2 Oct 2026

கணிக்க முடியாத மாறிகள்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 54

கணிக்க முடியாத மாறிகள்!

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட பிறகு, இந்தப் பூமியில் பகலேது? இரவேது? எல்லாம் ஒன்றுதான்.

பகலைப் போல இரவிலும் வேலை, இரவைப் போலப் பகலிலும் வேலை. எந்நேரமும் வேலை. வேலை இல்லாத நேரமே இங்கு இல்லை.

அந்த மழையிரவிலும் அலுவலகத்தின் பத்தாவது மாடியில் நின்று கொண்டு பாதி அருந்தியும் பாதி அருந்தாமலும் இருந்த அந்தக் குளிர்பான புட்டியை வெறித்துப் பார்த்தான் அவன். அந்தப் புட்டிக்குள் இருந்த குமிழ்களைப் போல அவனது மூளைக்குள் அவளது ஞாபகங்கள் அடித்துக் கொண்டு எழுந்தன.

மேஜை மீது கிடந்த அவனது மடிக்கணினியின் திரை மினுமினுத்தது. வாட்ஸ்அப் வெப் திறந்திருந்தது. அவளிடமிருந்து கடைசி மெசேஜ் வந்து மூன்று மணி நேரமாகிறது. "மீட்டிங்கில் இருக்கிறேன். அழைக்கிறேன்."

அவள் அவனை விட அந்த அலுவலகத்தில் ஒரு படி மேலான பதவி. கடுகடுப்பான தோற்றம், ஆனால் புன்னகைத்தால் மொத்த அலுவலகமும் ஸ்தம்பிக்கும். அவனுக்கு அவள் மீது எப்படி காதல் வந்தது என்று அவனுக்கே தெரியவும் இல்லை, இன்று வரை புரியவும் இல்லை.

செயல்திட்ட விவாதங்களில் தொடங்கும் அந்தப் பார்வை, தேநீர் அருந்துகையில் நீளும் மௌனம், வார இறுதி நாட்களில் வெடிக்கும் சில்லறைச் சண்டைகள் என எல்லாமே ஒருவித போதை.

இதற்கு மேல் குளிர்பானத்தைக் குடிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தவனாய், அவன் தேநீர் குடுவையைத் தூக்கினான். காலியாக இருந்தது.

காதல் என்பது வெறும் உடல்சார்ந்தது மட்டுமல்ல; அது ஒருவனின் தனிமையைச் சுட்டெரிக்கும் பயங்கரமான நெருப்பு. அவள் இல்லாத ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு ஒரு யுகமாக நீண்டு கொண்டிருந்தது. அவளுக்கு அவனது காதல் தெரியும். ஆனால் அவள் எப்போதுமே ஒரு கோட்டை வரைந்து வைத்திருப்பாள். "நாம்ம நல்ல நண்பர்கள்!" என்பாள் அசட்டையாக.

நல்ல நண்பர்களா? இவ்வளவு தீவிரமாக ஒருத்தியை நினைத்துக் கொண்டு, அவளுடன் வெறும் செயல்திட்டங்களையும், திட்ட நிரலாக்கங்களையும் மட்டும் பேசிக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய சித்திரவதை!

இதற்கு மேலும் வெட்கம் பார்க்கவோ, நாணத்தை நினைக்கவோ, நல்லாண்மையை நிலைநிறுத்தவோ அவன் மனம் தயாராக இல்லை.

"காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு

நல்லாண்மை என்னும் புணை."               (குறள், 1134)

என்று வள்ளுவர் சொல்லும் நிலைக்கு அவனது உடல், மனம், ஆன்மா என எல்லாம் வந்து விட்டிருந்தது.

சரியாக அதே நேரத்தில் அவனது அலைபேசி அதிர்ந்தது. அவள்தான்!

அவன் சட்டென்று அலைபேசியை எடுத்தான். "சொல்லு."

