Showing posts with label Poetic Pot. Show all posts
Showing posts with label Poetic Pot. Show all posts

16 Mar 2026

ஒளி பெறும் நிழற்படம்

ஒளி பெறும் நிழற்படம்

விடிந்த பின்

இருட்டுக்கு வேறு நிறம்

அஸ்தமனத்திற்குப் பின்

வெளிச்சத்திற்கு வேறு நிறம்

இரு முனையிலும் தீ

நடுவில் தொங்கும்

நூல் ஏணி வாழ்க்கை

இரண்டு புறமும்

அணையும் போது

நடுவில் பற்றிக் கொள்ளும்

தீப்பொறி மரணம்

இரண்டு பக்கமும் இழுக்க

நடுவில் இழுபடும்

நரம்பாகும் ஆயுள்

விளக்கை ஏற்ற

கவிகிறது நிழல்

ஒளிபெறுகிறது

நீத்தார் புகைப்படம்

*****

13 Mar 2026

இரவின் நிறம்

இரவின் நிறம்

வெளிச்சம் வேண்டுமெனக் கதறிய போது

இருள் வந்தது

இருளுக்குப் பழகிய பின்பு

வலிகள் வந்தன

வலிகளை ஏற்றுக் கொண்ட

ஒரு நாளில் சிரிப்பு பிறந்தது

இத்தனை நாளாய்

இந்தச் சிரிப்பே

நீ எங்கிருந்தாய் என்ற போது

வெளிச்சத்தைத் தேடி

இருளைத் தொலைத்த ஒவ்வொரு பொழுதிலும்

உன் நிழல் போல இருந்தேன் என்றது

அந்தச் சிரிப்பு

நிழலா என்ற போது

உன் மீது பட்ட

வெளிச்சத்தின் இரவு

என்றது சிரிப்பு

*****

தத்துவார்த்தமாக வாழ்தல்!

தத்துவார்த்தமாக வாழ்தல்!

நாயையோ பூனையையோ கண்டால்

அறவே பிடிக்காது அந்த இருவருக்கும்

அவ்வளவு பிடித்து

அப்படி வளர்த்த

மகனும் மகளும்

கைவிட்டுப் போன பிறகு

ஒரு பூனையை வளர்த்திருக்கலாம்

என்ற ஏக்கம்

அவர்களில் ஒருவருக்கு

வாக்கிங் போகையில்

கூடவே துணைக்கு வந்து திரும்பும்

தெருநாய்க்கு ஒரு ரொட்டியைப் போட்டிருக்கலாம்

என்ற குற்றவுணர்வு இன்னொருவருக்கு

என்ன இருந்தாலும்

பூனையையும் நாயையும் வளர்ப்பவர்கள்

அனாதைகளாவதில்லை என்று

அடிக்கடி தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

இப்போது கூட யாதொன்றையும்

வளர்க்கப் பிரியமில்லாத

அந்த இருவரும்

*****

ஏற்பின்மையின் தேடல்

ஏற்பின்மையின் தேடல்

உன்னை எங்கு எல்லாம் தேடுகிறேன்

முடிவில் களைத்துப் போகிறேன்

மீண்டும் தேடுகிறேன்

தேடிக் கொண்டே இருக்கிறேன்

நீ இல்லை

ஆனால் என் அருகில்தான் நீ இருக்கிறாய்

நான் தேடிக் கொண்டிருக்கும் நீயாக இல்லை

நான் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்

நான் ஏன் என் தேடலை நிறுத்திக் கொண்டு

அருகில் இருக்கும் உன்னை

அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது

இல்லாத ஒன்றை

இருக்கின்ற ஒன்றில் நான் ஏன் தேட வேண்டும்

*****

12 Mar 2026

எரியும் ஆவணக் காடு

எரியும் ஆவணக் காடு

ஒரு போர்

நிறுத்தப் போவது யார்

ஒரு யுத்தம்

முடிவுக்குக் கொண்டு வரப் போவது யார்

அமைதிக்கான பரிசைப்

போட்டியிட்டு

வெல்லப் போவது யார்

சமாதானத்துக்கான விருதைச்

சண்டையிட்டு வெல்லப் போவது யார்

எல்லாம் வரலாற்றுக்குத் தெரியும்

அந்த வரலாறு எங்கே இருக்கிறது

காகிதங்களில்

அந்தக் காகிதங்கள் எங்கே இருக்கின்றன

ஏவுகணை வீச்சில்

எல்லாம் எரிந்து கொண்டிருக்கிறன

*****

11 Mar 2026

மறதி கொண்டவன் நெஞ்சம் போல

எச்சரிக்கைப் பலகை

நாயொன்று

லோல்பட்டு லோன் போட்டு

வில்லங்கங்களை விலாசித் தள்ளி

அவஸ்தைப்பட்டு அப்ரூவ்டு மனை வாங்கி

வீடு கட்டி முன்னே ஒரு பலகை வைத்தது

“மனிதர்கள் ஜாக்கிரதை”

*****

கலியுக அன்னம்

பாலையும் தண்ணீரையும்

பிரித்துப் பருகும்

அன்னம்

இக்கலியுகம் வந்த பிறகு

பாக்கெட் பாலில்

பாலையும் ரசாயனத்தையும்

பிரித்துப் பருகிக் கொண்டிருக்கிறது

*****

மறதி கொண்டவன் நெஞ்சம் போல

பாஸ்வேர்ட் மறந்து

பர்கெட் பாஸ்வேர்ட் கொடுக்க

அது பாஸ்வேர்டை

இமெயிலுக்கு அனுப்ப

இமெயிலின் பாஸ்வேர்ட் மறந்தவன்

என்ன செய்வானோ

அதைத்தான் செய்கிறேன்

நான் செய்ய மறந்த வேலையை

உன்னிடம் சொல்லி

நீயும் மறந்து

அதே வேலை என்னிடம் வந்த போது!

*****