31 May 2026

காந்தி – அவசரகால நண்பர்!

காந்தி – அவசரகால நண்பர்!

அன்று காலை, அஜாத்தியன் ஊருக்குப் புறப்பட பஸ் ஸ்டாண்டிற்கு வந்திருந்தார். அவரிடம் இரண்டு ஆயுதங்கள் இருந்தன. ஒன்று, அரசாங்கம் வழங்கிய சீனியர் சிட்டிசன் இலவசப் பேருந்து பாஸ். இரண்டு, உலகத்தையே ஆளும் 5G மொபைல் போன்.

இனி இந்த ஜென்மத்தில் ரொக்கப் பணம் தேவையில்லை, என்ற தத்துவ ஞானத்தோடு பஸ்ஸில் ஏறி ஜன்னலோர சீட்டில் அமர்ந்தார்.

பஸ் கிளம்பியது. நடத்துனர் விசில் ஊதிக்கொண்டே டிக்கெட் கேட்டு அவரிடம் வந்தார்.

அஜாத்தியன் மிகக் கம்பீரமாக, பாஸ் இருக்குப்பா என்றார்.

பாஸைக் காட்டுங்க ஐயா, என்றார் நடத்துனர். அவரது குரலில் அன்றாட வாழ்க்கையின் சலிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

அஜாத்தியன் தன் பையைத் துலாவிப்பார்த்தார். சட்டப் பை, பேண்ட் பை, பையின் உள் அடுக்கு என எல்லாவற்றையும் தேடினார். அப்போதுதான் அந்தப் பேராபத்து உறைத்தது. அவசரத்திலும் பதற்றத்திலும் சீனியர் சிட்டிசன் கார்டை வீட்டின் டைனிங் டேபிளிலேயே மறந்து வைத்துவிட்டு வந்திருந்தார்.

தம்பி, கார்டை வீட்ல வச்சிட்டு வந்துட்டேன். பரவாயில்லை, டிக்கெட் எடுத்துக்கிறேன், என்று சிரித்தபடியே தன் மொபைல் போனை எடுத்து க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யப் போனார்.

அங்கிருந்த பிரபஞ்சத்தின் அதிபதி லேசாகப் புன்னகைத்தான்.

மொபைல் திரையின் மூளையில் நோ நெட்வோர்க் மற்றும் E என்ற அட்சரங்கள் தோன்றி மறைந்தன. நெட்வொர்க் சிக்னல், ஞானம் பெற்ற முனிவரைப் போல உலக பந்தங்களில் இருந்து முற்றிலுமாக விடுபட்டிருந்தது. மொபைல் செயலி சுழன்று கொண்டே இருந்ததே தவிர, பணம் பரிமாறப்படவே இல்லை.

தம்பி, நெட்வொர்க் கிடைக்கலப்பா. கொஞ்சம் பொறு, என்றார் அஜாத்தியன், நெற்றியில் வியர்வை அரும்ப.

ஐயா, இது கவர்ன்மென்ட் பஸ். நெட்வொர்க்குக்காகப் பஸ்ஸை நிறுத்த முடியாது. கையில் காசு இருந்தா கொடுங்க, இல்லாட்டி அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்குங்க, என்றார் நடத்துனர், எந்தவித தத்துவார்த்த சமரசமும் இன்றி.

அஜாத்தியனிடம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கையாளும் டிஜிட்டல் செயலிகள் இருந்தன. ஆனால், நடத்துனர் கேட்ட ஐந்து ரூபாய் இல்லை.

தொழில்நுட்பம் என்பது எவ்வளவு பெரிய மாயை! எலக்ட்ரான்களின் ஓட்டத்தை நம்பி மனிதன் தன் கால்களை நகர்த்திக் கொண்டிருக்கிறான். அந்த எலக்ட்ரான்கள் சோம்பேறித்தனம் பட்டு நின்றால், மனிதன் நடுவழியில் நிற்க வேண்டும்.

இரண்டு ஸ்டாப்பிங் தள்ளிய ஒரு வெறிச்சோடிய இடத்தில் பஸ் நின்றது. அஜாத்தியன்  தன் மொபைல் போனைப் பைக்குள் திணித்துவிட்டு, பஸ்ஸை விட்டு இறங்கினார்.

அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பும் அந்த நீண்ட பாதயாத்திரையில்தான் அவருக்கு உண்மையான தத்துவ ஞானம் பிறந்தது. சுட்டெரிக்கும் வெயிலில், தன் சொந்தக் கால்களையே நம்பி அவர் நடந்து கொண்டிருந்தார்.

நீங்கள் அம்பானியாகவே இருந்தாலும், உங்களுக்காகச் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்தாலும், உங்கள் போனில் லட்ச ரூபாய் பணம் இருந்தாலும் நெட்வொர்க் இல்லாத ஒரு கிராமத்துச் சாலையில், நடத்துனரின் கையில் இருக்கும் அந்த அழுக்கான ஐந்து ரூபாய் நாணயம்தான் அதிபதி.

தொழில்நுட்பம் என்பது ஓர் அழகான காதலி போன்றது. தேவைப்படும்போது அது நாட் ரீச்சபிள் ஆகிவிடும்.

அஜாத்தியன் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, டைனிங் டேபிளில் அந்தப் பேருந்து பாஸும், அதன் அருகில் ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றும் இவரைப் பார்த்துப் பல்லிளித்தன.

அன்று முதல், அவர் வெளியே செல்லும்போது மொபைலை மறந்தாலும் மறக்கிறாரே தவிர, அவசரத் தேவைக்காக ஒரு நூறு ரூபாய் நோட்டைத் தன் பையின் ரகசிய அடுக்கில் மடித்து வைத்துக் கொள்ள மறப்பதே இல்லை.

ஏனென்றால், ரூபாய் நோட்டில் புன்னகைக்கும் காந்தியை விடச் சிறந்ததொரு அவசரக் கால நண்பன் இந்த டிஜிட்டல் யுகத்திலும் வேறு யாருமில்லை!

*****

30 May 2026

தியாகி, நிர்வாகி மற்றும் வியாபாரி – இயக்கங்களின் மரண வாக்குமூலம்!

தியாகி, நிர்வாகி மற்றும் வியாபாரி –

இயக்கங்களின்  மரண வாக்குமூலம்!

இயக்கங்கள் என்பவை ரயில்களைப் போன்றவை. தொடக்கத்தில் அவை எஞ்சின் சூடாக, கரும்புகை கக்க, லட்சியப் பாதையில் தடம் புரளாமல் ஓடப் பார்க்கும். இறுதியில் அவை ஒரு பழைய இரும்புக்கடையில் ஸ்கிராப் ஆகி, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏசி அறைகளில் அலங்காரப் பொருளாக வைக்கப்படும். இந்த மாற்றத்தை வரலாற்று ரீதியாக இப்படிப் பார்க்கலாம்.

இயக்கங்களின் தொடக்கக் கட்டத்தில் இருப்பவர்களுக்குக் கொள்கைதான் சோறு. உண்மையில் இவர்களுக்குச் சோறு கிடைக்காததால்தான் கொள்கையே சோறாகிறது. இவர்களின் அடையாளங்கள் என்பவை தாடி, அழுக்குச் சட்டை, கையில் ஒரு பை, இதயத்தில் ஒரு லட்சியம்.

இவர்கள் அதிகாரம் ஒரு சாக்கடை என்பார்கள். சாக்கடையைச் சுத்தம் செய்யப் போகிறேன் என்று சொல்லி இறங்குவார்கள்.

இவர்கள் எந்த அரசுப் பதவிக்கும் வரமாட்டார்கள். ஏனென்றால், இவர்களுக்குப் பதவி கொடுக்கும் அளவுக்கு அந்த அரசுக்குத் தைரியம் இருக்காது, இவர்களுக்குப் பதவி வாங்கும் அளவுக்குப் புத்திசாலித்தனமும் இருக்காது. இவர்கள் வரலாற்றில் தியாகிகள் என்று அழைக்கப்பட்டு, அடுத்த கட்டத் தலைவர்களால் மாலை போடப் பயன்படுத்தப்படுவார்கள்.

முதல் கட்டத் தலைவர்கள் நட்டு வைத்த மரத்தில் பழம் பழுக்கும்போது, இரண்டாம் கட்டத் தலைவர்கள் வருவார்கள். இவர்களுக்குக் கொள்கை முக்கியம்தான், ஆனா பசிக்குமே? என்று யோசிப்பவர்கள்.

இவர்களின் அடையாளங்கள் இஸ்திரி செய்த சட்டை, கையில் வாட்ச், முகத்தில் ஒரு ராஜதந்திரப் புன்னகை.

