Showing posts with label ரீல்ஸ் ரத்தம் சினிமா. Show all posts
Showing posts with label ரீல்ஸ் ரத்தம் சினிமா. Show all posts

13 Aug 2026

ரீல்ஸ், ரத்தம், கொஞ்சம் சினிமா!

ரீல்ஸ், ரத்தம், கொஞ்சம் சினிமா!

ஒரு சுத்தியல், ஒரு கத்தி, கொஞ்சம் மது, அப்புறம் ஒரு ஸ்மார்ட்போன் என இவை போதும். இன்றைய மனிதனின் இருண்ட பக்கத்தை வைரல் கன்டென்ட் ஆக்குவதற்கு வேறு என்ன வேண்டும்?

கோவையில் நடந்த ஒரு சம்பவம் வெறும் ஒரு குற்றப்பின்னணிச் செய்தி மட்டுமல்ல; அது நமது காலத்தின் மிகக் கொடூரமான பண்பாட்டு வீழ்ச்சி.

திரையில் ஒரு கதாநாயகன் சுத்தியலால் அடித்து ரத்தத்தை ருசித்தால் அது மாஸ் மாஸ் என்று திரையரங்கில் சீழ்க்கை ஒலியாக மாறுகிறது. அதே காட்சியை நிஜத்தில் ஒரு மனிதனைக் கொன்று, ரத்தத்தை நக்கி, சடலத்தின் மீது நடனமாடி ரீல்ஸ் போட்டால் அது சைக்கோத்தனம் எனச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கிறது. ஆனால், இந்த இரண்டுக்கும் நடுவே இருந்த நிஜம் – புனைவு எனும் எல்லைக்கோடு இப்போது முற்றிலுமாக அழிந்துபோய்விட்டது.

இப்போது மனிதர்களுக்குக் கோபத்தை வெளிப்படுத்தவோ, பகையைத் தீர்த்துக்கொள்ளவோ பெரிய காரணங்கள் தேவையில்லை. நாலு பேர் பார்க்க வேண்டும் என்ற ரீல்ஸ் வெறியும், சில நூறு லைக்குகளும் கிடைத்தால் போதும், எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார்கள்.

கொலை செய்த பிறகு "தப்பு பண்ணி விட்டோமே" என்று பதறுவதற்குப் பதிலாக, "இதை எந்த ட்ரெண்டிங் பேக்ரவுண்ட் மியூசிக்குடன் எடிட் பண்ணலாம்?" என்று யோசிக்கும் நிலைக்கு மூளை மரத்துப் போய்விட்டது.

மது தலையில் ஏறும்போது விலங்குத்தனம் வெளிப்படும் என்பார்கள். ஆனால், அந்த மதுவோடு சேர்ந்து சோஷியல் மீடியா போதையும் சேரும்போது, மனிதன் மிருகமாகக்கூட மாறுவதில்லை; அதையும் தாண்டி கொடூரமாக மாறி விடுகிறான்.

சினிமா வன்முறையைக் கொண்டாடுகிறது, மக்கள் அதை அப்படியே நுகர்கிறார்கள். திரையில் பார்க்கும் கொடூரத்தை நிஜத்தில் செய்து பார்க்கத் தூண்டும் அளவுக்கு மனித மனங்கள் இவ்வளவு சலனப்படக்கூடியவையாகவா இருக்கின்றன? அல்லது, "எப்படிப் பிரபலமானாலும் பரவாயில்லை, வைரல் ஆனால் போதும்" என்ற நவீன மனநோய்க்கு மனித மனங்கள் அனைத்தும் பலியாகிவிட்டனவா?

ரத்தக் கறையுடன் கேமராவைப் பார்த்துச் சிரிக்கும் அந்த பிம்பம், இந்த டிஜிட்டல் சமூகம் உருவாக்கிய ஆகச்சிறந்த பிரம்மாண்டக் கண்ணாடி.

கலையை ரசிப்பதற்கும், அதை வெறியாக மாற்றுவதற்கும் இடையே இருந்த மெல்லிய கோட்டை மனிதர்கள் எப்போதோ தாண்டி விட்டார்கள். இனி கதறல்களும், குருதியும் கூட யாரோ ஒருவரின் டைம்லைனில் 15 செகண்ட் என்டர்டெயின்மென்ட் ஆக மாறினாலும் மாறக் கூடும்.

*****