"இன்னைக்கு வேலை முடிஞ்சுது. ரொம்ப களைப்பா இருக்கு. லேப்டாப்பை ஷட் டவுன் பண்ணிட்டு வீட்டுக்குக் கிளம்பு." குரலில் அந்த வழக்கமான அலுவல் கண்டிப்பு.

"ஒரு பத்து நிமிஷம். பத்தாவது ப்ளோருக்கு வர்றீயா?"

"என்னது? மணி பதினொன்று ஆகுது."

"ப்ளீஸ். ஒரு பத்து நிமிஷம்."

மறுமுனையில் ஒரு நீண்ட பெருமூச்சு கேட்டது. "சரி, அஞ்சு நிமிஷம்."

அவள் இணைப்பைத் துண்டித்தாள்.

அவனுக்குப் படபடப்பு கூடிவிட்டது. நெஞ்சுக்குள் எதையோ ஓர் இயந்திரம் துளைப்பது போன்ற வலி. இதுதான் காதலின் தகிப்பா? ஒரு பெண்ணின் மீது கொள்ளும் காதல் இவ்வளவு தூரம் ஒருவனைப் பலவீனமாக்கும் என்று அவன் நினைத்ததே இல்லை. காதலும் அறிவியலும் எங்கே மோதிக் கொள்கின்றன என்று அவனால் கணிக்க முடியவில்லை. இரண்டுமே கணிக்க முடியாத மாறிகள்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் மின்தூக்கியின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

அவள் வந்தாள்.

நீல நிற குர்தாவில், கலைந்த தலைமுடியுடன், சோர்வான கண்களுடன் நின்றிருந்தாள்.

ஆனால், அவளது அந்தச் சோர்வு கூட அவனுக்கு அழகாகத்தான் தெரிந்தது. இதுதான் பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்.

"சொல்லு. அதான் வேலை முடிஞ்சிடுச்சு, கிளம்புன்னு சொல்றேன்ல. என்ன இது கிளம்புற நேரத்துல என்னைக்கும் இல்லாத திருநாளா இப்படிப் புதுசா பண்றே?" என்று கேட்டுகொண்டே அவனருகில் வந்தாள். குளிர் காற்று அவளது முடியை வருடிக் கொடுத்தது.

அவன் பேசவில்லை. அவளை உற்றுப் பார்த்தான். அந்த மௌனம் அவளுக்கு அசெளகரியத்தைக் கொடுத்தது.

"ஏன் அப்படிப் பார்க்கிற?"

"உன்னை நினைச்சாதான் பயமா இருக்கு."

"எதுக்கு?"

"இந்த ஆபீஸ், ப்ராஜெக்ட், டெக்னாலஜி இதெல்லாம் தாண்டி என் உலகம் முழுக்க நீயே நிரம்பி வழியுற. நீ இல்லாட்டி நான் செத்துப்போயிருவேன்னு சொல்ல மாட்டேன். ஆனா, செத்ததை விடக் கேவலமாக வாழ்வேன். இந்தத் தகிப்பு இருக்கே. தாங்க முடியல."

அவள் ஸ்தம்பித்துப் போனாள்.

அவளது கண்கள் விரிந்தன.

அவளிடம் எப்போதும் இருக்கும் அந்தத் தற்காப்புச் சுவர் லேசாக இடிவது போல் அவனுக்குத் தோன்றியது.

அவள் எதையோ சொல்ல வர, வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே தப்பின.

அவன் அவளது கரங்களைப் பற்றிக் கொண்டான்.

அந்தத் தொடுகை இரவின் குளிரை உடனடியாகச் சுட்டெரித்தது.

அவள் விலகவில்லை. மாறாக, அவளது விரல்கள் அவனது விரல்களுடன் பிணைந்து கொண்டன.

ஆனால் அடுத்த நொடியே, "நீ ரொம்ப மோசமான ஆளுடா. முதல்ல இங்கேயிருந்து கிளம்புடா!" அவள் அவன் கைகளை வெடுக்கென உதறினாள்.