கொள்கையை நூறு சதவீதம் கடைப்பிடித்தால் மக்களால் வாழ முடியாது, எனவே அதை 40 சதவீதமாகக் குறைத்துவிட்டு, மீதி 60 சதவீதத்தை நடைமுறைச் சாத்தியங்களோடு கலப்போம் என்பார்கள் இவர்கள்.

இவர்கள் ஆட்சியில் அமர்வார்கள். ரத்தமும் சதையுமான மனிதர்களுக்குச் சில நன்மைகளைச் செய்வார்கள். ஆனால், அந்த நன்மைகளுக்கான விலையாகத் தங்கள் கொள்கையின் ஆன்மாவைச் கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைக்கத் தொடங்குவார்கள்.

இதற்கு அடுத்த இறுதி கட்டம்தான் சுவாரசியமானது. இப்போது இயக்கம் என்பது ஒரு மல்டி நேஷனல் கம்பெனி ஆகியிருக்கும்.. இங்கே தலைவர்கள் பிறப்பதில்லை, அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் அல்லது வாரிசு அடிப்படையில் தரவிறக்கம் செய்யப்படுகிறார்கள்.

இவர்களின் அடையாளங்கள் லேப்டாப், பவர் பாயிண்ட் பிரசன்டேஷன், ஐந்தடுக்கு பாதுகாப்பு, மற்றும் கன்சல்டன்ட் என்று சொல்லப்படும் விலை உயர்ந்த அறிவுரையாளர்கள்.

மக்களுக்கு என்ன தேவை என்பதை விட, எதைச் செய்தால் பெரிய பட்ஜெட்டில் புராஜெக்ட் போடலாம்? என்பதுதான் இவர்களின் கவலை.

இயக்கத்தின் பழைய கொள்கைகள் இப்போது டிஜிட்டல் திரைகளில் ஸ்லோகன்களாக மட்டுமே மின்னும். அடிமட்டத் தொண்டன் வாசலில் நிற்க, பினாமி நிறுவனங்களின் முதலாளிகள் ஏசி அறையில் அமர்ந்து டெண்டர் எடுப்பார்கள்.

கொள்கை என்பது இப்போது ஒரு பிராண்டிங் மட்டுமே. ஒரு காலத்தில் அதிகாரம் ஒரு சாக்கடை என்று சொன்ன இயக்கத்தின் வாரிசுகள், இப்போது அந்தச் சாக்கடையிலேயே நீச்சல் குளம் கட்டி, அதில் மினரல் வாட்டர் நிரப்பி விளையாடுவார்கள்.

இது ஒரு சுழற்சி. மதம், அரசியல், கார்ப்பரேட் என எதை எடுத்தாலும் இதுதான் விதி.

இதில் வேடிக்கை என்னவென்றால், கடைசிக் கட்டத்தில் இருப்பவர்கள் இப்போதும் முதல் கட்டத் தியாகிகளின் படத்தைப் போட்டுத்தான் லாப வேட்டையாடுவார்கள். தியாகிகள் சிலையாக இருப்பதால்தான் அமைதியாக இருக்கிறார்கள். ஒருவேளை உயிர் பெற்று வந்தால், மீண்டும் முதல் கட்டப் போராட்டத்தையே தன் இயக்கத்திற்கு எதிராகத் தொடங்க வேண்டியிருக்கும்.

ஆக ஒர் இயக்கம் எப்போது முழுமையாகச் சீரழிந்துவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால், எப்போது அந்த இயக்கத்தின் கொள்கையைப் புரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு கன்சல்டன்ட் தேவைப்படுகிறாரோ, அப்போதே அது செத்துவிட்டது என்று அர்த்தம்.

*****

29 May 2026

தூக்கி எறிதலின் தத்துவம்!

தூக்கி எறிதலின் தத்துவம்!

உலகம் ஒரு பெரிய குப்பைத் தொட்டி. நாம் அதன் கௌரவமிக்க விநியோகஸ்தர்கள்.

முன்பெல்லாம் எழுதுகோலில் மை தீர்ந்தால், பத்து காசுக்கு மை வாங்கி ஊற்றி, விரல் முழுக்க நீல நிறத்தை அப்பிக்கொண்டு அலைவதில் ஒரு கலை அம்சம் இருந்தது. இன்று பத்து ரூபாய் பேனாவில் மை தீர்ந்தால், அதை ஒரு கணம் கூடத் திரும்பிப் பார்க்காமல் அதை யூஸ் அன்ட் த்ரோ பார்ட்டியாக்கி விட்டார்கள்.

ஏன்?

நேரமில்லையாம்.

ஒரு பேனாவைத் திறந்து ரீபிள் மாற்ற நேரமில்லாத மக்கள், அடுத்த ஒரு மணி நேரத்தை ரீல்ஸ் பார்த்து நேரத்தைத் தொலைக்கக் காத்திருக்கிறார்கள் என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் நகை முரண்.

கடைக்குச் செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்வது கௌரவக் குறைச்சல் என்று நாம் நினைக்கத் தொடங்கியதிலிருந்து, நம் வீடுகள் நெகிழிப் பைகளின் குடோன்களாக மாறிவிட்டன.

அடுக்குமாடி குடியிருப்புகள் இன்று குப்பை உற்பத்திக் கூடங்கள். ஒரு வாரத்தில் ஒரு டன் குப்பை.

நாம் எதைச் சேமிக்கிறோமோ இல்லையோ, கழிவுகளை மிகச் சரியாகச் சேமித்து இயற்கைக்குத் தானம் செய்கிறோம்.

அந்தக் காலத்தில் ஒரு மேஜை வாங்கினால், அது மூன்று தலைமுறைகளுக்குத் தாங்கும். இன்று வாங்கும் பிளாஸ்டிக் நாற்காலி, உட்காருபவரின் எடையைப் பொறுத்து எப்போது உடையலாம்? என்று தவம் இருக்கிறது. உடைந்தால் என்ன? தூக்கி எறிவோம். புதியது வாங்குவோம். இதுவே இன்றைய தத்துவமாக இருக்கிறது.

கைப்பேசிகளும் அப்படித்தான். ஒரு சின்னக் கீறல் விழுந்தால், அதைச் சரி செய்யத் தோன்றுவதில்லை. பழுது நீக்குபவரைத் தேடுவதை விட, புதிய மாடல் வாங்குவது சுலபம் என்கிறது சந்தை.

பண்டிகை வந்தால் துணி எடுக்கிறோமோ இல்லையோ, புதிய மொபைல் போன் எடுத்து பழையதை மின் கழிவாக மாற்றுகிறோம்.

பழுது நீக்கும் கடைகள் குறைந்து வருவது தற்செயலானது அல்ல. எதையும் சரி செய்யாதீர்கள், புதிதாக வாங்குங்கள் என்று நம் காதுக்குள் ஓயாமல் ஓதிக் கொண்டிருக்கிறார்கள் சந்தை நுகர்வு கலாச்சாரவாதிகள்.

மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டது என்பது எவ்வளவு அழகான பொய்! உண்மையில் நம்மை நுகர்வுப் பசிகொண்ட இயந்திரங்களாக மாற்றியிருக்கிறார்கள்.

ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் விதையை மண்ணில் வீசுவது நன்றிக்கடன். ஆனால், நாம் அதையும் குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். ஏனெனில், தூக்கி எறிதல் என்பது இப்போது நம் தசை நார்களில் ஊறிப்போன ஒரு கருத்தியல்.

பொருட்களைத் தூக்கி எறியும் இதே மனநிலை மெல்ல மெல்ல உறவுகளிலும் ஊடுருவுகிறது. ஒரு சின்ன விரிசல் விழுந்தால், ஒரு சின்னப் புரிதல் குறைந்தால், உறவுகளைச் சரி செய்ய யாருக்கும் பொறுமையில்லை.

அடுத்தது யார்? என்று தேடும் யூஸ் அண்ட் த்ரோ கலாசாரம் மனிதர்களையும் விட்டு வைக்கவில்லை.

தத்துவம் என்ன சொல்கிறது?

பூமியில் நாம் எதையும் புதிதாகப் படைக்கவில்லை. ஒன்று இன்னொன்றாக மாறுகிறது, அவ்வளவுதான். இந்தச் சுழற்சியை உடைத்து, எல்லாவற்றையும் கழிவாக மாற்றுவது தற்கொலைக்குச் சமம்.

மறுசுழற்சி என்பது ஏதோ ஒரு சட்டம் அல்ல. அது ஒரு மனநிலை. எதையும் தூக்கி எறியும் முன் யோசியுங்கள். ஒருவேளை நீங்கள் எறிவது ஒரு பொருளை மட்டுமல்ல, உங்கள் மனிதத்தையுமாக இருக்கலாம்.

