25 Feb 2019

கள்ளுக்குடிகாரர்



செய்யு - 7
            பெரியவர்கள் பேசிக் கொள்ளும் போது லாலு வாத்தியாரை கள்ளுக்குடி வாத்தியார் என்று பேசிக் கொள்வார்கள். வேலையில் சேர்ந்த நாட்களில் லாலு வாத்தியார் கண்டிப்புக்குப் பேர் போனவர். என்றாலும் அவர் கத்திரிக்காய் திருட்டு வழக்கில் பலமுறை பிடிபட்டு இருக்கிறார். அவர் வாத்தியார் என்பதால் அவரை விட்டு விட்டு அவரின் அண்ணன்மார்கள் இருவரையும் பிடித்துக் கொள்வார்கள்.
            வாத்தியாரின் மூத்த அண்ணன் முருகு. வெடுவெடுவென இருப்பார். அழுக்கு வேட்டியும், கசங்கிய சட்டையும் போட்டிருப்பார். நிமிஷ நேரம் சும்மாயிருக்க மாட்டார். கை பரபரவென்று இருக்கும்.
            ரெண்டாம் அண்ணன் பஞ்சு. கனத்த உருவம். வேட்டி கருத்துப் போய் அழுக்கும் கரியுமாய் இருக்கும். எங்கே போய் இப்படிக் கரியை அப்பிக் கொள்கிறார் என்று எல்லாரும் பேசிக் கொள்வார்கள். அவரை நேரில் பார்த்தால், அதுசரி அவர் எங்கே போய் அவ்வளவு அழுக்கையும் கரியையும் அப்பிக் கொள்கிறார்? என்று இதையெல்லாம் வாசிக்கும் நீங்களே மேற்கொண்டு என்னை எழுத விடாமல் கேள்வி கேட்பீர்கள். மேலே சட்டை போட மாட்டார். திறந்த மேனிக்குத் திரிவார். கழுத்தில் கிழிந்து போன அழுக்குத் துண்டை சுத்தி விட்டுக் கொள்வார்.
            அவ்வபோது கத்திரிக்காய் திருட்டுக்குப் பஞ்சாயத்து நடக்கும். அபராதம் போடுவார்கள். அதை லாலு வாத்தியார்தான் கட்டுவார். லாலு சகோதரர்கள் மூன்று பேரும் கூட்டுக் களவாணிகள் என்று பேசிக் கொள்வார்கள்.
            வேலைக்குப் போன பின்பு வாத்தியாருக்குப் பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது. வாத்தியார் ஒரு வாத்திச்சியைத்தான் கட்டிக் கொள்வேன் என்று முழு மூச்சில் நின்றாராம். ரெண்டு மூணு வருசங்கள் அவருக்காக ஊர் ஊராய்ச் சல்லடை போட்டு பெண் பார்த்திருக்கிறார்கள். அவர் எதிர்பார்த்த மாதிரி வாத்திச்சியைத் தேடுவது அவ்வளவு எளிதாக இல்லை. கடைசியில் கும்பகோணத்துக்குப் பக்கத்தில் பெருமாள்பாளையத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் கட்டி வைத்திருக்கிறார்கள்.
            கட்டும் போது பிடித்திருந்த பெண் போகப் போக வாத்தியாருக்குப் பிடிக்காமல் போய் விட்டது. அந்தப் பெண்மணி விகடுவுக்கு ஆத்தா முறை வரும். விகடுவின் அம்மா அத்தை என்று கூப்பிடுவதால் விகடுவும் அத்தை என்றுதான் கூப்பிடுவான். கிருஷ்ணவேணி என்ற பெயருடைய அந்த அத்தைதான் வேணி அத்தை. வேணி அத்தை ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்கு வந்தவர். பார்ப்பதற்கு அழகாகவும் திடகாத்திரமாகவும் இருப்பாராம். சடை போட்டால் கெண்டைக்கால் அளவுக்கு தலைமுடி வருமாம். எல்லாம் ஒரு சில ஆண்டுகளுக்குத்தான். அப்புறம் அவர் குண்டாகி விட்டார். குண்டு என்றால் அப்படி ஒரு குண்டு. வயிறு முன்னுக்குத் தள்ளி, பிட்டம் பின்னுக்குத் தள்ளி பார்ப்பதற்கு ஒரு மாதரியாக இருப்பார். தலைமுடியும் தலைக்குக் கீழே ஒரு சாண் அளவுக்குத் தொங்கிக் கொண்டிருக்கும் அளவுக்குக் குறைந்து விட்டது.
