Showing posts with label Mind Tower. Show all posts
Showing posts with label Mind Tower. Show all posts

18 Oct 2024

மன கோபுரங்கள்

மன கோபுரங்கள்

அசலான கேள்வியை எதிர்கொள்ளும் போது

உடைந்து போவீர்கள்

உங்கள் அழுகை உங்கள் பலவீனத்தைக் காட்டலாம்

அநேகமாக உறைந்து போதலும் நடக்கலாம்

உங்கள் மனம் வெடித்துச் சிதறியும் போகலாம்

துண்டு துண்டாகக் கிடக்கும் இதயத்தை

நீங்கள் பொறுக்கிக் கொண்டிருக்கலாம்

எதுவும் நடக்காது என்றும் சொல்ல முடியாது

எது நடக்கும் என்றும் சொல்ல முடியாது

ஒவ்வொன்றும் நடக்கும் போது

நீங்கள் ஒவ்வொரு மாதிரியாக வினையாற்றுவீர்கள்

எல்லா உதவியும் கிடைக்கும் போதும் தோற்றுப் போவீர்கள்

புத்திசாலித்தனமாகச் சிந்தித்துச் செயல்படும் போது

மிகப்பெரும் சறுக்கலை எதிர்கொள்வீர்கள்

என்ன செய்ய முடியும் உங்களால்

எல்லாவற்றையும் எதிர்கொள்வதைத் தவிர

ஒரு சிலவற்றிற்குக் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டதற்காக

எல்லாவற்றுக்கும் காரணத்தைத் தேடாதீர்கள்

முடங்குவதும் திமிரி எழுவதும் மாறி மாறி நடக்கும்

எல்லாம் துடைத்தெறியப்படும் போது

நீங்கள் புதிதாக முளைத்தெழுவீர்கள்

நம்பிக்கையோ அவநம்பிக்கையோ விசயமல்ல

வெறுமனே இருக்கையில் வெற்றிடத்தில்

பறவையைப் போல சிறகடித்துக் கொண்டிருப்பீர்கள்

எதில் மோதி விழுகிறீர்களோ

அது நீங்கள் எழுப்பிய மனகோபுரங்கள்

*****