*****

28 May 2026

அரசுப் பள்ளிகளின் இருத்தலியல் சிக்கல்!

அரசுப் பள்ளிகளின் இருத்தலியல் சிக்கல்!

கல்வி என்பது ஓர் ஏணி என்று சொன்னால், அந்த ஏணி எந்த மரத்தில் செய்யப்பட்டது என்பதில் தான் இந்தியச் சமூகம் குறியாக இருக்கிறது. அரசு மரம் என்றால் அலர்ஜி, தனியார் மரம் என்றால் பக்தி.

அரசுப் பள்ளிகள் என்பவை தெய்வங்களைப் போன்றவை. எல்லோரும் அவற்றைக் கும்பிடுவார்கள், வாழ்த்துக் கட்டுரை எழுதுவார்கள். ஆனால் யாரும் அங்கே குடியிருக்க அதாவது பிள்ளைகளைச் சேர்க்க விரும்புவதில்லை.

இந்தியாவில் 89,441 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது ஒரு பெரிய விவாதமாகவே மாறவில்லை என்பதுதான் ஆகச்சிறந்த தத்துவம்.

அரசுப் பள்ளியில் படித்தால்தான் அப்துல் கலாம் ஆக முடியும் என்று மேடையில் முழங்குபவர்கள், தன் பிள்ளையை அப்துல் கலாம் ஆக்காமல், அமெரிக்காவுக்கு அனுப்பவே விரும்புகிறார்கள்.

நாம் தமிழைத் தாய் என்கிறோம், ஆனால் ஆங்கிலத்தைத்தான் பாஸ் என்கிறோம். தமிழ் வழியில் படிப்பவனுக்கு ஆங்கிலம் பிணக்கு, ஆங்கில வழியில் படிப்பவனுக்குத் தமிழ் ஒரு வழக்கு.

உண்மையில், ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் தாய்மொழியில் படித்து முன்னேறுகின்றன. ஆனால் இந்தியாவிலோ, ஆங்கிலம் என்பது ஓர் அறிவு அல்ல, அது ஒரு தகுதிச் சான்றிதழ்.

அரசுப் பள்ளிகள் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மாணவர்கள் வருவார்கள் என்பது, கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி தடுக்கிறார் என்கிற கதையல்ல, பூசாரி வரம் கொடுத்தால்தான் சாமிக்கே மரியாதை என்கிற நிலை.

சீனா ஒரு மாணவனுக்கு 17,000 டாலர் செலவு செய்கிறது. இந்தியா 260 டாலர். இந்த இடைவெளிதான் அரசுப் பள்ளியின் கழிப்பறைக்கும், தனியார் பள்ளியின் ஏசி அறைக்கும் உள்ள வித்தியாசம்.

குறைந்த செலவில் அதிகத் தரம் வேண்டும் என்று எதிர்பார்ப்பது, மிதிவண்டி விலையில் ராக்கெட் வாங்குவதற்குச் சமம்.

அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒதுக்கும் நிதியில் எவ்வளவு சுவரில் ஒட்டுகிறது, எவ்வளவு அறிவில் ஒட்டுகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அரசு, ஆசிரியர்கள், பெற்றோர் என ஒரு பட்டாளமே உழைக்க வேண்டும்.

வெற்றியின் முதல்படி பள்ளிக்கல்வி என்பது உண்மையானால், அந்தப் படி வழுக்காமல் இருப்பதை உறுதி செய்வதுதான் சமூக நீதி. இல்லையென்றால், அரசுப் பள்ளிகள் என்பது வெறும் புள்ளி விவரங்களில் மட்டும் புள்ளிகளாக மட்டுமே எஞ்சியிருக்கும்.

கல்வி என்பது இருளை நீக்குவது அல்ல, வெளிச்சத்தில் எங்கே குழிகள் இருக்கின்றன என்று அடையாளம் காட்டுவதுதான். அரசுப் பள்ளிகள் அந்தக் குழிகளை மூடட்டும்!

*****

27 May 2026

கோடீஸ்வரக் காலமும் பிச்சைக்காரக் கோலமும்!

கோடீஸ்வரக் காலமும் பிச்சைக்காரக் கோலமும்!

சுஷில் குமார் என்று ஒரு மனிதர். 2011 இல் பீகாரின் மோதிஹாரிலிருந்து கிளம்பி வந்து அமிதாப் பச்சனின் முன்னால் அமர்ந்தார். ஐந்து கோடி ரூபாயை வென்றார். இந்தியாவே அவரைத் தலையில் தூக்கிக் கொண்டாடியது.

ஆனால், இன்று? அவர் ஒரு பள்ளி ஆசிரியர். இடையில் குடிப்பழக்கம், திவாலான நிலை என நரகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

பணம் என்பது ஒரு விசித்திரமான மிருகம். அதை எப்படி மேய்க்க வேண்டும் என்று தெரியாதவனுக்கு, அது புலியாக மாறி அவனையே தின்றுவிடும் என்பதற்கு சுஷில் குமார் ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.

திடீர் பணக்காரர்களிடம் ஒரு பொதுவான குணம் உண்டு. பணம் வந்துவிட்டது, இனி மூளை எதற்கு? என்று நினைப்பதுதான் அது.

கைவசம் இருக்கும் பணம் எப்போதும் தீராது என்கிற அறியாமைதான் வீழ்ச்சியின் முதல் படி.

ஒரு குடத்தில் ஓட்டை இருந்தால், அதில் நீங்கள் கங்கையைத் திருப்பினாலும் குடம் நிறையாது.

ஆறாயிரம் ரூபாய் சம்பாதிக்கும்போது இருந்த அதே ஆசைகள், கையில் ஐந்து கோடி வந்ததும் அப்கிரேட் ஆகின்றன. சொகுசு கார், விலையுயர்ந்த வீடு, தேவையற்ற ஆடம்பரம் என இவை எதற்கும் முடிவே இல்லை.

வருமானத்தைப் பெருக்காமல், வாழ்வாதாரத்தின் தரத்தை மட்டும் உயர்த்திக்கொண்டே போனால், ஒரு கட்டத்தில் வாழ்க்கைத்தரம் மேலே இருக்கும், வங்கிக் கணக்கு பாதாளத்தில் இருக்கும்.

பணத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்று வரும் நபர்கள், உண்மையில் உங்கள் பணத்தை காணாமல் போகச் செய்யும் மந்திரவாதிகள். நிதியறிவு இல்லாதவர்கள் இவர்களிடம் சிக்கி, ரிஸ்க் என்கிற பெயரில் மொத்தப் பணத்தையும் சூதாட்டத்தில் விடுவது போல இழக்கிறார்கள். பேராசை இருக்கும் இடத்தில் புத்தி வேலை செய்யாது.

சமூகத்தின் கண்களில் பெரிய ஆளாகத் தெரிய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதே, அதுதான் பலரை அழித்திருக்கிறது. உறவினர்களுக்கு வாரி வழங்குவது, நண்பர்களுக்கு விருந்து வைப்பது என கர்ண வேடம் போடும்போது, உங்கள் பணப்பை மெல்ல மெல்லக் கிழியத் தொடங்குகிறது.

பணம் என்பது உங்கள் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு, அது அடுத்தவர் முன் நீங்கள் காட்டும் அலங்காரப் பொருள் அல்ல.

ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி, அதை முப்பதாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடுவது என்பது, யானை வாங்கி அதற்குத் தீனி போட காசைச் செலவழிப்பது போன்றது. இது லாபமல்ல, ஒரு வகையான ஆடம்பர நஷ்டம். வாடகை வருமானம் என்பது முதலீட்டில் வெறும் 3.6 சதவீதம் என்பதால், அந்தப் பணத்தை வங்கியில் போட்டிருந்தால் கூட கூடுதல் வட்டி கிடைத்திருக்கும்.

வாழ்க்கை என்பது லாட்டரி அல்ல, அது ஒரு நீண்ட தூர ஓட்டம். திடீரெனப் பணம் கிடைப்பது ஒரு விபத்து. அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் தவம்.

மழை அடிக்கும் முன் குடை பிடிப்பது புத்திசாலித்தனம்.

பசிக்குச் சாப்பிடுங்கள், ருசிக்காக உங்கள் வாழ்க்கையைச் சாப்பிடாதீர்கள்.

எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள். கூடை விழுந்தால் எல்லாம் உடையும்.

தெரியாத பாதையில் போகும்போது வழி கேட்பது இழிவு அல்ல, அதுதான் அறிவு.