அந்த ஒரு நொடியில் இந்த உலகமே இடிந்து விழுவது போலிருந்தது அவனுக்கு. சொல்லப் போனால் அது ஓர் எரிமலை வெடிப்பைப் போலிருந்தது.

இத்தனை நாள் அவன் கட்டிக் காத்து வந்த பெயர், புகழ், கௌரவம் எல்லாம் கண் முன்னே காலாவதியாகி விட்டது போலிருந்தது. பூகம்பத்தில் உருத்தெறியாமல் சிதைந்து மண்ணோட மண்ணாகிப் போயிருந்த கட்டடம் போலாகி விட்டான் அவன்.

அவசரப்பட்டு விட்டோமோ என்று அவன் மனம் அவனைக் குற்றவுணர்ச்சியில் தள்ளியது.

அவள் வேகவேகமாக மின்தூக்கியின் பொத்தானை அழுத்தி உள்ளே நுழைந்தாள். அதன் கதவுகள் மூடப்படும் அந்தக் கடைசி கணத்தில், "இப்போ கிளம்பு. நாளைப் பார்க்கலாம்." என்றாள் முகத்தில் கொஞ்சம் கடுமை இருந்தாலும், உதட்டில் மெல்லிய புன்னகையுடன்.

அப்போதுதான் இழந்த உலகம் அவனுக்குத் திரும்பி வந்தது போல இருந்தது. அவனுக்கு இப்போது இந்த இரவு மேலும் அமைதியானது. பத்தாவது மாடியின் குளிர்க் காற்று இன்னும் கொஞ்சம் குளிர்ச்சியைக் கூட்டியது. ஆனால் அவனது நெஞ்சில் இருந்த அந்தத் தகிப்பு இப்போது சற்றுத் தணிந்திருந்தது, ஒரு தற்காலிக நிவாரணத்துடன்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

1 Oct 2026

காதல் செய்வீர்! மானத்தைத் துறப்பீர்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 53

காதல் செய்வீர்! மானத்தைத் துறப்பீர்!

மணி காலை ஏழரை.

அவன் கண் விழித்ததோ அதிகாலை மூன்றரை.

நான்கு மணி நேரமாக அவனால் தூங்கவும் முடியவில்லை. அங்கே இங்கே அசையக் கூட முடியவில்லை. ஏதோ இரும்புக் கயிற்றால் கட்டிப் போட்டது போன்ற இயலாமை.

மேசையில் கிடந்தது, அவனது கல்லூரிக் காலத்து நாட்குறிப்பு.

அதில் அவன் கையெழுத்தில்இப்படி எழுதியிருந்தான்.

"எனக்கு எப்போதுமே தன்முனைப்பு அதிகம். யார் எதற்காகவும் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது. கோபம் வந்தால் நேருக்கு நேர் நிற்பேன். தவறு என்றால் தட்டி கேட்பேன். இதுதான் ஆண்மை. இதுதான் கௌரவம்."

இப்போது அதை நினைத்து தனக்குத் தானே சிரித்துக்கொண்டான்.

என்ன ஒரு இரும்பு மனிதன்! கடந்த நான்காண்டுகளில் அலுவலகத்தில் எத்தனையோ அழுத்தங்கள், நெருக்கடிகள், பிரச்சனைகள். ஆனால் எதற்காகவும் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவன்.

ஆனால், இன்றைக்கு?

அவன் அலைபேசி ஒளிர்ந்தது. வாட்ஸ்ஆப் அறிவிப்பு.

அவள் இன்னும் இணைப்பில் இருக்கிறாள். நேற்றிரவு நடந்த சண்டை இன்னும் அவனின் நெஞ்சில் நெருஞ்சில் முள் மாதிரி குத்திக்கொண்டிருந்தது. சாதாரணமாக ஒரு தேநீர் நிலையத்தில் தொடங்கிய ஒரு சிறிய புரிதலற்ற உரையாடல், எங்கேயோ போய் முடிந்தது.

