Showing posts with label இரத்தமும் தத்துவமும். Show all posts
Showing posts with label இரத்தமும் தத்துவமும். Show all posts

22 Jun 2026

இரத்தமும் தத்துவமும் – ஒரு போஸ்ட்மார்ட ரிப்போர்ட்!

இரத்தமும் தத்துவமும் – ஒரு போஸ்ட்மார்ட ரிப்போர்ட்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஹரித்துவாரில் நிகழ்ந்த, கஞ்சா நெடியடிக்கும் ஒரு கதையைக் குவாண்டம் இயற்பியல் தளத்திற்கு இட்டுச் சென்று, பிரம்ம சூத்திரத்தில் முடித்திருந்தார் ஜெயமோகன்.

இது ஜெயமோகனின் வழக்கமான ஹரித்துவார், சன்னியாசி, தாடி, உன்னதத்தனம் ஆகிய கூறுகளின் சேர்க்கை ஆகும். வாசிப்பதற்கு இது நன்றாகவே இருக்கிறது. காட்சிப்படுத்துதலில் அவர் எப்போதுமே வல்லவர். அந்த சோட்டா பாபா படிக்கட்டிலிருந்து விழுந்து கிடக்கும் காட்சி, ஒரு மிக நெருக்கமான ஒளிப்பதிவுக் காட்சி போன்றது. இரத்தம் குமிழியிடுவதும், விரல்கள் நடுங்குவதும் என உடற்கூறியல் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அங்கிருந்தே நம் படா பாபாவின் தத்துவார்த்த உரையாடல் தொடங்குகிறது.

ஐம்பது ஆண்டுக்காலத் தோழர் மண்டை உடைந்து இறந்து கிடக்கிறார். சுற்றிலும் மக்கள் கூச்சலிடுகிறார்கள். ஆனால், அவரோ எவ்விதச் சலனமுமின்றி கஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத்தான் ஜெயமோகன் பிரம்ம சூத்திரம் வரை கொண்டு சென்று, தத்து சமன்வயாத் அதாவது, அது சமநிலைப்புள்ளியில் உள்ளது என்று இயற்பியல் தளத்தோடு தொடர்புபடுத்துகிறார்.

இதன் தொடக்கமே அதிரடியானது. தாடி வளர்த்து, அழுக்குத் துணியணிந்து, எதையும் கவனிக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால், நம் ஊரில் உடனே அவரைச் சாமி ஆக்கிவிடுவார்கள். அதை நாற்பது ஆண்டுகள் கழித்து ஜெயமோகன் மனச்சோர்வு என்னும் மருத்துவக் கலைச்சொல்லால் புரிந்து கொண்டதற்கு ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

ஆனால், அங்கிருந்த பிச்சைக்காரர்கள் நடைமுறை அறிவு  உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். துறவிகளுக்காக அவர்கள் பிச்சை எடுப்பதும், பிச்சைக்காரர்கள் தங்களைத் துறவிகள் என்று கூறிக் கொள்வதும் என, மியூச்சுவல் பண்ட் போன்ற ஒரு கூட்டுப் பிச்சை வணிகம் அங்கு நடந்திருக்கிறது.

படா பாபா, சோட்டா பாபா என்ற அந்த எழுபது வயதைக் கடந்த இரு முதியவர்கள். ஒருவர் கஞ்சா சுருட்டு தயாரிப்பது, மற்றொருவர் அதனை இழுப்பது; இருவருக்குள்ளும் ஒரு வார்த்தை கூடப் பரிமாறப்படுவதில்லை.

சாதாரண மனிதர்கள் இதைப் பார்த்தால், “இருவரும் போதையில் பேசக்கூட முடியாத அளவிற்கு மயங்கிக் கிடக்கிறார்கள்” என்றுதான் நினைப்பார்கள். ஆனால் ஜெயமோகனோ அதனை, "வார்த்தைகள் தேவையற்ற உன்னத உடல்மொழி" என்று மிகைப்படுத்துகிறார். இதனை எப்படி ஏற்றுக் கொள்வது என்று புரியவில்லை.

கதையின் மிகச்சிறந்த பரபரப்பான காட்சி என்பது நாம் ஆரம்பத்தில் பார்த்த சோட்டா பாபா மேலிருந்து விழுந்து, கழுத்து முறிந்து, மண்டை பிளந்து இரத்த வெள்ளத்தில் கிடப்பதுதான். கைவிரல்கள் துடிக்கின்றன. சுற்றியிருக்கும் சுற்றுலாப் பயணிகள், திரையரங்கில் படம் பார்ப்பதைப் போல வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களுக்கு அது நேரடித் திரைப்படம்!

நமது படா பாபா என்ன செய்கிறார்? "அவன் இறந்தால் எனக்கென்ன" என்ற அலட்சியத்துடன் அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜெயமோகன் நியாயமான கோபத்துடன், "மனிதனா நீ? கூட இருந்தவன் இறந்து கிடக்கிறான்!" என்று கத்துகிறார். அதற்கு அந்த முதியவர் கூறும் ஆன்மீக வசனம் இதோ:

"துறவிகள் ஈம காரியம் செய்யக் கூடாது. கடமையைத் துறப்பதுதான் துறவு."