பணம் உங்கள் வாழ்க்கையை மாற்றாது. உங்கள் புத்திதான் உங்கள் வாழ்க்கையை மாற்றும். பணம் என்பது ஒரு கருவி மட்டுமே. அதைச் சுத்தியலாகப் பயன்படுத்தி வாழ்க்கையைச் செதுக்கப் போகிறீர்களா, அல்லது அதே சுத்தியலால் உங்கள் தலையிலேயே அடித்துக்கொள்ளப் போகிறீர்களா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

இறுதியில், சுஷில் குமார் இன்று ஓர் ஆசிரியர். அவர் பணத்தை இழந்தார், ஆனால் வாழ்வின் பாடத்தைக் கற்றுக்கொண்டார். நீங்கள் பணத்தை இழக்காமலேயே இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வது நலம்.

*****

26 May 2026

ஒரு மிடில்கிளாஸ் தற்காப்புக் கலை!

ஒரு மிடில்கிளாஸ் தற்காப்புக் கலை!

மாதத்தின் முதல் தேதி காலை 9:01 மணிக்கு மொபைலில் வரும் அந்த மெசேஜ் இருக்கிறதே, அது ஒரு மாயக்காரி.

சம்பளம் கிரெடிட் ஆகிவிட்டது, என அவள் கண் சிமிட்டும்போதே, கூடவே மின்கட்டணம், பால் கணக்கு, வாஷிங் மெஷின் இஎம்ஐ எனப் பத்து பேர் கத்தியுடன் வாசலில் நிற்பார்கள்.

நடுத்தர வர்க்கத்தின் சம்பளம் என்பது, தியேட்டரில் ரிலீஸாகும் பெரிய பட்ஜெட் படம் போன்றது. வெள்ளிக்கிழமை வரும், ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் காணாமல் போய்விடும்.

வாசுதேவன் அத்தகைய ஒரு நடுத்தர வர்க்கப் போராளி. பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளம். ஆனால், அவன் முகத்தில் எப்போதும் ஓர் அலட்டிக்கொள்ளாத அமைதி இருக்கும்.

சென்ற வாரம் அவன் நண்பன் குமார், டீக்கடையில் வைத்து ஆச்சரியமாகக் கேட்டான், ஏன் மச்சி, உன் பொண்ணு அந்தப் பெரிய காலேஜ்ல சேரப்போறாளாமே? பதினைந்தாயிரம் சம்பளத்துல இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? எனக்கு ஒரு மாசம் முடிஞ்சு அடுத்த மாசம் வர்றதுக்குள்ள மூச்சு முட்டுது!

வாசுதேவன் சிரித்தான். அவன் சிரிப்பில் ஒரு மெல்லிய கர்வம் இருந்தது. எல்லாம் அம்மாச்சி சொல்லிக்கொடுத்த வித்தை மச்சி, என்றான்.

வாசுதேவனின் அம்மாச்சி ஒரு மர்மமான மனுஷி. தாத்தா புண்ணாக்கு மூட்டைகளை விற்றுவிட்டுப் பணத்தைக் கொண்டு வந்து நீட்டினால், அதைத் தொட்டுப் பார்த்தே, இதில் ஆயிரம் ரூபாய் இருக்கிறதா? என்பார்.

தாத்தா அசந்து போய், நீ என்ன மந்திரக்காரியா? என்பார்.

அம்மாச்சி மந்திரக்காரி இல்லை. அவர் ஒரு பொருளாதாரப் பூனை. வந்த பணத்தில் பாதியை ஒரு பழைய அடுக்குப் பானையில் போட்டுவிட்டு, அதன் வாயைத் துணியால் கட்டிவிடுவார். பூமி அதிரட்டும், வானம் இடியட்டும், அவசிய அத்திவாசிய காரியங்களுக்குத் தவிர, அந்தப் பானை திறக்கப்படாது.

வாசுதேவனுக்குத் தனது பதின்ம வயதில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பூர்வீக நிலத்தை விற்றபோது அவன் பங்காக இரண்டு லட்சம் ரூபாய் கைக்கு வந்தது.

அப்போதுதான் அவன் பங்காளிகளின் நிஜ முகங்கள் தெரிந்தன. ஒரு பங்காளிக்கு திடீரென தேசபக்தி வந்துவிட்டது. வாழ்க்கையில எப்போ சாவோம்னு தெரியாதுப்பா, என்று தத்துவம் பேசி, கன்னியாகுமரியில் ஆரம்பித்து காஷ்மீர் வரை ஊர் சுற்றப் போனார். வந்தபோது கைப்பை காலியாக இருந்தது. ஆனால் இமயமலைப் புகைப்படம் கைவசம் இருந்தது.

இன்னொரு பங்காளி, அம்பானி மட்டும்தான் கார்ல போகணுமா? என்று கேட்டுவிட்டு ஒரு வெள்ளை நிற அம்பாசிடர் காரை வாங்கினார். கார் வந்த வேகத்தில் பெட்ரோல் விலையும் ஏறியது. இப்போது கார் வீட்டு வாசலில் ஒரு ஷோபீஸ் போல நிற்கிறது.

வாசுதேவனின் மைத்துனர் இன்னும் ஒருபடி மேலே போனார். மாப்ளே, காலி மனை விற்பனைக்கு வருது. வாங்கிப் போட்டால் ஐந்து வருடத்தில் விதைக்காமலேயே, பராமரிக்காமலேயே பத்து டன் கருவை விறகு வெட்டலாம் என்றார்.

ஆனால் வாசுதேவன், தன் அம்மாச்சியின் மந்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். பாதி இப்போ, பாதி அப்புறம்!

அவன் அந்த ஒரு லட்சத்தை அப்படியே தங்கமாகவும் இன்னொரு லட்சத்தைப் பிளாட்டாகவும் வாங்கி அடுக்குப் பானையில் போட்டான். கூடவே, மாதம் 2,000 ரூபாய் ஆர்.டி., இன்னொரு 2000 எஸ்.ஐ.பி. உலகம் போக்கில் போய்க்கொண்டிருக்க, இவன் மட்டும் தன் ஆசைகளைக் கொஞ்சம் அடக்கி வாசித்தான். டிவி பழுதானால் ரிப்பேர் செய்தான், புதுசு வாங்கவில்லை. டூர் போவதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டான்.

இன்று, பதினைந்து வருடங்கள் கழித்து அந்தப் பானையைத் திறந்து பார்த்தபோது, அதில் இருபது லட்சம் ரூபாய் இருந்தது.

சித்தப்பா போன் செய்து, பொண்ணை அந்தக் காலேஜ்ல சேர்த்திருக்கே. பீஸ் அள்ளிக் கொட்டணுமேப்பா, சமாளிப்பியா? என்று கேட்டபோது, வாசுதேவன் அமைதியாகச் சொன்னான், சமாளிச்சிருவேன் சித்தப்பா.

தன் மகள் அந்தப் பெரிய கல்லூரியின் வாசலில் நுழையும்போது, வாசுதேவனுக்குக் கடன் வாங்கும் பதற்றம் இருக்காது. நகைக்கடையிலோ, வங்கியிலோ போய் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது.

வாழ்க்கை என்பது ஒரு மேஜிக் ஷோதான். ஆனால், கிளைமாக்ஸில் கையில் காசு இல்லையென்றால், அந்த மேஜிக் ஒரு மோசமான காமெடியாக முடிந்துவிடும் என்பதை வாசுதேவன் அறிந்திருந்தான்.

பணத்தைச் செலவு செய்வதை விட, அதைச் சேமிப்பதில் ஒரு சாடிஸ்டிக் சந்தோஷம் இருக்கிறது. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும், வாசுதேவனைப் போல!

*****

25 May 2026

மாறாத ஐம்பதும், மாறும் பிரபஞ்சமும்!

மாறாத ஐம்பதும், மாறும் பிரபஞ்சமும்!

பிரபஞ்சத்தில் எல்லாமே மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது ஹெராக்ளிட்டஸின் தத்துவம். இன்று இருக்கும் விலை நாளை இல்லை. பெட்ரோல் விலை இன்று 105, நாளை 110, அடுத்த வாரம் 150. இந்த நிலையற்ற உலகத்தில், மனிதன் எதையாவது ஒன்றை பிடித்துக் கொண்டு இப்படித் தன் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இங்கேதான் ஐம்பது ரூபாய் என்ற மாறிலி பிறக்கிறது. ஆங்கிலத்தில் இதை கான்ஸ்டன்ட் என்பார்கள்.

விலைவாசி என்பது ஒரு மாயை. அது ஏறும், இறங்கும். ஆனால், இந்த ஐம்பது ரூபாய் நோட்டு நிலையானது. அது ஒரு தியான நிலை. எப்படி என்கிறீர்களா?

பெட்ரோல், டீசலைப் பொருத்த வரையில் பொருளாதார நிபுணர்கள் டாலரில் கணக்கிடுகிறார்கள். தத்துவவாதியோ தன் பையில் இருக்கும் ஐம்பது ரூபாயைக் கணக்கிடுகிறான். லிட்டர் என்பது அளவை சார்ந்தது. ஐம்பது ரூபாய் என்பது மனநிறைவை சார்ந்தது.