            வாத்தியாரோடு சண்டை ஆரம்பித்த நாட்களில் எந்த வேலையும் செய்யாமல் ஆட்டுக்கல்லில் குத்துக்கல் போல வேணி அத்தை அப்படியே உட்கார்ந்திருப்பாராம். அப்படி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் முருகு மாமாவும், பஞ்சு மாமாவும் வேணி அத்தையை அடி பின்னிப் பெடலெடுத்து விடுவார்களாம். முருகு மாமாவின் பெண்டாட்டி நீலு அத்தையும், பஞ்சு மாமாவின் பெண்டாட்டி ராணி அத்தையும் முடியைப் பிய்த்து இழுப்பார்களாம். அவ்வளவு அடிகளையும் பிக்கல் பிடுங்கல்களையும் வாங்கிக் கொண்டு கல்லுளிமங்கன் கணக்காய் அப்படியே உட்கார்ந்திருக்குமாம் வேணி அத்தை. ஒரு கட்டத்துக்கு மேல் அடிக்க முடியாது என்ற நிலை வந்த பிறகு அப்படியே விட்டு விட்டார்களாம். அதற்கு அப்புறம் வேணி அத்தை எந்நேரமும் சாப்பிட ஆரம்பித்து விட்டதாம். சாப்பிட ஆரம்பித்தது என்றால் எப்போ பார்த்தாலும் சாப்பாடுதான். நடுராத்திரியில் எழுந்து உட்கார்ந்து கொண்டு சோற்றுப் பானையை எடுத்து தண்ணீர் ஊற்றி வைத்த சாதத்தையும் பிழிந்து வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்குமாம். ஒரு கட்டத்துக்கு மேல் நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் முருகு மாமாவும், பஞ்சு மாமாவும் ரெண்டு பேரையும் வேற்குடியில் தனிக்குடித்தனம் வைத்தார்களாம். அதற்கு அப்புறம்தான் வாத்தியார் மாமா கள்ளு குடியில் இறங்கியதாம். இதெல்லாம் அம்மா சொன்னவைகள்.
            "ஏன்ம்மா வேணி அத்தையை அடிச்சாங்க? ஏன்ம்மா வேணி அத்தை எப்ப பாத்தாலும் சாப்பிட்டுகிட்டே இருக்கு?" என்று விகடு கேட்பான். "அதெல்லாம் உனக்குப் புரியாது போடா!" என்று அம்மா விரட்டி விடுவார்.
            லாலு வாத்தியாரின் கள்ளுக்குடி என்பது உங்க வீட்டு குடி, எங்க வீட்டு குடி கிடையாது. ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்க மாட்டார். திடீரென்று கிளம்பி ஈச்சமண்டை வீட்டுக்குப் போய் விடுவார். அங்கேயே குடித்து விட்டு பெரிய செம்பில் வாங்கிக் கொண்டு வந்து வகுப்பறைக்கும் வந்து விடுவார். கள்ளு அப்படியே  நுரை பொங்கி வகுப்பறையில் வழிந்து கொண்டிருக்கும். அந்த நுரையைத் தொட்டு நாக்கில் வைத்துக் கொள்வதில் பிள்ளைகளுக்கு இடையே போட்டியே நடக்கும். அதிக முறை தொட்டு நாக்கில் வைத்துக் கொள்ளும் பிள்ளைகள் அதைச் சண்டையில் ஜெயித்ததைப் போல பேசிக் கொண்டிருப்பார்கள். "நான் நாப்பத்தியெட்டு முறை!" என்று பத்து பனிரெண்டு முறை வாயில் வைத்துக் கொண்ட பிள்ளைகள் கூட அந்தப் போட்டியில் ஜெயிக்கப் பார்ப்பார்கள்.
            பிள்ளைகள் சும்மா இருப்பார்களா? பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போனவுடன் நாக்கில் தொட்டு வைத்துக் கொள்ளும் வீரதீர பிரஸ்தாபங்களை சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதைக் கேட்கும் பெற்றவர்கள் சும்மா இருப்பார்களா? பள்ளிக்கூடத்திற்கு வந்து விடுவார்கள். பள்ளிக்கூடத்தில் அதற்கு ஒரு பஞ்சாயத்து நடக்கும்.