உண்மையைக் கூறின், நிஜ உலகத்தில் ஒருவன் தன்னுடன் ஐம்பது ஆண்டுகள் இருந்தவன் இறந்து கிடக்கும்போது, வருத்தப்படாமல் கஞ்சா தயாரித்துக் கொண்டிருந்தால், அவனைச் சைக்கோபாத்  அல்லது போதையில் அறிவு இழந்தவன் என்று கூறி மனநல மருத்துவமனையில் சேர்ப்பார்கள். ஆனால், அதுவே ஹரித்துவாரில் நடந்தால் அதற்குப் பெயர் ஜீவன்முக்தித்தனம்! அது போதாதென்று கேரளாவிலிருந்து வந்த மற்றொரு சாமி, "அவர் தன் இறப்பிற்கே அஞ்சவில்லை, பிறகு ஏன் அடுத்தவர் இறப்பிற்கு அழ வேண்டும்?" என்று அதற்கு ஓர் உளவியல் முட்டுக் கொடுக்கிறார்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதன் இறக்கும்போது பதறுவது, அவனிடமிருந்து கைமாறு எதிர்பார்ப்பதால் அல்ல; அது மனித மூளையின் மிரர் நியூரான்கள் செய்யும் வேலை. சக உயிரியின் வலியைப் பிரதிபலிப்பது இயற்கையின் பரிணாம விதி. அதை அட்டாச்மென்ட், ஈகோ என்று தத்துவ முலாம் பூசுவது அநியாயமானது.

படா பாபா கூறுவது இன்னும் விசித்திரம். அவர் சொல்கிறர், “நான் விழுந்திருந்தாலும் அவன் இப்படித்தான் இருந்திருப்பான். அதனால்தான் அவனுடன் நெருக்கமாக இருந்தேன்.”

இதன் கணக்கு மிக எளிமையானது. இருவருமே அபாதி என்னும் தீவிரமான மன உறைவு நிலையை ஞானம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கஞ்சா கொடுக்கும் டோபமைன் சுரப்பால், மூளையின் உணர்ச்சிப் பகுதிகள் செயலிழந்து போவதை நாம் ஏன் ஆன்மீகச் சமநிலை என்று கொண்டாட வேண்டும்?

இறுதியாக எல்லாவற்றையும் எங்கு இணைக்கிறார் ஜெயமோகன்? பாதராயணரின் 'பிரம்ம சூத்திரம்'—'தத்து சமன்வயாத்.' அதாவது, படா பாபா அன்று காட்டிய அந்த அராஜகமான அலட்சியம்தான் பிரபஞ்சத்தின் சமநிலையாம்! அணுவிற்குள் இருக்கும் எலக்ட்ரானும் புரோட்டானும் சமநிலை அடைவதைப் போல, சோட்டா பாபா இறப்பதும் படா பாபா கஞ்சா இழுப்பதும் சமநிலை அடைகிறதாம்.

ஜெயமோகன் பிரம்ம சூத்திரத்தை நவீன இயற்பியலோடு ஒப்பிடுவது சுவாரஸ்யமானது. “நுண்துகள்களுக்கு நடுவே உள்ள மின்னூட்டத்தின் சமநிலையே இப்பிரபஞ்சம்.” என்கிறார்.

அண்டவெளியில் சூப்பர்நோவா வெடித்துச் சிதறும்போது பேரண்டம் அமைதியாக வேடிக்கை பார்ப்பதும் உண்மைதான். ஏதேனும் ஒரு விண்கல் பூமியில் மோதி மனித இனமே அழிந்தால் கூடப் பிரபஞ்சத்தின் சமநிலை மாறப்போவதில்லை. ஆனால், நாம் அண்டவெளித் தூசிகள் அல்லவே! நமக்கு நரம்பு மண்டலம் இருக்கிறது; வலி இருக்கிறது.

எந்தவொரு ஆன்மீகக் கட்டுரையும் நவீன அறிவியலுடனும், இயற்பியலுடனும் தொடர்புபடுத்தி எழுதப்படவில்லை என்றால் இன்றைய வாசகர்களிடம் மதிப்பு இருக்காது என்பது ஜெயமோகனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

நம் ஊர் ஆன்மீகத்தின் ஆகப்பெரிய வசதியே இதுதான். நமக்கு ஒருவன் மீது கடுமையான கோபமும் சீற்றமும் வரும்; அவனை அடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், நாம் கோழையாக இருப்பதாலோ அல்லது சட்டத்திற்குப் பயந்தோ அதைச் செய்ய மாட்டோம்.

பல ஆண்டுகள் கழித்து ஏதோ ஒரு பழைய புத்தகத்தில் இருக்கும் வரியைப் படித்துவிட்டு, "அன்று அவன் செய்த அயோக்கியத்தனமும், நான் காட்டிய கோழைத்தனமும் பிரபஞ்சத்தின் சமநிலைப்புள்ளி ஆகும்" என்று தத்துவ மசாலா தடவி நமக்கு நாமே சமாதானம் கூறிக் கொள்வோம்.

இதன் மிகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், அடுத்த முறை சாலையில் யாராவது விபத்தில் சிக்கிக் கிடக்கும்போது உதவாமல், கஞ்சா புகைத்துக் கொண்டு கடந்து சென்றால், நாம் "தத்து சமன்வயாத்" என்று கூறிவிட்டுச் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.

உலகில் எல்லாவற்றையும் சமநிலை செய்கிறேன் என்று கூறிச் சுடுகாட்டு அமைதியை நோக்கிப் போவது ஞானமல்ல; அது ஒரு வகையான பித்தலாட்ட தப்பியோட்டம்.

“எல்லாம் சரியாகிவிடும், ஒன்று போனால் இன்னொன்று வரும்” என்று பாமர மக்கள் கூறும் ஆறுதலில் இருக்கும் ஈரப்பதம் கூட, பிரம்ம சூத்திரம் பேசும் அந்தப் படா பாபாவின் கஞ்சா புகையில் இல்லை.

நெருக்கடி நேரத்தில் உதவாத சமநிலை என்பது, வெறும் ஜடப்பொருள் நிலையே ஆகும்.

*****