ஆக, விசயம் இதுதான். நீ எவ்வளவு வேண்டுமானாலும் பெட்ரோல் விலையை ஏற்றிக் கொள். நான் ஐம்பது ரூபாய்க்குத்தான் போடுவேன், என்று இந்திய குடிமகன் ஒரு மாறாத முடிவை எடுத்து விட்டான்.

ஒரு காலத்தில் ஐம்பது ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைத்தது. பிறகு அது அரை லிட்டர் ஆனது. இப்போது அது நானூறு மில்லி, முந்நூறு மில்லி எனச் சுருங்கியிருக்கலாம். ஆனால், தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தால், வண்டி ஓடுவதற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தேவையில்லை, வண்டி அசையத் தொடங்கினால் போதும்.

ஒரு லிட்டர் பெட்ரோல் வேண்டுமானால் நூற்று ஐந்து ரூபாய் தா என்பது பெட்ரோல் பங்கின் நியதியாக இருக்கலாம்.

ஆனால், இந்திய குடிமகனுக்கு பெட்ரோலால் வண்டி ஓட வேண்டும் என்பது இரண்டாம் பட்சம்தான். வண்டியில் பெட்ரோல் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறதே, அதுதான் முதல் பட்சம். அந்த நம்பிக்கையின் விலை ஐம்பது ரூபாய்.

மொத்தத்தில் வண்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் இருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, பங்க்கில் இருக்கும் நபர் வண்டியின் டேங்கிற்குள் அந்த இரும்புக் குழாயை நுழைத்து க்ளிக் என்று ஒரு சத்தம் எழுப்புவார்,  அந்த சடங்குதான் முக்கியம். அது ஒரு வகையான ஆன்மீக ஆசுவாசம்.

இந்த உலகம் நம் கட்டுப்பாட்டில் இல்லை. போர் நடக்கிறது, கச்சா எண்ணெய் விலை ஏறுகிறது, கார்ப்பரேட்டுகள் விலையை தீர்மானிக்கிறார்கள். எளிய மனிதனால் எதையும் மாற்ற முடியாது.

இந்தச் சூழலில், நம் உலக மகா இந்தியக் குடிமகன் ஓர் எல்லையை வகுத்துக்கொள்கிறான். நீ உலகத்தையே மாற்றிக்கொள், என் ஐம்பது ரூபாயை உன்னால் மாற்ற முடியாது. இது ஒரு மௌனப் புரட்சி.

விலை ஏறிவிட்டதே, என்று பதற்றமடைந்து, கணக்கு போட்டு, புலம்பி வாழும் உலக மனிதர்களுக்கு மத்தியில், விலை ஏறினால் எனக்கு என்ன? நான் வாங்குவது எப்போதும் ஐம்பது ரூபாய்க்குத்தான், என்று கடந்து போகும் இந்தியக் குடிமகன், நுகர்வோர் கலாச்சாரத்தின் முகத்தில் அறையும் ஆகச்சிறந்த ஞானி.

இறுதியாக, அந்த ஐம்பது ரூபாய்க்கு ஒரு சொட்டு பெட்ரோல் மட்டுமே வரும் ஒரு நாள் வரக்கூடும். அன்றும் நம் இந்தியக் குடிமகன் பங்க்கிற்குப் போய் ஐம்பது ரூபாயைக் கொடுப்பான். பங்க் ஊழியர் ஒரு துளி பெட்ரோலை ஒரு பஞ்சில் நனைத்து வண்டியின் இன்ஜினில் தடவி அனுப்புவார்.

அப்போதும் நம் இந்தியக் குடிமகன் புன்னகையோடு வண்டியைத் தள்ளிக்கொண்டே போவான். ஏனெனில், அவன் வாங்குவது பெட்ரோலை அல்ல, நான் இன்னும் தோற்றுவிடவில்லை என்ற மனித திமிரை!

வாழ்க பாரதம்! வளர்க பெட்ரோல் விலை!!

*****

24 May 2026

நிழல்களின் நர்த்தனம் – மாய உலகக் கோட்பாடு!

நிழல்களின் நர்த்தனம் – மாய உலகக் கோட்பாடு!

மனிதன் களிமண்ணால் உருவங்களைச் செய்து அதற்கு உயிர் கொடுக்க ஆசைப்பட்டான். அது புராண காலம். இன்று மனிதன் எலக்ட்ரான்களால் போலி ஆன்மாக்களை உருவாக்கி, அதற்கு லைக்குகளையும் வியூஸ்களையும் பிச்சையிட்டு உலவ விட்டிருக்கிறான். இது டிஜிட்டல் காலம்.

இன்று ரூட் மாபியா என்பது வெறும் தொழில்நுட்ப மோசடி மட்டுமல்ல, அது நவீன மனிதனின் ஏமாறக் காத்திருக்கும் மனநிலையை மூலதனமாகக் கொண்ட ஒரு தத்துவார்த்த வியாபாரம்.

இந்த ரூட் மாபியாக்கள் நினைத்தால் யாரை முதலமைச்சராக்க வேண்டும், யாரை முதலமைச்சராக்கக் கூடாது, யாரை பிரதமராக்க வேண்டும், யாரைப் பிரதமராக்கக் கூடாது என்பதைக் கூட தீர்மானிக்க முடியுமாம். சுருக்கமாகச் சொன்னால் இது நவீன நரக உலகின் டிஜிட்டல் சாத்தான்கள்தான்.

ஆதி பிரம்மன் உலகைப் படைக்க கோடி வருடங்கள் தவம் இருந்தானாம். ஆனால், இந்த ரூட் மாபியாக்கள் ஒரு சாதாரண லேப்டாப் மற்றும் சில பிராக்ஸி மென்பொருட்களை வைத்துக் கொண்டு, ஒரே நொடியில் பத்து லட்சம் மனிதர்களைப் படைக்கிறார்கள்.

அவர்களுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை, வெறும் ஐபி அட்ரஸ் மட்டுமே முகவரி. அவர்களுக்கு பசியும் இல்லை, தூக்கமும் இல்லை. ஆனால், நீங்கள் போடும் பதிவுகளுக்கு ஹார்ட் சிம்பல் போடவும், வசைபாடவும் அவர்களுக்குத் தெரியும்.

நிஜ உலகில் ஒரு மனிதனுக்கு ஓர் ஓட்டுதான். ஆனால், இந்த மாய உலகில், ஒருவனுக்குப் பின்னால் ஒரு லட்சம் நிழல்கள் கைதட்டக் காத்திருக்கின்றன. அப்படியென்றால், இங்கே வாழ்பவன் மனிதனா, அல்லது அந்த நிழல்களா?

யார் அரியணையில் அமர வேண்டும் என்பதை ஒரு காலத்தில் வாள்களும், பீரங்கிகளும் தீர்மானித்தன. பிறகு வாக்குச்சீட்டுகள் தீர்மானித்தன. இன்றோ, கலர்புல்லான எடிட்டிங் செய்யப்பட்ட 30 வினாடி ரீல்ஸ்களும், அதன் கீழே விழும் போலி லைக்குகளும் தீர்மானிக்கின்றன.

உண்மை என்னவென்றால், ஒரு மனிதன் யோசித்து முடிவெடுக்கிறான். ஆனால், ரூட் மாபியாவின் உண்மை என்னவென்றால், ஓர் அல்காரிதம் மனிதனை யோசிக்க விடாமல் முடிவெடுக்க வைக்கிறது.

ஒரு வெற்றுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதற்கு தங்க முலாம் பூசி, சுற்றிலும் ஒரு லட்சம் ரோபோக்களை விட்டு ஆஹா, ஓஹோ என்று கோரஸ் பாட வைத்தால், பாமர மனிதன் அதைத் தெய்வீகப் பாத்திரம் என்று நம்பி விடுகிறான்.

புரிதல் இல்லாத மக்கள், அந்த வண்ணத்துப் பூச்சிகளின் பின்னால் ஓடும் குழந்தைகளைப் போல, இந்த போலிப் பிம்பங்களின் பின்னால் ஓடி, தங்களின் எதிர்காலத்தைத் தொலைக்கிறார்கள்.

ஏமாற்றுபவர்கள் இருக்கிற வரை ஏமாறுபவர்கள் இருப்பார்கள் என்பது பழைய தத்துவம். புதிய தத்துவம் என்னவென்றால், நீங்கள் ஏமாறத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை அல்காரிதம் துல்லியமாகக் கணித்து வைத்திருக்கிறது.

