுப்பதும், மத்தியில் தமிழ்த் தேசிய அரசியலை திராவிட அரசியலாக ஒருங்கிணைக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு தமிழக அரசியல்வாதிகள் செயல்படும் போதுதான் மாநிலத்தின் பண்பாட்டு வளர்ச்சியும் அதே போழ்தில் தேசிய அளவில் தமிழகத்தின் முக்கியத்துவமும் உணரப்படும். திராவிட அரசியலின் அடிப்படையில் தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்கள் ஒருங்கிணைந்து கரம் கோர்க்க வேண்டிய அவசர நிலை தற்போது இருக்கிறது.

மாநில அளவிலான பிரச்சனைகளுக்குத் தமிழகத்தில் இருக்கும் தமிழக அரசியல் கட்சிகள் மாறுபட்ட குரல் கொடுப்பது ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத மறுப்பக்கம் என்றாலும், தேசிய அளவில் தமிழகத்தின் பிரச்சனைகளைக் கொண்டு செல்லும் போது தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட குரலை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். தேசிய அளவில் அதுவும் குறிப்பாக நாடாளுமன்ற தீர்மானங்களில் ஒட்டளிக்கும் போது தமிழக அரசியல் கட்சிகள் ஒரே மாதிரியாக ஓட்டுகளைப் பதிவு செய்வது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இதற்காகத் தமிழக அரசியல் கட்சிகள் தேசிய அளவில் தமிழகத்தின் அரசியல் நகர்வுகளை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒருங்கிணைந்து முடிவு செய்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும். மாநில அளவில் எவ்வகையில் வேறுபட்டாலும் தேசிய அளவில் ஒன்றுபட்டு நிற்பது தமிழக அரசியல் கட்சிகளுக்கு அவசியம் வேண்டப்படுவதாக இருக்கிறது. இதே நிலைப்பாட்டில் திராவிட அரசியலின் ஒருங்கிணைப்பில் தமிழகம், கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தென்னிந்தியாவின் அரசியல் குரல் வடஇந்திய அரசியலோடு போட்டி போட்டுக் கொண்டு ஓங்கி ஒலிக்கும்.

*****

5 Nov 2024

திராவிடமா? தமிழ்த் தேசியமா?

திராவிடமா? தமிழ்த் தேசியமா?

ஓர் அரசியல் பண்பாட்டு இயக்கத்திற்கான வலுவான அடிப்படை கருத்தியல்தான். அந்தக் கருத்தியல் அடிப்படையில்தான் தங்கள் இயக்கத்திற்கான சித்தாந்தங்களை வகுத்துக் கொண்டு அரசியல் பண்பாட்டியலிலாளர்கள் செயல்படுகிறார்கள்.

தென்னிந்திய அரசியலின் வலுவான அரசியல் கருத்தியல் திராவிடம். திராவிடம் என்ற கருத்தியல் தோன்றி செழித்தது தமிழகத்தில்தான். திராவிடம் என்ற கருத்தியல் வளர்வதற்கு ஆரியம் என்ற எதிர்க் கருத்தியல் முக்கிய காரணம். மொழியும் பிரதானக் காரணம். ஆரியர்கள் சமஸ்கிருதத்தை முன்னிருத்தி தங்கள் பண்பாட்டையும் மொழிக் குடும்பங்களையும் முன்னிருத்திய போது, அதற்கு எதிரான நிலையில் தென்னிந்தியாவுக்குத் தங்கள் பண்பாட்டையும் மொழிக் குடும்பங்களையும் முன்னிருத்த திராவிடக் கருத்தியல் துணை நின்றது.

தமிழிலிருந்து தோன்றிச் செழித்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு போன்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பங்களாகக் கால்டுவெல் போன்ற தமிழாய்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மொழியின் பின்னணியில்தான் தென்னிந்தியாவின் அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் வளர்த்தெடுக்கப்பட்டன. இதற்கான வரலாற்றுப் பின்புலமும் நோக்கப்பட வேண்டியது.

அன்றைய சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரம், ஒரிசாவை உள்ளடங்கிய பெரும் நிலப்பகுதி. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாத வரையில் சென்னை மாகாணம் என்பது தென்னிந்தியாவின் கணிசமான பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இதனால் சென்னை மாகாணத்திற்குத் தென்னிந்தியாவின் பல மொழி பேசும் பகுதிகளை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் இருந்தது. திராவிடம் என்ற கருத்தியலுக்கு அப்போது வலுவான தேவையும் இருந்தது.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு மொழி சார்ந்த பின்னணியில் தங்கள் கருத்தியல்களை மாநிலங்கள் வளர்க்க முற்பட்ட போது திராவிடத்தைத் தமிழ் தேசியமாகத் தொடர வேண்டிய நிலை தமிழ்நாட்டிற்கு உண்டாகிறது. திராவிடம் தமிழ்த் தேசியமாக வளர்த்தெடுக்கப்பட்டதா என்பதுதான் முக்கியமான கேள்வி.