            "சத்தியமாக இனிமே குடிக்க மாட்டேன்!" என்று வாத்தியார் ஒவ்வொருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார். அப்புறம் யாருக்கும் பேசத் தோன்றாது. "இனிமே பள்ளியோடத்துல குடிக்கக் கூடாதுன்னு சொல்லச் சொல்லுங்க!' என்பார்கள் பஞ்சாயத்துக்கு வந்திருப்பவர்கள். தலையில் நங்கு நங்கு என்று பலமுறை அடித்துக் கொண்டு, "ச்சத்தியம் ச்சத்தியம் இது ச்சத்தியம்" என்பார் வாத்தியார். "ன்னா மனுசன்! எதுக்கெடுத்தாலும் இப்படிக் காலுல விழுந்துகிட்டு!" என்று பேசிக் கொண்டு செல்வார்கள் பிள்ளைகளைப் பெற்ற மவராசர்கள். சமயங்களில் பிள்ளைகளைப் பெற்ற மவராசிகளும் வருவதுண்டு. அவர்கள் காலில் விழவும் வாத்தியார் தயங்கியதில்லை.
            என்னதான் லாலு வாத்தியார் கள்ளு குடித்தாலும் பாடம் நடத்துவதில் கெட்டிக்காரர். அறிவியல் சோதனைகள் எல்லாம் செய்து காட்டுவார். நீராவிப் போக்கைக் காட்டுவதற்காக செடியின் இலைகளைப் பாலிதீன் பையால் கட்டி விட்டு கொஞ்ச நேரம் கழித்து அழைத்துப் போய்க் காட்டுவார். பையின் உட்புறம் வேர்த்து இருக்கும். "ந்நல்லா பார்த்துக்குங்கடா! இதான்டா நீராவிப்போக்கு!" என்பார்.
            சிவப்பு மையை தண்ணீரில் ஊற்றிக் கலக்கி அதில் வேரோடு பிடுங்கிய குப்பை மேனிச் செடியை வைப்பார். சிறிது நேரத்தில் அந்தச் செடி நீரை உறிஞ்சியிருப்பதை அதன் தண்டுகளில் தெரியும் சிவப்பு நிறத்தைச் சுட்டிக் காட்டி விளக்குவார்.
            மீனின் படம், தவளையின் படம், பூவின் பாகங்கள் படம் என்று படம் வரைந்து பாகம் குறித்துக் காட்டுவார். அவர் வழக்கமாய் பாடம் நடத்துவதை விட கள்ளைக் குடித்து விட்டு பாடம் நடத்துவது விஷேசமாய் இருக்கும். ஒரு குழந்தையைப் போலவே அப்போதெல்லாம் நடந்து கொள்வார். சமயங்களில் பாடுவார். ஆடுவார். அவர் பாடுவது நாட்டுப்புற பாடல் வடிவில் இருக்கும். ஆட்டம் பாஞ்சாலம்மான் கோயிலில் நடக்கும் நாடகத்தில் ஆட்டம் எப்படி இருக்குமோ அதைப் போல இருக்கும். எந்தப் பாடம் நடத்துகிறாரோ அந்தப் பாடத்துக்குத் தகுந்தாற் போல பாடலை இட்டுக்கட்டிப் பாடுவார்.
            "நீராவிப் போக்கு நடக்குது பாத்துக்கோ! பாத்து நல்லா மனசுக்குள்ள ஏத்திக்கோ!" என்ற அவர் பாடினால் அன்று முழுவதும் அந்தப் பாடலையே பாடிக்கொண்டிருப்பர் பிள்ளைகள். பள்ளி விட்டு வீட்டுக்குப் போகும் போது கோரஸாக அந்தப் பாட்டைப் பாடிக் கொண்டே பிள்ளைகள் போவார்கள். ரோட்டில் போய்க் கொண்டிருப்பவர்கள் வித்தியாசமாய்ப் பார்ப்பார்கள். அதைப்பற்றி பிள்ளைகளுக்கு என்ன? அவர்கள் பாடிக் கொண்டே போவார்கள்.
            ஆங்கில வார்த்தைகளை எழுதி அதற்குக் கீழே அதற்கு ஏத்தமாதிரி தமிழ் எழுத்துகளை எழுதி எழுத்துக் கூட்டிக் காட்டுவார். விகடுவுக்கு அது ரொம்பவே பிடிக்கும். அதை கப்பென்று பிடித்துக் கொள்வான். விகடு நன்றாகப் படிக்க ஆரம்பித்ததே லாலு மாமாவால்தான். பிற்காலத்தில் விகடு நன்றாகப் படித்ததற்கு அவர் போட்ட அடித்தளம் எவ்வளவோ உதவியிருக்கிறது.
            விகடுவின் வாழ்க்கையில் லாலு மாமாவுக்கு நல்ல பங்கு இருக்கிறது. ஆனால் செய்யுவின் வாழ்க்கையில் மோசமான பங்கு இருக்கிறது. செய்யுவின் வாழ்க்கையில் அவர் விதியைப் போல விளையாடியவர்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...