மக்களுக்கு உண்மை சுடுகிறதோ இல்லையோ, அது மிகவும் போரடிப்பதாக இருக்கிறது. அவர்களுக்குத் தேவை கவர்ச்சியான, அதிரடியான, கண்களைக் கூசச் செய்யும் பொய்கள். ரூட் மாபியாக்கள் தருவது அதைத்தான். அவர்கள் பொய்களை வோட்கா போல வண்ணமயமான கிளாசில் ஊற்றித் தருகிறார்கள். மக்கள் அதை போதையோடு பருகிவிட்டு, நிஜ உலகை மறந்து மயங்கிக் கிடக்கிறார்கள்.

இந்த ரூட் மாபியாக்கள் உருவாக்குவது தலைவர்களை அல்ல, மாயாவிகளை. ஒரு கணினித் திரையின் பின்னால் அமர்ந்துகொண்டு, ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையையும் திசைதிருப்பும் இந்த டிஜிட்டல் சாத்தான்கள் வெல்வது அவர்களின் திறமையால் அல்ல, நமது சோம்பேறித்தனத்தால்.

திரையில் தோன்றும் லைக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்து ஒருவனின் யோக்கியதையைத் தீர்மானிக்கும் வரை, நாம் அனைவரும் இந்த ரூட் மாபியாவின் கண்ணுக்குத் தெரியாத சிறைச்சாலை கைதிகள்தான்.

ஆகத் தத்துவம் என்னவென்றால், திரையைத் துடைத்துப் பாருங்கள். அங்கே தெரிவது தலைவன் அல்ல, உங்கள் ஏமாளித்தனத்தின் பிரதிபலிப்பு மட்டுமே!

*****

23 May 2026

கருப்பு – அதிகாரத்தின் நிழல்களும், கடவுளின் வருகையும்!

கருப்பு – அதிகாரத்தின் நிழல்களும், கடவுளின் வருகையும்!

மனிதன் தன் இயலாமையின் உச்சத்தில், நியாயத்தின் கதவுகள் யாவும் பூட்டப்படும்போது, பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு புள்ளியிலிருந்து தனக்கான விடிவு வரும் என்று நம்புகிறான். அந்த நம்பிக்கையின் குறியீடான மிளகாய் சாந்து அரைக்கும் சடங்கிலிருந்து தொடங்குகிறது கருப்பு.

ஆனால், இங்கே கேள்வி என்னவென்றால், நீதிமன்றம் என்பது மனிதன் உருவாக்கிய சட்டங்களின் தங்குமிடம். அங்கே தெய்வீகம் நுழைந்தால் மனிதனின் நீதி என்னவாகும்?

ஓர் எளிய தந்தை தன் மகளின் மருத்துவத்திற்காகக் கொண்டு வந்த நகைகளை இழக்கிறார். சட்டத்தின் காவலனாக இருக்க வேண்டிய வழக்கறிஞர் அநீதியின் மொத்த உருவமாக நின்று அதைத் தடுக்கிறார்.

தத்துவம் என்ன சொல்கிறது என்றால், அதிகாரம் எங்கு செறிவூட்டப்படுகிறதோ, அங்கு அறம் நீர்த்துப்போகிறது.

நீதிமன்றம் என்ற கட்டமைப்பு, எளியவர்களைக் காப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு செக் வைக்கும் சதுரங்கப் பலகையாக மாறும்போது, மனிதன் தன் சட்டப் புத்தகங்களை மூடிவிட்டு, ஆதி தெய்வமான கருப்பனை நோக்கித் திரும்புகிறான்.

சூர்யா கருப்புசாமியாக இறங்கி வரும்போது, அது வெறும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சி மட்டுமல்ல, அது பிரபஞ்ச நீதியின் வெளிப்பாடு. மிளகாய்ப் பொடியின் உஷ்ணத்தை விடவும், அநீதியைக் கண்டு எரியும் ஒரு தெய்வத்தின் கோபம் திரை எங்கும் ருத்ரதாண்டவமாக மாறுகிறது.

இயக்குநர் காட்டும் சில தத்துவார்த்த ஐடியாக்கள் கவனிக்கத்தக்கவை.

அராஜகங்கள் அரங்கேறும் நீதிமன்றத்தை நல்வழிப்படுத்த, சாட்சாத் கருப்பனே இறங்கி வந்தால் என்னவாகும்? வழக்கம் போல, லாஜிக் கதவைச் சாத்திவிட்டு ஜன்னல் வழியாகக் குதிக்கும்! ஆம், கடவுள்களுக்கு வேறு வேலைகள் எதுவும் இல்லை போல!

நாயகி திரிஷாவுக்கு வழக்கறிஞர் கோட் ஓகே. ஆனால், அந்த லிப் சிங்க்? உதடுகள் ஒரு கிலோமீட்டர் முன்னால் போகின்றன, வசனங்கள் அரை கிலோமீட்டர் பின்னால் வருகின்றன.

அபிநயங்கரின் அதிரடி இசையும், ஜி.கே.விஷ்ணுவின் கேமராவும் அந்தத் தெய்வீக ஆக்ரோஷத்தைக் கொண்டாட்டமாக மாற்றினாலும், தத்துவ ரீதியாக ஒரு கேள்வி எழுகிறது. கடவுள் எல்லாவற்றையும் ஜஸ்ட் காட் திங்ஸ் என்று தன் மாயாஜாலத்தால் தீர்த்துவிட்டால், மனிதனின் பகுத்தறிவும் போராட்டமும் எங்கே போவது?

திரைப்படம் ஒரு கட்டத்தில் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ பிரபஞ்சத்திற்குள் நுழைவதும், சிங்கத்தை உலாவ விடுவதும் தீவிரமான ஒரு தத்துவக் கதையை, சமகால பாப் கலாச்சார ஸ்பூப்பாக மாற்றிவிடுகிறது.

கருப்பு என்பது ஒரு ஆன்மிகத் தேடலோ அல்லது சட்டத்தின் நுணுக்கங்களைப் பேசும் கதையோ அல்ல. அது, அநீதி மிஞ்சும் போது ஏதோ ஒரு வடிவில் நீதி திருப்பி அடிக்கும் என்ற மனிதனின் ஆதிப் பேராசையின் கமர்ஷியல் வடிவம்.

ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், பல நட்சத்திரங்கள் வலம் வரும் இந்த கருப்பனின் யுனிவர்ஸ், சூர்யா என்ற ஒற்றை மனிதனின் மாஸ் கமர்ஷியல் அக்னிக்காகத் தாராளமாகத் தரிசிக்கப்பட வேண்டிய ஒன்று!

கிளைமாக்ஸில் அவர் ஆடும் பேயாட்டம் ரசிகர்களுக்கு மிரட்டலான திரை அனுபவம், லாஜிக் பார்ப்பவர்களுக்குத் தலைவலி அனுபவம்!

படத்துக்கு பத்துக்கு 6¼ மார்க் கொடுக்கலாம். அந்தக் கால் மார்க் எக்ஸ்ட்ரா, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியே வில்லனாக நடித்ததற்கு.

*****

22 May 2026

கடந்தகாலம் ஒரு தங்குமிடம் அல்ல, வாடகைக்குக் கூடத்தான்!

கடந்தகாலம் ஒரு தங்குமிடம் அல்ல, வாடகைக்குக் கூடத்தான்!

மனிதர்களாகிய நமக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்பதை விட, ரயில் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்துப் பெருமூச்சு விடுவதில் நமக்கு அலாதிப் பிரியம்.

கடந்தகாலம் என்பது ஒரு சிறந்த ஆசான் என்பார்கள். ஆனால், அந்த ஆசானே நம்மை வீட்டுப்பாடம் செய்யச் சொல்லிவிட்டு, வகுப்பறையிலேயே சிறை வைத்துவிட்டால் என்ன செய்வது?

கடந்தகாலம் என்பது ஒரு மியூசியம் போன்றது. அங்கே போய்ப் பார்க்கலாம், அடடா, அப்போது எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம், என்று ஆச்சரியப்படலாம், ஓரிரு பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், மியூசியத்திலேயே பாய் போட்டுப் படுத்து உறங்க முடியாது. அங்கே தங்க முற்பட்டால், செக்யூரிட்டி எனும் காலம் உங்களை வெளியே தள்ளுவது உறுதி.

மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலைகள் பேசுவதில்லை. அதேபோல், கடந்தகாலச் சம்பவங்களும் மாறப்போவதில்லை. மாறாத ஒன்றைப் பிடித்துக்கொண்டு தொங்குவது, நங்கூரமிட்ட படகில் அமர்ந்து கொண்டு துடுப்புப் போடுவதற்குச் சமம்.