அவள் சொன்ன வார்த்தை, "உனக்கு உன் ஈகோ தவிர வேற ஒன்னும் தெரியாதுடா. என் பீலிங்ஸ் உனக்கு ஒரு பொருட்டே இல்லைடா!"

அவன் உடனே அங்கேயே ஏதாவது ஒரு பதில் சொல்லியிருக்க வேண்டும். அல்லது வீட்டிற்கு வந்த பிறகாவது வாட்ஸ்ஆப்பில் சமாதான செய்தி அனுப்பியிருக்க வேண்டும். அவனுக்குத் தன்முனைப்பு என்பது கவசம். செய்தியைத் தட்டச்சு செய்வதும் அழிப்பதுமாக இரவு இரண்டு மணி வரை செய்தவன், தன்னையறியாமல் அயர்ந்து, மூன்றரைக்குக் கண் விழித்து, இப்போது எதையும் செய்ய முடியாமல் கை நடுங்கும் நிலைக்கு வந்து விட்டான்.

அவனுக்கு அழ வேண்டும் போல இருந்தது. ஒரு சொட்டு நீர் கூட சிந்த முடியாது என்று கண்கள் இரண்டும் அடம் பிடித்தன.

"எங்கு போனது என் அந்தப் பழைய நாணம்? எங்கு போனது என் அந்த பண்டைய நல்லாண்மை?" அவனக்குக் காட்டுக் கத்தலாகக் கத்த வேண்டும் போலிருந்தது.

இப்போது அவனிடம் மிச்சமிருப்பது ஒன்றே ஒன்றுதான். அது காதல் மட்டும்தான். அந்தக் காதலைக் காப்பாற்றிக்கொள்ள, அவளிடம் கெஞ்சி நிற்கவும் தயார் என்ற அந்தப் பரிதாப நிலையில் இருந்தான் அவன்.

பழங்காலத்துத் தமிழர்கள் தன் காதலை ஊருக்குச் சொல்ல பனை ஓலையால் குதிரை செய்து ஊர் நடுவே வருவார்கள். மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை என  எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, "அவள் இல்லை என்றால் நான் செத்து விடுவேன்" என்று ஊர் அறிய கத்துவார்கள்.

அவன் நிலை இப்போது அப்படித்தான் இருந்தது. ஆனால் அவன் உடல் மடலேறவில்லை. அவனின் மனது மடலேறித் திரிந்துகொண்டிருந்தது.

அவன் இப்போது அந்தப் பழைய நாட்குறிப்பை எடுத்து அதற்குக் கீழே இருந்த இடத்தில் இப்படி எழுதினான். "நாணொடு நல்லாண்மை பண்டுடையேன்... இன்று? அவளின் ஒரு சின்ன 'செய்திக்காக ஏங்கித் தவிக்கும் பிச்சைக்காரன்!"

எழுதி விட்டு அலைபேசித் திரையைப் பார்த்தான்.

கீழே சிறு எழுத்துக்களில் மிளிர்ந்தது, "Typing..." அவள்தான்.

அந்த மூன்று புள்ளிகள் குதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவனின் இதயத்துடிப்பு எகிறியது.

அவள் சாதாரணமாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும்.

"வேண்டாம்டா. நம் வழி தனித்தனி. பிரிஞ்சிடுவோம்."' என்று சொன்னால் போதும், அவன் மொத்தமாக உடைந்துபோய்விடுவான் என்பது அவனுக்கே புரிந்தது.

காதலில் எப்போதுமே ஒரு பலவீனமானவன் உண்டு. அந்தப் பலவீனத்தின் உச்சத்தில் இப்போது அவன் நின்றுகொண்டிருந்தான்.