தமிழர்களுக்குத் தமிழுணர்வு இருந்த அளவுக்குத் தமிழ்த் தேசியமாக வளர்த்தெடுக்கப்படுவதற்கான உணர்வு இல்லை என்றே குறிப்பிட வேண்டியிருக்கிறது. இதனால் திராவிடம் என்ற நிலையிலிருந்து தமிழ்த் தேசியமாக வளர வேண்டிய அரசியல் மற்றும் பண்பாட்டு பின்புலமானது திராவிடம் என்ற அளவிலேயே நின்று கொண்டது.

இந்தித் திணிப்பின் போது வெளிப்பட்ட தமிழுணர்வு இந்தி எதிர்ப்பு என்ற அளவில் மட்டும் சுருங்கிப் போனது. தமிழ்த் தேசியத்திற்கான கட்டமைப்பு இல்லாமல் அரசியல் முழக்கமாக மட்டும் அது தொடரப்பட்டு வருகிறது.

தமிழ்த் தேசியத்தின் அவசியத்தை உணர்ந்திருந்தால் மக்கள் உணர்வெழுச்சியுடன் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களை வைப்பதில் ஆர்வம் காட்டியிருப்பார்கள். கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பதாகைகள் தமிழில் இடம் பெற்றிருக்கும். தமிழ் வழிக் கல்வியில் தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் உவப்புடன் சேர்த்து தமிழ் வழிக் கல்வி நிலையங்களைப் பெருக்கியிருப்பார்கள். தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் மந்திர முழக்கங்கள் மட்டுமே கேட்டிருக்கும். தமிழர்களின் பேச்சு வழக்கிலும் இவ்வளவு ஆங்கில மற்றும் பிறமொழி கலப்புச் சொற்கள் வந்திருக்காது.

தமிழ்த் தேசியத்திற்கான அரசியல் முன்னெடுப்புகள் தமிழ்நாட்டில் தொடர்ந்த வண்ணம் இருந்தாலும் அது தொடர்ந்து அரசியல் முழக்கமாகவும் தமிழகத்திற்கான லட்சிய எதிர்பார்ப்பாகவும் மட்டுமே இருந்து வருகிறது.

தமிழ்த் தேசியம் என்பதை அரசியல் நெருக்கடியாகவும் கட்டாயமாகவும் இயக்கப்படுத்திச் சட்டங்களை ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் தமிழ் வழிக் கல்வியை விரும்புவார்களா? தமிழ்ப் பெயர்கள் வைப்பதில் ஆர்வம் காட்டுவார்களா? தமிழ் வழியில் தமிழகம் பயணிப்பதை விரும்புவார்களா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் லட்சிய ரீதியாகச் அணுகப்படுவதை விடவும் எதார்த்த ரீதியாக அணுகப்பட வேண்டும். அந்த எதார்த்தம் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்பதே நடைமுறை உண்மை.

தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் விநோதமாகப் பார்க்கப்படும் சூழல் இருக்கிறது. தமிழ்நாட்டில் தனித்தமிழ் பள்ளிகள் நடத்தப்படுவது ஆச்சரியமாகப் பார்க்கப் படுகிறது. தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைப்பதைத் தமிழர்கள் உவப்புடன் ரசித்துப் பார்க்கின்றனர். ஐந்து நிமிட உரையில் ஆங்கிலமோ, பிறமொழிச் சொற்கள் கலப்பில்லாமல் பேசும் அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் அரிதாக இருக்கின்றனர்.

அப்படியானால் தமிழ்த் தேசியம் என்பது சாத்தியம் இல்லையா என்றால் அதற்கான அடித்தளம் தமிழர்களிடம் உணர்வு ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் ஆழமாகவும் அதே நேரத்தில் பொறுமையாகவும் மென்மையாகவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அது தமிழர்களின் பழக்கமாகவும் வழக்கமாகவும் தொடர சில பத்தாண்டுகள் தேவைப்படும். அதுவரை தமிழ்த் தேசியத்தை அரசியல் லாபம் பார்க்காது வளர்த்தெடுக்கும் நீண்ட கால நோக்குடைய தலைவர்கள் தமிழகத்துக்குக் கிடைப்பார்களா?

அடித்தளம் வலிமையாக இல்லாமல் மேற்கட்டுமானத்தைக் கனவுகளால் கட்டுவது எப்போதும் நிலைத்து நிற்காது என்பதால் தமிழ்த் தேசியம் என்பதை அரசியல் முழக்கமாகக் கருதி ஆதாயம் அடைய நினைக்கும் தலைவர்களால் தமிழ்த் தேசியம் என்பது வெற்றியை நோக்கிச் செல்லாத கருத்தியலாக மாறும் ஆபத்தும் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்ற லட்சியவாத கருத்தியலை வெகுஜன கருத்தியலாக மாற்றுவதில்தான் இருக்கிறது தமிழ்த் தேசியத்தின் வெற்றி.

*****