கடந்தகாலத்தில் இருந்து கற்றுக் கொள்கிறேன், என்று சொல்லிக்கொண்டு பலர் செய்வது என்னவென்றால், பழைய காயங்களை மீண்டும் மீண்டும் நோண்டிப் பார்ப்பதுதான்.

அன்று அப்படிச் சொல்லியிருக்கலாமே! அவன் அப்படிச் செய்தபோது நான் ஏன் சும்மா இருந்தேன்? இவை பாடங்கள் அல்ல, இவை தீர்ந்துபோன பழைய பேப்பர்கள். பழைய பேப்பரை விற்றுவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். அதை அடுக்கி வைத்துக்கொண்டு அதன் மேல் அமர்ந்திருந்தால் வீடு குப்பையாகத்தான் மாறும்.

கடந்தகாலத்திலேயே தங்கிவிடுபவர்கள், பின்னோக்கிப் பார்த்தபடி முன்னோக்கி நடக்க முயற்சிப்பவர்கள். விளைவு? முன்னால் இருக்கும் குழியில் விழுவதுதான்.

நாம் செய்த தவறுகள் நமக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டுமே தவிர, அவை கைவிலங்குகளாக மாறிவிடக் கூடாது. பாடம் கற்றுக் கொண்டவுடன் புத்தகத்தை மூடி வைக்க வேண்டும். புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் தேர்வு எழுத முடியாது.

உண்மையில், கடந்தகாலம் என்பது ஒரு பழைய எஸ்.எம்.எஸ் போன்றது. அதை மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலம் டேட்டா எதுவும் தீர்ந்துவிடாது, ஆனால் உங்கள் பேட்டரி தீர்ந்துவிடும்.

கடந்தகாலம் அழகானது என்று யாராவது சொன்னால், அவர் இப்போது நிகழ்காலத்தில் ஏதோ பெரிய மொக்கையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். கடந்தகாலத்தில் தங்குவது என்பது, தூக்கத்தில் வரும் கனவை நிஜம் என்று நம்பி, விழித்த பிறகும் கண்களை மூடிக் கொண்டே இருப்பதற்குச் சமம்.

கடந்தகாலத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அதற்காக அங்கேயே டியூஷன் சேர்ந்துவிடாதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு வழிப்பாதை. பின்னாடி திரும்பிப் பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினால், இன்சூரன்ஸ் கூடக் கிடைக்காது.

கடந்தகாலத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லோரும் அப்படியெல்லாம் இருந்தது என்பார்கள். ஆனால், அப்போது அவர்கள் உண்மையில் எப்படி இருந்தார்கள் என்று கேட்டால், இப்போதும் இருப்பதைப் போலத்தான் அப்போதும் புலம்பிக் கொண்டிருந்திருப்பார்கள்.

கடந்த காலத்துக்கு டாடா சொல்லி விட்டு, நிகழ்காலத்துக்குள் காலடி எடுத்து வையுங்கள். ஓடிக் கொண்டிருக்கும் நதி யாருக்காகவும் நிற்காது.

*****

21 May 2026

வாழ்வின் எஞ்சிய கால்வாசியும், மீதமுள்ள முக்கால்வாசியும்!

வாழ்வின் எஞ்சிய கால்வாசியும், மீதமுள்ள முக்கால்வாசியும்!

பிறரைத் திருப்திப்படுத்துவது என்பது ஒரு முழுநேர வேலை. இதற்குச் சம்பளம் கிடையாது, விடுமுறை கிடையாது, மிக முக்கியமாக ரிடையர்மென்ட் கிடையாது. நாம் பிறந்தவுடன் அழுகிறோம். அது நமக்கு வலிப்பதால் அல்ல, குழந்தை பிறந்த உடனே அழ வேண்டுமே, இல்லையென்றால் மருத்துவர் பயந்துவிடுவாரே, என்று அவரைத் திருப்திப்படுத்துவதன் தொடக்கம்.

முக்கால்வாசி என்பது ஒரு கணக்கு அல்ல, அது ஒரு சாபம் . வாழ்க்கையை நூறு சதவீதமாகப் பிரித்தால், அதில் முக்கால்வாசி அதாவது 75 சதவீதம் அடுத்தவர்களுக்காகவே செலவாகிறது.

அதில், முதல் கால்வாசி பெற்றோரைத் திருப்திப்படுத்தப் படிக்கிறோம்.

இரண்டாம் கால்வாசி, முதலாளியைத் திருப்திப்படுத்த வேலை செய்கிறோம்.

மூன்றாம் கால்வாசி, வாழ்க்கைத் துணையை, பிள்ளைகளைத் திருப்திப்படுத்த வாழ்கிறோம்.

மீதமுள்ள அந்தக் கால்வாசி எங்கே? அதுதான் நாம் தூங்கும் நேரம். அங்கேயும் கூட, சிலருக்கு குறட்டை விட்டு அடுத்தவர்களைத் தொந்தரவு செய்துவிடுவோமோ? என்ற பயம் வந்துவிட்டால், அந்தப் பங்கும் பிறருக்கே தாரை வார்க்கப்படுகிறது.

உலகிலேயே மிகவும் கடினமான காரியம் எதுவென்றால், ஒருவரைத் திருப்திப்படுத்துவதுதான். ஏனென்றால், மனிதர்களுக்கு எதில் திருப்தி வரும் என்று அவர்களுக்கே தெரியாது.

நீங்கள் மென்மையாகப் பேசினால், என்ன இவன் பயந்தாங்கொள்ளி? என்பார்கள். அதிகாரமாகப் பேசினால், என்ன இவன் அகங்காரி? என்பார்கள். கடைசியில் நீங்கள் பேசாமல் மௌனமாக இருந்தால், என்ன இவன் திமிர் பிடித்தவன்? என்பார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த முயற்சிப்பது என்பது, ஓட்டைப் பானையில் கடல் நீரை நிரப்ப முயல்வதற்குச் சமம்.

இங்கே நாம் வாழ்வது நமக்காக அல்ல, பிறர் நம்மைப் பற்றி வைத்திருக்கும் அபிப்ராயத்திற்காக மற்றும் பிம்பத்திற்காக.

நமக்குச் பிடிக்காத சட்டையை உடுத்துகிறோம், ஏனெனில் அது நான்கு பேருக்குப் பிடிக்கும். நமக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தத்துவத்தைப் பேசுகிறோம், ஏனெனில் அது நான்கு பேருக்கு நம்மை அறிவாளியாகக் காட்டும்.

அந்த நான்கு பேர் யார் என்று யாரிடமாவது கேட்டால், இன்றுவரை ஒருவரிடமும் பதில் இல்லை. அந்த மர்மமான நாலு பேரைத் திருப்திப்படுத்துவதிலேயே நம் வாழ்நாள் முடிகிறது.

மற்றவர்களைத் திருப்திப்படுத்த முனைபவர் ஒரு சிறந்த நடிகர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கைதட்ட வேண்டிய ரசிகர்களும் அதே மேடையில் வேறு ஒருவரைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே யாரையும் பார்ப்பதில்லை. ஆனால், எல்லோரும் நடித்துக் கொண்டிருக்கிறோம். ஷேக்ஸ்பியர் உலகமே நாடகமேடை என்று சொன்னதில் உண்மை இருக்கிறது.

வாழ்க்கையின் முக்கால்வாசி பிறரைத் திருப்திப்படுத்தவே முடிகிறது என்பது சோகமல்ல. மீதமுள்ள கால்வாசியிலாவது நம்மை நாம் திருப்திப்படுத்திக் கொள்கிறோமா என்பதுதான் கேள்வி. ஒருவேளை நீங்கள் உங்களைச் சரியாகத் திருப்திப்படுத்திக் கொண்டால், அதைப் பார்த்து இன்னும் ஒரு முக்கால்வாசிப் பேர் அதிருப்தி அடைவார்கள் என்பது கூடுதல் போனஸ்.

அடுத்தவர்களைத் திருப்திப்படுத்துவதை விட மிக எளிதான காரியம் ஒன்று இருக்கிறது. அது அடுத்தவர்களை அதிருப்திப்படுத்துவது. இதற்கு நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, நீங்கள் நீங்களாக இருந்தாலே போதும்.

*****

20 May 2026

அறியாமையின் போர்வையில் ஒளிந்திருக்கும் அறிவுஜீவித்தனம்!

அறியாமையின் போர்வையில் ஒளிந்திருக்கும் அறிவுஜீவித்தனம்!

உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்று, எதுவும் தெரியாதவர்கள். இரண்டு, எல்லாம் தெரிந்தும் ஒன்றுமே தெரியாதது போல் நடிப்பவர்கள். இந்த இரண்டாம் வகை மனிதர்களின் மிக முக்கியமான ஆயுதம்தான்,  தெரியாமதான் கேட்கிறேன் என்பது.