இப்போது அவன் இதற்கு மேல் எதையும் யோசிக்கத் தயாராக இல்லை. அந்த "Typing..." செய்தியும் வந்தப் பாடாகத் தெரியவில்லை. அது வரப்  போவதாகவும் அவனுக்கு நம்பிக்கையில்லை.

அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

அவள் கோபம் குறைய வேண்டும். அவளது சிரித்த முகம் மீண்டும் தன் கண் முன்  தோன்ற வேண்டும்.

இதற்கு முன் அவனிடம் இருந்த மொத்த தன்முனைப்பும், ஆண்மையும் இப்போது ஒரு செப்புக்காசுக்குக் கூட பெறாது என்று அவனுக்குப் புரிந்துவிட்டது.

அவன் அலைபேசியை எடுத்தான்.

"எல்லாருக்கும் வணக்கம். நம் அலுவலக பொதுகுழுவில் இதைப் போடுவதற்கு எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. அவள் என்னை மன்னிக்கணும்ங்றதுக்காகத்தான இதை இங்கே போடுறேன். அவளோட மௌனத்தை என்னால தாங்க முடியல. காதலில் ஆண்மை என்பது அந்த ஆண்மையைத் தூக்கிப் போட்டு விட்டு மன்னிப்பு கேட்பதுதான். இது என்ன முட்டாள்தனம்ன்னு நீங்க கேட்கலாம்? ஆனா, வள்ளுவர் இப்படித்தான் சொல்றார்,

"நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல்."                           (குறள், 1133)

நான் மடலேற பனையோலை குதிரை கிடைக்கல. நம்ம குழுதான் கிடைச்சது. இதை நான் அவளுக்கே தனிப்பட்ட முறையில அனுப்பியிருக்காம்லன்னு நீங்க கேட்கலாம். ஆனா, எனக்குத் தெரியும். அப்பவும் அவள் என்னோட பேச மாட்டா. இப்போ பேசுவான்னு நினைக்கிறேன். அப்படியும் பேசலன்னா இந்தக் குழுவுல இருக்குற நீங்க எனக்காக அவகிட்டெ பேசி, அவள பேச வைப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு. என்னோட மானம் கப்பலேறிப் போறதுல எனக்கு எந்த கவலையோ, வருத்தமோ இல்ல, சந்தோசம்தான். இதை பொதுவான குழுவுல போட்டதுக்கு அவகிட்ட மன்னிப்பு கேட்குற மாதிரி உங்க எல்லார்கிட்டேயும் மறுபடியும் திரும்ப ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கிறேன்."

அவன் வாட்ஸ்ஆப்பின் அனுப்புகை பொத்தானைத் தொட்டான்.

அவன் நவீன முறையில் மடலேறி விட்டான்.

அடுத்த நொடி குழுவில் ஒரு நிசப்தம். யார் அந்தப் பெண் என்ற சலசலப்பு அந்தக் குழுவில் இருந்த ஒவ்வொருவர் மனதிலும் உண்டானது.

அதே நேரத்தில் அவளது அழைப்பு அவனுக்கு வந்தது. அழைப்பை ஏற்றான். "லூசாடா நீ? ஏன்டா இப்படி உன்னோட மானத்தையும் காத்துலு விட்டுட்டு, என்னோட மானத்தையும் வாங்குற. உடனே கிளம்பி நம்மாழ்வார் தேநீர் நிலையத்துக்கு வாடா!"

அவன் மூச்சை வெளியே விட்டான். அவனது உதடுகள் தாமாகவே ஒரு புன்னகையைச் சிந்தின.

அவன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான். "அந்தக் காலத்தில் மடலேறுவது தப்பில்லை. இந்தக் காலத்தில் வாட்ஸ்ஆப்பில் மானம் போவதில் தப்பில்லை. காதலில் அதுதான் உச்சம்!"

தன் அலைபேசியை முழுநீள கால்சிராய் பைக்குள் திணித்தபடி, இருசக்கர வாகனத்தை நோக்கி ஓடினான் அவன்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****