உண்மையில், எதையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர் ஒருபோதும் தெரியாமதான் கேட்கிறேன் என்று முன்னுரை கொடுக்க மாட்டார். அவர் நேரடியாகக் கேள்வியைக் கேட்டு விட்டு அடிவாங்கிவிட்டுப் போவார்.

ஆனால், இந்த வாக்கியத்தைப் பயன்படுத்துபவர் ஏற்கனவே பாதி விஷயத்தைத் தன் பையில் முடிந்து வைத்திருப்பார். மீதிப் பாதியை உங்கள் வாயாலேயே வரவழைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு அறிவுசார் தூண்டில் இது.

ஏன் இந்தப் பொய்யான தன்னடக்கம்?

எனக்கு எல்லாம் தெரியும், என்று சொன்னால் உலகம் நம்மை அகங்காரி என்கிறது. எனக்கு எதுவுமே தெரியாது, என்று சொன்னால் முட்டாள் என்கிறது. ஆகவே, தெரியாமதான் கேட்கிறேன் என்று சொல்லும்போது, அவர் ஒரே நேரத்தில் விவேகியாகவும் வினயமானவனாகவும் காட்சியளிக்கிறார்.

ஒருவேளை நாம் கேட்கும் கேள்வி அடுத்தவர் இதயத்தையோ அல்லது ஈகோவையோ புண்படுத்தினால், நான்தான் முன்னமே சொன்னேனே, தெரியாமதான் கேட்கிறேன்னு, என்று தப்பித்துக்கொள்ள இது ஒரு காப்பீடு.

தெரியாமல்தான் கேட்கிறேன் என்ற இந்தத் தொடரை நாம் வெவ்வேறு சூழல்களில் மொழிபெயர்த்தால் அதன் உண்மை முகம் விளங்கும்.

நீங்கள் சொல்வது சுத்தப் பொய் என்று எனக்குத் தெரியும், இருந்தாலும் நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று பார்க்கத்தான் கேட்கிறேன் என்பது இதன் ஒரு முகம்.

உங்க தகுதிக்கு இது ஓவர் என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்களாக ஒத்துக்க மாட்டீர்களே? என்பது இதன் மறுமுகம்.

நான் சொல்வதுதான் சரி. அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிற வரைக்கும் நான் விடமாட்டேன் என்பது இதன் வேறொரு முகம்.

தத்துவ ரீதியாகப் பார்த்தால், மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனுக்குத் தன் சக விலங்கைப் பற்றித் தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வம், பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் தெரிந்துகொள்வதில் இல்லை.

எனவே, யாராவது உங்களிடம் வந்து, தெரியாமல்தான் கேட்கிறேன், என்று ஆரம்பித்தால், அவருக்குத் தெரியாது என்று அர்த்தமல்ல, உங்களுக்குத் தெரிந்ததை அவர் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.

உண்மையில் எதையும் தெரிந்துகொள்ள விரும்பாதவர்களே நிம்மதியாக இருக்கிறார்கள். தெரிந்ததை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்களே தெரியாமல்தான் கேட்கிறேன், என்று அலைகிறார்கள்.

ஆகவே, நான் தெரியாமல் எல்லாம் கேட்கவில்லை, தெரிந்தே கேட்கிறேன், இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

*****

19 May 2026

தாவரங்களின் தற்கொலை ஒப்பந்தம்! – ஒரு குறுங்கதை!

தாவரங்களின் தற்கொலை ஒப்பந்தம்! – ஒரு குறுங்கதை!

சந்துரு கொடைக்கானலில் இருந்து திரும்பும்போது அவனது கார் ஒரு நகரும் நந்தவனத்தைப் போலிருந்தது. பின்சீட்டில் அமர்ந்திருந்த அவன் மனைவி, குழந்தைகளை விட, அங்கிருந்த பூச்செடிகளுக்குத்தான் அதிக ஆக்சிஜன் கிடைத்துக் கொண்டிருந்தது.

சார், இது பாளையங்கோட்டை வெயில்ல கூடப் பக்காவா கிளம்பும் பூச்செடி சார், என்று அந்த நர்சரி வியாபாரி சொன்னபோது, சந்துருவின் அறிவு ஒரு நிமிடம் சுவிட்ச் ஆப் ஆனது.

அந்த வியாபாரி கண்களை உருட்டி, இதோ பாருங்க, இது ஸ்பெஷல் உரம். இதைப்போட்டா செடிக்குக் கொடைக்கானல்ல இருக்கிற மாதிரியே ஒரு பீல் இருக்கும், என்று ஒரு பாக்கெட் சாம்பலை ஆயிரம் ரூபாய்க்கு விற்றபோது, சந்துரு அதை ஒரு புனிதப் பிரசாதமாக வாங்கிக்கொண்டான்.

சென்னை வந்து சேர்ந்த அன்று இரவு, அந்தச் செடிகள் காரின் பின் சீட்டை விட்டு வெளியே வந்தன.

அடுத்த நாள் காலை.

சூரியன் தனது வழக்கமான சுடுவேன் என்கிற கடமையைச் செய்ய ஆரம்பித்தது.

சந்துருவின் பால்கனியில் வைக்கப்பட்டிருந்த அந்த மலைப்பிரதேசச் செடிகள், சுற்றுமுற்றும் பார்த்தன. அவற்றுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஏய்! மேகம் எங்கே? என்று பக்கத்தில் இருந்த கறிவேப்பிலைச் செடியிடம் கேட்டன அந்த மலைச் செடிகள்.

கறிவேப்பிலைச் செடி அலுப்புடன் சொன்னது, இங்கே மேகம் வராது. மேல ஏசி அவுட்டோர் யூனிட்ல இருந்து சுடு காத்துதான் வரும். பேசாம சரண்டர் ஆயிடுங்கள்.

சந்துரு ஓடி வந்து அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். நர்சரிக்காரன் கொடுத்த மாயாஜால உரத்தைத் தூவினான்.

அந்த உரம் மண்ணில் பட்டதும், செடிக்கு இன்னும் வினோதமாக இருந்தது. அது ஒரு சர்க்கரை நோயாளிக்கு ஜிலேபி ஊட்டுவது போலிருந்தது.

மூன்றாம் நாள், அந்தச் செடிகள் ஒரு முக்கியமான முடிவை எடுத்தன. பனிப்புகை இல்லாத இடத்தில் பூப்பதைக் காட்டிலும், ஒரு கௌரவமான மரணம் மேல், என்று அவை தீர்மானித்தன. மெல்லத் தங்களது பச்சை நிறத்தைக் குறைத்துக்கொண்டு, ஒரு விதமான மெரூன் நிறத்திற்கு மாறின.

சந்துரு பதறினான். நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்துச்சு? என்று கூகுளில் தேடினான். கூகுள் நூறு பதில்களைச் சொன்னது. அவன் அத்தனையையும் செய்தான்.

ஆனால், அந்தச் செடிகள் ஒரு பிடிவாதமான காந்தியைப் போல ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்தன.

ஏழாம் நாள் காலை.

சந்துரு பார்த்தபோது, அந்தச் செடிகள் ஒவ்வொன்றும் காய்ந்த குச்சிகளாக மாறியிருந்தன. பக்கத்தில் இருந்த உர பாக்கெட் கேலியாகச் சிரித்தது.

சந்துருவின் மனைவி சொன்னாள், அப்பவே சொன்னேன், அங்கேயோட அதுகளப் பார்க்கிறதோட நிறுத்திக்கலாம்னு. இப்போ பாருங்க, ஐயாயிரம் ரூபாய் காலி, மனசுக்கும் கஷ்டமா இருக்கு.

சந்துரு காய்ந்த செடிகளைப் பார்த்தான்.

அந்தச் செடிகள் செத்துப்போகவில்லை, அவை மீண்டும் மண்ணாக மாறியிருந்தன. அந்தச் செடிகளுக்குத் தெரியும், தாங்கள் கொடைக்கானலில் இருந்தால் இன்னும் சில மாதங்கள் வாழ்ந்திருக்கலாம் என்று. ஆனால், சந்துருவின் ஆசைக்குத் தீனி போட அவை தயாராக இல்லை.

சந்துரு மெல்ல அந்தச் செடிகளைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டான். கார்ப்பரேஷன்காரர்கள் அள்ளிக் கொண்டு போனார்கள்.

அன்று மாலை, அவன் அதே பால்கனியில் அமர்ந்து கொடைக்கானலில் எடுத்த போட்டோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் அந்தச் செடிகள் இன்னும் பச்சையாக, விதிவிதமாக பூத்து இருந்தன.

சந்துரு முணுமுணுத்தான், ஐயாயிரம் நட்டம், ஏமாளி பட்டம்.

*****